Wednesday, 27 December 2023

அண்மையில் படித்த புத்தகம்: ஆர்டருக்காக காத்திருப்பவர்கள்...மதி கண்ணன்

 

அண்மையில் படித்த புத்தகம்: ஆர்டருக்காக காத்திருப்பவர்கள்

 ஆசிரியர்                                     : மதி கண்ணன்

பதிப்பகம்                  : பொன்னுலகம் பதிப்பகம் திருப்பூர்

மொத்த  பக்கங்கள்                    : 142 விலை ரூபாய் 125

 

இந்தச் சிறுகதை தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் இருக்கின்றன. உயிரெழுத்து, கணையாழி ,அந்தி மழை ,தினமணி கதிர், மணல் வீடு, கதவு, மா வி பா போன்ற இதழ்களில் வெளிவந்த           சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சிறுகதை தொகுப்பாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது




 

ஒரு சிறுகதை எழுத்தாளரின் சூழல் அவர் எந்தவகையான சிறுகதை எழுத முடியும் என்பதைத்  தீர்மானிக்கிறது அந்த வகையில் ஒரு இடதுசாரி அமைப்பைச்சார்ந்தவராகவும் , தொலைபேசித் துறையில் வேலை பார்ப்பவராகவும் இருந்த தோழர்  மதிக்கண்ணன் அவர்கள் தன்னுடைய பார்வையில் இந்தச் சமூகம்,தான் சந்திந்த  மனிதர்கள் என்று பல்வேறு வகையான பார்வைகளை இந்தக்கதைகளின் மூலம்  நமக்குச் சொல்லுகிறார் இந்த நூலுக்கான அணிந்துரையை ‘பொறுப்புணர்வோடு வாசிக்கக் கோரும் கதைகள் “ என்ற தலைப்பில் உயிர் எழுத்து இதழின் '‘ சுதிர்செந்தில் ‘ அவர்கள் அளித்திருக்கிறார்.அதில் ” மதி கண்ணனின் கதைகளை வாசிக்கும் போது கதையின் துவக்கத்தைக் கவனத்தோடு உள்வாங்கினால் மட்டுமே முழுக்கதையும் புரியத்  துவங்கும் அல்லது புரியும்”  என்று குறிப்பிட்டு இருக்கிறார்

 

உண்மைதான் சில கதைகள் கட்டுரைகளோ  என்ற எண்ணத்தை,அந்தக் கதையின் முதல் பக்கத்தை வாசிக்கும்போது தோன்றியது.’பேராசிரியர்  முரளியின்  சுட்டு விரல்’ மற்றும் ‘ஃ போகஸ் ஃப்யூரும் ஐகே பரஞ்மின்னும் ‘ என்னும் இரண்டு கதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம் ஆனால் அவை இரண்டும் சிறுகதைகளுக்கே உரித்தான அத்தனை இலக்கணத்தையும் கொண்டிருக்கும்  நல்ல சிறுகதைகள்  இவருடைய கதைகளில் நையாண்டி மிகச்சரளமாக வருகிறது இயல்பாகவே நக்கல்,நையாண்டி என்று நகைச்சுவை உணர்வு உள்ள தோழர் என்று நினைக்கிறேன் .அது பல கதைகளில் இழையோடுகிறது.கனமான விசயங்களைக் கூட வாசிக்கும்போது எளிதாகக் கடக்க உதவுகிறது.

 

முதல் கதையானஆக்கவோ நீக்கவோ’  ஒவ்வொருவரும் போராட வேண்டிய அவசியத்தை மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறதுமூவண்ணம் பூசப்பட்ட பரம்பரைச் சுதேச சிகை அலங்கார நிலையத்திலிருந்து அவன்ஐயோ, வேண்டாம் ஆளை விடுஎன்று அலறியபடி வெளியில் ஓடி வந்தான். அவனது முகத்தில் இடப்புறம் சவரம் செய்வதற்காக பூசப்பட்ட சோப்பு முறை பொங்கி வழிந்து கொண்டிருந்ததுஎன்று விவரிக்கும் அந்தக் கதை இன்றைய எதார்த்தத்தை,பாஸிஸ்டுகள் பண்ணும் பல காரியங்களைப் படிமங்களாக்கி நமக்கு  மிகச் சரியாக சொல்கிறது .எவனுக்கோ நடக்கிறது என்று உட்கார்ந்திருந்தால் ஒவ்வொருவனுக்கும் நிகழப்போகும் அவலத்தை உணர்த்துகிறது.

 ரயில் பயணத்தில் ஏற்படும் சிநேகத்தைப் பற்றிநழுவும் பொழுதுகளில் நழுவாக்கணங்கள்’ எனும் சிறுகதை பேசுகிறது பூச்சாண்டி என்று மகளுக்கு பயமுறுத்துவதற்காக சொன்ன ஒரு நபர் எப்படிப்பட்ட தோழமை உணர்வுள்ள ஒரு மனிதர் என்பதை மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கதையை படிக்கும் போது நீங்களும் சிரிக்கலாம்

 ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தி எட்டு, 1978-ல் ஒரே வகுப்பில்  படித்த மாணவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்காக பழைய மாணவர்கள் சந்திப்பை பற்றி எழுதப்பட்டுள்ள கதை. அன்றைய நண்பர்கள் இன்றைக்கு எப்படி எப்படி எல்லாம் இருக்கிறார்கள், அவர்களுக்குள்ளே இருக்கும் சிலருக்குள் இந்துத்துவா எப்படி உள்ளே புகுந்து இருக்கிறது என்பதை விவரிக்கும் கதை. இதைப்பற்றி எழுதினால் நாம் ஒவ்வொருவரும் ஒரு சிறுகதை எழுதலாம் வாட்ஸ் அப் குழுக்களுக்குள் பழைய நண்பர்கள் என்று சேர்ந்து அவர்களின் அபத்தங்களை பொறுக்க முடியாமல் வெளியேறி ஓடித்தான் வர வேண்டி இருக்கிறது.” வினோதமான உயிரினம் ஒன்றைப் பார்ப்பது போல் என்னை பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் விடைபெற்று கிளம்பினேன் எனக்கான இடத்தில் நோக்கிஎன்று இந்தக் கதையை மதிகண்ணன் முடிக்கிறார் .

எழுத்தாளர் என்ற முறையில் அறிமுகமான எழுத்தாளர் ‘வைரவம்பட்டி ஸ்வர்ணமூர்த்தி’ பற்றி விவரிக்கும்எழுத்துப் பிழை’ என்னும் கதை    சில எழுத்தாளர்களையும் நினைவு படுத்தியது.அவரின் இறப்பு பற்றிய செய்தியோடு கதை ஆரம்பிக்கிறது.சோகத்திற்குப் பதிலாக  நமக்கு சிரிப்பு வரும் வண்ணம் அவரைப் பற்றிய செய்திகளை எழுதியிருக்கிறார்.முடிவில் “ தன்னைச்சிரஞ்சீவி என்று நினைத்துக் கடிதம் எழுதிய ,எப்போதும் எழுத்து நடையிலேயே பேசுகின்ற,விரோதம் பாராட்டத் தெரியாத குழந்தை ஒன்று இன்று அமரர் ஆகிவிட்டது.. “ என்று இந்தக் கதை முடிகிறது.

 ‘இருத்தலுக்கான ஓட்டம்’ என்ற கதை மிக வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. கூட ஓடி வந்தவர் சரிந்து விழ, சரிந்துவிழும்போதே ‘தப்பித்து விடு ‘என்று சொல்ல ,தப்பி ஓடும் கதாபாத்திரம் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.

 

 இந்தச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக இருக்கும் ‘ஆர்டருக்காக காத்திருப்பவர்கள்’ என்னும் கதை ஒன்றாகப் படித்த  மூன்று தோழிகளைப் பற்றிப் பேசக்கூடிய  கதை.இந்தத் தொகுப்பின் முத்திரைக் கதை என்றும் சொல்லலாம். “யாருடைய கட்டாயத்திற்காகவும் உங்களுக்கு விருப்பமில்லாத எதையுமே  செய்யாதீங்க.விருப்பாமானதைச் செய்யாமலும் இருக்காதீங்க “ ன்னார் “ என்று ஒரு உரையாடல் வருகிறது. பர்தாவை எடுக்க வேண்டும் என்று கர்நாடகத்தில் நடந்த கலாட்டாக்களை எல்லாம் நாம் அறிவோம் ஆனால் அவற்றுக்கெல்லாம் முன்னாலேயே எழுதப்பட்ட ஒரு கதையாக இந்தக் கதை இருக்கிறது.

  “திசைவழி பயணம்” என்னும் கதை ஓர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன்  அக்காவை அடித்து விட்டோம் என்னும் குற்ற உணர்வால் வீட்டை விட்டு வெளியேறும் கதை. மானாமதுரைவரை நடந்தே போவது என்று இரயில் போகும் பாதையில் அவன் செல்வது,காலில்  வெயில் சுடுவதும்,சரளைக் கற்களால் காயம் ஆவதும்,பசியினால் எடுக்கும் வாந்தியும் என்று பட்டினியும் பயமும் இணைந்த கதை.  அந்த வ(லி)ழிப் பயணத்தில் இவனின் பிரச்சனையைக் கண்டுபிடித்த தம்பதிகள், வயதான தம்பதிகளின் கனிவும் உபசரிப்பும்,அன்பும் மிக நன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 சுனாமி,அதன் பின் விளைவுகள் குழந்தைகளிடம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம்,துக்கம் பற்றி, நாம் வாசிக்கும்போது நெகிழத்தக்க வகையில் வைஷ்ணவி என்னும் கதாபாத்திரத்தைக் கொண்டிருக்கும் சிறுகதை,'பேராசிரியர் முரளியின் சுட்டுவிரல்'.


‘ஊருக்கே குறி சொல்லும் பல்லி’ என்னும் சிறுகதை ஒரு தளத்தில் தொடங்கி இன்னொரு தளத்தில்  முடிகிறது. தொலைபேசி நிலையத்திற்குள் நிகழும் நிகழ்வுகளையும் அதில் வேலை பார்க்கும் ஒரு பெண்அதிகாரி ,அவருடைய கணவர் நோய்வாய்ப்பட்ட நிலைமை பற்றி விவரிக்கிறது. எப்டிபி போன்ற தொலைபேசி நிலையத்திற்குள்  வேலை பார்த்தவர்களுக்கு மட்டுமே புரிந்த சில சொற்றொடர்கள் இந்தக்  கதைக்குள் இருக்கின்றன.நோய்வாய்ப்பட்ட பெண் அதிகாரியின் கணவர் கனவால் பாதிக்கப்படுகிறார். மீண்டும் மீண்டும் வரும் கனவால் துன்புறும் அவரை தன் தேறுதல் மொழியால் தேற்றுபவர் ,கடைசியில் அந்தக் கனவில் மாட்டிக்கொள்வது நல்ல முடிவு.சில குறியீடுகளைக் கொண்ட கதை இது.

 “பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்தும் வித்தையை குடும்பஸ்தனாக மாறி 15 ஆண்டுகளுக்கு பின்னும் நான் கற்றுக் கொள்ளாதது என்னுடைய போதாமை தான்என்று ஆரம்பிக்கும்நம்பினால் நம்புங்கள்’ கதை இன்றைய மூட நம்பிக்கை எப்படி அறிவியல் முகமூடி அணிந்து வருகிறது என்பதை விளக்குகிறது.’வாஸ்து விளக்கமாறு ‘ நல்ல நையாண்டி என்றாலும் உண்மை ஆகும் சாத்தியக்கூறு இந்தப் ‘புண்ணிய பூமியில் ! ‘ இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

 இன்னும் ஒரு நவீன இலக்கிய பத்திரிக்கையையும் அதில் எழுதும் சில எழுத்தாளர்களையும்  நன்றாகப் பகடி செய்யும் “ஃபோகஸ் ஃப்யூரும் ஐகே பரஞ்மின்னும் ‘ என்னும் கதை ,ஒரு அமைப்பின் கிளை ஒன்றில் உறுப்பினராக செயலாற்றும் நிலையில் நிகழ்ந்த ஒரு மறக்கமுடியாத நிகழ்வைச்சொல்லும் ‘யானும் நீயும் எவ்வழி அறிதும் ‘  போன்ற கதைகளையும் விரிவாக எழுத இயலும்.நுட்பமான எதார்த்தக் கதைகள்.

 மொத்தத்தில் நீங்கள் வேறு எந்த சிறுகதைத் தொகுப்பிலும்  வாசிக்க இயலாத களங்கள், வித்தியாசமான  நிகழ்வுகள் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். ஒரு இடதுசாரி தோழரின் சமூகப் பார்வை ,அதனூடாகப் பயணித்த பயணம் அதில் நிகழும் சில ஆபத்தான நிகழ்வுகள் ,அதை எல்லாம் தாண்டி இன்றைக்கு ஆற  அமரத் தனது அனுபவங்களை, ஒரு  சிறுகதைத் தொகுப்பாக தோழர் மதிகண்ணன்  கொடுத்திருக்கிறார் நிறைய சிறுகதை வாசிப்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தை இந்தப் புத்தகம் கொடுக்கும் என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம்

வா.நேரு,

27.12.2023


 

 

4 comments:

  1. மிக அருமையான திறனாய்வு.. நேரு சார்... மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. மகிழ்ச்சி. நன்றி.தங்கள் பெயரை அறிய முடியவில்லை..

    ReplyDelete
  3. முழுமையான ஆழ்ந்த வாசிப்பிற்கு நன்றி தோழர் வா.நேரு. சுதீர் செந்தில் சொன்னதுபோல் பொறுப்புணர்வோடு வாசித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. மகிழ்ச்சி தோழர்.உண்மைதான்,ஆழ்ந்த வாசிப்பின் மூலம் மட்டுமே இந்தக் கதைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும் என்பதும் உண்மைதான் தோழர்..

    ReplyDelete