எப்போது கைகழுவும் நம் இனம்?
நம் இனத்தின்
வளர்ச்சிக்கெதிராய்
வெந்நீர் ஊற்றியவர்கள் யார்?
அமிலத்தை ஊற்றி நம்
வளர்ச்சியைத் தடுத்தவர்கள் யார்
எனும் அறிவுமின்றி புரிவுமின்றி
‘விசயதசமி’ யன்று தம்பிள்ளைகளை
பள்ளிக்கூடத்தில் சேர்க்க
நமது ஆட்களும் சிலர்
நிற்கிறார்கள் அந்த வரிசையில்…
கல்வி ஆண்டின்
தொடக்கத்தில்தானே
மாணவர் சேர்க்கை..
எதற்குக் கல்வி ஆண்டின்
பாதியில் வரும்
விசயதசமியில்…
பள்ளிக்கூடத்தில்
பிள்ளைகள் சேர்ப்பு…?
கேட்கவேண்டிய அரசும்
சேர்க்கலாம் என உத்தரவு..
கொடுமையிலும் கொடுமை..
வர்ணப்படிக்கட்டில்
ஐந்தாம்படி பஞ்சமரும்
நான்காம்படி சூத்திரரும்
‘படிக்கக்கூடாத ஜாதிகள்’
என நம் தாத்தாக்களை
பாட்டிகளை படிக்கவிடாமல்
ஆக்கியர்கள்தான் இந்தச்
சாமிகளையும் ஆக்கினார்கள்
சதிகளையும் செய்தார்கள்…
எனும் புரிதலும் இல்லாமல்
ஆரியர்கள் சூழ்ச்சியும் அறியாமல்
வரிசை கட்டி நிற்கிறார்கள்..
கடவுள்களை நோக்கி
அடுக்கடுக்காய் கேள்விகளை
எழுப்பினார் அய்யா பெரியார்..
அன்றுமுதல் இன்றுவரை
பதில்கள் ஏதுமில்லை…
ஒன்றிய அரசுப் பதவிகள் எல்லாம்
பார்ப்பனர்கள் கைகளில்..
உள்ளே நுழைய நினைக்கும்
ஒடுக்கப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரைத்
தடுத்து நிறுத்திட அத்தனை சூழ்ச்சிகள்..
இவர்கள் படைத்த கடவுள் நம்
படிப்பிற்கு வழிவகுக்குமாம்…
‘ஓம்’ என்று முதலில்
குழந்தை எழுதவேண்டுமாம்..
பின் ‘ஹரிஸ்ரீ கணபதயே நமஹ’
என எழுதவேண்டுமாம்..
பின்பு வேண்டுமானல் ‘அ’ என்று
எழுதிக்கொள்ளலாமாம்..
அக்கிரகாரத்துப் பத்திரிக்கை
வரிசையிட்டு எழுதுகிறது..
ஏமாந்த தமிழர்கள் தலையில்
எத்தனை வருடங்களாய் நாம்
தடவுகிறோம் …இன்னும் தடவுவோம்!
விழிக்கவா போகிறார்கள் இவர்கள்
எனும் மெத்தனத்தில் இருக்கிறார்கள்!
‘வடகலைப் பார்ப்பான்
தென்கலைப் பார்ப்பான்
எப்பார்ப்பானாயினும் தமிழன்
தலையைத் தடவப் பார்ப்பான்’
என்றார் புரட்சிக்கவிஞர்..
நம் மண்டையைக் கழுவும்
இந்த விசயதசமிச் சேர்ப்புகளை
எப்போது கைகழுவும் நம் இனம்?
வா.நேரு

விடுதலையில் வந்த கவிதையைப் படித்துவிட்டு அண்ணன் காளியப்பன்(மதுரை) பாராட்டிவிட்டு சில விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.மகிழ்ச்சியாக இருந்தது.
ReplyDeleteநேற்று அய்யா சே.முனியசாமி(மதுரை) இந்தக் கவிதையைப் படித்துவிட்டு,'எவன்யா நாம சொல்றதைக் கேட்கிறான்' என்று கோபத்தோடு சில செய்திகளைச் சொன்னார். நன்றியும் மகிழ்ச்சியும்.
ReplyDelete