Wednesday, 10 August 2022

இத்தனை நெருக்கத்தை

 இத்தனை நெருக்கத்தை

                               

ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டி
ஒரு குரல் உற்சாகமாக
ஒலிக்கிறது..

உங்களோடு நான்
கொஞ்சம் பேசவேண்டும்..
நேரமிருக்கிறதா? என என்
நேரத்தைப் பெற்றுக்கொண்டு
அந்தக் குரல் அளவளாவ
ஆரம்பிக்கிறது....

அவ்வளவு மகிழ்ச்சி அந்தக் குரலில்..
அவ்வளவு நட்பு விவரிக்கையில்...
உனக்குப் படிக்கத்தெரியுமா?
தாங்கள் நிகழ்த்திய
நூல் அறிமுகத்தைக்
கேட்டவுடன்..
என் வாழ்வில் நடந்த ஒரு
நிகழ்வும் என் மனக்கண்
முன்னால் வந்து போனது..
அதைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளத்தான்
அழைத்தேன் இந்த நேரம்..

நான் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன்
உனக்குப் படிப்பே இல்லை
இனிமேல்..
உனக்கு எதிர்காலமே இல்லை
என்றான் சோதிடன் ஒருவன்...
அந்தச்சோதிடன் சொன்ன பொய்யை..
பொய் என்று நிருபித்து
அயலகத்தில் இருக்கின்றேன் நான்..
உழைப்பும் மகிழ்ச்சியுமாய்
வாழ்வின் உயரத்தில் இருக்கிறேன் நான்..

நம் நாட்டு நேரமும்
இந்த நாட்டு நேரமும் தலைகீழ்...
நமக்குப் பகல் என்றால்
இங்கோ இரவு என்று
ஒப்பீடுகளோடு அந்தக் குரல்
இன்னும் அதிக உரிமையோடு
பேசத்தொடங்குகின்றது...

தான் படித்த பிரபஞ்சனை...
தான் படித்த கு.அழகிரிசாமியை
நட்போடும் நயத்தோடும்
விவரித்துக்கொண்டே செல்கிறது
அந்தக் குரல்...

தான் பிறந்த ஊரைப்பற்றி..
இலக்கிய மேடைகள் பலவற்றை
அலங்கரித்த தன் தாயார் பற்றி...
தன்னைச்சுற்றி இருக்கும்
இலக்கிய உறவுகள் பற்றி...
பேசிக்கொண்டே செல்கின்றார் அவர்..

முன்பின் நேரில் பார்த்ததில்லை..
நான் யார் அவர் யார்
என்பதற்கான எந்தவிதமான
டேட்டாகளும் இருவர் கைகளிலும் இல்லை..
ஒற்றை புத்தக வாசிப்பும்
அதனை இணையத்தில் விவரித்த விவரிப்பும்
இத்தனை நெருக்கத்தை
மனிதர்கள் மத்தியில்
கொண்டு வர இயலுமா?...

அறிமுக அட்டைகளுக்குப் பதிலாக
இனிமேல் நமக்குப் பிடித்த  
புத்தகங்களின் பட்டியலை
ஓர் அட்டையாக
வைத்துக்கொண்டு அளிக்கலாமோ
எனத் தோன்றுகிறது....

வியப்பாகத்தான் இருக்கிறது...
இன்னும் நிறைய புத்தகங்களை
விவரிக்க ஆசையாக இருக்கிறது...
'வாருங்கள் படிப்போம்'
படித்ததை வகைவகையாய்ப் பகிர்வோம்
என்னும் வேட்கை இன்னும் கூடுகிறது..

                               வா.நேரு,10.08.2022
கனடாவிலிருந்து அழைத்த திருமிகு பெர்னாட்ஷாவிற்கு  நன்றி.

4 comments:

  1. வா நேரு... இன்று வரிகளால் வாவ் நேரு வாக... மிக அருமை sir 🤗🤗🤗😍

    ReplyDelete
  2. நன்றி ..எனது வலைப்பூ வருகைக்கும் கருத்திற்கும்

    ReplyDelete
  3. Thanks so much sir ..you are awesome personality ..

    ReplyDelete