படித்தால் ஏன் பெயில் ஆக்கப்போகிறோம்?
நத்தத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனது தலைமை ஆசிரியர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாறுதல் கேட்டிருக்கிறார்.அந்த அனுவத்தை அவர் இப்படி விவரித்தார்." நான் மாறுதல் கேட்டதால் ,என்னை மேலூருக்கு அருகில் உள்ள தெற்குத் தெரு பள்ளிக்கு மாற்றினார்கள்..நத்தத்தில் எல்லோரும் சேர்ந்து ,நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொல்லி,மாறுதலைக் கேன்சல் செய்ய முயற்சி எடுத்தார்கள்.நடக்கவில்லை.எனது துணைவியாருக்கு மேலூரும்,எனக்குத் தெற்குத் தெருவும் மாறுதல்.கிடைத்தது.
தெற்குத் தெரு பணிச்சுமை என்பது எனக்கு மிகக் குறைவாக இருந்தது.மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தார்கள்..9-ஆம் வகுப்பில் 20 மாணவர்கள்,SSLC-யில் 15 மாணவர்கள்தான் இருந்தார்கள்.தலைமை ஆசிரியர் பணி உயர்வு வரும்வரை அந்த ஊரில்தான் வேலை பார்த்தேன்.அங்கே பெரும்பான்மையானவர்கள் கள்ளர் சமூகத்தைச்சார்ந்தவர்கள்.பட்டியல் இன சமூகத்தைச்சார்ந்தவர்களும் கணிசமாக இருந்தார்கள்.அங்கேயும் இதே மாதிரிதான் என்னுடைய பணியைச்செய்தேன்.
ஒரு தடவை முதன்மைக் கல்வி அதிகாரி(CEO) விசிட்டிற்கு வந்திருக்கிறார். நான் இல்லை.அப்போது நான் மதிப்பெண் நோட்டு வைத்திருப்பேன்.நான் எடுக்கும் எல்லாப்பாடங்களுக்கும் மாதம் தோறும் தேர்வு நடத்துவேன்.அதில் வாங்கும் மதிப்பெண் பட்டியலை வைத்திருப்பேன்.அதனை எடுத்து தலைமை ஆசிரியர் முதன்மைக் கல்வி அதிகாரி(CEO)-விடம் கொடுத்திருக்கின்றார்.அவர் பார்த்துவிட்டு ."ஆஹா.இப்படிப்பட்ட ஆளை இங்கே வைத்திருக்கக்கூடாதே,பெரிய பள்ளிக்கூடத்தில்தான் வேலை பார்க்க அனுப்பனும்,இதெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டாமா? " என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லியிருக்கின்றார்.
அப்போது 10-ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் இருந்தார்கள்.அதில் ஒரு பையன் தொடர்ச்சியாக பெயில் ஆகின்றான்.காலாண்டுத் தேர்வில் பெயில்,அரையாண்டுத் தேர்வில் பெயில்,முழு ஆண்டுத் தேர்விலும் பெயில்.. ஒன்றும் செய்ய முடியவில்லை.10-ம் வகுப்பிலிருந்து 11-ஆம் வகுப்பு போக வேண்டும்.அவன் பெயில்,அவனை promote பண்ணி 11-ஆம் வகுப்பிற்குப் போட வேண்டாம் என்று நான் பைட் பண்ணுகின்றேன்.இவனை இப்படியே 10-ஆம் வகுப்பில் நிறுத்தி விடுவோம்.இவன் படிக்க மாட்டான் என்று நான் ஒரு ஆள்தான் சொல்லுகின்றேன்.தலைமை ஆசிரியரால் மீற முடியவில்லை.நான் சொல்வது நியாயமாக இருக்கிறது என்று சொல்லி,அவனை மட்டும் promote செய்யாமல் ரிசல்ட் போட்டாகிவிட்டது.செய்தி வெளியே எல்லாம் போய்விட்டது.
இவர்தான் promote செய்யவில்லை என்று கூறி பெரிய ஆட்கள் எல்லாம் வந்து என்னைப் பார்த்துப் பேசினார்கள்."படித்தால் நாங்கள் ஏன் பெயில் ஆக்கப்போகிறோம்?,தனிப்பட்ட முறையில் அந்தப் பையன் மேல் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை " என்று சொன்னேன்.சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.எனது பணியைப் பற்றி ஊர்க்காரர்களுக்குத் தெரியும்.சரி,படிக்காத பையனை என்ன செய்வது? என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.ஊர்க்காரர்கள் யாரும் என் மீது பகைமை காட்டவில்லை.
ஆனால் அந்த ஆண்டு என்ன ஆயிற்று என்றால் ,அந்த ஆண்டோடு அந்த 11-ம் வகுப்பு முறையையே எடுத்து விடுகின்றார்கள்.அதனால் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் யாரையும் பெயிலாக்க வேண்டாம் என்று அரசின் சர்க்குலர் வருகிறது.ரிசல்ட் எல்லாம் பள்ளிக்கூடத்தில் போட்டபிறகு வந்தது. சர்க்குலரினால் அந்தப் படிக்காத பையனும் பாஸாகி விடுகின்றான்.அப்புறம் நாங்கள் ஆசிரியர்கள் எல்லாம் கலந்து பேசினோம்." சரிங்க,அவனுக்கு எப்படியோ பெயில் என்பது மாறிவிட்டது.அவனையும் நாம் எப்படியும் தேற்றி விடுவோம்.என்ன சொல்றீங்க,தனி முயற்சி எடுப்போம்.என்ன குறைன்னு கண்டுபிடிச்சு அதனை சரி செய்வோம்" என்று சொல்லி அதே மாதிரி முயற்சி எடுத்து அவனையும் பாஸ் பண்ண வைத்தோம்.அந்த வருடம் செண்டம் ரிசல்ட் வந்தது." என்று குறிப்பிட்டார்.
எங்கள் ஊரில் அவர் வேலை பார்த்த காலம் மிகக் குறுகியகாலம்.ஆதலால் அவரிடம் நிறைய விவாதிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் மதுரைக்கு தொலைபேசித்துறையில் வேலைக்கு வந்தபிறகு பல விசயங்களைப் பற்றி விவாதிக்க அவரோடு நேரம் கிடைத்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளைக் கொடுத்தார். தயக்கமின்றி எனது சொந்த விசயங்கள் பலவற்றைப் பற்றிப் பேசி,தீர்வு பெறுவதற்கான ஓர் ஆளுமையாக எனக்கு அவர் இருந்தார்.சில நேரங்களில் நான் கொடுத்து அவர் படித்த புத்தகங்கள்,அல்லது அவர் என்னிடம் கொடுத்து படிக்கச்சொன்ன புத்தகங்கள் குறித்து கருத்துப்பரிமாற்றம் நடக்கும், சில நேரங்களில் விவாதம் மாதிரி நான் கேட்கும் பல கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவார்.அதனை விரும்புவார்.எனக்கும் முதலில் தயக்கம் இருந்தது, பின்னர் இயல்பாக பல விசயங்கள் குறித்து அவரிடம் விவாதித்து இருக்கிறேன்.
அவரிடம் நான் கொடுத்த ஒரு புத்தகம் 'எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?" என்னும் புத்தகம் https://archive.org/stream/LetterToATeacher-English-SchoolOfBarbiana/letter_djvu.txt) இந்தப் புத்தகம்.1960களில் இத்தாலியில் உள்ள பார்ப்பியனா பள்ளியைச்சேர்ந்த எட்டு மாணவர்களால் ஓராண்டில் எழுதி முடிக்கப்பட்ட LETTER TO A TEACHER (by The School of Barbiana) என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு தமிழில் திரு.ஜே. ஷாஜஹான் அவர்கள் மொழி பெயர்த்துக்கொடுத்துள்ள நூல். 'வாசல்' பதிப்பகம் வெளியீடு.50 ரூபாய் விலையுள்ள சின்னப்புத்தகம். நான் மிக விரும்பிப் படித்த புத்தகம்."அன்புள்ள மிஸ்,எங்களின் பெயர் உங்களுக்கு நினைவுக்கு வராது, எங்களுக்கு நினைவிருக்கிறது, நீங்கள்தானே எங்களை பெயிலாக்கி தொழிற்சாலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் வேலைக்கு அனுப்பியவர்கள்.".,"நோயாளிகளைவெளியேற்றிவிட்டு ஆரோக்யமானவர்களை மட்டும் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்வது போல் உங்களது பள்ளிகள் இருக்கின்றன" போன்ற பலவிதக் கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகம். மாணவ,மாணவிகளின் நிலைமை அறிந்து அவர்களுக்கு கற்பிக்கவேண்டும். எந்த நிலையிலும் ஒரு மாணவனையோ,மாணவியையோ பெயிலாக்கக் கூடாது என்பதைச்சொல்லும் புத்தகம் அது.இத்தாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம்.ஆங்கில மொழியிலிருந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம்.
கல்வி சம்பந்தப்பட்ட பல புத்தகங்களைப் படித்துவிட்டு பாராட்டியிருக்கிறார்.அதில் உள்ள கருத்துக்களை தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார்.அப்படி எனது தலைமை ஆசிரியர் இந்த' எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?" என்னும் புத்தகத்தைப் படித்துவிட்டு பெரிய அளவில் பாராட்டுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் நடந்தது அதற்கு மாறாக இருந்தது." இதெல்லாம் நம்ம நாட்டுக்கு ஒத்து வராதுங்க..உட்டோப்பியன் கான்சப்ட் போல கற்பனை உலகிற்குப் பயன்படுமே தவிர நமது நாட்டுப் பிள்ளைகள் உருப்பட இது வழி வகுக்காது " என்றார்.இப்போதுதான் முதல் தலைமுறை,இரண்டாம் தலைமுறை படிக்க வருகின்றார்கள்.ஏதாவது ஒரு அளவுகோல் வேண்டும்.பயிர் நன்றாக வளரவேண்டுமென்றால் களை எடுத்துத்தான் ஆகவேண்டும்.மிக மோசமாகப் படிக்கும் மாணவனை பெயில் ஆக்குவதில் தவறில்லை.மேலை நாடுகளில் மக்கள் தொகை மிகக்குறைவு.அங்கு ஆட்களும் குறைவு,பிறப்பு விகிதமும் மிகக்குறைவு.அவர்கள் பின்பற்றக் கூடிய விதிமுறைகளை நாம் பின்பற்றக்கூடாது " என்றார்.விவாதித்தோம். கடைசிவரை இந்தக் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்தது. சொன்னேன். 'இல்லை, நான் சொன்ன கருத்து சரியே " என்று அவரின் கருத்தையே அவர் வலியுறுத்தினார்.ஒரு கருத்தில் அவரோடு உடன்பட முடியாமலே அந்த நாளில் நான் அவரிடம் இருந்து விடைபெற்றேன்.
ஆனால் பின்னாளில் இந்திய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறபோது,3-ஆம் வகுப்பில் தேர்வு,5-ஆம் வகுப்பில் தேர்வு,8-ஆம் வகுப்பில் தேர்வு என்ப்தைப் பற்றிப் பேசுகின்றபோது ,இவை தவறு,பிஞ்சு வயதில் அவர்கள் படிப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரும் கொடுமையான கல்வித் திட்டம் என்று கூறியிருக்கின்றார்.
(தொடரும்)
👌நம் தலைமை ஆசிரியரோடு உரையாடிய விவரங்களை பதிவிடுதல் அருமையிலும் அருமை. இவ்வாறான நல்ல மனிதர்களைப்பற்றிக் கருத்துக்கைகளைப் பதிவிடுதல் அதனினும் அருமை. 1-5 வகுப்பு வரையிலுமாவது மாணவர்களுக்கு உரிய தேர்ச்சி யைப் போடுதல் சிறந்தது. ஐந்தாம் வகுப்பு வரையிலும் மாணவர்களை ஒழுக்கத்திலும் (நல்ல நீதிபோதனைக் கதைகள் மூலம் ஏனென்றால் நம் பிள்ளைகளுக்கு அட்வைஸ் பண்ணினால் பிடிக்காது. எனவேதான் நல்ல நீதிக்கதைகள் மூலம் மாணவர்களை நல்வழிக்குக் கொண்டு வரலாம். நம் முன்னோர்கள் இவ்வழியில் தான் தம் சமூகத்தை நல்வழிப்படுத்தினர். நம் அப்துல் கலாம் ஐயா அவர்களும் ஆரம்பக்கல்வி நன்முறையில் இருக்க வேண்டும் என்றே கூறினார்கள்) கல்வி தரத்திலும் சிறந்தவர்களாக்கிப் பின் உயர்நிலைக் கல்விக் கூடத்திற்கு அனுப்புதல் நன்று.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவா. சாரதா. தலைமையாசிரியை
ReplyDeleteநன்றி.மகிழ்ச்சி.
ReplyDelete