Tuesday, 11 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(20)

 

                சாப்டூரில் இரவு நேரப்படிப்பு


இதுவரை வெளிவந்த 19 கட்டுரைகளும் எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் தன் நினைவுகளாக என்னிடத்தில் கூறியவை.சாப்டூரில் தான் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றிக் கூறுகின்றபோது,அதுதான் உங்களுக்குத் தெரியுமே என்று சொல்லிவிட்டார்.

உண்மைதான் 1979-பள்ளிக்கூடம் திறந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்.நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.அவர் வந்த நாள் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,சராசரியான உயரத்தைவிட சற்றுக்குறைவாக இருந்த எங்கள் தலைமை ஆசிரியர் வந்தவுடன் பொறுப்பு ஏற்பதற்கு முன் பள்ளிக்கூடத்தில் இருந்த மேசை,நாற்காலிகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு,கணக்குப்படி பெற்றுக்கொண்டது நினைவு இருக்கிறது.

அப்போது சாப்டூர் பள்ளிக்கூடத்தில் ஒரு கூரை போடப்பட்ட வகுப்பறையும் இருந்தது.இப்போது சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நுழைந்தவுடன் வரும் முதல் பள்ளிக்கூடக் கட்டடம் இருந்த இடத்தில் இருந்தது.எங்கள் ஊரில் முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் திரு.சுப்புராமன் அவர்களின் தம்பி நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன் என்னோடு படித்தான்.நவ நீதகிருஷ்ணனின் அண்ணன்கள் சுப்புராமன்,நடராசன்,மோகன்,மூர்த்தி என அனைவரும் மிக நன்றாகப் பழகுவார்கள்.பேசுவார்கள்.அவர்களில் திரு.மோகன் அவர்கள் படித்து பட்டம் பெற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வேலைக்குச்சென்றார் .தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏதாவது ஒரு ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அந்த  நிறுவனம் ஒரு கட்டடம் கட்டித்தரலாம் என்று முன்வந்தபோது,அந்தக் கட்டடத்தை எங்கள் ஊருக்கு வாங்கித்தந்து,அருமையான கட்டடமாக அந்த நிறுவனம் கட்டிக் கொடுத்தார்கள்.அதுவரை அது கூரை வேயப்பட்டதாகத்தான் இருந்தது.திரு.மோகன் அவர்கள் அந்த வாய்ப்பை எங்கள் ஊருக்கு வாங்கிக் கொடுத்தது மிகப்பெரும் செயல்.இப்படிப் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்கும் பசுமையான நினைவுகளாக இருப்பது பள்ளிக்கூடத்து நினைவுகளே..அந்தப் பள்ளிக்கூடத்து கல்வியால்தான் பட்டம் பெற்றோம்,பதவி பெற்றோம் என்னும் நன்றி உணர்ச்சியே.

எங்கள் ஊருக்கு அரசுப்பள்ளி வந்த  நிகழ்வை பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1964-ல்தான் எங்கள் ஊருக்கு அரசுப்பள்ளி வந்திருக்கிறது.அப்போதெல்லாம் அரசுப்பள்ளி ஒரு ஊருக்கு வருவது என்றால் அரசாங்கத்திற்குப் பணம் கட்டவேண்டுமாம்.எங்கள் ஊர் ஜமீந்தார் குடும்பத்தின் சார்பாகத்தான் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கான (20 ஏக்கர் என நினைக்கிறேன்) இடம் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.அது மட்டுமல்லாது அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய பணத்திற்காக சாப்டூர் ஜமீந்தார் திரு.பெரியராஜா அவர்களும் வசூலுக்கு வந்து பெரியவர்கள் எல்லாம் பணம் போட்டு,அரசாங்கத்திற்குப் பணம் கட்டி அதன் மூலமாக பள்ளிக்கூடம் வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

1979-ல் அரசாங்கப் பள்ளிக்கூடம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது.எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. சில ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.சிலர் நடத்த மாட்டார்கள்.படிக்கும் மாணவர்கள் படிப்பார்கள்.படிக்காத மாணவர்களைப் படியுங்கள் என்று சொல்வதற்கோ,உனக்கு என்ன பிரச்சனை ,ஏன் படிக்க மாட்டேங்கிறாய்,ஏன் குறைவாக மார்க் எடுக்கிறாய் என்று கேட்பதற்கோ பெரிய முன்னெடுப்புகள் ஒன்றும் இல்லை.

நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பத்தாம் வகுப்பு படித்த முதல் மதிப்பெண் எடுத்த மாணவரின் மதிப்பெண் 59 சதவீதம்.அப்படி இருந்த நிலையில்தான் எங்களுக்கு திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் தலைமை ஆசிரியராக வந்தார்கள்.

மிகவும் பின் தங்கிய சூழல்.எதற்குப் படிக்கவேண்டும் என்பதோ ,எப்படி படிக்கவேண்டும் என்பதோ தெரியாத பின்னணி.வயக்காட்டுக்கு,செவக்காட்டுக்கு அலைந்துகொண்டு மாணவர்க்ள் பள்ளிக்கு வந்த நேரம்.முதலில் அவர் பெற்றோர் கூட்டம் போட்டு,இந்த வருடம்,உங்கள் பிள்ளைகளுக்கு அரசுத்தேர்வு,எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சை இருக்கிறது.தயவுசெய்து இந்த வருடம் உங்கள் பிள்ளைகளைப் படிக்கவிடுங்கள்.வேறு வேலைகளைச்செய்யச்சொல்லாதீர்கள்.லீவு போடச்சொல்லாதீர்கள்.உறவினர்கள் திருமணம்,உறவினர்கள் ஊரில் திருவிழா,கோவில் விழா போன்றவைகளுக்கு எல்லாம் நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு லீவு போடச்சொல்லி கூப்பிட்டுப் போக நினைக்காதீர்கள் என்று சொன்னார்.இதைத் தான் வேலைபார்த்த எல்லாப்பள்ளிக்கூடத்திலும் அரசுப்பொதுத்தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறார்.

எங்கள் கிராமமான சாப்டூரில் 1979-ல் ஒரு சில வீடுகளில்தான் மின்சாரம் இருந்தது.பள்ளிக்கூடத்தில் மின்சார வசதி இல்லை.வந்தவுடன் ஒரு பக்கம் மின்சாரம் வேண்டும் என்று எழுதிப்போட்டு,அதற்கான ஏற்பாடுகளைச்செய்து கொண்டிருந்த நேரத்தில் எங்கள் ஊரின் ஜமீந்தார் பங்களாவிலிருந்து ஒரு மின்சார வயரை மரங்களில் கட்டி இழுத்து வந்து,தற்காலிமாக மின்சார வசதியை ஏற்படுத்தினார்.எங்களை எல்லாம்  நைட் ஸ்டடிக்கு வரச்சொன்னார்.மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டு,மீண்டும் இரவு 7 மணிக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவோம்.இரவு 9.30 மணிவரை அங்கு உட்கார்ந்து படிப்போம்.கணக்கு,ஆங்கிலம் பாடம் சந்தேகங்கள்,புரியாதவற்றை திரு.வே.வீரிசெட்டி சாரிடம் கேட்போம்.அவரும் சொல்லிக்கொடுப்பார்.டியூசன் போலத் தனிக்கவனம் எடுத்து நடத்தினார்.ஆனால் கட்டணமாக ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை.

நேற்று என்னோடு படித்த நண்பன் சாப்டூர் மா.சுந்தரசேகரிடம்(பி.காம்) பேசியபோது,’அவர் நைட் ஸ்டடி வச்சு ,என்னையெல்லாம் வரச்சொல்லவில்லை என்றால் நான் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியிருக்க மாட்டேன்’ என்றான்.திருப்பூரில் எஸ்.எம்.பேக் டிரேடர்ஸ் என்னும் கடையை ஆரம்பித்து .பொருளாதார ரீதியாக மிக வலுவான நிலையில் இருக்கும் எனது நெருங்கிய நண்பன் கா.சுப்பிரமணியத்திடம்(B.Sc) பேசியபோது “ஏய்,வீரிசெட்டி சார் வரவில்லை என்றால் நான் எல்லாம் எப்படி பாஸ் செய்து இருப்பேன்.எங்க வீட்ல ஒத்த அரிக்கேன் லைட்தான் இருந்துச்சு.அவர் கரண்ட் ஏற்பாடு செய்து,பள்ளிக்கூடத்திற்கு இராத்திரியில் வரச்சொல்லி,தினந்தோறும் 2,3 மணி நேரம் படிப்பதற்கான வசதி ஏற்படுத்தி,படிக்க வைக்கவில்லை என்றால் எப்படி பாஸ் பண்ணியிருப்பேன் .அவர் வந்து என்னென்ன செயல்கள் செய்தார் “ என்று வரிசையாக பட்டியலிட்டு நன்றியுணர்ச்சியோடு பேசினான்.இதுதான் பல மாணவர்களின் நிலைமை.அந்த  நைட் ஸ்டடி என்பது ,ஒரு இடத்தில் எந்தவிதமான தொந்தரவுகளும் இன்றி நாங்கள் படிக்க உதவியது. நாங்கள் பத்தாம் வகுப்பில் வெற்றி பெறவும்,நல்ல மதிப்பெண் எடுக்கவும் உதவியது.

இன்றைக்கும் பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது,அவர் பள்ளிக்கூடத்திலேயே தங்கியிருந்தது.அவராக சமைத்து,வெறும் சோற்றுக்கஞ்சியை தேங்காய்ச்சில்லை வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தது,கழிப்பறை வசதி கூட இல்லாத காலகட்டத்தில் ,தனியாகக் காட்டுக்குள் இருந்த பள்ளிக்கூடத்தில்  தங்கி இருந்தது என அவர் தன் வாழ்வில் கடைப்பிடித்த எளிமை வேறு எந்த அரசுப் பணியாளருக்கும் இல்லாதது…

இந்த உலகம் பேசுவதைவிட ,நம் செயல்களைத்தான் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறது.அப்படி நல்ல செயல்களின் மூலமாக மாணவ,மாணவிகளின் மனதில் இடம்பெறும் நல்ல ஆசிரியர்கள்,அவர்களின் வாழ்நாள் முழுவதும் நன்றிக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்..

         ( தொடரும்…)

5 comments:

  1. சிறப்பு சித்தப்பா 🙏🙏. பள்ளியின் அருமை என்னை போன்ற நபர்களுக்கு படிக்கும்போது தெரிவதில்லை. என்ன படித்தாலும் +2 தாண்டப்போவதில்லை , மேலே படிக்க வசதியுமில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தான் இருந்தது. பிறகு நாமும் ஒரு தந்தை ஆன பிறகுதான் தெரிகிறது பள்ளிக்காலங்களில் வீணாக்கிய நாட்களின் அருமை. அந்த அனுபவத்தை வைத்துத் தான் தற்போது உள்ளவர்களை படி படி என்கிறோம், ஆனால் எனது மனநிலையில் தான் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள். படிக்கும்போது கிடைக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்காத வாய்ப்பு.. எப்போதும் கிடைக்காது, கல்வி ஒன்றே வாழ்க்கைக்கு உதவும் என்பதை சாப்டூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு உங்களைப்போன்ற நல் உள்ளங்கள் உணர வைக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏

    ஆர்.வி.ஆர்.சாப்டூர் அக்னி சிறகுகள் வாட்சப் குழுவில்...

    ReplyDelete
  2. நன்றி வணங்காமுடி...சொல்வதை நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்..

    ReplyDelete
  3. தங்கள் தலைமையாசிரியர் தம் செயல்பாடுகள் நெஞ்சம் நெகிழ வைக்கிறது. உண்மையான துறவறம் தொண்டறமே!

    ReplyDelete
  4. ஆமாம். .'உண்மையான துறவறம் தொண்டறமே' என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர்.நன்றிங்க அம்மா,வருகைக்கும் கருத்திற்கும்.

    ReplyDelete