Saturday, 17 August 2024

'விறகு வண்டி முதல் விமானம் ‘வரை....

 முனைவர் வா.நேரு,

 மாநிலத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,


                        வாழ்த்துரை

விறகு வண்டி முதல் விமானம் ‘வரை என்னும் இந்த நூல் அய்யா சே.முனியசாமி  அவர்களின் தன் வரலாறு நூல்.25 வயதில் தான் கைவண்டி இழுத்த காலம் முதல் இந்றைக்கு விமான்ங்களில் பறக்கும் 75 வயதுவரையிலான அவரின் அனுபவக்குவியல் இந்த நூல். வெறும் அனுபவத்தொகுப்பாக அமையாமல்,வாசிப்பதற்கு எளிமையாய்,விறுவிறுப்பாய் அமைந்திருப்பது இந்த நூலின் சிறப்பு.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டு,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் கொள்கை வழிகாட்டுதலில் மதுரையில் களப்பணி ஆற்றும் திராவிடர் கழகப் பொறுப்பாளர் . அய்யா சே.முனியசாமி அவர்கள். இவர் மிகச் சிக்கனமாக இருப்பார். வரவு என்றாலும் செலவு என்றாலும் அவரிடம் ஒவ்வொரு ரூபாய்க்கும்  கணக்கிருக்கும் சொற்களில் கனிவருக்கும் ஆனால் வாக்குவாதம் என்று வந்தால் சண்டை என்று வந்தால் எதிர்த்துக் களமாட என்றைக்கும் தயங்க மாட்டார்.எவரிடமும் தானாகவே பேச்சை ஆரம்பிக்கும் பண்பாளர் இவர் . இரயிலில் நாக்பூர் சென்று வரும்போது ஒரு இராணுவ வீர்ரோடு நடந்த உரையாடல் பற்றி இந்த நூலில் இவர் சொல்லும் விதமும் உரையாடலும் நினைத்து மகிழலாம்.அதைப்போல இரயிலில் இவரும் மறைந்த பொறியாளர் அண்ணன் கி.மனோகரன் அவர்களும் நடத்திய பகுத்தறிவு உரையாடலும் இரசிக்கத்தக்கது மட்டுமல்ல,ஒரு புதுவித பிரச்சார யுக்தியை நமக்குச் சொல்லித்தருகிறது.



இந்த நூல் அய்யா முனியசாமி அவர்களின்  பல்வேறு பரிணாமங்களை எடுத்துக்காட்டுகிறது.’சுட்டி முனியசாமி ‘ எப்படி பண்பட்டார்,பழகும் வித்தை அறிந்தார் என்பதைக் காட்டுகிறது. மனிதர்களோடு பழகும் முறையினால் அவர் பயன் பெற்றதையும் அவரால் மற்றவர்கள் பயன்பெற்றதையும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டில் இருக்கும் ஒருவருக்குகாலத்தினால் செய் உதவி எப்படிப்பட்ட ஒரு நன்மையை திருப்பித் தந்தது என்னும் தன் அனுபவம் இந்த நூலில்  நமக்கு படிப்பினையாக இருக்கிறது

முதன் முதலில் இவர் தன்னுடைய அனுபவங்களை என்னிடம் சொன்ன போது எனக்கு மிக வியப்பாக இருந்தது ‘அய்யா, இதனை ஒரு புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் ‘ என்று  நான் சொன்னேன். அதிலே முதலில் தயக்கம் காட்டினார் ஆனால் புத்தமாக ஆக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தொடர்ச்சியாக தன்னுடைய மனதிற்குள்ளே கிடந்த பல்வேறு நினைவுகளை, கடந்த கால அனுபவங்களை கொட்டித் தீர்த்தார். அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதலையின் ‘வாழ்வியல் சிந்தனைகள் ‘ பகுதியில் வரப்போகும் நூல் பற்றிக் குறிப்பிட்டு எழுதியதைப் படித்து படித்து ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சி அடைந்தார்.அந்த மகிழ்ச்சியை மனதார வெளியில் காட்டினார்.உவகை அடைந்தார்.

 தன்னுடைய தொண்டர்கள்,தன் வரலாறு எழுதும்போது அதனைப் படித்து,அதனைப் பற்றி எழுதி அளப்பரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தன்னுடைய தொண்டர்களுக்கு தருபவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.அவ்வாறே இந்த நூலுக்கும் தந்துள்ளார்கள்.பகுத்தறிவு எழுத்தாளர் மன்றக் கூட்டங்களில், நம் கழகத்தோழர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பங்களை எழுத்தாகப் பதிவிட வேண்டும்  என்று வேண்டுகோள் விடுப்பதுண்டு.இந்த நூலைப் படித்தபொழுது மீண்டும் மீண்டும் அந்தக் கருத்தைச்சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.ஆம் ஒவ்வொரு பெரியார் தொண்டரின் வாழ்க்கையும் எதிர் நீச்சல்தான்.போராட்டம்தான். ஆனால் அய்யா தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் செல்பவர்களுக்கு என்றும் வெற்றி தான் ,மகிழ்ச்சிதான் என்பத்ற்கு மிக நல்ல எடுத்துக்காட்டு இந்த நூல்.அய்யா சே.முனியசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.இந்த நூல் ஆக்கத்தை மிகச்சிறப்பாக குறுகிய காலத்தில் செய்து கொடுத்திருக்கும் கீழடி வெளியீட்டகத்திற்கும், அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். இந்த நூலை முழுமையாகப் படிப்போம். நாம் பெற்ற மகிழ்ச்சியை மற்றவர்களும் பெற வழிகாட்டும் இந்த நூலைப் பரப்புவோம்.

 

மதுரை

19.06.2024                                        முனைவர் வா.நேரு




No comments:

Post a Comment