Sunday, 29 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா -ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்                                         : இரா. நடராசன்
முதல் பதிப்பு                                : ஏப்ரல் 2005           16-ஆம் பதிப்பு : 2013
வெளியீடு                                      : Books for Children
விற்பனை உரிமை                      : பாரதி புத்தகாலயம், சென்னை -18 .
விலை                                             : ரூ 15 மொத்த பக்கங்கள் : 24

                                                  மிகச் சுருக்கமாக அமைந்த ஆபிரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை போல , வீரியமிக்க குறு நாவலாக இந்தச்சிறிய  நூல் அமைந்துள்ளது.கனவு ஆசிரியர் என்னும் புத்தகத்தில் தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக் காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்ப்தனை ' எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரையாக எழுதிய.இரா. நடராசன்  வாசிக்கும் எந்த ஆசிரியருக்கும், ஏன் எந்த மனிதருக்கும்  அறிவியல் மன்ப்பான்மை வரக்கூடிய அளவிற்கு வலிமையாக எழுதியுள்ள குறு நாவலாக 'ஆயிஷா ' அமைந்துள்ளது.  குறும்படம்,நூல் மதிப்புரை என இணையத்தில் இந்த நூலைப் பற்றிய செய்திகள் பல உள்ளன என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படவேண்டிய புத்தகம் இந்தப் புத்தகம்  என உணர்கின்றேன். 

                         பள்ளிக்கூடங்களும் , ஆசிரியர்களும் எப்படி இருக்கின்றார்கள் எனும் உண்மையை உடைத்துப்போடும் கதை, 1995-ல் வந்த புத்தகம் என்றாலும், இன்றும் நாளையும் பொருந்தும் கதை. கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துவதுதான் கல்வி, ஆனால் கேள்வி கேட்கும்   மாணவி ஆயிஷா எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறாள், அவமானப்படுத்தப்படுகிறாள் ஆசிரியர்களால் என்பதுதான் கதை. இன்றைய சூழலில் எதையும் கேட்காதே, நம்பு , நம்பு என்று சொல்லும் பள்ளிக்கூடங்கள்,எதையும் வாசிக்காத, தெரிந்து கொள்ள விரும்பாத ஆசிரியர்களிடம் சிக்கிக்கொள்ளும்  மாணவ், மாணவிகள், அதுவும் கேள்வி கேட்கும் மனப்பான்மை இருந்தால் எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை நாம் இக்கதையின் மூலம் ஊகிக்கலாம்.  ஒரு ஆசிரியை " ஆயிஷாவின் உறவில்தான் நான் உணர ஆரம்பித்தேன் எவ்வளவு தூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழ்ந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம் என்று.நான் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே நாமாக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகிறோம். அறிவும் வளருவதில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை ? " கையைக் கட்டு ... வாயைப் பொத்து ...:ப்க்கம் 17 "  உணர்வதாக , ஆயிஷாவால்  தனது பணியை, படிப்பை புதிப்பதாக வரும்  பகுதி  அருமை. வகுப்பறைகள் மாறினால் , நாடே மாறும். இன்று வகுப்பறைகள் எல்லாம்  பெரும்பாலும் அஞ்ஞானத்தை பரப்பும் இருட்டறைகளாக உள்ள நிலையில் வெளிச்சத்தைக் கொடுக்கும் மெழுகுவர்த்தியாய் இந்தப் புத்தகம் , ஒரு நம்பிக்கை அளிக்கிறது.
ஆனந்த விகடன் பேட்டியில் இந்த நூலின் ஆசிரியர் அளித்த பதில்

''ஆயிஷா உருவான கதையைச் சொல்கிறீர்களா?''

''என்னிடம் பயின்ற முஸ்லிம் மாணவன் ஒருவன்தான் 'ஆயிஷா’வுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக் கதையில் மாணவி என்று மட்டும் மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு ஒரு வெறுக்கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கும் நுகர்வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூகமும் கல்வி பயிலும் மாணவர்களை நுகர்வோராகப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லை எனில், அவர்கள் ஆட்சேபிக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப்பதுபோல் எல்லாம் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் இங்கே! கேள்வி கேட்கக் கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது. இந்தக் கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டிவனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து 'ஆயிஷா’வை எழுதினேன். 1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'

இன்று இந்தப் புத்தகம் 1 இலட்சம் பிரதிகள் விற்றுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்கள். இன்னும் அதிகம் விற்கக்கூடும். நம்மைப் போன்றவர்கள் இந்த நூலின் பிரதியை தெரிந்த மாணவ, மாணவிகளிடம் ,ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும். 'ஆயிஷா ' புத்தகம் படித்துள்ளீர்களா எனத் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். வெறும் 15 ரூபாயில் கிடைக்கும் மாற்றுச்சிந்தனை, ஆக்கச்சிந்தனை  புத்தகம் இந்தப் புத்தகம. படிக்காதவர்கள் தய்வுசெய்து வாங்கிப்படியுங்கள். பரப்புங்கள்.

11 comments:

  1. நன்றி தோழரே, இந்த நூலைப் பலமுறை படித்து, படித்த போதெல்லாம் அழுது, பல நூறு பிரதிகளை (முதலில் 2ரூபாய், பிறகு 5ரூபாய், அதன்பின் 10ரூபாய், இப்போது 15) வாங்கி ஆசிரிய நண்பர்கள் பார்வைக்குத் தந்திருக்கிறேன். ஆசிரியர்களின் மனப்போக்கை மாற்றியதில் இந்தச் சிறு குறுநாவல் நூலுக்குப் பெரும் பங்குண்டு. நன்றி நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பல ஆயிரம் பக்கங்கள் இருந்தால்தான் நல்ல புத்தகம் என்று பரப்பப்படும் செய்திகளுக்கு நடுவில் உண்மை இருந்தால் சின்ன புத்தகம் கூட படிப்பவர்களை எவ்வளவு பாதிக்கும் என்ப்தனை இந்தப் புத்தகம் உணர்த்துகின்றது. உடனே படித்து , கருத்துச்சொன்ன உங்களுக்குத்தான் நான் நன்றி , நன்றி என்று சொல்ல வேண்டும் தோழரே !, நன்றி.

      Delete
  2. அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அய்யா, கட்டாயம் வாங்கிப்படியுங்கள். அழ வைக்கக்கூடும் ,ஆழமாய் உங்களை யோசிக்க வைக்கக்கூடும்.படித்து, கருத்து பதிவு இட்டமைக்கு நன்றி.

      Delete
  3. ஐயாவிற்கு வணக்கம்
    கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் தகவலால் தங்கள் தளம் வந்தேன். புத்தகம் பற்றி முத்துநிலவன் ஐயா உட்பட நண்பர்கள் பேசி கேட்டிருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை தங்கள் பதிவு படிக்க வேண்டும் உறுதிமொழியை என்னுள் எடுக்க உதவியது. சிறப்பான புத்தகத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியமைக்கும் பகிர்வுக்கும் நன்றிகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. "தங்கள் பதிவு படிக்க வேண்டும் உறுதிமொழியை என்னுள் எடுக்க உதவியது." . மிக்க நன்றி அய்யா, இந்த வார்த்தைகளே போதும், மீண்டும் மீண்டும் நேரம் கண்டுபிடித்து , நல்லவற்றை பதிவு செய்வதற்கு.

      Delete
  4. ஆயிஷா குறும்படம் பார்த்திருக்கிறேன்.நூலும் படித்திருக்கிறேன்.சமீபத்தில் கடற்கரை வலைதளத்தில் எழுதிவரும் விஜயன் இந்த நூலைப் பற்றி எழுதி உள்ளார். அற்புதமான படைப்பு .ஆசிரியர்கள் மட்டுமல்ல பெற்றோரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல் .

    http://vijayandurai.blogspot.com/2013/11/pk2.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி, படித்து தங்கள் கருத்தைப் பதிவு செய்ததற்கு.

      Delete
  5. டி.என். முரளிதரன் அவர்களே, தாங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் சென்று படித்தேன். திரு விஜயன் அவர்கள் மிக விரிவாக இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியுள்ளார்கள். வாழ்த்துக்கள் அவருக்கு. உங்களுடைய கருத்தும் அந்த வலைத்தளத்தில் உண்மையைச் சொல்வதாக உள்ளது . நன்றி !

    ReplyDelete
  6. “ஆயிசா“ குறுநாவல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் 1995லேயே வெளியிடப்பட்டு பல்லாயிரக்கணக்கானோரால் படிக்கப்பட்டு, பல கல்வியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு, இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009ல் பள்ளிகளில் பரிசுகளும் தண்டனைகளும் என்ற பகுதியிலும் இக்கருத்து உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் பல ஆசிரியர்கள் தங்கள் சட்டாம்பிள்ளைத் தனத்தை விடாதிருப்பதுதான் வேதனை. தங்களின் கருத்துக்கு நன்றி மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரே.

    ReplyDelete
  7. நன்றி அய்யா, தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். தங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். அய்யா அறிவொளி (தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள். மிக்க மகிழ்ச்சி, தங்களின் வருகையால்.

    ReplyDelete