Saturday, 21 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்
ஆசிரியர்                   : கெளரி ராமஸ்வாமி
வெளியீடு                  : ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை-4
இரண்டாம் பதிப்பு             : 2008,  விலை ரூ 23.00 மொத்த பக்கங்கள் 104

                                 தொலைபேசி, செல்பேசி, உள்ளூர் இணைப்பு, வெளியூர் இணைப்பு, வெளி நாட்டு இணைப்பு என்னும் சொற்கள் காதுகளில் விழுந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் தொலைபேசி சார்ந்து கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புப்பெற்று பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் 1871- ல் தான் , அ.கி.பெல் தன்னுடைய உதவியாளர் வாட்ஸனுடம் முதன் முதலில் தொலைபேசி மூலம் பேசியிருக்கின்றார். 134 ஆண்டுகளில் உலகத்தை , உலக நடப்பை தலைகீழாக மாற்றிய தொலைபேசியைக் கண்டுபிடித்த அ.கி.பெல்லினைப் பற்றிய சுவையான தகவல்களைத் தரும் புத்தகம் இந்தப் புத்தகம்.

                                    "முன்னோர்கள், இளமைப்பருவம், குடும்பத்தில் சோகம், பிராண்ட போர்ட், பாஸ்டன், 'மிஸ்டர் வாட்ஸன்-இங்கு வாருங்கள்- நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்', நூற்றாண்டுக் கண்காட்சி, தொலைபேசிப் பரிசோதனைகள், சாதனைக்குப் பிறகு, பெல்லின் குடும்பம், பெல்லின் கண்டுபிடிப்புகள், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் - ஒரு கணிப்பு " என்னும் 12 தலைப்புகளின் அ.கி. பெல்லின் வாழ்க்கையும், அவரது கண்டுபிடிப்பிற்காக அவர் பட்ட பாடுகளும், அறிவியல் அறிஞரான அவர் விற்பனைத் திறன் இல்லாமையால் பொருளாதார ரீதியாக நலிந்ததையும் ஆனால் மனித நேயமிக்க மனிதராக வாழ்ந்ததையும் இப்புத்தகம் நேர்த்தியாகக் கூறுகின்றது.

                             நாடகமும், இலக்கியமும் அ.கி.பெல்லை, அவரது தந்தை மெல்வில் பெல்லை, அவரது தாத்தா அலெக்ஸாண்டர் பெல்லை (செருப்புத் தைக்கும் தொழிலாளி ) எவ்வளவு தூரம் ஈர்த்தது என்பதும், குறிப்பாக சேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கங்களோடு பேசுவதை ஒரு கலையாக மூன்று தலைமுறையாக செய்து வந்தனர் என்பதும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. 'இருப்பதா? இறப்பதா ? " என்னும் சேக்ஸ்பியரின் வசனமே , தொலைபேசி முன்னோட்டச்சோதனைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்பதும் புதிய தகவல் .

                                  பல சமயங்களில் ஒரே வேலையைச்செய்யும் திறமை பெற்றவராக அ.கி.பெல் இருந்ததும், மனித நேயத்தை தனது வாழ் நாள் முழுவதும் கடைப்பிடிப்பவராக,ஊமை, செவிடுகளாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்காக தனது வாழ்வு முழுமையும் அர்ப்பணித்தவராக இருந்ததும் விவரிக்கப்படுகின்றது. தொலைபேசி மட்டுமல்ல, 16 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்பதும், தனது 29-ம்  வய்திலேயே தொலைபேசியை அவர் கண்டுபிடித்து விட்டாலும், பகட்டாக- சோம்பேறியாக அந்தப் பணத்தை செலவழிப்பவராக இல்லாமல், தனது வாழ் நாள் முழுவதையும்  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக செல்வ்ழிப்பவராக  அவர் வாழ்ந்ததும் சொல்லப்பட்டுள்ளது. .

                      " நிறையப் பொதுமக்கள் டெலிபோனைப் பற்றிப் பலவிதங்களில் நினைத்து பயந்தார்கள். 'டெலிபோன் வைத்துக்கொள்வது வீட்டுக்குள் ஒரு ஒற்றனை வைத்துக்கொள்வது போல' என்றார்கள். ...'கம்பி மூலம் மின்சாரம் போகிறது, அப்படி நோய்களும் போய்ப் பரவி விட்டால்...' என்று மற்றொரு பயம். டெலிபோனால் காது செவிடாகுமா? மன நிலை பாதிக்குமோ ?" என்ற கவலைகள் வேறு. இவற்றைத் தவிர 'கடவுள் டெலிபோன் பற்றி என்ன நினைப்பார் ' என்ற விசாராம் வேறு! கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளில் 'டெலி போனை உயபோகிக்க்க்கூடாது ' என்று எழுதியிருப்பதாக ஆதாரத்துடன் காட்டவும் சிலர் இருந்தனர்! இந்தக் கருவி கண்டுபிடிப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இதை உபயோகிக்ககூடாது என்று பைபளில் எழுதி வைத்திருக்கிறதாம் " பக்கம்-56-57 . மேலை நாட்டில் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடும் இயந்திரமாக கிறித்துவ மதம் இருந்திருக்கின்றது  என்பதும், பல அறிவியல் அறிஞர்கள் மதவாதிகளுக்கு அஞ்சியே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாறு. அதற்கு அ.கி.பெல்லும் விதி விலக்கு அல்ல போலும். டெலிபோனில் முதலில் கரகரவென்று குரல் கேட்டதும் 'சாத்தான் க்ம்பி வழியாகப்பேசுகிறது' என்றும் மக்களிடம் பரப்பி விட்டார்கள் என்பதும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 2014 ஆம் ஆண்டு பிறக்கப்போகும் இப்போதும்கூட , சிலர் சொர்க்கம் என்றும் நரகம் என்றும், சாத்தான் என்றும் பிதற்றிக்கொண்டிருக்கும் வேளையில் 1880-களில் மக்கள் நம்பியதில் என்ன வியப்பு இருக்கின்றது. அதையெல்லாம் மீறித்தான் அ.கி.பெல் வெற்றி பெற்றிருக்கின்றார்.

                   அ.கி.பெல் தன்னுடைய காதலி, பின்னால் மனைவியாகிய மேபெல் ஹப்பரிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்(மனைவியிடம் அலெக் பெல் கொண்ட அன்பு, இலக்கியத்தில் பொறிக்கத்தக்கது ,இருவரும் மிக அந்நியோன்யமாக, ஒருவருடன் மற்றவர் ஆதரவோடு இணைத்துக்கொண்டு இறுதிவரை வாழ்ந்தார்கள் (பக்கம்102))  என்பதும், அதனைப் போல உலக்ப் புகழ்பெற்ற சாதனையாளர் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அ.கி.பெல்லின் உதவி(அலெக் பெல்லை சந்தித்ததுதான் தனக்குத் தன்னம்பிக்கையை  கொடுத்து 'இருட்டிலிருந்து வெளிச்சத்துக் கொண்டு போனது; தனிமையிலிருந்து நட்புக்குக் கூட்டிப்போனது ' என்று எழுதியிருக்கின்றார் (பக்கம் 102) )என்பதும் சுட்டப்பட்டுள்ளது. ' நேஷனல் ஜியாகிரபிக் ' பத்திரிக்கையை வாங்கி , பல புதுமைகளைப் புகுத்தி , தனது மருமகனான கில்பர்ட் கிராஸ்வீனர் என்பவரை ஆசிரியராக நியமித்து, அதன் வளர்ச்சியில் அ.கி.பெல்லின் பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

                                             செவிடர்களுக்கு காது கேட்க வைக்க முடியுமா? என்பதற்காகவே தனது தந்தை உருவாக்கிய பார்க்கும் பேச்சை, ஒலி கேட்கும் தன்மையை, காதின் அமைப்பை, அதில் ஒலி கேட்கும் தன்மையை சிறுவய்திலேயே ஆராய்ந்திருக்கின்றார். எம்பதி என்று சொல்வார்களே, அதனைப் போல காது கேளாதவர்களின் துன்பத்தை தனது துன்பமாக ,உணர்ந்ததே தொலைபேசி கண்டுபிடிப்பிற்கு அடிப்படை. " இவர் மனம் அவர்கள்பால்(காது கேளாதவர்கள் ) மிகவும் இரங்கியது. 'என்னுடைய உணர்வுகளும் இரக்கமும் ஒவ்வொரு நாளும் பொங்குகிறது. இந்தக் குழ்ந்தைகள் படும் துயரைப் பார்த்து என் இதயம் வலிக்கிறது ' என்று ..குறிப்பிட்டார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பருடன் பேசுகையில் 'செவிடர்களின் தனிமையை யாரால் கற்பனை செய்து பார்க்க முடியும் ? நாம் கிராமத்துக்குப் போய், வயல்களில் நடக்கும்பொழுது , தனிமையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால் ஒரு புத்திசாலியான செவிட்டு மனிதன் , ஒரு சந்தோசமான கூட்டத்தின் மத்தியில் , மற்றவர்களுடன் பேசவோ, கேட்கவோ முடியாமல் இருக்கும்போது உணரும் தனிமைக்கு முன் எம்மாத்திரம்? " என்று வேதனையுடன் குறிப்பிட்டார்( பக்கம் 100),... உலகம் முழுவதும் இருக்கும் செவிடர் பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதுடன் நின்று விடாமல் , தன் பெயரையும் ,செல்வாக்கையும் உபயோகித்து ,அவர்கள் துயரைக் களைய பல திட்டங்களையும் ,அமைப்புகளையும் ஏற்படுத்தினார். மனித குல உயர்வுக்காக இன்னும் என்ன புதிய கண்டுபிடிப்புகளைச்செய்யலாம் என்பதே அவர் வாழ்வின் குறிக்கோளாக இருந்தது.(பக்கம் 104).

                 ஒரு அறிவியல் அறிஞரின் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை விவரிப்பதோடு நின்று விடாமல், அவரின் மனித நேய மறுபக்கத்தை மிக இயல்பாக, படிப்பவர்க்கு ஆர்வம் ஏற்படும் வகையில் இந்தப் புத்தகத்தை இந்த் நூலின் ஆசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இளைஞர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய புத்த்கம் இந்தப்புத்தகம். 

No comments:

Post a Comment