Tuesday, 12 August 2014

அணமையில் படித்த புத்தகம் : தூங்காமல் தூங்கி -டாக்டர் S.மாணிக்கவாசகம்



அணமையில் படித்த புத்தகம் : தூங்காமல் தூங்கி
                                             (ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை)
புத்தக் ஆசிரியர்           : டாக்டர் S.மாணிக்கவாசகம்
பதிப்பகம்                       : சந்தியா பதிப்பகம், சென்னை-600 083
முதற்பதிப்பு                 :  2008
மொத்த பக்கங்கள்    : 96 , விலை ரூ 50
நூலக எண்                  : 172987

                                35 ஆண்டுகள் மயக்க இயல் மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவரின் வாழ்க்கை நிகழ்வுகள் அவராலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. சொந்தக் கதை என்றாலும் இலக்கியமும் , தத்துவமும் , வாழ்வியலும் கலந்த இலக்கியக் கதையாகச்சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை.

                            நானும் 2,3 அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கின்றேன்.. மயக்க இயல் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மருத்துவரோடு நிற்பார். ஆனால் அந்த மயக்க இயல் மருத்துவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தபின்பு மிகத் தெளிவாக விளங்குகின்றது. மருத்துவப்பட்டப்படிப்பில், மதுரையில் படித்த புத்தகங்கள் பற்றிய அவரின் விவரிப்பு வியப்பைத்தருகின்றது. அந்த ஆழ்ந்த புத்தகப்படிப்புத்தான் , பணி ஓய்வுக்குப் பிறகு அமெரிக்காவில் அமர்ந்து இப்படி ஒரு தன் வரலாற்று நூலை எழுத அடித்தளமாக இருந்திருக்கும் போலும்.

                             தூக்கம் வரும் என்னும் பகுதியில் ஒரு மாமி சொல்லும் வார்த்தைகளோடு ஆரம்பித்து, தான் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் , மயக்க இயல் மருத்துவராக சேர்ந்த நிகழ்வைச்சொல்கின்றார், நடுவய்துப்பெண்ணுக்கு ஏற்பட்ட மரணம், மருந்தைக் குடித்த பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவனின் மரணம் போன்ற நிகழ்வுகள் ஆரம்ப கட்டங்களில் எவ்வளவு வேதனையைக் கொடுத்தது, இந்த மருத்துவ தொழிலையே விட்டுவிடலாமா என்று யொசிக்கும் அளவுக்கு தன்னைப் பாதித்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். இனி பிழைக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி பிழைத்ததன் மூலம் கிடைத்த மன நிறைவு, மனதையே மாற்றிய நிகழ்வு எனக் குறிப்பிடுகின்றார்.

                                 குடும்பவாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, மேல்படிப்பையும் முடித்துவிட்டு தான் தொடர்ந்த  மய்க்க இயல் மருத்துவ அனுபவங்களைத்தொடர்ந்து சொல்கின்றார். "Sleep apnoea Syndrome"   உள்ள ஒரு நோயாளியைக் காப்பாற்றிய நிகழ்வையும் , நோயாளியின் தந்தையைப் பற்றியும் விவரித்துள்ள பாங்கு அருமை.

                                குத்தப்பட்ட பெண்ணும், குத்தியவனும் மருத்துவமனையில் சேர்ந்ததையும், அந்த இளம் பெண் இறந்ததையும் அந்த ஆண் பிழைத்ததையும் குறிப்பிட்டு அந்த இரண்டு குடும்பங்களில் நிகழ்ந்த மனமாற்றங்கள், பழிவாங்கும் உணர்வுகள் போன்றவற்றை ஒரு சிறுகதைபோல விவரித்துள்ளார்.

                                                                         தன்னுடைய ஆசிரியரின் மனைவிக்கு மருத்துவம் பார்த்ததை எழுதுகிறபோது , அந்த ஆசிரியரைப் பற்றி விவரிக்கும்போது , எப்படிப்பட்ட ஆசிரியர் எல்லாம் இருந்திருக்கின்றார்கள் என்று உணர்கின்றோம். கணக்கு ஆசிரியர், ஆங்கிலப்பாடங்களில், தமிழ்ப்பாடங்களில் இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். தனக்கு தமிழ் கவிதைகளில் ஆர்வம் வந்ததற்கு அந்த ஆசிரியர்தான் காரணம் என்பதனை " அவனுக்குத் தமிழ்க் கவிதைகளை ரசிக நாக்கில் சீனித் தண்ணி தொட்டு வைத்தவரே அவர்தான். " பக்கம் 57 , இறுதித்தேர்வின்போது, கூடப்படிக்கும் பையனின் தகப்பனார் இறந்துபோக, அவனை அழைத்துச்சென்று தேர்வு எழுதவைத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்ததை, அவர் இன்று பி.ஹெச்.டி பட்டம் பெற்று உயர் நிலையில் இருப்பதையும் அவர் அமெரிக்காவில் இருந்து வரும்போதெல்லாம் அந்த ஆசிரியரைப் பார்ப்பதையும் எழுதி, கடைசியில் அவர் மனைவி இறந்தபோனதையும் ,அது எந்தப் பிழையால் நிகழ்ந்தது என்பதை அறிய முடியாததை அவருக்கே உரித்தான பாணியில் மருத்துவர் மாணிக்கவாசகம் குறிப்பிடுகின்றார்.

                            ஒரு வயதான பாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையும், அவரைக் கவனிக்க விருப்பமில்லாத பணக்கார மகன்கள் பற்றியும், பாட்டியைக் கவனித்துக்கொண்ட வேலைக்காரப் பெண்மணி பற்றியும் , கடைசியில் அந்தப்பாட்டி இறந்து போனதையும் , அந்தப்பாட்டிக்காக வேலைக்காரப்பெண் மட்டுமே அழுததையும் குறிப்பிட்டு கடைசியில் ,
'இது ஒரு மனிதக் காட்சி சாலை
பால் குடித்த மிருகங்கள் அவ்வப்போது
வந்து போகும்
" என்று முதியோர் இல்லம் பற்றி எழுதப்பட்ட வரிகள் ஞாபத்திற்கு வந்தது என்று முடிக்கின்றார். கடைசி பகுதியில் தன்னுடைய தந்தையின் மரணம் பற்றியும், தன்னுடைய தாயின் மரணம் பற்றியும் விவரிக்கின்றார் இயல்பான நடையில்.

                               முடிவாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவ மாணவர்களாக இருந்தவர்கள், ஒன்று கூடிய நினைவுகளின் பகிர்வு மிக நன்றாக உள்ளது. காண்டேகர் தன்னுடைய இருமனம் என்னும் நாவலில் குறிப்பிட்ட சுந்தரம் போல கல்லூரிக் காலத்தில் பேசியதிற்கு முற்றிலும் மாறாக வாழும் தன்னுடன் படித்தவர்களைக் குறிப்பிடுகின்றார். முடிவில் தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் எவ்வளவு தூரம் தங்கள் நேரங்களைத் துறந்தார்கள், ஒத்துழைத்தார்கள் என்பதனைச்சுட்டுகின்றார்.

                                        மருத்துவப்பணியில் நிறைவாக, அடுத்தவர்களின் வாழ்க்கைக்காக உழைத்த உழைப்பை மிக நேர்மையாகவும் , இலக்கியமாகவும் பதிவு செய்திருக்கின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் எஸ். மாணிக்கவாசகம் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மருத்துவம் பற்றியும் , இன்று கணினி வந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் விவரித்திருக்கின்றார். மருத்துவம் என்பது மனம் சார்ந்தது, அதுவும் தொண்டற மனப்பான்மையோடு அணுகினால் எவ்வளவு புகழும், மன நிறைவும் கிடைக்கும் என்பதற்கு இவரின் வாழ்வின் நிகழ்வுகள் எடுத்துக்காட்டு. பல தமிழர்கள் ,இப்படித் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பதிய வேண்டும். பல்பேருக்கு அது முன்னுதாரணமாக அமையும். நூலைப் பற்றிய சி.கல்யாணியின் 'அயல் முகங்கள் மீது விழும் மனிதாபிமான நிழல் ' என்னும் அணிந்துரையும் நன்றாக அமைந்துள்ளது.  மிக நல்ல ஒரு புத்தகத்தை வாசித்த மன நிறைவு எனக்கு இன்று
இணையத்தில் பார்த்தபொழுது இரண்டாம் பதிப்பும் கண்டுள்ளது இந்தப்புத்தகம். இன்னும் பல பதிப்புகள் வரக்கூடிய புத்தகம்..

                              

4 comments:

  1. நல்ல பதிவு. இதைப்படித்தவுடன் எனக்கு என் நண்பர் மரு. சந்திரசேகர் தான் ஞாபகத்திற்கு வந்தார். தன்னால் காப்பாற்றமுடியாமல் இறந்துபோன ஒரு குழந்தைக்காக அலோபதி மருத்துவத்தையே துறந்து இன்று ஹோமியோபதி மருத்துவத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். மருத்துவத்துறையில் நல்லவர்களும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே, நன்றி தங்கள் வருகைக்கும் , 'நல்ல பதிவு 'என்னும் கருத்திற்கும் .

      Delete
  2. ஓ! நீங்களும் கருத்துகளை தணிக்கை செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, எனது மகன் உபயம் ... கமெண்ட் படித்து விட்டு பின் வெளியிடுங்கள் என்று.

      Delete