சில வெளிநாட்டு அறிஞர்களின் பெயரைக் கேட்டாலே சங்கிகள் பதறுவதுண்டு. அவர்களுக்கு அந்தப் பெயர்களின் பேரில் பெரும் ஒவ்வாமை உண்டு. அவர்களில் ஒருவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். அவருடைய நினைவு நாள் ஆகஸ்ட் 28. அவர் 1891இல் மறைந்தார். அவர் 1814ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அயர்லாந்து நாட்டில் பிறந்தார். தனது இளம் வயதில், (24 வயதில்) ‘லண்டன் மிஷனரி சொசைட்டி’ என்னும் கிறித்துவ மதக் குழுவுடன் இணைந்து 1838 ஜனவரியில் தமிழ் நாட்டின் சென்னைக்கு வந்தார்.
இன்றைய இளைஞர்கள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவருடைய உழைப்பை உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு அவர் வந்த நோக்கம் என்னவோ கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதுதான். தன் வாழ்நாளில் அதைச் செய்யவும் செய்தார். ஆனால், எளிய மனிதர்களைப் புரிந்து கொள்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்பது இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய படிப்பினையாகவும் ஊக்க சக்தியாகவும் இருக்கும். சென்னையை வந்து அடைந்தவர் மூன்று ஆண்டுகள் சென்னையில் தங்குகிறார்.தமிழ்நாட்டு மக்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். திருநெல்வேலி செல்ல விரும்பிய அவர் அன்று இருந்த பயண வாகனங்களைப் பயன்படுத்தவில்லை. சென்னையிலிருந்து திருநெல்வேலிவரை நடந்தே செல்வது என்று முடிவு செய்கிறார்.
ஏறத்தாழ 400 மைல்களை அதாவது அறுநூறு கிலோ மீட்டர் தூரத்தை அவர் நடந்தே செல்கின்றார். நடந்து செல்வது என்றால் நேர் பாதையிலே சென்னை, விழுப்புரம், திருச்சி, மதுரை என்று அவர் செல்லவில்லை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியாகச் செல்கிறார், அந்த இடத்திலேயே தங்குகின்றார் ,அங்கு கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுகிறார் .அந்த மக்களோடு பேசு
கின்றார். அவர்கள் பேசும் மொழியை, பேசுவதில் இருக்கும் மொழி வேறு பாடுகளைக் கூர்ந்து கவனிக் கின்றார். பல்வேறு திராவிட
மொழிகளைப் பேசக்கூடியவர்களை சந்திக்கும் அவர் திராவிட மொழிகள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறது என்பதை உணர்கிறார்.
சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல வேண்டிய அவர் இடையில் நீலகிரிக்குச் செல்கிறார். மலையின் அழகைப் பார்க்கிறார். அந்த மலையில் வாழும் பழங்குடி மக்களைச் சந்திக்கிறார்; அவர்கள் பேசும் மொழியை உற்று நோக்குகிறார்.
அப்படியே நீலகிரி மலையில் இருந்து இறங்கி இந்தப் பக்கம் தஞ்சாவூருக்குச் செல்கிறார். தஞ்சாவூர் கோயிலையும் சுற்றிப் பார்க்கிறார். இப்படி ஒரு அறுநூறு கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடப்பதற்காக எடுத்துக் கொண்ட காலம் ஆறு மாதங்கள்.
இன்றைய விரைவு உலகத்தில், ஒவ்வொரு இடத்தையும் விரைந்து கடக்கும் இளைஞர்களுக்கு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்த இந்த மனிதர் எப்படி பொறுமையாக ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்துக் கடந்து சென்றிருக்கிறார் என்பது படிப்பினையாக மாறலாம். இப்படியே நடந்து நடந்து செல்லும் அவர் கடைசியில் இடையன்குடி என்னும் ஊரில் போய் நிரந்தரமாகத் தங்குகிறார்.
அயர்லாந்தில் அவர் பிறந்த ஊரின் பெயர் ,ஆங்கிலத்தில் ஆடு மேய்ப்பவர்களின் நகரம். எனவே அதே பெயரில் இருந்த இடையன்குடி என்னும் பெயர் பிடித்துப் போகவே, அங்கேயே தங்கி விட்டார் என்று தமிழ் அறிஞர் தொ.பரமசிவம் அவர்கள் ஒரு நூலில் குறிப்பிடுவார்.
இடையன்குடி என்னும் ஊரிலே போய்த் தங்குகிறார். அந்த ஊர் முழுக்கக் குப்பையாகக் கிடக்கிறது. முதலிலே இவர் தனக்காகப் பார்த்து அமைத்துக்கொண்ட வீடும் கூட அப்படித்தான் குப்பையாகக் கிடக்கிறது. முதலில் தனது இல்லத்தைச் சரி செய்கிறார். பிறகு மற்றவர்களுக்குச் சொல்லி, ஈடுபட்டு தனது தெருவைச் சுத்தம் செய்கிறார். பின்பு அந்த மக்களோடு இணைந்து அந்த ஊரையே சுத்தம் செய்கிறார்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு, அவருக்கு 18 மொழிகள் தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன்பே தெரியும் எனக் குறிப்பிடுகிறது. மொழிகளைக் கற்றுக் கொள்வதில், மொழிகளுக்கு இடையேயான ஒற்றுமை,வேற்றுமைகளை அறிந்து கொள்வதில் அவருக்கு மிகப்பெரிய ஈடுபாடு இருந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்த அவர் தமிழ்
மொழியைக் கற்கின்றார். தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளையும் கற்கின்றார்.இந்த மொழிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை அவரை ஈர்க்கிறது.சமஸ்கிருதத்தையும் கற்கின்றார். சமஸ்கிருதத்திற்கும் திராவிட மொழிகளுக்கும் குறிப்பாக தமிழ் மொழிக்கும் உள்ள வேற்றுமை அவருக்குப் புலப்படுகிறது.
அதுவரை பார்ப்பனர்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியவை என்று கதை அளந்து கொண்டிருந்தனர். அதனையே தங்களுக்குத் தோன்றிய வண்ணம் ஆராய்ச்சி என்னும் பேரால் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தனர்.இந்தப் பார்ப்பனத்தனத்தை தனது ஆராய்ச்சி மூலம் அடித்து நொறுக்கியவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார்.அதுமட்டுமல்ல; அவாள்களின் குடுமிகளைப் பற்றியே ஒரு நூல் (குடுமியின் மீதான அவதானிப்புகள் ( Observations on the Kudumi ) என்ற நூல் வரக் காரணமாக இருந்தவர். அதனால்தான் சங்கிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் அவர் பெயரென்றால் அவ்வளவு கசப்பும் காழ்ப்பும்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக மொழிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் கால்டுவெல் ஆவார்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘இந்தியா முழுமையும் பரந்து விரிந்து இருந்தவர்கள், நாகர்கள் எனப்படும் திராவிடர்கள்’ என்று குறிப்பிடுவதுபோல மொழியின் அடிப்படையில் பலுசிஸ்தானம், வங்காளம் உள்பட இன்றைய இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளில் திராவிட மொழிக் குடும்பங்களே இருந்தன என்று குறிப்பிட்டவர்.
அதனால் “திராவிட மொழியியல் ஆய்வின் முன்னோடி” என்று அழைக்கப்படுபவர் திரு.ராபர்ட் கால்டுவெல் ஆவார்.திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் எல்லாம் ராபர்ட் கால்டுவெல் அவர்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அவரது உழைப்பிற்குப் பெரும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர். 1968இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் அவருக்கு சிலை அமைத்துப் பெருமை சேர்த்தார். திராவிட இயக்க அரசுகள் எல்லாம் அவரது வரலாற்றை தமிழ்ப் பள்ளிக்கூட நூல்களில் சேர்த்து பெருமை சேர்த்தனர். அவரைப் பற்றிய பல செய்திகள் இணையத்தில் கிடைக்கின்றன.அவற்றை வாசிப்பதும்,அவரது பெருமையை, உழைப்பை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் அனைத்துத் தமிழர்களின் கடமையாகும்.
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஆகஸ்ட் 16-31,2024