Monday, 11 August 2014

அண்மையில் படித்த புத்தகம் : மண்ணும் பெண்ணும்-பாலு மணிவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : மண்ணும் பெண்ணும்
நூலின் ஆசிரியர்                          : பாலு மணிவண்ணன்
பதிப்பகம்                                         : பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14
முதற்பதிப்பு                                   : டிசம்பர் 2008.
மொத்த பக்கங்கள்                      : 163
மதுரை மாவட்ட மைய நூலகம் எண் : 181541

                            பெண்கள் நிலைமை பற்றிப் பேசும் புத்தகம். பொத்தாம் பொதுவாக இல்லாமல், மிக நுட்பமாக நமது நாட்டில் பெண்கள் நிலைமை குறித்து நிறைய கேள்விகளை எழுப்புகின்ற புத்தகம். 'பெண்ணே நீ ' என்ற இதழில் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்தப் புத்தகம். மொத்தம் 34 கட்டுரைகள், எல்லாக்கட்டுரைகளின் மையப்புள்ளியாக ஏன் இந்த நிலைமை பெண்களுக்கு என்னும் குரல் இருக்கின்றது.
                              பெண் நிலமாக இருக்கிறாள் என்னும் மனுநீதி எப்படி பெண்களுக்கு அநீதியைக் கருத்துக்களால் விளைத்திருக்கிறது என்பதனை முதல் 3 கட்டுரைகளில் குறிப்பிடுகின்றார். "பெண் என்ன கணவனின் உடமையா? 'ஷாப்பிங் கேர்ளா'? பாலியல் பாவையா? உரிமையற்றவளா ? " என்னும் தலைப்புகளில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணிற்கு ஒரு நீதி என இருப்பதை புளளி விவரங்களோடு சுட்டிக் காட்டுகின்றார்.பெண்களுக்கு 33 சத வீத இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் என்பது இன்னும் கானல் நீராகவே இருப்பதை 8 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கின்றார். இன்னும் கானல் நீராகத்தான் இருக்கின்றது.

                        "படைப்பின் சாரம் ஆண்/ ஆணின் சாரம் பெண் / "  என்னும் கவிஞர் அப்துல் ரகுமானின் கவிதை ஆண்களின் கட்டுக்கதைகளுக்கு எப்படித்துணை போகின்றது என்பதனையும், தாய்வழிச்சமூகம் எப்படி ஆண்களின் சூழ்ச்சிகளால் தந்தை வழிச்சமூகமாக மாறியது, அதற்கு மதங்கள் எப்படித் துணை புரிந்தன என்று விவரிக்கின்றார்.
                        திருமணத்திற்காகத் தயாரிக்கப்படும் பொம்மையாகத்தான் பெண்ணின் வளர்ப்பு இருக்கிறது என்பதனையும், குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் கூட எப்படி ஆண்கள் தப்பித்துக்கொள்கின்றார்கள் என்பதனை விவரிக்கின்றார். பூப்புனித  நீராட்டு விழா என்னும் சடங்கு ஒரு சிறு பெண்ணை எப்படியெல்லாம் உளரீதியாகக் காயப்படுத்துகிறது, அவமானப்படுத்துகிறது என்பதனைச்சுட்டுகின்றார்.திரைப்படங்கள் எப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்திக் காட்டுகின்றன, ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி எப்படி என்பதனை இரண்டு திரைப்படங்களை எடுத்துக்கொண்டு ஒப்பிட்டு உண்மையைக் கூறுகின்றார்.

                       பெரும்பாலான ஏழைகள்(70 %)  பெண்கள் என்பதையும், அமைப்பு சாரா தொழிலாளிகளில் 85 % பெண்கள் என்பதையும் சுட்டி ஏன் இந்த நிலைமை என்னும் காரணங்களைப் பட்டியலிடுகின்றார். பெண்கள் முன்னேற்றத்திற்கு அமெர்த்தியாசென் காட்டும் 5 வழிகளைக் குறிப்பிடுகின்றார். குடும்பங்கள் பல பெண்களுக்கு வன்முறை நிகழ்த்தப்படும் இடமாக அமைவதையும், புராணங்களில், கதைகளில் பெண்கள் குடும்பம் என்ற பெயரால் கொடுமைகளுக்கு உள்ளானதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

                      இப்படிப்பல்வேறு கோணங்களில் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதைக் கூறும் இந்தப்புத்தகத்தின் ஆசிரியர், பெண் என்ன பாதை தெரியாதவளா என்னும் கடைசி கட்டுரையில் அவருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் நடக்கும் பெண்ணியம் பற்றிய உரையாடலைக் குறிப்பிடுகின்றார். பெண்ணியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் நண்பரிடம்
1. ஆண் , பெண்களின் மரபு சார்ந்த சிந்தனைகளில் புதிய பார்வையைப் புகுத்த வேண்டும்.
2. ஆண், பெண் உறவுகளில் சமத்துவப்போக்கை வளர்க்க வேண்டும்.
3. குடும்ப அமைப்பை முற்றிலும் ஜன நாயகப்படுத்த வேண்டும்.
4. பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரமும் அரசியல் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

                         "சமூகத்தளத்திலும், அரசியல் தளத்திலும் (ஆணும் பெண்ணும் சமம் என்பதனை) அதனை நடைமுறைப்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ்நதவர் தந்தை பெரியார். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில், ' கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள் அனைவரும் வருக ' என்று விளம்பரப்பலகை எழுதி வைக்கச்சொன்னார். அது அன்றைய காலகட்டத்தில் ,சமூக அங்கீகாரத்தை சவுக்கால் அடித்து வரவழைத்து, அதனை பெண்களுக்குப் பெற்றுத்தந்த முதல் அடி , மேலும் பெரியார் நடத்திவைத்த சுயமரியாதைத் திருமணங்கள் , ஆண்களிடமிருந்து சம அந்தஸ்தைப் பிடுங்கி பெண்களுக்கு வழங்கிய அதிரடி "  பக்கம் (161) என்று குறிப்பிடும் இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பாரதியின் பங்களிப்பு பற்றியும் , பொதுவுடமை இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றார்.

                       பின் அட்டையில்  ": ஆண்மை என்ற தத்துவம் பெண்களால் அழிக்கப்பட்டாலல்லது 'பெண்மை'க்கு விடுதலையில்லையென்பது உறுதி எனும் தந்தை பெரியாரின் பெண்ணியச்சிந்தனைகளைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தி வரும் பாலு மணிவண்ணன் ...: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதான். பெரியாரியல் கண்ணாடியைப் பயன்படுத்தி இந்த நூலைப் படிக்கும்போது ,  எளிமையாக -பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்க வேண்டும் ? என்னும் உணர்வை எழுப்பி, பெண்களே ஒன்று சேர்ந்து போராடுங்கள் என்னும் போராட்டக்குரலை ஒலிக்கும் புத்தகமாகவே எனக்கு இந்தப்புத்தகம் தோன்றுகிறது

                        

No comments:

Post a Comment