Friday, 3 April 2026

அண்மையில் படித்த புத்தகம் : அன்னை வயல் ..சிங்கிஸ் ஐத்மாத்தவ்- பூ.சோமசுந்தரம்

 



அண்மையில் படித்த புத்தகம் அன்னை வயல்( நாவல்)

 நூல் ஆசிரியர்  :  சிங்கிஸ் ஐத்மாத்தவ்(ருஷ்ய மொழியில்)

 தமிழில்                : பூ சோமசுந்தரம்

 பதிப்பகம்              : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்

  நாலாவது பதிப்பு செப்டம்பர் 2023,151 பக்கங்கள் விலை ரூ135

அண்மையில் எழுத்தாளர் சுந்தர புத்தனின் பெரியவன் நாவலைப் படித்த போது அவர் தனது தந்தை படித்த புத்தகங்களில் ஒன்றாக, தானும் படித்த புத்தகமாக அன்னை வயல் என்பதைக் குறிப்பிட்டு இருந்தார் நானும் எனது மகனும் புத்தகக் கடைக்குச் சென்றபோது இதை வாங்கி வைத்திருந்தேன்.நேற்று அன்பு,அப்பா இதைப்படியுங்கள்,மிக நன்றாக இருக்கிறது என்றான். எடுத்துப் படிக்க ஆரம்பித்த பிறகு எப்பேர்ப்பட்ட ஒரு நாவலைப் படிக்காமல் விட்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்வுதான் ஏற்பட்டது.

மொத்தம் 151 பக்கங்கள்தான். ஆனால் ஒரு நீள்கவிதையைப் படிப்பது போலச் சொற்கள்.மூன்று  தலைமுறையின் வாழ்க்கையை, அவர்களின் பாட்டை, அவர்களின் காதலை, அவர்களின் அறியாமையை, அவர்களின் தியாகத்தை,அவர்கள் ஏமாந்து போவதை, அவர்கள் இன்பத்தைத் தொலைப்பதை, துன்பத்தில் துவண்டு அழுவதை, எந்த நிலையிலும் உழைப்பதை விடாத அந்த விவசாய மக்களை அற்புதமாக வடித்துக் கொடுத்திருக்கிறார் சிங்கிஸ் ஐஸ்மாத்தவ். ஒரு  தாய், அவளின் வாழ்க்கைப் போராட்டம்தான் கதை.முதல் 50 பக்கங்களில் இளம்பெண்ணாக இருக்கும் தல்கோனின் அழகு, அவள் காதல் வயப்பட்டுக் கைபிடிக்கும் அவளது கணவன் ஸீவான்குல்.இருவரும் விளையாட்டும் களிப்புமாக ஈடுபடும் காதல், பின்பு மணவாழ்க்கை. மூன்று குழந்தைகள் காஸிம், மாஸெல்பேக்,ஜைனாக்..அவர்களின் பிறப்பும் ,வளர்ப்பும்.மகன் காஸிம் காதலித்துக் கைபிடித்து வரும் அலிமான். மருமகளை மகளைப் போல எண்ணி அன்பு செலுத்தும் மாமியாராகத் தல்கோன்.தல்கோன் சொல்கிறாள் ஓரிடத்தில், ‘ அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மகள் பிறக்கவேண்டும் என்று நான் உள்ளுக்குள் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தது.நமக்கு ஒரு பெண் வேண்டும் என்று மிகவும் விரும்பியது ஒரு வேளை இதற்குக் காரணமாயிருக்கலாம்.ஆனால் அது மட்டுமே காரணமல்ல.அவள் விவரம் அறிந்தவளாக,உழைப்பாளியாக,கண்ணாடி போலத் தெளிந்தவளாக இருந்ததே காரணம்.என்னுடைய சொந்த மகள் போலவே அவள் மேல் பற்று வைத்துவிட்டேன்.” என்று சொல்கிறாள்..

தஙல்கோனும் அவளது கணவன் ஸீவான்குல்லும் தங்களுக்கு என்று  ஒரு வீடு கட்டிக் கொள்கிறார்கள்  கூட்டுப் பண்ணையில் உழைக்கிறார்கள் டிராக்டர் என்கிற இயந்திரம் முதன் முதலில் அந்தப் பெண்ணின் கணவர் வழியாக ஊருக்குள் வருகிறது. அது எப்படிப்பட்ட மாற்றங்களை உருவாக்கியது. அந்த இயந்திரத்தை ஓட்டுவதற்காகச் சென்ற கணவன் எப்படிக் கற்றுக் கொண்டான். கற்றுக் கொள்வதற்கு எப்படி எல்லாம் அவன் பாடுபட்டான். படித்துக் கொண்டிருக்க கூடிய தன்னுடைய பிள்ளைகளிடம் இருந்து எழுத்தை கற்றுக் கொள்வதற்காக எப்படி அவன் ஒரு மாணவனாக உட்கார்ந்து கற்றுக் கொண்டான் என்பதை எல்லாம் மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்

அமைதியான நதியாய் உழைப்புடன் கூடிய இன்பத்தோடு வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.ஆனால் திடீரென்று போர் அறிவிப்பு வருகிறது. இரண்டாம் உலகப் போர் என்பதை நாம் வெறுமனே கடந்து போகிறோம் ஆனால் ஒரு போர் எப்பேர்பட்ட கொடுமையைச் செய்யும் அதிலும் சர்வாதிகார மனப்பான்மையில் உள்ள ஒரு கேடுகெட்டவனால் ஒரு போர் ஆரம்பிக்கப்பட்டால் எப்படி உழைக்கும் மக்களை அது பாதிக்கும் என்பதற்கு இந்த நாவல் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

முதலில் இளம் மனைவி அலிமானை விட்டுவிட்டு முதல்மகன் காஸிம் போருக்குச் செல்கின்றான்.பின்பு பொதுவுடமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு பொதுவுடமைக் கட்சியில் பொறுப்பில் இருக்கும் இரண்டாவது மகன் மாஸெல்பேக் போருக்குச்செல்கிறான்.பின்பு கூட்டுப்பண்ணைத் தலைவனாக இருக்கும் கணவன் ஸீவான்குல் போருக்கு அழைக்கப்படுகிறான். செல்கிறான். கடைசியில் 18 வயது  நிறைவடைந்தவுடன் கடைசி மகன் ஜைனாக்கும் போருக்குச் செல்கிறான். அனைவரும் சென்றபின்பும் ,கூட்டுப்பண்ணையின் தலைமைப் பொறுப்பை ஏற்று,கிராமத்தையே கவனிக்கும் தலைவியாகத் தல்கோன் மாறுகிறாள்.அவளோடு அலிமானும் இணைந்து உழைக்கிறாள். இருவருக்கும் தங்கள் கணவன்மார்கள் போர் முடிந்து திரும்ப வந்துவிடுவார்கள் என்னும் நம்பிக்கை இருக்கிறது.உழைக்கிறார்கள்,உழைக்கிறார்கள்,கவலை மறந்து உழைக்கிறார்கள்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் செய்தி வருகிறது. மாமியாரும் மருமகளும் விதவையாக மாறிப்போகிறார்கள்கணவனை இழந்த மாமியாரும்,மருமகளும் ஒருவருக்கொருவர் அனுசரணையாய், அன்பாய் எதையும் பகிர்ந்து கொண்டு துன்பத்தில் துவண்டாலும், அழுகையை அடக்கிக் கொண்டாலும், தங்கள் வாழ்க்கையை அவர்கள் நடத்திய  விதத்தை இதற்கு மேல் எவரேனும் எழுத முடியுமா என்கிற அளவுக்கு இந்த நாவலாசிரியர்  எழுதியிருக்கிறார்.

புறநானூற்றிலே நாம் படித்திருக்கிறோம் தன்னுடைய கணவன் இறந்த பின்பு தன்னுடைய மகனையும் போருக்கு அனுப்பியதாக ஆனால் இந்த நாவலில் தன்னுடைய கணவனை மட்டுமல்ல தன்னுடைய மூன்று குழந்தைகளையும் போருக்கு அனுப்பி விட்டு ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மரணமடைந்த செய்தி அவளுடைய காதுகளுக்கு எட்டுகிறது. .

ஆனாலும் கூட்டுப் பண்ணையில் தலைவியாக அந்தக் கிராமத்திற்கு உழைத்துக் கொண்டே இருக்கிறாள் தன்னுடைய மருமகள் அலிமான் உள்ளத்திலேஉடம்பிலே ஏற்படுகின்ற மாற்றங்களைக் கவனிக்கிறாள். அதனை அவள் ஏற்றுக் கொள்கிறாள் நான் முழுமையாக நாவலின் கதையைச் சொல்ல விரும்பவில்லை உங்களின் வாசிப்பு அனுபவத்தை அது தடுக்கக் கூடும் ஆனால் இந்த நூலை வாசித்தால் ஒரு அற்புதமான நூலை வாசித்து அனுபவம் உங்களுக்குக் கிட்டும். நேற்றைய பொழுது அப்படி ஒரு வாசிப்பு அனுபவப் பொழுதாக அமைவதற்கு இந்த  நாவலை எடுத்துக் கொடுத்துப் படியுங்கள் என்ற எனது மகன் சொ.நே.அன்புமணிக்கு மனமார்ந்த நன்றி. வாசித்துப் பாருங்கள். இந்த  நூலை வாங்கிப் படியுங்கள். வாங்கி உடனே படிக்க முடியவில்லை என்றாலும் கூட வாங்கி வீட்டில் வைத்திருங்கள். எப்போது தோன்றுகிறதோ,நேரம் கிடைக்கிறதோ அப்போது எடுத்துப் படியுங்கள் நமது வீட்டு  நூலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு  நூல்.ஓர் அற்புதமா கதைக்களத்தை எடுத்துக்கொண்டு புகுந்து விளையாடியிருக்கிறார் இந்த நாவல் ஆசிரியர். மொழி பெயர்ப்பு நாவல் என்று சொல்ல முடியாத அளவிற்கு, உயிரோட்டமாய் இந்த நாவலை மொழி பெயர்த்திருக்கிறார் பூ.சோமசுந்தரம்.அவருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.இப்படி ஒரு நூலைக் கொடுத்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

 

 

 

 






2 comments:

  1. சு.கருப்பையா3 April 2026 at 20:25

    2 ஆம் உலகப்போரில் ரசியாவின் இழப்பு மிக அதிகம்...

    இந்த நாவல் அதன் உண்மைத் தன்மையை விளக்குகிறது.

    இந்த நாவல் என்னிடம் இல்லை. நல்லதொரு நாவலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நேரு.

    💐👍

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அண்ணே(வாசிப்போர் களம்....வாட்சப் குழுவில்)

      Delete