நிகழ்வும் நினைப்பும் 2024-2
பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? நூல் ஆய்வுக் கூட்டம்…
நேற்று(16.02.2024) பழனியில் இருக்கும்,
என்னோடு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிற்சங்கத் தோழர் பழனிக்குமார்
அவர்கள் இனிய நண்பர்.பழகுவதில் நகைச்சுவையும் உற்சாகமுமாய்ப் பழகும் தோழர்.30
ஆண்டுகளுக்கு மேலாகத் தெரிந்தவர்.அவரது இணையர் பஞ்சவர்ணம் அவர்களும் எங்கள் துறை
சார்ந்தவர்.எங்களைப் போலவே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சில
நாட்களுக்கு முன்னால், தான் பழனிக்கிளையின்
தமிழ்நாடு முற்போக்குக் கலைஞர்கள் எழுத்தாளர்
சங்கத்தின் செயலாளராக இருப்பதாகவும், தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் எழுதிய பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா? என்ற நூலின் விமர்சனம்,சிறப்புரையாகத் தாங்கள் வந்து பழனியில்
பேசவேண்டும் என்று கேட்டிருந்தார். சரி என்று சொல்லித் தயார் செய்திருந்தேன்.
15.02.2024 அன்று ஓர் இறப்பு செய்தி.எனது இணையரின் அக்கா திருமதி
சந்திரா முருகையா அவர்கள்,மிக அன்பாகவும் பண்பாகவும் பழகக் கூடியவர். செங்கோட்டையில் இறந்து விட்டார் என்று தகவல் வர, நானும்
எனது இணையரும் 15-ந்தேதி மாலை கிளம்பி செங்கோட்டை சென்றோம்.அவர்களுக்கு இறுதி
மரியாதை செலுத்திவிட்டு ,துக்கம் விசாரித்துவிட்டு அங்கேயே எனது இணையரை
இருக்கச்சொல்லிவிட்டு அதிகாலையில் செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு வந்து பின்பு
தயாராகிப் பழனிக்கு கிளம்பினேன்.நிகழ்ச்சிக்கு எப்படியும் சென்று
விடவேண்டும்,தேதியைக் கொடுத்துவிட்டு வரமுடியவில்லை என்று சொல்லக்கூடாது என்ற
எண்ணம்தான் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது.
நேற்று மதியம் ஒரு இரண்டு மணி அளவில்
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நானும் தோழர் சோழ.நாகராஜன் அவர்களும்
இணைந்து பேருந்தில்
பழனிக்குக் கிளம்பினோம் மிக எளிமையான தோழராக ஆனால் அதே
நேரத்தில் தந்தை பெரியாரை மார்க்சியத்தை மிக நன்றாகப் புரிந்து இருக்கும் ஒரு
தோழராக எனக்கு இவர் தென்பட்டார் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை
என்னோடு பேருந்தில் பகிர்ந்து கொண்டு வந்தார் தன்னுடைய தந்தை வங்கிப் பணியாளராகப் பணியாற்றியது, வங்கித் தொழிற்சங்கத்தில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தது இயல்பான ஒரு
தொழிற்சங்கத் தலைவராக தன்னுடைய பிள்ளைகளுக்கு அவர் கொடுத்த ஜனநாயகம்
அதன் விளைவாக வீட்டில் கிடைத்த ஒரு சுதந்திரம் என்பதைப் பற்றியும் தன்னுடைய அம்மா
எவ்வளவு தூரம் வாசிக்கக் கூடியவராக இருந்தார் என்பதையும் கையில் கிடைத்த புத்தகத்தை
எல்லாம் உடனடியாக வாசிக்கக் கூடிய ஒரு அம்மாவாக அவர் இருந்தார் என்பதைத்
தோழர் பகிர்ந்து கொண்ட போது நெகிழ்வாக இருந்தது. என்னுடைய தாயார் திருமதி முத்துகிருஷ்ணம்மாள் அவர்களும் கூட அப்படித்தான் என்று நானும்
என்னுடைய நினைவுகளைச் சொன்னேன். ஆசிரியர் பணி,மாடுகளைப் பார்ப்பது,பிள்ளைகளுக்குச் சோறு ஆக்குவது, பிள்ளைகளைப் பார்க்க வேண்டிய பணி என்று
தொடர்ச்சியாக வேலை இருந்த நேரத்திலும் கிடைத்த சிறுசிறு மணித் துளிகளை வாசிப்பதற்காக
எனது அம்மா செலவிட்டதுதான் எனக்கு வாசிப்பின் மீதான ஈர்ப்பு வந்ததற்குக் காரணம் என்ற எனது கருத்தையும் சொன்னேன்
அதற்குப் பிறகு தோழர்
சோழ. நாகராஜன் அவர்கள் தன்னுடைய தந்தையார் ஊர் ஊராக வங்கிப்
பணிக்காக மாற்றலாகி கொண்டே போனதையும், தான் பழகிய நண்பர்கள் எல்லாம் விட்டு பிரிந்து பிரிந்து போனதையும் எண்ணி அழுத
நேரங்களை எல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார் இரண்டு வருடத்திற்கு ஒரு மாறுதல் பழகிய நண்பர்கள்
பிரிவு ,மீண்டும் புதிய நண்பர்கள்
என்று மாறிக்கொண்டே இருந்தேன் இந்த வாழ்க்கை என்பது எனக்கு மிகத் துன்பமாக இருந்தது அதனால்
எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனது அப்பாவுக்கு மாறுதல் வந்த போது என்னைத் திருச்சியிலேயே விடுதியில்
சேர்த்து விடுங்கள் என்று சொன்னேன் என்று சொன்னார். உடனே வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் விடுதி என்றாலே ஏதோ ஒரு ஜெயில் என்பதைப் போலப் பார்த்து வேண்டாம் என்று
சொன்னதையும் தான் பிடிவாதமாக இல்லை நான் திருச்சியிலேயே படிக்கிறேன் என்று
பள்ளியின் விடுதியில் தங்கிய அனுபவங்களையும் சொன்னார் பள்ளியின் விடுதியில் நடந்த
பல சம்பவங்களை மிகவும் சுவைபட … தான் அசைவம் சாப்பிடப் பழகிய தருணங்களை எல்லாம்
நினைவில் கொண்டு வந்து சொன்னார்.
ஒரு பார்ப்பனர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தான் பூணூல்
போடாமல், இருந்ததை, தன்னுடைய தந்தையார்
இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் வற்புறுத்தலினால் அணிந்து விட்டு பின்பு அதைக் கழற்றி எரிந்ததையும் சொல்லிக் கொண்டே
வந்தார். அதைப் போல எழுத ஆரம்பித்தது, 1986ல் தனது முதல் புத்தகம் வெளிவந்தது என்று சொல்லிவிட்டுத் திருப்பங்குன்றத்தில்
இருந்த தமிழ்க்கூத்தன் அவர்களைத் தெரியுமா என்று
கேட்டார் மிக நன்றாகத் தெரியும் என்பதையும்
,தமிழ்க் கூத்தன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பில் இருந்ததையும், அவர் இறப்பதற்கு முன்பு பல
ஆண்டுகள் திராவிடர் கழகத்தில்
இணைந்து பணியாற்றிய தோழர் அவர் என்பதையும்
சொன்னேன். தமிழ்க்கூத்தன் அவர்கள் சொன்னது இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் பொதுவுடமை இயக்கங்களில் மாறி மாறி இருந்ததற்குப் பதிலாகத் திராவிடர் கழகத்திலேயே
இருந்து பணியாற்றி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று என்னிடம்
நேரடியாக ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது .அது மட்டுமல்ல மிகத் தீவிரமான ஒரு
கொள்கைவாதி அவர்.மிக எளிமையானவர் .தோழர் தமிழ்க்கூத்தன் அவர்கள் ஒரு முறை இரயிலில் பதிவுசெய்யப்படாத
பெட்டியில் வந்தேன் என்று சொன்னார். “ஒரே கூட்டமாக இருக்குமே ,எப்படி வந்தீர்கள்? “ என்று நான் கேட்டேன். “இல்லை தோழரே, நான் இரயிலில்
எப்போதும் பதிவு செய்யப்படாத (Unreserved) பெட்டியில்தான்
வருவேன் “ என்று சொன்னார் வியப்பாக இருந்தது மேலும் “ நான் எப்பொழுதும் ரயில்
நிலையங்களுக்குச் சென்று முன்பதிவு செய்து எல்லாம் செய்து கொண்டு போவதில்லை
மக்களோடு மக்களாக அந்தப் பதிவு செய்யப்படாத வண்டியில் சென்று தான் எனக்குப் பழக்கம்” என்று தமிழ் கூத்தன் அவர்கள் சொன்னது என் நினைவுக்கு வருகிறது
திருப்பரங்குன்றம் அண்ணன் மறைந்த திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அழகர்சாமி அவர்கள் மூலமாக எனக்கு அறிமுகமானவர் .திருக்குறள் பற்றிக் குறிப்பாகப் பரிமேழகர் உரையைப் பற்றி
காட்டமாக,மிக விளக்கமாகப் புத்தகங்கள் போட்டிருக்கிறார் என்று அவரைப்
பற்றிச்சொன்னேன்.
தோழர் சோழ. நாகராசன் அவர்கள், நான்,இன்றைய பாரளுமன்ற
உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எல்லாம் அவரால் இலக்கியரீதியாக உருவாக்கப்பட்டவர்கள் என்று
சொல்லிவிட்டு தோழர் தமிழ்க்கூத்தன் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து
கொண்டார். திருப்பரங்குன்றத்தில் ஒரு மிகப்பெரிய குழு இருந்தது என்பதையும் இலக்கிய
ரீதியாக அந்தத் தோழர்கள் எழுதியது, அதை அவர்கள் எழுதக்கூடிய கதைகளை, கவிதைகளை எல்லாம் வாசிப்பதற்கான ஒரு தளமாக திருப்பரங்குன்றத்தை மாற்றியது
என்று தோழர் தமிழ்க்கூத்தனின் செயல்பாடு என்பது மிகத்
தொடர்ச்சியாக இருந்தது என்று தோழர் சோழ.நாகராஜன் பகிர்ந்து கொண்டார்.
பழனியிலே இறங்கி தோழர் பழனிக்குமார் அவர்களையும் பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் பாரதி புத்தகலாயத்தில் இருந்த தோழர்களையும் சந்தித்துப்பேசினோம். அங்கிருந்து பேராசிரியர் மோகனா அவர்களை அவருடைய இல்லத்தில் சென்று சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது
பேராசிரியர் மோகனா அவர்கள் தான் எழுதிய இரண்டு புத்தகங்களைக் கொடுத்தார்கள் அதில் ஒன்று அவருடைய தன்
வரலாறு. கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்று எடுத்து வைத்திருக்கிறேன் விரைவில்
படிக்க வேண்டும்.135 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்
என்றார்.வியப்பாக இருந்தது.
அங்கிருந்து கூட்டம் நடக்கும் மண்டபத்திற்குச்சென்றொம்.
திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் அருண்குமார் அவர்களையும்,பகுத்தறிவு எழுத்தாளர்
மன்றத்தின் மாநிலத்துணைச்செயலாளர் தோழர் தமிழ் ஓவியா அவர்களையும் சந்தித்து உரையாட
முடிந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு
அய்யா பேரா. இ.கி.இராமசாமி அவர்களின் மாணவர் பேரா.அயோத்தி அவர்களையும் அவரது
இணையர் பேரா.வாசுகி அவர்களையும் சந்திக்க முடிந்தது. எனக்கு நிறையப் புது முகங்கள், அவர்களைப் பற்றிய அறிமுகங்கள் என்று இந்தக் கூட்டம் அமைந்தது.
‘பெரியார் பிராமணர்களின் எதிரியா?
‘ என்னும் இந்தப் புத்தகத்தை பற்றி 40,45 நிமிடம்
நான் பேசினேன்.மிக அருமையான புத்தகம்.ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகம்.தொடர்நது
தோழர் சோழ. நாகராஜன் அவர்கள் ஏற்புரையாக ஒரு 15 நிமிடம் உரையாற்றினார்.(முழுமையாக நூல் விமர்சனம் எனது உரையோடு பதிவிடுகிறேன்
விரைவில்). கூட்டத்தை முடித்து அதற்குப் பிறகு இரவு உணவு முடித்துவிட்டுப் பழனியில்
இருந்து பத்தரை மணிக்கு புறப்பட்டு வீட்டுக்கு
வந்தபொழுது இரவு ஒன்று முப்பது. செங்கோட்டையில் இருந்து திரும்பி,தூக்கத்தில் இருந்த எனது இணையரை எழுப்பி வீட்டைத் திறக்கச்சொல்லி
பின்பு உறங்கச்சென்றேன். இரண்டு நாளும் தொடர்ச்சியாக
பேருந்தில் மதுரை-செங்கோட்டை,செங்கோட்டை-மதுரை,மதுரை-பழனி,பழனி-மதுரை என்று இரவு
வந்த பொழுது உடல் களைப்பாக இருந்தாலும் புதிய தோழர்களை சந்தித்தது, புதிய
புத்தகங்களைப் பெற்றுக் கொண்டது என்று உற்சாகமாகத்தான் அமைந்தது.
பேருந்தில் வரும்போதும் நானும்
தோழர் சோழ.நாகராஜன் அவர்களும் உரையாடிக் கொண்டே வந்தோம். பல்வேறு தகவல்களை எனது வாழ்க்கையில் நடந்த சில
சம்பவங்கள், அவருடைய வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவருடைய மகனுக்கு நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணம், அது எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றி எல்லாம் மிகச் சுவைபடச் சொல்லிக் கொண்டு வந்தார். நான் சொன்னேன்,” தோழர் நீங்கள் என்னிடம் சொன்ன சில தகவல்களே மிகச் சிறப்பாக இருக்கிறது .ஏன் உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பங்களை
இணைத்து ஒரு புத்தகமாக ஆக்கக்கூடாது ?” என்று. ஏற்கனவே மற்ற தலைப்புகளில் 7 புத்தகங்கள் வந்திருக்கிறது ,எழுதவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்றார்.
சுய ஜாதிப் பற்றை உதறவுதே ஒரு மேன்மையான நிலை. சுய ஜாதிகள் மற்றவர்களுக்கு செய்த,செய்கிற கொடுமைகளைச்சொல்வது,எழுத்தில் கொண்டு வருவது இன்னும் மேன்மையான நிலை.அப்படித்தான் இந்த நூலைத் தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்.தோழர் அருள்மொழி அவர்கள், தன்னுடைய அணிந்துரையில் மிகச்சிறப்பாக இந்த நூலில் அதைத்தான் எழுதியிருக்கிறார். இன்னும் நிறையப் புத்தகங்களைப் படைப்பார் என்று நினைக்கிறேன் நல்ல படைப்பாளி. தந்தை பெரியாரை ஆழமாகப் புரிந்து கொண்டு ,தந்தை பெரியாரைப் பார்ப்பனர்களும்,மற்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில் மிகச்சிறப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார்,தன்னுடைய சொந்த வாழ்வில் மகனுக்கும்,மகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி/நடத்த இருக்கிறார்.
‘பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா?’ இந்தப் புத்தகத்தை இன்னும் வாங்கிப் படிக்கவில்லையா? வாங்கிப் படியுங்கள்.வாங்கிப் படித்து விட்டீர்களா? இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசுங்கள்,எழுதுங்கள்.
சிறப்பு தோழர்
ReplyDeleteநன்றி.மகிழ்ச்சி தோழர்
ReplyDeleteபார்ப்பனர்கள் தனக்கு எதிரி இல்லை, பார்ப்பனியம் தான் தனக்கு எதிரி என்று கூறியவர் தந்தைப் பெரியார். எழுத்தாளர் சோழ நாகராஜன் பிறப்பால் பார்ப்பனர் என்பதும் , அவர் பெரியாரைப் பற்றி எழுதியதும் சிறப்பு.நல்ல பதிவு.
ReplyDeleteநன்றிங்க அண்ணே...ஆமாம்,இந்த நூல் ஆகச்சிறந்த பதிவு.
ReplyDelete