Saturday, 4 November 2023

கணினித் திரையிலா ? காகிதப் பக்கங்களிலா?....முனைவர் வா.நேரு

 

மதுரையில் புத்தகத் திருவிழா அக்டோபர் 12-ஆம் தொடங்கி அக்டோபர் 22 வரை, 11 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. எதிர் எதிர்க் கருத்துகளைக் கொண்ட புத்தகங்களைக் கூட ஒரே இடத்தில் வாங்கக்கூடிய இடமாகப் புத்தகச் சந்தை திகழ்கிறது.

இதனைப் போல தமிழ்நாட்டின் பல நகரங்களில் தொடர்ச்சியாக இந்தப் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுவதும், மக்கள் அலை அலையாக வருவதும், புத்தகங்களை வாங்கிச்செல்வதும் பெரும் மகிழ்ச்சியை நமக்கு அளிக்கிறது.

இலட்சக்கணக்கான புத்தகங்கள் கிண்டிலில் ஒரு கணினிக்குள் கிடைக்கின்றன. விரும்பியதை விரும்பிய நேரத்தில் எல்லாம் நான் படித்துக்கொள்கிறேன்” என்றார் அந்த நண்பர்.

“இல்லை, நாம் புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துப் படிப்பது போல இணையத்தில் அல்லது கிண்டிலில் படிப்பது வராது” என்றேன் நான். நீங்கள் இன்னும் பழைய புத்தகக் காலத்திலேயே இருக்கிறீர்கள், புத்தகமாக வாங்கிக் குவிக்கிறீர்கள், மாறுங்கள்” என்றார்.

நானும் விடவில்லை. ‘ஆன்லைனில் படிக்கவே கூடாது, அது வேண்டவே வேண்டாம் என்பதல்ல எனது வாதம்.ஆனால் ஆன்லைன் புத்தகத்தைவிட, காகிதப்புத்தகமே மேல் என்பதே என் வாதம்’ என்றேன்.

எனது வாதத்திற்கு வலு சேர்ப்பதுபோல பி.பி.சி.தமிழ் இணையதளத்தில் ஒரு செய்தி கிடைத்தது. அது காகிதத்தில் வாசிப்பதற்கும் திரையில் வாசிப்பதற்கு
மான வேறுபாட்டைப் பற்றிப் பேசுகின்றது.



‘பிபிசி அய்டியாஸ் ‘தளத்தில் ‘திரையில் வாசிப்பது நம் மூளைக்கு என்ன செய்கிறது’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு காணொலி, டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்தனர் என்று சொல்கிறது
இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவை குறித்து நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் பல்கலைகழகத்தின் பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான ஆன் மேங்கன், ”ஸ்மார்ட் ஃபோன்களில் நாம் படிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சிறிய செய்தித் துணுக்குகள் போன்ற விஷயங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் காகிதத்தில் படிக்கும் உள்ளடக்கத்தைவிட திரையில் படிக்கப்படும் உள்ளடக்கம் எளிதில் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டது” என்கிறார்

சயின்டிஃபிக் அமெரிக்கன்’ என்னும் இதழ்“காகிதத்தில் வாசிப்பதைவிட, திரையில் வாசிக்கும் போது நமது மூளை அதிகமாக வேலை செய்கிறது. ஆனாலும் திரையில் நாம் வாசித்ததை நீண்டநேரம் நினைவில் வைத்திருப்பது கடினம்” என்று குறிப்பிடுகிறது அப்படியென்றால் அதிக நேரம் மூளை வேலை செய்து, மிக எளிதாக திரையில் வாசித்ததை மறந்து விடுகிறது

“புத்தகங்களைப் படித்தாலும் கூட, அதனை மீண்டும் மீண்டும் படிக்கும்போதுதான் முழுப்பொருள் நமக்குக் கிடைக்கும்.

‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு (குறள் 783)

பழுத்த கனிகளைக் கூட அப்படியே ‘லபக்கென்று விழுங்கி
விடுவதோ அல்லது அவசர அவசரமாகச் சாப்பிட்டு விடுவதோ அதன் முழுச்சுவையை அனுபவித்து, சுவைத்து மகிழும் அரிய வாய்ப்பை உண்போருக்குத் தராது.
மாறாக, மெல்ல நிதானமாக நன்றாகச் சுரந்த உமிழ்நீருடன் கலந்து அதனை உண்ணும்போதுதான் முழுச்சுவை நமக்கு நல்லதோர் அனுபவத்தை ஊட்டும் என்று சொல்வார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். (வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பு 11, பக்கம் 253). நின்று நிதானமாகத் திரும்பத் திரும்பப் படிப்பதற்கு உகந்தது காகிதப் புத்தகமே தவிர கணினித் திரைப் புத்தகங்கள் அல்ல.

புரிந்து கொள்வதற்கும், திரும்பத் திரும்பப் படிப்பதற்கும் மட்டுமல்ல; உடல் நலனுக்கும் கணினித் திரைப்புத்தகங்களை விட காகிதப் புத்தகங்களே நன்று. ஸ்மார்ட் போன்கள் என்று அழைக்கப்படும் ஆண்ட்ராய்டு போன்களை சிறு வயதிலேயே படிப்பதற்கு என்று குழந்தைகளுக்குக் கொடுத்து விடுகிறோம்.

“‘சேப்பியன் லேப்ஸ்’ என்ற அமெரிக்கத் தன்னார்வ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே ஸ்மார்ட்ஃபோன் கொடுப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் அவர்களின் இளமைப் பருவத்தில் தெரியும் என்கிறது” என்று அந்த பி.பி.சி.செய்தி குறிப்பிடுகிறது. மேலும்,

“அஷ்விகா பட்டாச்சார்யா 9ஆம் வகுப்பு மாணவி. எப்பொழுதும் வகுப்பில் முதலிடத்தில் இருக்கும் அஷ்விகா, புத்தகங்கள் வாசிக்கிறார்.ஆனால் டிஜிட்டல் சாதனங்கள் வழியாக வாசிக்கிறார். அவரது பெற்றோர் அவருக்கு மென்புத்தகங்கள் வாசிக்க கிண்டில் கருவியைக் கொடுத்திருந்தாலும், இப்போது அவரை முழுமையாக காகிதப் புத்தகங்கள் பக்கம் திருப்ப விரும்புகின்றனர். அஷ்விகாவின் தாய் அசிமா கூறுகையில், ‘அதிகப்படியான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் கண்களில் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக நாங்கள் தொடர்ந்து உணர்கிறோம் அதனால் எனது மகளை காகிதப் புத்தகங்களின் பக்கம் திருப்ப விரும்புகிறேன்’ என்கிறார் என்று ஒரு தாயின் அனுபவத்தையும் அந்தச் செய்தி பகிர்கின்றது.

கோபத்தைத் தணிக்க ஒரு நல்ல புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரம், ஒரு மணி நேரம் தனியாக உட்கார்ந்து படிப்பது ‘பிபிலியோதெரப்பி (Bibliotherapy)’ஆகும். புத்தகங்கள் வாசிப்பின் மூலம் மனோவியல் சிகிச்சையளிக்கும் முறை என்று அந்தச் செய்தி குறிப்பிடுகிறது. அந்த ‘பிபிலியோதெரப்பி’ என்னும் சிகிச்சை முறை பற்றிய செய்திகள் நிறைய இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல நூல்கள் நல்ல உளவியல் சிகிச்சை மருந்துகள் என்பதை அறிவியலும் இப்போது சொல்கிறது.

ஆம், புத்தக வாசிப்பின் மூலமாக நாம் நல்ல நண்பர்களைப் பெறுகின்றோம். அவர்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காத நண்பர்கள், இன்னும் சிலரோ இப்போது உயிர் வாழாத நண்பர்கள், ஆனால் அவர்கள் தங்கள் எழுத்துகளின் மூலமாக நம்மோடு பேசுகிறார்கள். நல்லது, கெட்டதை நமக்கு அறிவுறுத்துகிறார்கள். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், தாங்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற அனுபவத்தை எல்லாம் நமக்கு அள்ளிக் கொடுத்துச் சென்று இருக்கிறார்கள், திருவள்ளுவரைப் போல புத்தகங்களின் வாயிலாக.
‘பிடிஎப் (PDF)’ புத்தகமாக மாற்றப்பட்டு, பலரும் அது கணினித் திரையில் மட்டும் படிக்கும்போது, அதற்கான எந்தவிதமான அங்கீகாரமும் எழுத்தாளனுக்குக் கிடைப்பதில்லை.

நாம் புத்தகங்களை பி.டி.எப். என்னும் வடிவில் கணினித் திரையில் படிப்பதும் ஒருவகை உழைப்புச்
சுரண்டல்தான்,ஒரு வகையான திருட்டுத்தான்.

கிண்டில் போன்ற ஆன்லைன் புத்தக நிலையங்களில், ஒர் எழுத்தாளர் தன் புத்தகத்தைப் போட்டு விட்டால், அதனை விளம்பரம் செய்து விற்கவேண்டிய பொறுப்பும் அந்த எழுத்தாளரைச் சார்ந்ததுதான்.பதிப்பகங்கள் தாங்கள் பதிப்பித்த எழுத்தாளரின் புத்தகங்களை ஊர் ஊராகச் சென்று புத்தகத் திருவிழாக்களில் விற்பனை செய்வது போல, அமேசான் போன்ற நிறுவனங்கள் பொறுப்பு எடுத்துக்கொள்வதில்லை. விற்றால் உனக்கு ராயல்டி தருகிறோம், பதிப்பகம் கொடுப்பதை விட அதிகமாகவே தருகிறோம், ஆனால் விளம்பரம் செய்து விற்க வேண்டியது உன் பொறுப்பு என விட்டுவிடுகின்றார்கள். புதிய எழுத்தாளர்களுக்கு இந்த வழிமுறை பயனளிக்காது.

காகிதப் புத்தகங்களை வாங்கித் தங்கள் வீட்டில் ஒரு சிறு நூலகத்தை ஏற்படுத்துகிறவர்கள், அதன் வழியாகத் தாங்கள் விரும்பும் புத்தகத்தை மீண்டும் மீண்டும் எடுத்துப் படிப்பவர்கள், அதில் இருக்கும் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவர்கள் ஒரு நல்ல சமூகம் அமைவதற்கான அடிப்படைக் கடமையைச் செய்கின்றார்கள். ஒரு சிறு நூலகத்தை உங்கள் வீட்டில், வாசிக்கும் நீங்களும் ஏற்படுத்துங்கள். வாசிப்பை நேசிப்போம். வாசிப்பைச் சுவாசிப்போம்.

நன்றி : ‘டிஜிட்டல் புத்தகங்கள் வாசிப்பதால் மூளையில் ஏற்படும் ஆபத்தான விளைவுகள்’ கட்டுரை.
– பி.பி.சி. தமிழ், அஞ்சலிதாஸ், 21.10.2023.

 நன்றி உண்மை மாதம் இருமுறை இதழ்  நவம்பர் 1-நவம்பர் 15

No comments:

Post a Comment