Thursday, 20 April 2023

உலகப் புத்தக நாள் – ஏப்ரல் 23 மிகப்பெரிய ஆயுதம்…முனைவர்.வா.நேரு

 


                                         உலகம் முழுவதும் உலகப் புத்தக நாளாக ஏப்ரல் 23 கொண்டாடப்படுகிறது. திராவிட இயக்கத்தைப் பொறுத்த அளவில் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் ஏப்ரல் 29,அவரின் நினைவு நாள் ஏப்ரல் 21 என்று அந்த மாபெரும் கவிஞரை நினைக்கும் அவ்விரு நாள்களின் இடையில் உலகப் புத்தக நாள் வருகின்றது. “புத்தகங்கள் தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


புத்தகங்கள் தரும் பெரும் உதவியை இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உணர்த்தும் விதமாக உலகப் புத்தக நாள் கொண்டாடப்படுகிறது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28ஆவது மாநாட்டில்தான் உலகப் புத்தக நாள் பற்றிய தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.” “அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக நாளாகக் கொண்டாடப்படும்” என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.


கொரோனா காலத்தில் புத்தகங்கள் தந்த உதவி என்பது மிகப்பெரிய உதவிதான். புத்தகம் என்பது ஒரு வகையில் நமக்கு ஆசிரியராகவும் ,மற்றொரு வகையில் நமக்கு வாசிப்பதன் மூலம் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் இருக்கிறது.


புத்தகங்களைப் பார்த்து மூட நம்பிக்கை-யாளர்கள் அன்று முதல் இன்றுவரை பயப்படுகிறார்கள்.உலகம் உருண்டை என்று சொன்ன புரூனோவை எரித்ததோடு அவர் எழுதிய புத்தகங்களையும் சேர்த்து மதவாதிகள் எரித்தார்கள் என்பது பழைய வரலாறு என்பது மட்டுமல்ல, அண்மையில் கவுரி லங்கேசு,நரேந்திர தபோல்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் எழுதும் எழுத்துகளுக்குப் பதில் சொல்லமுடியாத இந்து மதத் தீவிரவாதிகள் அவர்களைச் சுட்டுக் கொன்றார்கள் என்பது அண்மைக்கால வரலாறு.

உண்மையான எழுத்து என்பது எப்போதும் ஆதிக்கவாதிகளுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது. உலகப் புத்தக நாள் என்பது வெறுமனே புத்தங்களைக் கொண்டாடுவது மட்டுமல்ல; புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களையும் சேர்த்துக் கொண்டாடுவதாகும். உண்மையைக் கூறும் புத்தகங்களை எழுதியதற்காக வீரமரணம் அடைந்த தீரர்களையும் நினைவில் கொள்ளும் நாளுமாகும்.

சுருங்கக் கூறின் புத்தகங்களோடு தொடர்புடைய அனைத்தையும், அனைவரையும் கொண்டாடுவது, நினைவில் கொள்வது எனலாம். ஒரு புத்தகத்தைப் பதிப்பது என்பது இன்றைக்கு எளிதாக மாறியிருக்கிறது. நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பதிப்பிக்கக்கூடியவர்களாக, புத்தகத்திற்கான கணினி வேலையைச் செய்பவர்களாக, புத்தகத்தின்அட்டைக்கு அழகிய ஓவியத்தை வரைந்து  அல்லது கணினியில் வடிவமைத்துத் தருபவர்களாக இருக்கிறார்கள்.

சிலர் புத்தகத்தைப் பதிப்பிப்பதற்கு முன் பிழைகளைத் திருத்தி,புத்தகம் செம்மையாக வர உதவி செய்கிறார்கள்.சிலர் புத்தகங்களைத் தெருத் தெருவாக வண்டியில் வைத்து விற்பனை செய்து கொடுக்கிறார்கள்.’ திருவிழாக்களை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்பாடு செய்து ,நாம் புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும்,வாங்கிக் கொள்ளவுமான ஓர் அருமையான ஏற்பாட்டைச்செய்து தருகிறார்கள்.

உலகப் புத்தக நாளில் பல்வேறு மொழி புத்தகங்களை, மொழி பெயர்ப்பு செய்யும் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. இன்னொரு மாநிலத்தின்,இன்னொரு நாட்டின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, மனிதர்களின் மன ஓட்டங்களை, வித்தியாசமாக இருக்கும் சில நடைமுறைகளை எல்லாம் அறிந்து கொள்வதற்கு நமக்கு மொழி பெயர்ப்பு புத்தகங்கள்தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கின்றன.

பல மொழிகளைத் தெரிந்து அதன் மூலம் இலக்கியத்தைக் கடத்தும் மொழி பெயர்ப்பாளர்களை இந்தப் புத்தக நாளில் நாம் அங்கீகரிப்பதும் அவர்களுக்கு உரிய பாராட்டையும் தெரிவிப்பதும் அவசியமாகும்.மராட்டிய மொழியில் எழுதிய காண்டேகர், மலையாள மொழியில் எழுதிய தகழி சிவசங்கரன், வங்காள மொழியில் எழுதிய சரத்சந்திரர் எனப் பலமொழிகளில் எழுதிய ஆசிரியர்களைத் தமிழில் நாம் அறிந்து கொள்ள வழி செய்த அந்த மொழி பெயர்ப்பு ஆசிரியர்களை, மொழி பெயர்ப்பு நூல்களை நாம் நினைவில் கொள்ளும் நாள் உலகப் புத்தக நாள்.



‘கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’ என்னும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்ப்பு நூலை நமக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்த அய்யா கு.வெ.கி. ஆசான்,...  ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்னும் தோழர் பகத்சிங்கின் புத்தகத்தை, ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்னும் அண்ணல் அம்பேத்கர் புத்தகத்தை இன்னும் இவை போன்ற பல அறிஞர்களின் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்துத் தரக் காரணமாக இருந்த தந்தை பெரியாரை நினைவில் கொள்ளும் நாள் உலகப் புத்தக நாள்.


நல்ல புத்தகங்களைப் படித்து, நம்மோடு அதனை வைத்துக்கொள்ளாமல் அதனை மற்றவர்களுக்குப் பரப்பும் விதமாக புத்தக மதிப்புரை எழுதுதல்,புத்தகத்தைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அல்லது இணையவழியாக(சூம்) வழியாகப் பேசுதல், முக நூல்,வாட்சப் போன்ற ஊடகங்கள் வழியாக சுருக்கமாக எழுதிப் பரப்புதல் போன்றவற்றைச் செய்யும் தோழர்களையும் நினைவில் கொண்டு பாராட்டும் நாளாகவும் இந்தப் புத்தக நாளை நாம் வடிவமைத்துக்கொள்ளலாம்.


அறிவைப் பரப்புவதற்குமான கருவியாக மட்டுமல்லாது, அறியாமையைப் பரப்பும் கருவியாகவும் சில புத்தகங்கள் இருக்கின்றன. எது நல்ல புத்தகம்,எது தேவையான புத்தகம்,எது நாம் பணம் கொடுத்து வாங்கும் அளவிற்கு மதிப்பு உள்ள புத்தகம் என்பதைப் பற்றியெல்லாம் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டும் நாளாகவும் நாம் உலகப் புத்தக நாளை அமைத்துக்கொள்ளலாம்.


பகுத்தறிவாளர்களாகிய நமக்கு மிகப்பெரிய ஆயுதம் புத்தகம். புத்தகத்தின் வலிமையை, ஆற்றலை உணர்ந்தவர்கள் நாம். 2021 ,ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “பரப்புவீர் பாரெங்கும் பகுத்தறிவு நூல்களை” என்று தலைப்பிட்டு ஒரு சிறப்பான அறிக்கையை விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதில்

*ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளையொட்டிய நம் வாழ்த்துகள் அனைவருக்கும்!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் காலத்திலிருந்து புத்தகங்கள் மூலம் புத்தறிவை -_- பகுத்தறிவை, அறிவியல் மனப்பாங்கை வளர்க்கும் பணி நமது வாழ்நாள் பணி அல்லவா?.

ஏராளமான புது வெளியீடுகளும், பழைய வெளியீடுகளும் அச்சில் மீண்டும் வந்து வாசகர்களின் கையில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பல வெளியீடுகளும் இவ்வாண்டு நல்ல கலவையாக- வழக்கம் போல் 50 விழுக்காடு தள்ளுபடி சலுகையாக – (சரிபாதி- தள்ளுபடி) வாசகர்களுக்கு உலகப் புத்தக நாளில் வழங்கி, புதியதோர் உலகு செய்ய புத்தகமே புத்தாக்க அறிவாயுதங்கள் என்பதால்." எனக்குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டும்(2023) 50 சதவீதத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.வாங்குவோம்...பாதுகாப்போம்.மற்றவர்களுக்கும் வழங்குவோம்.

நன்றி : உண்மை மாதமிருமுறை இதழ் ஏப்ரல் 16-30,2023

அனைவருக்கும் உலகப்புத்தக நாள் வாழ்த்துகள்..



2 comments:

  1. An exhaustive article on World Book Day. Really impressed over the contents. Congrats Dr. Neru!

    ReplyDelete