Tuesday, 21 February 2023

மாறுதலுக்கு நாமும்தயாராவோம்!...

                                                 மாறுதலுக்கு நாமும்தயாராவோம்!

                                                  (முனைவர் வா.நேரு)


“மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும்-, பெருகும்’’ என்றார் தந்தை பெரியார் 85 ஆண்டுகளுக்கு முன்பு (‘இனி வரும் உலகம்‘).50 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல், வீடுகளில் சின்ன விளக்குகளை வைத்துப் படித்த நம்மைப் போன்றவர்களுக்கு நம் வாழ்வில் மின்சாரமும் கணினியும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் கொடுத்திருக்கும் மாற்றங்கள் மிகப்பெரும் வியப்பை அளிக்கின்றன.


வீட்டில் மின்சாரம் வந்தது, கையில் துவைக்கும் பழக்கம் போய், துவைக்கும் இயந்திரம் வந்தது. கையில் மாவு ஆட்டும் பழக்கம் போய் கிரைண்டர் வந்தது. வீட்டிற்குள் வானொலி வந்தது, பின் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது, அதுவும் கலைஞர் காலத்தில் தொலைக்காட்சி இல்லாத வீட்டிற்குள் எல்லாம் அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வந்தது, தொலைக்காட்சியோடு தொலைபேசி வந்தது.


தொலைபேசி வந்த சில ஆண்டுகளில் பெரிய பெரிய கணினிகள் அலுவலங்களுக்குள் வந்தன. பின்பு சின்னச்சின்னக் கணினிகள் வீட்டிற்குள் வந்தன. பின்பு மடிக்கணினி வந்தது. இணையம் வந்தது, தொலைபேசி மாறி கைப்பேசி வந்தது. இன்றைக்கு கைபேசி இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எல்லாத் தரப்பு மக்களின் கைகளிலும், எல்லா நாடுகளிலும் இருக்கும் ஒரு பொருளாக கைப்பேசி இருக்கிறது. ஸ்மார்ட் பேசிகள் எனப்படும் ஆண்ட்ராய்டு பேசிகள் வந்தன. கணினியும் இணையமும் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளும் இணைந்து இன்றைக்கு நம் வாழ்க்கையில் எத்தனையோ வசதிகளைக் கொண்டு வந்து விட்டன.




50 ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அத்தனை வசதிகள் இன்றைக்கு நமக்குக் கிடைக்கின்றன.செல்போன் வழியாக, கூகுள்-_பே போன்றவை மூலமாகப் பணத்தை அனுப்புகிறோம்.பணத்தைப் பெற்றுக்கொள்கிறோம். ரயில் பயணங்கள் பதிவுகளை செல்போன் வழியாகப் பதிவு செய்கிறோம். மிகக் குறைந்த படிப்பு படித்தவர்கள்கூட யூ டியூப் போன்றவற்றின் மூலமாக விளம்பரத்தைப் பார்த்து, பொருள்களை வீட்டிலிருந்தே வரவழைத்துக்கொள்கிறார்கள்.


1980களில் நாம் பள்ளியில் படித்த காலத்தில், யாரேனும் இப்படியெல்லாம் நடக்கும் எனச் சொல்லியிருந்தால் வாய்விட்டுச் சிரித்திருப்போம். இதுவெல்லாம் நடக்குமா என நினைத்திருப்போம். ஆனால், எல்லாம் நடந்திருக்கிறது. கடவுளின் கருணையால் அல்ல; அறிவின் வளர்ச்சியால், அறிவியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் நடந்திருக்கிறது.இப்போது மீண்டும் ஒரு புதிய சகாப்தம் பிறந்திருக்கிறது.


செயற்கை நுண்ணறிவுத்-துறையின் அடுத்த கட்டப் பாய்ச்சலாக சாட்- ஜிபிடி என்னும் புதிய தொழில் நுட்பம் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் நாள் உலகில் அறிமுகம் ஆகியிருக்கிறது. கடந்த சில நாள்களாக சாட்- ஜிபிடி என்னும் இந்தப் புதிய தொழில் நுட்பம் பற்றியே பேசப்படுகிறது. எழுதப்படுகிறது. கணினி, இணையம், ஆண்ட்ராய்டு பேசிகள் வந்தவுடன் எப்படி உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதோ அதனைப்போல இந்த சாட்- ஜிபிடியால் பலவித மாற்றங்கள் வரும் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


சாட் ஜிபிடி என்பது செயற்கை நுண்ணறிவு(கிமி) அடிப்படையில் இயங்கும் ஒரு மெய்நிகர் ரோபோ(சாட்பாட்) ஆகும்.ஒரு மனிதரிடம் நாம் கேள்விகேட்டால் அவர் தனது அனுபவத்தால், அறிவால் பதில் கொடுப்பது போல இந்த சாட்-ஜிபிடியும் பதில் கொடுக்கிறது. ஒரு நண்பனைப் போல மனிதனிடம் நெருக்கமாகப் பேசும் திறன் உடையது.’ தவறுகளை ஒப்புக் கொள்ளவும், தவறான அனுமானங்கள் குறித்துக் கேள்வி எழுப்பவும், பொருத்தமற்ற கோரிக்கைகளை நிராகரிக்கவும் சாட்-ஜிபிடிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடுகின்றனர்.

5.2.2023 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஒரு செய்தியினை சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குநர் திரு. பிரதாப் ரெட்டி… வெளியிட்டிருந்தார்.


அதில், ‘‘நாங்கள் சாட்-ஜிபிடி அடிப்படையில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ஒரு ஜிஅய்இ என்னும் மெய்நிகர் ரோபோவை உருவாக்கியிருக்கிறோம்.எங்கள் மருத்துவமனையில் 4 தலைமுறையாக இருக்கும், இருந்த நோயாளிகளின் நோய் அறிகுறிகள் எல்லாம் பட்டியலிடப்பட்டு, அந்த சாட்-ஜிபிடி ரோபோவிடம் டேட்டாவாகக் கொடுத்திருக்கிறோம்.வரும் நோயாளிகளிடம் இந்த சாட்-ஜிபிடி ரோபோ உரையாடும். நோயாளியிடம் கேள்வி கேட்கும். நோயாளி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறும். நோயாளி சொல்லும் அறிகுறிகளை, தன்னிடம் இருக்கும் நோயாளிகளின் டேட்டாவை அலசி, ஆராய்ந்து என்ன வகையான நோயாக இருக்கும் எனத் தீர்மானிக்கும்.பின்பு அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் அனுப்ப அது பரிந்துரைக்கும்.


செயற்கை நுண்ணறிவு, டேட்டா, ரோபோ என்னும் மூன்றும் இணைந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகிறது. ஒரு நோயாளியின் அறிகுறிகளை வைத்து என்ன நோயாக இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ளவும் அதற்குப் பின் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவும் இந்த சாட்-ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு முறை மிக வாய்ப்பாக இருக்கும். இதனை ஆரம்பித்து வைக்கிறோம்’’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.நினைத்துப் பாருங்கள்.தோராயமாக ஒரு இருபது இலட்சம் நோயாளிகள், இதுவரை சென்னை அப்பொல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என வைத்துக்-கொள்வோம். அவர்களுக்கு இருந்த நோய், அதன் அறிகுறிகள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள் என அனைத்து டேட்டாவையும் எடுத்துக்கொண்டு,தன்னோடு உரையாடும் நோயாளிக்கு இருக்கும் பிரச்சினையை அறிந்து, ஒப்பிட்டு அவருக்கு இருக்கும் நோயைச் சொல்வதற்கு இந்த மெய் நிகர் ரோபா எடுத்துக்கொள்ளப் போகும் நிமிடங்கள் ஒரு சில நிமிடங்கள். மிக அனுபவம் வாய்ந்த ஒரு மருத்துவரின் பரிந்துரையைப் போல தனது பரிந்துரையை இந்த ரோபா கொடுக்கப்போகிறது.


மனிதர்கள் எழுதுவது போலவே கட்டுரைகளை இந்தப் புதிய தொழில் நுட்பம் எழுதும்..தலைவர்கள் மேடையில் பேசுவது போலவே இதுவும் பேசும். புரட்சிக் கவிஞர் எழுதுவது போல எனக்கு ஒரு கவிதை எழுதிக் கொடு என்று ஒரு தலைப்பைச் சொன்னால் அது உணர்ச்சியோடு கூடிய ஒரு கவிதையைக் கொடுக்கும்… ஒரு நல்ல ஓவியம் வரைந்து கொடு என்றால் வரைந்து கொடுக்கும். இந்த வேதியியல் பாடம் எனக்குப் புரியவில்லை என்று ஒரு மாணவர் சொன்னால், அவருக்கு மிகப் பொறுமையாக அந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும். இப்படி நிறைய…

இந்த சாட்-_ஜிபிடி 100 மொழிகளில் இப்போது கிடைக்கிறது.


அமெரிக்காவில் 2015-இல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மாஸ்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘ஓபன் ஏஐ’ என்னும் நிறுவனம் இதனை உருவாக்கியிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதில் இணைந்திருக்கிறது.இது உருவான 5 நாட்களிலேயே 10 இலட்சம் பேர் இதனைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார்கள்.நாளும் பல்லாயிரக்கணக்கில் இதில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் இதனை செழுமைப் படுத்துவோம் என்று இதனைத் தயாரித்து வெளியிட்டிருப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


இந்தப் புதிய தொழில் நுட்பத்தில் பதில்களை விடக் கேள்விகள்தான் முக்கியம்.சாட்-ஜிபிடியிடம் சரியாகக் கேள்விகளைக் கேட்டால்தான் சரியான பதில் கிடைக்கும்.’’ நீங்கள் எப்படிக் கேட்கவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி கேட்பது என்று தெரிந்து கொள்ள பகுத்தறிவுச் சிந்தனை வேண்டும்’ என்று பேரா. மார்த்தா கேப்ரியல் குறிப்பிடுகிறார். (நன்றி பிபிசி)


இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகம். இங்கு புதிய புதிய தொழில் நுட்பங்களை வரவேற்கும் அதே நேரத்தில் நிறையப் பேருக்கு வேலை கொடுப்பதாகவும் அந்தத் தொழில் நுட்பங்கள் அமையவேண்டும். முதன்முதலில் தொலைபேசி, இரயில்வே போன்ற துறைகளில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழிற்சங்கங்கள் வழியாக மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபின் – அது பல பேருக்கு புதிய வேலைகளைக் கொடுத்தவுடன் _ அந்த எதிர்ப்பு மாறியது. பெரியார் இயக்கத்தைப் பொறுத்தவரை புதிய புதிய மாற்றங்களை, புதிய தொழில் நுட்பங்களை இருகரம் நீட்டி வரவேற்பவர்கள். அப்படி நாமும் இந்த சாட்-ஜிபிடி என்னும் புதிய தொழில் நுட்பத்தை வரவேற்போம். மாறுதலுக்கு நாமும் தயாராவோம்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் பிப்ரவரி(16-28),2023

No comments:

Post a Comment