Saturday, 2 December 2023

கணினி பெரியதா? சுயமரியாதை பெரியதா? ....முனைவர் வா.நேரு

 டிசம்பர் 2. சுயமரியாதை நாள்.தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள்.நாமெல்லாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள்.தந்தை பெரியாருக்குப் பின் ,அவரின் இயக்கம் இருக்காது,அவரின் கொள்கைகள் இருக்காது என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் தந்தை பெரியாருக்குப் பின் அவரின் இயக்கமும் அவரின் கொள்கைகளும் இன்னும் வலிமையாக இருக்கிறது என்பதை நம் பரம்பரை எதிரிகளும் ஒத்துக்கொள்ளும் காலகட்டம் இது.தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல் ‘ ஆட்சிக்கு மட்டுமல்ல, இந்திய ஒன்றியம் முழுமைக்கும் இன்று தேவைப்படும் தத்துவமான ‘அனைவருக்கும் அனைத்தும் ‘ என்னும் பெரியாரியல் தத்துவத்தை போதிக்கும் பேராசானாக அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளங்குகின்றார்.

டிசம்பர் 2-ஆம் நாள் உலகக் கணினி  நாளாகவும் கொண்டாடப்படுகிறது நமது வாழ்க்கையில் ,நமது சமூகத்தில் கணினி வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள், ,கணினி என்பது நமது  நடைமுறை வாழ்க்கையில் எப்படி தவிர்க்க இயலாத ஒரு பகுதியாக மாறி இருக்கிறது என்பதைப் பற்றியும் நினைக்கும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.கணினி வருவதற்கு முன்னால் இருந்த நிலைமையையும் இன்றைக்கு கணினி வந்தபின்  நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் மிகத்தெளிவாகச்சொல்வதற்கு 2000-ஆண்டுகளுக்குப் பின்னால் பிறந்தவர்களைக் கேட்டால் விடை தெரியாது. 1990-க்கு முன்னால் பணத்தை அனுப்ப தபால் அலுவலங்களில் மணியார்டர் பாரத்தை வாங்கிக்கொண்டு கால்கடுக்க நின்றவர்களையும், நாம் போட்டுவைத்த பணத்தை எடுக்க வங்கிகளில் நாள் கணக்கில் நின்றவர்களையும் கேட்டால்தான் தெரியும்.அதாவது 1990-களில் 20 வயதுக்கு மேற்பட்ட வயதில் இருந்தவர்களைக் கேட்டால் இந்த கணினியுகம் பற்றியும் தெரியும் அதற்கு முன்னால் இருந்த நிலைமையும் தெரியும்.

கணினி யுகத்தைப் பற்றி நினைக்கும்போது எனக்கு ‘ஒரு விரலில் உலகை ஜெயித்தவர் ‘ என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. ‘செரிப்ரல் பாலிசி ‘ என்ற  நோயால்  பிறந்தது முதல் பாதிக்கப்பட்டு சரியாகப் பேசவும் எழுதவும் வராத ,பிறவிக்குறைபாடு உடைய மாலினி சிப் என்பவர் எழுதிய  ‘தன் வரலாறு ‘ இந்த நூல்

அடுத்தவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் பேசவேண்டும் அல்லது எழுத வேண்டும்.எழுதவோ பேசவோ முழுமையாக முடியாத மாலினிசிப்பிற்கு கணினி வரவும்,இணையம்,மின்னஞ்சல் வரவும் மிகப்பெரிய மாற்றத்தைத் தருகிறது.” இமெயில் வசதி என் வாழ்க்கையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது எனலாம். அனைவருடனும் என்னால் சுயமாகவே தொடர்பு கொள்ள முடிந்தது “ என்று இமெயில் வசதியைக் கொண்டாடித் தீர்க்கின்றார் மாலினி சிப். முழுமையாகக் கையைப் பயன்படுத்த இயலாத நிலையில்,ஒற்றை விரலை மட்டுமே பயன்படுத்த முடியும் என்னும் நிலையில் “அந்த ஒற்றைச்சிறு விரல் எனது வல்லமையின் பொக்கிஷமாக இருந்தது .சிரமமின்றி இமெயிலை உபயோகித்தேன் “ எனச்சொல்வார். மிகப்பெரிய தன்னம்பிக்கையை தனக்கு அந்த இமெயில் என்னும் கணினியால் ஏற்பட்ட வசதி கொடுத்தது எனக்குறிப்பிடுவார். கணினியால் ஒட்டு மொத்த சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்,தனி மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என நாம் நீண்ட பட்டியலைக் கொடுத்து மகிழ்ச்சி அடையலாம்.அவ்வளவு மாற்றங்களுக்கு அடிப்படையானது கணினி.எனவே உலகக் கணினி நாள் டிசம்பர் 2- என்று சொல்லும்போது உற்சாகம் மேலிடுகிறது.

அதைப்போலத்தான் சுயமரியாதை நாளும்.தந்தை பெரியார் அவர்கள் 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தபின்பு  நம் நாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் எண்ணி,எண்ணி மகிழத்தக்கவை.’தருவில் ஆடு நடக்கலாம்,மாடு நடக்கலாம்,பன்றி நடக்கலாம்,ஆனால் ஆறறிவு உள்ள மனிதன் நடக்கக்கூடாதா? “ எனக்கேள்விகேட்டு அவர் ஆற்றிய உரைகள்,அவர் நிகழ்த்திய போராட்டங்கள்,அதன் விளைவாக சமூகத்தில்,தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல மாற்றங்கள் என்பதைப் பற்றியெல்லாம் நினைக்கிறபோது நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது.

தோழர் கண்மணிராஜா அவர்கள் எழுதிய லட்சுமிக்குட்டி கவிதைத் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை

  “புழுக்கமாய் இருந்தாலும் /    பரவாயில்லை /                பூட்ஸ்-ஐ /               அணிந்துகொள்..! எவ்வளவு நேரமானாலும் /பரவாயில்லை /மேலத்தெரு வழியாகவே / பள்ளிக்குப் போ …! அங்குதான் /காலணி அணிந்ததற்காய் / கட்டி வைத்து அடித்தார்கள் / உன் பாட்டனை “ எனச்சொல்லும்…ஆமாம் கடந்த 70,80 ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியின் பெயரால் நடந்த கொடுமைகளை நினைத்துப்பார்த்து இன்றைய மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் திராவிட இயக்கத்தின் சாதனைகள் இன்றைய தலைமுறைக்குப்  புரியும்.கணினிக்கு முந்தைய காலத்தில் இருந்த  நிலைமையை இன்றைய நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல.

சுயமரியாதை இயக்கமாக இருந்து பின்னர் திராவிடர் கழகமாக மாறிய இந்த இயக்கம் செய்யும் பணிகள் நம்மை இறுமாப்பு அடைய வைக்கிறது. 10 வயதில் மேடையில் ஏறி,சுயமரியாதைக் கருத்துகளை,சாதி ஒழிப்பை,மத ஒழிப்பை,கடவுள் மறுப்பை,புராண இதிகாசப்புரட்டுகளை,பெண்ணுரிமையின் அவசியத்தை உரையாற்ற ஆரம்பித்த நமது தலைவர்,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,சுயமரியாதை நாளான டிசம்பர் 2,2023-ல் 91 வயதை எட்டுகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய இறுதிக்காலத்தில் கணினி பற்றிக் கேள்விப்பட்டு அதனை நேரிடையாகச்ச்சென்று பார்த்திருக்கின்றார். ஆனால் அவருக்கு கணினியைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டவில்லை.1980-களில் பெர்சனல் கம்ப்யூட்டர் என்று சொல்லப்படும் கணினிகள் வருகின்றன.2000க்குப் பிறகுதான் மின்னஞ்சல்,இணையப்பயன்பாடு எல்லாம் வருகின்றது. இன்றைக்கு வாட்சப்,முக நூல்,டுவிட்டர் என்று பலவகையான கணினி,ஆண்டிராய்ட்டு செல்பேசிகளின்  பயன்பாடு என்பது பெரிய அளவில் இருக்கிறது. அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மின்னஞ்சல் பார்ப்பது,படிப்பது ,அனுப்பவது,கணினியைப் பயன்படுத்துவது,வாட்சப்,முக நூல் ,டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது என்று கணினி சார்ந்த பயன்பாடுகள் அனைத்தையும் பயன்படுத்தும் தலைவராக இருக்கின்றார்.பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணினிப் பயன்பாட்டை ,சிங்கப்பூரில் இருக்கும் தன் மகள் கவிதா கற்றுக்கொடுத்தார் என்று அய்யா ஆசிரியர் அவர்கள்  சொல்வதை நான் கேட்டிருக்கின்றேன்.

கணினி தான் கற்றுக்கொண்டது மட்டுமல்ல  பல ஆயிரம் மாணவிகள் கணினியைக் கற்றுக்கொள்ள தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார். அதில் கணினித் தொழில் நுட்பம்  கற்ற பல ஆயிரம் பெண்கள் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் இன்றைக்கு உயர் பணிகளில் இருக்கின்றனர்.இன்றைக்கு நிகர் நிலைப் பல்கலைக் கழகமாக உயர்ந்து நிற்கிறது அந்த நிறுவனம்.அதுமட்டுமல்ல, கணினி எப்படி எளிய மக்களுக்குப் பயன்படவேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி ‘புரா’ திட்டத்தின் மூலமாக பெரியார்-மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக அதனைச்சுற்றி இருக்கும் 65 கிராமங்களின் ஏழை எளிய மக்கள் பயன்படுவதைப் பார்க்கின்றோம்.

கணினியின் செயல்பாட்டைக் குறிப்பிடும்போது அதன் குணங்களை 5 ஆங்கிலச்சொற்களால் குறிப்பிடுவார்கள்.  speed, accuracy, diligence, versatility and memory. வேகம்,துல்லியம்,விடாமுயற்சி,பல்துறை,நினைவாற்றல்.இது அத்தனையும் நாம் சுயமரியாதை நாளாகக்கொண்டாடும் நாளின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களுக்குப் பொருந்தும்.அவரது வேக நடைக்கு ஈடு கொடுத்து பல இளைஞர்கள் கூட ஓடி வருவதைப் பார்த்திருக்கிறோம். நடையில் மட்டுமல்ல,ஒரு செயலைச்செய்வதில,திட்டமிடுவதில்,நடைமுறைப்படுத்துவதில் என அனைத்திலும் அய்யா ஆசிரியர் அவர்களின் வேகத்தை அறிகின்றோம்.அதனைப் போல யாரையும் துல்லியமாக கணிக்கக்கூடியவராக ,அவர்களின் உண்மைத்தன்மையைத் தெரிந்தவராக அய்யா ஆசிரியர் அவர்கள் இருக்கின்றார்.

ஒரு செயலை எடுத்துக்கொண்டால் அதனை விடாமல் முயற்சி செய்து அதனை நிறைவேற்றி முடித்துக்காட்டும் தலைமைப்பண்பை நாம் அய்யா ஆசிரியர் அவர்களிடம் காண்கின்றோம். நமது கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியாக இருந்தாலும் சரி,வர இருக்கும் ‘பெரியார் உலகமாக ‘இருந்தாலும் அய்யா ஆசிரியர் அவர்களின் விடா முயற்சி நமக்கு உவப்பு அளிக்கிறது.



பெரியார் பன்னாட்டு மையம் –அமெரிக்காவின் இயக்குநர்.மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் ஒருமுறை, ‘மருத்துவரான எங்களுக்குத் தெரியாத மருத்துவச்செய்திகள் எல்லாம் அய்யா ஆசிரியருக்குத் தெரியும்’ என்று குறிப்பிட்டார்கள்.பல்துறை சார்ந்த அவரின் ஆற்றலை,பரந்த அறிவை வாழ்வியல் சிந்தனைகள் நூல்கள் மூலமாக நாம் தொடந்து வாசித்து உணர்கிறோம்.அதனைப்போல நினைவாற்றல்..மதுரைக்கு வந்தால் மதுரைத் தோழர்கள் அத்தனை பேரையும்,அவர்கள் மறைந்து 50,60  ஆண்டுகள் ஆன நிலையிலும் அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம்.அவர்களின் தனித்தன்மையை தனிப்பட்ட உரையாடல்களில் அய்யா சொல்வதைக் கேட்டிருக்கிறோம். கணினிக்கு உரிய அத்தனை பண்புகளையும் உள்ளடக்கியவராக அய்யா ஆசிரியர் அவர்கள் விளங்குகின்றார்.

கணினி பெரியதா ?,சுயமரியாதை பெரியதா ? என்றால் சுயமரியாதைதான் பெரியது. முன்னால் பிரதமர் ,சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் சொன்னதைப் போல எவ்வளவு பெரிய சூப்பர் கம்ப்யூட்டராக இருந்தாலும் அதன் மீது ஒருவன் எச்சிலை துப்பினால் எதிர்வினை இருக்காது. ஆனால் சுயமரியாதை உள்ள ஒரு மனிதன் மீது துப்பினால் சும்மா இருப்பானா?ஏப்படிப்பட்ட எதிர்வினை இருக்கும் என்பதை நாம் அறிவோம். எனவே கணினி நாள்,சுயமரியாதை நாள் என இரு நாட்களும் டிசம்பர் 2 என்றாலும் சுயமரியாதை நாள் கணினி நாளை விட மிகத்  தேவையானது.சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாதது.சுயமரியாதை நாளைக் கொண்டாடி மகிழ்வோம்.அனைவருக்கும் டிசம்பர் 2 கணினி நாள்,சுயமரியாதை நாள் வாழ்த்துகள்.

நன்றி: உண்மை 1-15 ,டிசம்பர் 2023

No comments:

Post a Comment