பழுப்பு நிறமடைந்தவுடன்…
அவருடன் பேசும்போது
எப்போதும் ஒரு
தெம்பு வரும்
எதையும் செய்யும்
தைரியம் வரும்..
அநீதிகளை எதிர்க்கவேண்டும்
எனும்
உந்துதல் வரும்…
70-வயதைத் தாண்டிய அவரை
அண்மையில் சந்தித்தபோது
போதும் வாழ்க்கை
…
என்பதுபோலப் பேசினார்..
ஓடியாடி நடக்கும்வரைதான்
வாழ்க்கை நம் கையில்
…
அப்படி இல்லையெனில்
விரைவில்
முடிந்து போகவேண்டும்
என்றார்…
மருத்துவச்செலவுகள்
இலட்சக்கணக்கில்…
பிள்ளைகள் செலவழிப்பார்கள்
என்றாலும்
அவர்களுக்கு எதற்கு
வீண் செலவு
வைக்கவேண்டும்?…என்றார்..
ஒரு மரத்திலிருக்கும்
பச்சை இலை
பழுப்பு நிறமடைந்தவுடன்
தானே உதிர்ந்து
விழுந்து
மண்ணில் மக்கி
விடுவதுபோல
மக்கிப்போக விரும்புகிறேன்
என்றார்…
“வாழ விரும்புகிறேன்
ஆனால்
ஏதும் செலவுகள்
வைக்காமல்…
குறைந்த செலவில்
இருக்கும்
மாத்திரைகளைச்
சாப்பிட்டுக்கொண்டு
தொடரும் வரை தொடரட்டும்
வாழ்க்கை என்று”
என்றார்…
மருத்துவம் எல்லாம்
தனியார் கையில்..
அரசு மருத்துவமனையில்
அவலங்கள் அதிகம்…
முதியோர்கள் மருத்துவம்
வாழ்க்கைத்தேரின்
அச்சைக் கழட்டும்
நிலையில்..
அவரின் சொற்களால்
மனம் கனத்தது என்றாலும்
இதுதான் இன்றைய
எதார்த்தம் என்பது
புரிந்தது.
வா.நேரு,
09.01.2024
உண்மைகள் உறைக்க பதிவு. பிறந்த யாராலும் மறுக்கமுடியாத யதார்த்தம்
ReplyDeleteநன்றிங்க...
ReplyDeleteயதார்த்தமான உண்மை தோழர் பலரின் எண்ணங்களும் அதுவாகவே
ReplyDeleteநன்றி தோழர்.பின்னோட்டத்தில் பெயரையும் இணைத்துப்போடுங்கள்.
ReplyDelete