Tuesday, 19 July 2022

தமிழ் அறிஞர் அய்யா க.சி.அகமுடைநம்பி...இயற்கை எய்தினார்.

ஓய்வுபெற்ற  தமிழ் நாடு அரசு தலைமைப்பொறியாளர் (வேளாண்பொறியியல்  துறை ) பொறிஞர் அய்யா க.சி.அகமுடைநம்பி அவர்கள் நேற்று(18.07.2022) இயற்கை எய்தினார்.அவருக்கு வயது 83.
.படித்தது வேளாண் பொறியியல் என்றாலும் தமிழின் மீது குறிப்பாகத் திருக்குறள் மீது பெரும் விருப்பம் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். பல நாளிதழ்களில்,வார இதழ்களில்,காலச்சுவடு போன்ற மாத இதழ்களில் இலக்கியம்,திருக்குறள் குறித்து எழுதியவர்.
இடது பக்கம் முதலில் கண்ணாடி அணிந்து அமர்ந்திருப்பவர். அய்யா க.சி.அகமுடைநம்பி  அவர்கள்


கடந்த இருபது ஆண்டுகளாக தனது 'மலர் ' அறக்கட்டளை மூலமாக , தனக்குச்சொந்தமான , மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, தே.கல்லுப்பட்டி , குன்னத்தூர் அருகில் உள்ள வேப்பந்தோப்பில் வருடந்தோறும் ஜனவரி மாதம், (பெரும்பாலும் ஜனவரி 25 அல்லது 26 ஆக இருக்கும்) திருக்குறள் குறித்து  ஒரு தலைப்புக் கொடுத்து கருத்தரங்கம் நடத்தி வந்தவர்.. கருத்தரங்கத்தின் முடிவில்  கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாகவும் வெளியிட்டு வந்தவர்.மிகப்பெரும் திருக்குறள் விரும்பி .

                        பல  வருடங்களாக, தொடர்ந்து அவரது கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்தது.. ஒருவருடம் திரு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் கலந்து கொண்டார்.  பேராசிரியரின் இளவல் பேராசிரியர் அய்யா க.திருமாறன் அவர்கள் விருதுநகரிலிருந்து வந்து கலந்து கொள்வார். அய்யா தமிழண்ணல், தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார், பேரா.இரா.மோகன்  மற்றும் பலர் கலந்து கொண்ட கருத்தரங்குகள் அவை.. பல பேராசிரியர்கள் வந்து கலந்து கொள்ளும் நிகழ்வு அது. பல துறை சார்ந்த ஆனால் திருக்குறள் மேல் விருப்பம உள்ள தமிழர்களும்  கலந்து கொள்ளும் அருமையான கருத்தாக்க விழாவாக, வேப்பந்தோப்பு கருத்தரங்கம் அமைந்து வந்தது.. சில ஆண்டுகளாக மதுரை யாதவர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் அய்யா முனைவர் இ.கி.இராமசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வந்தார்.

                              தனி ஒரு ராணுவம் போல, இந்தக் கருத்தரங்கத்திற்காகவும், தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காகவும் அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்கள்  எடுத்துக்கொண்ட  முயற்சிகள் மிகவும் வியப்புக்குரியது. மதுரையின் தெருக்களில் பேருந்து மூலமாகவும் , நடந்தும், அச்சிடக்கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் திருத்துதல், மீண்டும் கொடுத்தல், அச்சிட ரேப்பர்  வடிவமைத்தல் என்று ஓயாது அலைந்து கொண்டிருந்தவர்.. இந்த நிகழ்வுக்காக 20 வயது இளைஞரைப்போல அலைந்து கொண்டிருப்பார். உடல் உழைப்பு, அலைச்சல், பணச்செலவு இவற்றிப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே குறிக்கோளோடு செயல்பட்டுக்கொண்டிருந்தவரை தமிழக இலக்கிய உலகம் இழந்திருக்கிறது.

தன்னுடைய துணையை இழந்த அவர்,வெளி நாட்டில் இருக்கும் மகள்கள் இருவரையும் அவ்வப்போது பார்த்து திரும்புவார்.மதுரை திருநகர் 3-வது நிறுத்தம் அருகில்  இருக்கும் முதியோர் இல்லத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்தார்.அந்த இடம் மிகப்பிடித்திருக்கிறது என்று சொன்னார். முன்பக்கம் மரங்களும் பின்பக்கமும் ஏரியுமாக இயற்கை சூழ்ந்திருக்கும் இடத்தில் எழுதுவதும் படிப்பதுமாய் இருந்த பெருந்தகை அவர்.  

இந்த மாதத்தில் இருமுறை அய்யா அகமுடை நம்பி அவர்களை திருநகர் முதியோர் இல்லத்தில் சந்தித்தேன்.பத்து நாட்களுக்கு முன்பு நானும் என் மகன் சொ.நே.அன்புமணியும் சென்றிருந்தோம்.என் மகனிடம் என்ன படித்திருக்கிறாய்,என்ன செய்யப்போகிறாய் என்றெல்லாம் கேட்டு ,போட்டித்தேர்வுகளுக்கு படி என்று சொல்லி நிறைய் அவனிடம் பேசிக்கொண்டிருந்தார்.திருக்குறளை மொழி பெயர்க்கும் அளவிற்கு ஆங்கிலத்தில் புலமை பெற்றதற்கு தான் திருமங்கலம் பி.கே.என்.பள்ளியில் படித்தபோது இருந்த தலைமை ஆசிரியர் காரணம் என்றார்.மதுரையில் இருக்கும் தன்னோடு படித்த டாக்டர் செளந்திரராஜன்(குழந்தைகள் நல மருத்துவர்) அவர்களைசென்று பார்த்து வந்ததை எங்களோடு பகிர்ந்து கொண்டார்

முதியோர் இல்லத்தில் டீயைக் கொடுத்தார்.வைத்திருந்த ஆப்பிளைக் கொடுத்தார்.விருந்தோம்பலை விடாமல் வலியுறுத்தி எங்களை பழங்களை சாப்பிட வைத்தார்.திராவிடப் பொழில் இதழைக் கொடுத்து உங்கள் கட்டுரை வேண்டும் என்றேன்.சில பக்கங்களே உள்ள கட்டுரை தந்தார். பல பக்கங்கள் உள்ள கட்டுரை வேண்டும் என்றேன்.தருகிறேன் என்றார்.

கலைஞரின் தனித்திறன்கள் என்று புத்தகம் எழுதியதற்காக அன்றைய முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களால் பதவி உயர்வு மறுக்கப்பட்ட கதையைச்சொன்னார்.ஜே.கே. பற்றி எழுதிய புத்தகம் ,திருக்குறள் கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள் என்று பல நூல்களுக்கு சொந்தக்காரர்.திருக்குறளின் சாரத்தைப் பிழிந்து ஒரு ஆங்கிலப்புத்தகமாக எழுதி வைத்திருக்கிறேன்.அணிந்துரைகள் வாங்கி விரைவில் வெளியிட வேண்டுமென்றார்.

மதுரையில் நடந்த ரீடர்ஸ் கிளப் மூலமாக கிடைத்த அரிய ஆளுமை அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்கள்.இன்று அவருக்கு மலர்வளையம் வைத்தபோது தூங்குவது போலவே இருந்தார் கண்ணாடிப் பெட்டிக்குள்.அய்யா இ.கி.இராமசாமி அவர்களும் நானும் அவரின் உறவினர் அய்யா பேரா சதாசிவம் அவர்களிடம்,மலேசியாவிலிருந்து வந்திருந்த அவரது மகளிடமும் ஆறுதலைச்சொல்லி விட்டு வந்தோம்.

இன்னும் ஒரு தமிழ் அறிஞரை ,தமிழ் நாடு இழந்திருக்கிறது.
அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்களுக்கு என் சார்பாகவும், தமிழ் நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் வீரவணக்கம்! வீரவணக்கம்!
தமிழுக்குத் தொண்டு செய்கிறவர்கள் மறைந்தாலும் அவர்கள் செயல்களால் என்றும் மறைவதில்லை...

வா.நேரு,தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,மதுரை.

6 comments:

  1. வருந்துகிறேன். சிறந்த ஆளுமைகளில் ஒருவர். தமிழுக்கு பேரிழப்பு.

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்கு பேரிழப்பு...ஆமாம்...

      Delete
  2. அய்யாவின் தமிழ்ப்பணிகளின் மேன்மையை அறியப் படுத்தியமைக்கு மிக்க நன்றி. அவரது திருக்குறள் பற்றிய ஆங்கில நூலை வெளியிடுவது அவரது நினைவை போற்றுவதாக அமையுமே.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.முயற்சி செய்வோம்..

      Delete
  3. அய்யாவை எனக்கும் அறிமுகப்படுத்தீனீர்கள்... பல்வேறு பணிச்சுமை காரணமாக ஓரிரு சந்திப்புக்களோடு அவரது நட்பு நிறைவடைந்ததை எண்ணி வருந்துகிறேன்... அய்யா அவர்களுக்கு என் வீரவணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. உடல் நலம் மிக நன்றாக உள்ளவராக அன்று இருந்தார்...வீரவணக்கம்..

      Delete