Saturday, 10 September 2022

சொல்லவேண்டிய நாளிது...

                                   



விலங்குகள் எதுவும்

தங்களைத் தாங்களே

மாய்த்துக்கொள்வதில்லை...


இயற்கையாகவோ

இன்னொருவரால் 

செயற்கையாகவோ

உயிர் இழக்கும்வரை 

ஓடித் திரிந்து

உற்சாகமாய் விலங்குகள்

மண்ணில் வாழ்கின்றன...


உலகில் உள்ள பொருட்கள்

அனைத்தையும்

அடித்துச்சுருட்டி

அள்ளி வைத்துக்கொண்டு

உலகத்தின் பணக்கார

மிருகம் நான்தான் என்று

எந்த மிருகமும்

அறிவித்துக்கொள்வதில்லை..

அப்படிப்பட்ட மனநிலை

எந்த விலங்குக்கும்

இருப்பதாகத் தெரியவில்லை...


தினம் தினமும் 

குடித்துக் குடித்து

கொஞ்சம் கொஞ்சமாய்

தற்கொலைக்குத் தயாராகும்

அபத்தங்கள் எதுவும் 

விலங்குகளிடம் இல்லை...


மனிதர்கள் ஏன்

தங்களைத் தாங்களே 

மாய்த்துக்கொள்கிறார்கள்?..

உளவியலும் அறிவியலும்

உச்சகட்டத்தில் இருக்கும்

இந்தக் கணினி யுகத்தில்தான்

தாறுமாறான தற்கொலைகளும்

நம் கண்முன்னால் ...


எனக்கு என் குடும்பத்திற்கு என

அலைந்து திரிந்து 

சேர்த்துவைத்த பலரும்கூட

சொல்லாமல் கொள்ளாமல்

பட்டென்று முடித்துக்கொள்கிறார்கள்

தங்கள் வாழ்க்கையை.


உலகில் நாற்பது நொடிக்கு

ஒருவர்

தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்

இதில் இளம் வயதில்

இருப்பவர்கள் அதிகமென

புள்ளி விவரங்கள் சொல்கிறது...


மகன் தன்னைத்தானே

மாய்த்துக்கொள்ள

மனதொடிந்த பெற்றோரும்

சில நாட்களில் 

தங்களைத் தாங்களே

மாய்த்துக்கொண்ட செய்தி 

மனதைப்  பல நாளாய்

பிழிந்திட்ட   செய்தி...



எல்லாவற்றையும் விட

உயர்ந்தது உன் உயிர்...

என்பதை மண்ணில் வாழும்

ஒவ்வொரு மனித உயிரிடமும்

விதைக்க வேண்டிய நாளிது..


செல்பேசிகளை 

சில மணி நேரம் 

தூக்கியெறிந்துவிட்டு

நட்புகளோடு 

சிரித்து மகிழுங்கள்..

இன்பமோ துக்கமோ

எது எனினும் 

பகிர்ந்து பழகுங்கள்

என்று நம்மைச்சுற்றி

இருக்கும் இளையவர்களிடம்

சொல்லவேண்டிய நாளிது...


                            வா.நேரு,10.09.2022.
















No comments:

Post a Comment