அண்மையில் படித்த புத்தகம் : கழிவறை இருக்கை
நூல் ஆசிரியர் : லதா
வெளியீடு : நோராப் இம்ப்ரீண்ட்ஸ்,சென்னை-90
முதல் பதிப்பு : நவம்பர் 2020
மொத்த பக்கங்கள் : 224, விலை ரூ 225
இந்த நூலின் ஆசிரியர் லதா ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்றவர்.நிதி நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர்.கார்ப்பரேட் துறையில் 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்.இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராக உருவெடுத்தவர்.பத்திரிக்கை ஆசிரியர்.மொழிபெயர்ப்பாளர். 2017-ஆம் ஆண்டு டாய்லெட் சீட் என்னும் ஆங்கில நூலை எழுதியுள்ளார்..தான் எழுதிய ஆங்கில நூலான டாய்லெட் சீட் என்னும் ஆங்கில நூலை தமிழில் கழிவறை இருக்கை என்னும் தலைப்பில் மொழி பெயர்த்து 2020-ல் வெளியிட்டுள்ளார். இது தவிர விரலிடை வெளிச்சம் மற்றும் பார்வை வெளிப்பயணம் என்னும் இரண்டு நூல்களை 2018-ல் வெளியிட்டுள்ளார்.
கழிவறை இருக்கை என்னும் இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு.'வாழ்வின் தேவைகள் ' என்னும் முதல் கட்டுரையில் ஆரம்பித்து ' இப்போதைய தேவையும் எதிர்காலத்தின் நம்பிக்கையும் ' என்னும் இறுதிக்கட்டுரை வரையிலான மொத்தம் 32 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்று நாம் உணவு,உடை,இருப்பிடம் என்னும் மூன்றை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் நான்கு. மேலே சொல்லப்பட்ட மூன்றோடு காமம் என்பதையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர் ஆதி மனிதனின் அடிப்படைத்தேவைகள் உணவும்,காமமும் மட்டுமே.மனிதன் நாகரிகம் அடைந்த பிறகு வந்ததுதான் உடையும்,இருப்பிடமும் என்று சொல்கின்றார்.ஆகவே உடைக்கும் இருப்பிடத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட காமத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூலாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
" காமம் என்ற அழகான,எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசியமான ஓர் அடிப்படை வாழ்வாதாரம்,இங்குக் கேவலப்பட்டு ,மற்றவர்களைத் தாக்கவும்,அழிக்கவும் ,அடிமைப்படுத்தவும் உபயோகப்படும் ஓர் அபாய மிக்க சாதனமாகிவிட்டது " என்று குறிப்பிடும் லதா " காமம் குறித்தான உரையாடல்கள் வெளிப்படையாக இருக்குமேயானால் ,நம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் வன்புணர்வுகளை,பாலியல் தொந்தரவுகளை,மனப்பிறழ்வுகளின் வழியாய் நடக்கும் இழிவுகளைக் குறைக்கவும், நம் வருங்கால சந்ததியினரை இம்மாதிரியான மன,உடல் ரீதியான பிரச்சனைகளிலிருந்து காக்கவும் வழி வகுக்கலாம் " என்று குறிப்பிடுகின்றார்.
அண்மையில் மதுரையில் நான் கேட்ட ஓர் உரையாடல் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. 'பாவம்பா அந்தப் பிள்ளை.பத்தாவது படிக்கிற பிள்ளை. எவனோ அந்தப் பிள்ளையைக் கர்ப்பமாக்கி விட்டு விட்டான். நீயா விஷம் குடிக்கிறியா? இல்லை நாங்க விஷம் குடிக்கவா ?' என்று சொல்லிச் சொல்லி டார்ச்சர் கொடுத்து அந்தப்பிள்ளையை அப்பனும் ஆத்தாளும் சேர்ந்து விஷம் குடிக்க வச்சுட்டானுக. நோய் வாய்ப்பட்டு நிகழ்ந்த மரணம் போல மறைத்து விட்டார்கள் " என்று அந்த உரையாடல் நகர்ந்தது. உரையாடியவர்கள் மிகக் கவனமாக அந்தப் பெண்ணின் பெயரையோ,பள்ளியின் பெயரையோ சொல்லவில்லை.நாம் அழுத்திக் கேட்டாலும் விடை வராது.இளம் வயதிலிருந்து இந்த மாதிரியான உரையாடல்களை,செய்திகளை நாம் கேட்டுக் கொண்டுதான் வளர்ந்து வந்திருக்கிறோம்.எத்தனை இளம்பெண்கள் இப்படிச்சாகடிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் போயிருக்கிறார்கள்.இந்த மாதிரியான செய்திகள் வராமல் இருக்க சமூகம் என்ன செய்ய வேண்டும்,பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான உரையாடலாக இந்தப்புத்தகம் இருக்கிறது.பேசுங்கள் வீட்டிலேயே காமம் பற்றி பேசுங்கள் என்று சொல்கின்றார்.மகனுக்கு அப்பாவும்,மகளுக்கு அம்மாவும் காமம் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவேண்டும் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
நமது சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது.காமத்தைப் பற்றி பெண் பேசுவது,எழுதுவது என்பதே ஒரு குற்றமாகத்தான் பார்க்கப்படுகிறது. ‘ஆண்கள் காமத்தை பொதுவில் பேசுவது அங்கீகரிக்கப்படுகிறது.பேசவும் செய்கிறார்கள்.ஆனால் பெண்கள் பொதுவாக பேசுவதில்லை.அப்படிப் பேசிவிட்டாலும் அவளை மனிதர்கள் பார்க்கும் கோணமே வேறுமாதிரி இருக்கிறது. ‘ என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் காமத்தைப் பற்றிப் பேசினாலே அவள் ஒரு மோசமான பெண்ணாகத்தான் இருப்பாள் என்று இந்தச் சமூகம் கருதுகிறது என்பதனை எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிடுகிறார்.
ஒரு பெண் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறாள் என்று குறிப்பிடும் ஆசிரியர் அப்படிப் பெண்ணைப் பொருளாகப் பார்ப்பவர்கள் ஆண்கள் மட்டுமல்ல,பெண்களும் அப்படித்தான் பார்க்கிறார்கள்.பெண் குழந்தைகள் வளர்க்கப்படும் முறையே அப்படித்தான் இருக்கிறது என்பதனைச்சுட்டுகிறார்.’ அவள் வளர்க்கப்படும் முறையிலேயே அவள் ஒரு பொருளாக,அறிவில்லாதவளாக,அழகா னவளாக,மற்றவரை ஈர்க்க வேண்டியது ஒன்றே குறிக்கோளாக வாழ வைக்கப்படுகிறாள் ‘ அதனைப் போலவே ‘ஓர் ஆணாதிக்க சமூகத்தில் ,பெரும்பாலான மதங்களே பெண் என்பவள் ஆணிற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் சமூகத்தில் ,ஒரு பெண் பொருளாக மட்டுமே பார்க்கப்படுவதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை ‘ என்பதனையும் குறிப்பிடுகிறார்.
இந்த நூலில் 'திருமணம் எனப்படும் அமைப்பு','திருமணமும் குடும்பமும்' 'சொந்தம் கொண்டாடும் மனப்பான்மை ' போன்ற தலைப்புகளில் கணவன் மனைவி உறவு மற்றும் குடும்பம் பற்றிய பல செய்திகளை மிக வெளிப்படையாக நூலாசிரியர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், " ஆண்-பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன்-மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.நமது கல்யாணத்தத்துவம் எல்லாம் சுருக்கமாகப்பார்த்தால் ,பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர,வேறு ஒன்றுமே இல்லை " என்று தந்தை பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள் ' என்னும் புத்தகத்தில் குறிப்பிடுவதைப் போல பெண்ணை இந்த திருமணமும் குடும்பம் என்னும் அமைப்பும் எப்படி எல்லாம் கட்டுப்படுத்துகிறது என்பதனை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
"தொப்புள் கொடி அறுபட்டதிலிருந்து நம் குழந்தைகள் தனி மனிதர்கள் என்பதை உணரவேண்டும்.பெற்றோர் என்ற ஒரே காரணத்தால் நாம் கையில் எப்பொழுதும் ஒரு தடியை வைத்துக் கொண்டு சுற்றுவது சரியில்லை.அவர்களை நம்முடன் வாழும் இன்னொரு தனி மனிதராக நட்புடன் வளர்க்கக் கற்க வேண்டும்.நாம்தான் அவர்களின் நெருக்கமான தோழனாக/தோழியாக இருக்க வேண்டும்.இது மட்டுமே அவர்கள் சரியான பாதையில் பயணிக்க வைக்கும் யுக்தியாகும்" என்று நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.ஒரு மனிதரிடம் ஒரு குழந்தை போக விரும்பவில்லை என்றால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி,அந்த மனிதரிடம் குழந்தைகளைப் போக வைக்காதீர்கள். அவர் எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் குழந்தைக்கு போக விருப்பமில்லை என்றால்,ஏதோ ஒரு காரணம் குழந்தைக்கு இருக்கும்.அந்தக் காரணத்தை ,நம் குழந்தை நம்மிடம் சொல்லக்கூசலாம்,சொல்லாமல் இருக்கலாம்...அதனால் குழந்தையின் போக்கில் இருக்க விடுங்கள் என்று சொல்லும் கருத்து ஒரு வித்தியாசமான கோணமாக எனக்குத் தோன்றியது.
நூலில் நிறைய மேற்கோள்கள் இருக்கின்றன. காதலுக்கும் காமத்திற்குமான தொடர்பு,திருமணம் கடந்த உறவு,சுய இன்பம் குறித்த புரிதல் போன்றவை ஒரு புதிய கோணத்தில் காமத்தை பார்க்கும் பார்வையை கொடுக்கின்றன.மூளையில் ஏற்படும் இராசயண மாற்றங்கள் பற்றியும்,காமம் அதிகமாக இருப்பதற்கும் ,இல்லாமலேயே இருப்பதற்குமான பலவிதக் காரணங்களை அறிவியல் உலகம் இன்றைக்கு இருக்கும் நவீன அறிவியலைக் கொண்டு ஒருபக்கம் விளக்க முற்படும் நிலையில் உளவியல் வழியாக காமம் பற்றிய பல புரிதல்களை வாசகர்களுக்கு கொடுக்க லதா முயற்சி செய்திருக்கிறார் இந்த நூலில்.காமம் பற்றிய தனது கருத்துகளின் மூலம் உலகத்தின் சிந்தனை போக்கை மாற்றிய சிக்மெண்ட் பிராய்டின் எழுத்துகள் போல பல இடங்களில் வாசிப்பவரை திடிக்கிட வைக்கிறார் லதா.
"லதா எழுதியிருக்கும் கட்டுரைகளில் சில நுட்பமான புள்ளிகள் இருக்கின்றன.இவர் தொட்டுச்செல்லும் கட்டுரைப் பொருள்கள் மிகவும் கவனமாகக் கையாளவேண்டியவை.தேர்ந்த தெளிவின் நீட்சியே அத்தகைய கருத்துக்களை வழங்க உதவும் " என்று இந்த நூலுக்கு 'உறைந்து சில்லிட்ட பனிக்கட்டி உடையும் ;உருகும்! " என்னும் தலைப்பில் முனைவர் தமிழ்மணவாளன் அணிந்துரை அளித்திருக்கிறார். ஒளவை பாடிய காமம் பற்றிய பாடலை சுட்டிக்காட்டி,பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காமம் பற்றி பெண்களே வெளிப்படையாக பேசிய தமிழ் சமூகம் எப்படி காலப்போக்கில் இப்படி மாறிப்போனது என்று வியப்படைந்து எழுதியுள்ளார்.உலகப்பொதுமறையாம் திருக்குறளின் 'காமத்துப்பால் ' மிகவும் வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் காமத்தை அணுகும்,விளக்கும் இலக்கியம் தானே. இன்றைக்குக் கூட காமத்துப்பாலை விட்டுவிட்டு அறத்துப்பாலையும்,பொருட்பாலையு ம் மட்டும் படித்தால் போதும்,காமத்துப்பால் படிக்கவேண்டாதது என்று சொல்லும் மனிதர்களும் நம்மைச்சுற்றி இருக்கத்தானே செய்கிறார்கள்...
"பெண் விடுதலை பேசும் நூல்களுள் இந்நூல் புதிய துணிச்சலான முயற்சி! பேசக் கூடாதென்ற பேசாப்பொருளை விரிவாகத் தரவுகளுடன் பேசுகிறது.ஒவ்வோர் ஆணும் பெண்ணும் படிக்கவேண்டிய நூல்! " என்று ஒரு விரிவான அணிந்துரையை 'பெண்ணியப்பார்வையிலிருந்து ..." என்று தலைப்பிட்டு முனைவர் நா.நளினிதேவி கொடுத்திருக்கின்றார்.இவர் 'அகவிடுதலையே பெண் விடுதலை ' என்னும் துணிச்சலான நூலினை எழுதியவர்.லதாவுக்கு முன்பே சமூகம் போட்டு வைத்திருக்கும் பல முகமூடிகளை பேனா முனையில் எழுதி அகற்ற முயற்சி செய்தவர் என்பதால் இவரது அணிந்துரையும் நூலைப்போலவே காட்டமாக இருக்கிறது.
" என் அனுபவங்களிலிருந்து ,என் சுற்றுச்சூழலில் நான் பார்த்தவைகளிலிருந்து ,மற்றவரிடம் கேட்டுத்தெரிந்தவைகளிலிருந்து, காமத்தை மிக எளிமையான முறையில் ஆராய்ந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது." என்று நூலாசிரியர் என்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆனால் நம்மைப்பொறுத்தவரையில்,தமிழ்ச் சமூகச்சூழலில் இது பெரும் முயற்சி.'மீ டூ ' இயக்கம் போல தன் வாழ்வில் நடந்த சில பாலியல் அத்துமீறல் செய்திகளை அவர் பகிர்ந்திருப்பதைப் படிக்கும்போது நெஞ்சம் பதறுகின்றது.எனக்கு மட்டுமல்ல, இதைப்போன்ற பல நிகழ்வுகள் பல பெண்களின் வாழ்க்கையில் இருக்கிறது.அதையெல்லாம் கேள்விப்பட்ட பின்புதான் இந்தப்புத்தகத்தை நான் எழுதத்துணிந்தேன் என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
காமம் என்பதை பொத்தி,பொத்தி மறைத்து வைத்து,அவர்களுக்கு என்னவென்றே தெரியாமல் திருமணத்தை நடத்திவைத்து அதற்குப் பின் துன்பப்படும் குடும்பங்கள் நிறைந்தது நமது சமூகம்.செல்பேசி வழி இணைய இணைப்புகள் கிடைத்த இந்தக் காலகட்டத்தில் வன்மமும்,வக்கிரமும் நிறைந்த பாலியல் காட்சிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் எளிதில் கிட்டுகின்றன.இதனை முறைப்படுத்த எந்த வழியும் இல்லாமல் சமூகம் திண்டாடும் இந்த நேரத்தில் வழி தவறி,வாழும் முறை தவறி நம் இளைஞர் சமுதாயம்,மாணவர் சமுதாயம் கெட்டுப்போகாமல் இருக்க சில முன்னெடுப்புகள் தேவையாக இருக்கிறது.அப்படிப்பட்ட முன்னெடுப்பை எடுக்க நம்மை வலியுறுத்தும் நூலாக இந்த நூலை நாம் பார்க்கவேண்டும்.
உரையாட வேண்டிய பல கருத்துகளை உள்ளடக்கியதாக இந்த நூல் இருக்கிறது.இதில் இருக்கும் கருத்துகள் அனைத்தையும் ,நூறு சதவீதம் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை.ஆனால் இந்த நூலைப் படித்து முடித்தவுடன் இதைப்பற்றிப் பேச வேண்டிய,அறிய வேண்டிய தேவை இருக்கிறது என்பதனை நம்மால் உணரமுடியும்.பழமைவாதிகள் படித்தால் அவர்களை அதிர்ச்சி கொள்ள வைக்கும் நூல் ஏனென்றால் பேசப்படாத பொருளைப் பற்றி ஒரு பெண் எழுதிய நூல்.இப்படி ஒரு பெண் எழுதலாமா?,பேசலாமா? என்று சிலர் விமர்சனம் வைக்கக்கூடும். இன்றைக்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான்.3 வயதுக்குழந்தை முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு சமூகத்தில் காமம் பற்றிப் பேசாமல்,அதைப் பற்றிய உரையாடல் இல்லாமல் எப்படி கடக்க இயலும்?...
ஒரு பெண்ணுக்கு இந்த உலகம் என்பது 'காமம் சூழ் உலகாக' இருக்கிறது. எந்த இடத்தில்,யாரால் தனக்குப் பாலியில் தொந்தரவு நிகழும் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க இயலாத உலகமாக இந்த உலகம் இருக்கிறது.எங்கு நிகழ்ந்தாலும்,யாரால் நிகழ்ந்தாலும் அதற்கான பழியை,வேதனையை,துன்ப வாழ்வைச்சுமக்கும் உயிராகப் பெண்ணே இருக்கிறாள்.ஏன் சில நேரங்களில் உயிரைத் துறக்கும் உயிராகவும் பெண்ணே இருக்கிறாள் எனவே ஒரு பெண் இதைப்பற்றி பேசத்துணிந்ததை நாம் பாராட்ட வேண்டும்.இன்னும் நிறைய பெண்கள் இதுபற்றிப் பேச வேண்டும்.
"எனக்குத் தெரிந்தவரையில் தமிழில் இத்தனை வெளிப்படையாக ஒரு புத்தகம் இதுவரை வந்ததாக நினைவில்லை.ஒரு தேர்ந்த மனநல ஆலோசகரும் ஒரு மகத்தான மனோதத்துவ நிபுணரும் சேர்ந்து எழுதிய புத்தகமாகவே இதை நான் பார்க்கிறேன்.யாருமே பேசாத விஷயங்களை லதா மிகவும் காத்திரமாக முன்வைத்திருக்கிறார் "என்று எழுத்தாளர் பவா.செல்லத்துரை குறிப்பிட்டதை இந்த நூலின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.நாம் வாசிக்க வேண்டிய புத்தகம். வாசித்து யோசிக்க வேண்டிய புத்தகமும் கூட.
வா.நேரு.மதுரை.
அற்புதமான திறனாய்வு தோழர்...ரொம்ப கவனமாக உளவாங்கி அதை ரொம்ப நேர்த்தியாக பதிவு செய்து இருக்கிங்க..சிறப்பு தோழர்
ReplyDeleteநன்றி தோழர்.மகிழ்ச்சி.(குடியாத்தம் ந.தேன்மொழி அவர்களுக்கு)
ReplyDelete