Friday, 24 November 2023

திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

 

இன்று எனக்கு தலைமை ஆசிரியராக இருந்து சென்ற ஆண்டு(2022) இதே நாளில்  நவம்பர் 24-ல் மறைந்த திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.அவரைப் பற்றிய நினைவுகள்  நிறைய ஓடுகிறது.84 ஆண்டுகள் ,ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தவர்,அப்படி கற்றுக்கொடுப்பதற்கு அடிப்படை கற்றுக்கொள்வது எனத் தன்  வாழ்நாள் முழுவதும்  கற்றுக்கொண்டே இருந்தவர்.’செல்வத்துள் எல்லாம்  தலை’ ஆகிய செவிச்செல்வத்தை முழுமையாகப் பயன்படுத்தியவர்,எவர் பேசினாலும் பொறுமையாக,முழுமையாகக் கேட்கும் தன்மையை தன் வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தார்.



அவரைப் பற்றிய எனது நினைவுகள்,அவர் பல பள்ளிகளில் பணியாற்றிய அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்,அவரின் உடன் பிறந்த தம்பி,அவரின் இன்னொரு மாணவர்,அவரின் இரண்டு நண்பர்களின் கூற்று என அனைத்தையும் இணைத்து ஒரு நூலாக ‘கனவுபோலத்தான் நடந்தது ‘ என்னும் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.அந்தப் புத்தகம் மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில்  வருகின்ற 26-ந்தேதி காலை 10-1 மணி வரை நடக்கும் திரு.வே.வீரிசெட்டி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் வெளியிடப்பட இருக்கின்றது.

மதுரை,அதனைச்சுற்றி இருக்கும் தோழர்கள்,நண்பர்கள் வாய்ப்பு உள்ளோர் வாருங்கள்.மிகக் குறுகிய காலத்தில் இதனை அச்சிட்டு உதவிய கீழடி பதிப்பகம்,அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் பண்ணைக்காடு,நத்தம்,தேவதானப்பட்டி,சிறுகுடி,தொண்டி,பாகனேரி,சாப்டூர்,கருங்காலக்குடி,சத்தரப்பட்டி,வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் ஆசிரிய்ராகவும் ,தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.அவரின் மாணவர்கள்,உடன் பணியாற்றியவர்கள் அவரைப் பற்றி ஏதேனும் சொல்லவேண்டும் என்று நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது எழுதி அனுப்புங்கள்.அடுத்த பதிப்பில் இணைத்துக்கொள்ளலாம்.



இன்றைக்கு அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளாம்.அய்யா சிக்காகோ மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பதிவிட்டிருந்தார்.  நன்றி உணர்ச்சியால் விளைந்த புத்தகம் இது. நன்றி.

No comments:

Post a Comment