இன்னும் கொஞ்ச நேரம்....
இதுதான் கடைசிச்சந்திப்பு
எனத் தெரிந்திருந்தால்...
இன்னும் கொஞ்ச நேரம்
அதிகமாகப் பேசியிருக்கலாம்...
கையில் எப்போதும்
புத்தகம் வைத்திருக்கும்
அவரிடம் அன்று அவர்
வைத்திருந்த புத்தகம்
என்ன என்று கேட்டிருக்கலாம்..
அந்தப் புத்தகத்தை
அவர் வாசித்து முடித்திருந்தால்
எதைப்பற்றியது அது எனக்
கொஞ்சம் விவாதிருக்கலாம்..
தொடர்ந்து புத்தகம் வாசிக்கும்
நீங்கள்
உங்கள் வாழ்க்கை அனுபவத்தை
ஒரு புத்தகமாக எழுதினால்
என்ன என்று வினவியிருக்கலாம்...
அறுபதைத் தொடப்போகும்
உங்கள் வாழ்க்கையின் பல
அனுபவங்கள் உங்களுக்கு
மட்டுமே தெரிந்தவை...
என் வாழ்க்கையைப் போலவே
உங்கள் வாழ்க்கையிலும்
மறைக்க வேண்டிய பகுதி
சில இருக்கலாம்...
மறக்க வேண்டிய பகுதி
சில இருக்கலாம்...
ஆனால் வாழ்க்கைப் பயணத்தில்
பலரோடும் பகிரவேண்டியவை
பல இருக்கும் நிச்சயம்...
அதைப் பகிர எழுதுகோல்
அன்றி வேற என்ன இருக்கிறது
இன்றைய உலகில்...
எழுதுங்கள் நீங்கள்...
கணினியில் அடிக்கவோ
பதிப்பிக்கவோ
நான் உங்களுக்கு உதவுகிறேன்
என்று சொல்லியிருக்கலாம்...
மின்னல் போல அன்று
சந்தித்து வணக்கம் இட்டு
சில சொற்கள் சொல்லி
சட்டென மறைந்தீர்கள்..
நானும் கூட ஆற அமரக் கேட்காமல்
சரி சரி எனச்சொல்லி தலை அசைத்தேன்...
இன்னும் நூறு ஆண்டுகள்
வாழப்போவது போல
சிரித்த முகத்தோடு 'வருகிறேன்'
என்று சொல்லிச்சென்றீர்கள் தோழரே...
திடீரென்று வந்து விழுந்த
உங்கள் இறப்பு செய்தி...
இதுதான் கடைசிச்சந்திப்பு
எனத் தெரிந்திருந்தால்...
இன்னும் கொஞ்ச நேரம்
அதிகமாகப் பேசியிருக்கலாம்...
வா.நேரு
13.07.2022
அருமை தோழர்.
ReplyDeleteநன்றி...
Deleteஒருவர் இறப்புக்கு பின்னரே நாம் நிரம்ப சிந்திக்கிறோம்... பலரின் உண்மை நிலையை கண்முன் காட்டியது போல் உள்ளது. அருமை ஐயா
ReplyDeleteநன்றிங்க அய்யா...
ReplyDeleteமிகவும் உணர்வுபூர்வமாக சிலிர்ப்பூட்டும் கவிதை. ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஒரு முறையாவது எண்ணியதை (mind reading?) தாங்கள் அருமையாகப் படைத்திருக்கிறீர்கள்! 👌👏👏👍
ReplyDeleteமிகவும் சிறப்பு தோழர்.
ReplyDeleteநன்றி தோழர்
ReplyDeleteதோழர் கனியின் இறப்பிற்கான அஞ்சலி கவிதையாக இது இருக்கிறது. ஒவ்வொரு மரணத்திற்கும் இக்கவிதை பொருந்தும்.
ReplyDeleteஆமாம்...நன்றி.
Deleteஇதயத்தின் அடி ஆழத்தில் இருந்து எழுந்த உணர்வுப் பூர்வ கவிதை ஐயா
ReplyDeleteநன்றிங்க அய்யா
ReplyDelete