Monday, 26 January 2015

நிகழ்வும் நினைப்பும் (31) : வேப்பந்தோப்பும் திருக்குறளும் :

நிகழ்வும் நினைப்பும் (31) : வேப்பந்தோப்பும் திருக்குறளும் :



                                                        ஓய்வுபெற்ற  தமிழ் நாடு அரசு தலைமைப்பொறியாளர் (வேளாண்பொறியியல்  துறை ) பொறிஞர் அய்யா க.சி.அகமுடைநம்பி  அவர்களைச்சில ஆண்டுகளாக அறிவேன்.படித்தது வேளாண் பொறியியல் என்றாலும் தமிழின் மீது குறிப்பாகத் திருக்குறள் மீது பெரும் விருப்பம் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அவர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார். கடந்த பத்து ஆண்டுகளாக தனது 'மலர் ' அறக்கட்டளை மூலமாக , தனக்குச்சொந்தமான , மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, தே.கல்லுப்பட்டி , குன்னத்தூர் அருகில் உள்ள வேப்பந்தோப்பில் வருடந்தோறும் ஜனவரி மாதம், (பெரும்பாலும் ஜனவரி 25 அல்லது 26 ஆக இருக்கும்) திருக்குறள் குறித்து  ஒரு தலைப்புக் கொடுத்து கருத்தரங்கம் நடத்தி வருகின்றார். கருத்தரங்கத்தின் முடிவில்  கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகின்றார்.

                        பத்து வருடங்களாக, தொடர்ந்து அவரது கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருகின்றது. ஒருவருடம் திரு வெ.இறையன்பு அவர்கள் கலந்து கொண்டார். தொடர்ச்சியாக பேராசிரியரின் இளவல் பேராசிரியர் அய்யா க.திருமாறன் அவர்கள் விருதுநகரிலிருந்து வந்து கலந்து கொள்கின்றார். அய்யா தமிழண்ணல், தமிழ் அறிஞர் இரா.இளங்குமரனார், பேரா.இரா.மோகன்  மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர். பல பேராசிரியர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். பல துறை சார்ந்த ஆனால் திருக்குறள் மேல் விருப்பம உள்ள தமிழர்களும்  கலந்து கொள்ளும் அருமையான கருத்தாக்க விழாவாக, வேப்பந்தோப்பு கருத்தரங்கம் அமைகின்றது. சில ஆண்டுகளாக மதுரை யாதவர் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் அய்யா முனைவர் இ.கி.இராமசாமி அவர்கள் பதிப்பாசிரியராக இருந்து அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றார்.

                              தனி ஒரு ராணுவம் போல, இந்தக் கருத்தரங்கத்திற்காகவும், தொகுத்து புத்தகங்களாக வெளியிடுவதற்காகவும் அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் மிகவும் வியப்புக்குரியது. மதுரையின் தெருக்களில் பேருந்து மூலமாகவும் , நடந்தும், அச்சிடக்கொடுக்கப்பட்ட கட்டுரைகளைத் திருத்துதல், மீண்டும் கொடுத்தல், அச்சிட ரேப்பர்  வடிவமைத்தல் என்று ஓயாது அலைந்து கொண்டிருப்பார். மிக உயர்ந்த பொறுப்பில் தமிழக அரசின் வேளாண் துறையில் இருந்தவர். ஓய்வு பெற்று இன்றைக்கு ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு மேலானவர். 75 வயதுக்கு மேல் இருக்கும் அவரின் வயது. ஆனால் இந்த நிகழ்வுக்காக 20 வயது இளைஞரைப்போல அலைந்து கொண்டிருப்பார். உடல் உழைப்பு, அலைச்சல், பணச்செலவு இவற்றிப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே குறிக்கோளோடு செயல்பட்டுக்கொண்டிருப்பவர்.ஜெ.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றியும் , ஆய்வியல் நோக்கில் பாரதியாரைப்பற்றியும் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.

                           இந்த ஆண்டு, மலர் அறக்கட்டளையோடு மற்றும் ஒரு அறக்கட்டளை இணைகிறது என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். ஈரோடைச்சேர்ந்த வள்ளுவத்தமிழ் உதய முரசகம் அறக்கட்டளையும் , மலர் அறக்கட்டளையும் இணைந்து நடத்துகிறோம் என்றார். ஈரோட்டைச்சார்ந்த மின்வாரிய முதன்மைப் பொறியாளர் சி.சண்முகம் அவர்கள் , ' வள்ளுவத் தமிழ் உதய முரசகம் அறக்கட்டளை ' வைத்து நடத்துகின்றார் என்றார் .   ' திருக்குறளில் உறவும் நட்பும் ' என்பது தலைப்பு. 'தினமணி ' பத்திரிக்கையில் அறிவிப்பு வந்தது. தமிழகம் மற்றும் இந்தியா முழுமையும் இருந்து தலைப்பின் கீழ் கட்டுரை வந்தது. ஈரோடைச்சார்ந்த வள்ளுவத்தமிழ் உதய முரசகம்  அறக்கட்டளை நிர்வாகிகள்தான் தரமான 20 கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்றார். மதுரை, மதுரை சுற்றுப்புறங்களிலிருந்து நிறையக் கட்டுரைகள் போயிருக்கின்றன. ஏறத்தாழ 85 கட்டுரைகள் வந்தன, அதில் தகுதியான 20 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொல்லி ,அறிவிப்பு கொடுத்திருந்ததன்படி எடுத்து கடிதம் அனுப்பியிருந்தார்கள். மதுரையில் எனது (வா.நேரு) கட்டுரையும், போடி தோழர் நந்தா கட்டுரையும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையில் எனது கட்டுரையும் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சென்னை, பெங்களூரு, மும்பை என இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் அந்த 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கட்டுரைகளில் முத்னமையான கட்டுரைக்கு ஒரு பவுன் தங்கக்காசு பரிசு என்று அறிவித்திருக்கின்றார்கள். பாராட்டுக்குரிய செயல்.சென்ற 18.1.2015 அன்று வேப்பந்தோப்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரைக் கருத்துக்களைத்தொகுத்தும், எனது கருத்தையும் இணைத்து உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தது.பல அறிஞர்கள் திருக்குறள் பற்றி அரிய பல கருத்துக்களைக் கொடுத்தனர்.

                                  பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவன் என்ற முறையிலும், தமிழின் மீது விருப்புக்கொண்டவன் என்ற முறையிலும் திருக்குறள் மீது விருப்பம் உண்டு எனக்கு. ஆனால் அதனை பல கட்டுரைகளாக  வடிக்கக்கூடிய அளவிற்கு ஒரு ஊக்க சக்தியாக இருந்தவர் அய்யா க.சி.அகமுடை நம்பி அவர்கள். 'குறள் கூறும் ஊழும் கூழும் ' , 'முப்பாலின் ஒப்புரவு', 'திருக்குறளில் பொதுமை ', 'குறள் கூறும் குடிமை', 'திருக்குறளில் இறைமை', 'திருக்குறளில் தவமும் துறவும்', ' திருக்குறளின் காமத்துப்பால் ' போன்ற பல்வேறு பொதுத்தலைப்புக்களைக் கொடுத்து பல்வேறு கருத்தோட்டமுடையவர்கள், பல்வேறு துறைகளைச்சார்ந்தவர்களை அழைத்து, அவர்களின் கருத்துக்களை தொகுத்து நூலாக்கி கொடுப்பது என்பது மிகப்பெரிய செயல். எந்தக் கல்லூரியும், எந்தப்பல்கலைக் கழகமும், அரசு நிறுவனங்களோ இல்லாமல் - கல்லூரிப்பேராசிரியர்களை மட்டும் நம்பி இராமல் தொடர்ந்து ஒற்றை இலக்கான 'திருக்குறளைப் பரப்புதல் ' என்னும் நோக்கில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்கள் இதுவரை அரசின் எந்த விருதும் பெற்றவரல்ல. எல்லா விருதுகளுக்கும் மேலான, திருக்குறள் விரும்பிகள் மனதில் மிகப்பெரிய ஆளுமை விருது அவருக்கு உண்டு. தொடர்கிறது அவர் பணி. இன்னும் பல ஆண்டுகள் அவர் பணி தொடரவேண்டும். நீடூழி அவர் வாழவேண்டும்.

Thursday, 22 January 2015

நிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்





நிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு  கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்

நெல்லை மண்டல திராவிடர் கழகத்தலைவர், முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் மறைவுற்றார் என்னும் செய்தி 09.01.2014 இரவு 9 மணியளவில் தோழர் ஈரோடு அவர்கள் மூலமாக கேட்டபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அண்ணே, கடையில்தான் இரவு 7 மணிவரை இருந்தார். பின்பு வீட்டிற்குச்சென்றார். வீட்டிற்குச்சென்றவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அப்பாவும்( அய்யா தே.எடிசன்ராசா) அண்ணன் செல்வமும் (திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் ) சென்றார்கள். சென்று அடைவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது என்றார். மனோகரன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திராவிடர் கழகத்தலைவர் அய்யா சிவனைந்தபெருமாள அவர்களின் மகன். சுயமரியாதைக்காரரின் மகனாகப்பிறந்து இறுதிமூச்சுவரை சுயமரியாதைக்காரராக வாழ்ந்து மறைந்திருக்கின்றார். அவர் மறைந்தவுடன் , சிலர் வந்து அவரின் இறுதிச்சடங்கிற்கு எப்படி ஏற்பாடு செய்வது என்று கேட்டவுடன் அவரது துணைவியார் பேராசிரியர் கஸ்தூரிபாய் மனோகரன் அவர்கள் , பெரியாரியல் முறைப்படிதான் இறுதி நிகழ்வுகள் நடக்கும் என்பதைச்சொன்னதோடு மட்டுமல்லாது, எங்கள் மாமனார் காலத்திலிருந்து எங்கள் வீட்டு நிகழ்வுகள் எல்லாம் எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல்தான் நடக்கும் என்பதனை மிகத்தெளிவாகவும் இயல்பாகவும் சொன்னார்கள் என்பது பெருமைக்குரியது.
தன்னுடைய வாழ்வை ஒரு தொண்டற வாழ்வாக அமைத்துக்கொண்டவர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள். அவரோடு நெருங்கிப்பழகிய  அய்யா சே.முனியசாமி (மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் )  இறுதி நிகழ்வில் உரையாற்றியபோது பல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாகத்தான் அவரோடு நான் பழகினேன். முழுவதுமாக என்னை வ்சீகரித்துக்கொண்டார், அவரின் பழகும்தன்மையும் நகைச்சுவை உணர்வும் , எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கும் எவருக்கும் வாய்க்காது.எனது உயிரைப்போன்று ஒப்பற்ற நண்பராக விளங்கினார் என்றார்.எதற்கும் கலங்காத அவர் கண்ணீர் விட்டு அழுதார். அண்ணன் தே.எடிசன்ராசா அவர்கள், என் தந்தை பே,தேவசகாயமும், அண்ணன் மனோகரன் அவர்களின் தந்தை சிவனைந்தபெருமாளும் ஒன்றாக இயக்கப்பணியாற்றியவர்கள். நானும் அவரும் ஒன்றாகப் பணியாற்றினோம். அண்ணன் ம்னோகரன் அவர்கள் தலைமுறை இடைவெளி இல்லாமல் பழகக்கூடியவர் . என்னோடு பழகுவது போலவே எனது மகன்கள் ஈரோட்டுப்பெரியார், செல்வப்பெரியாரிடமும் பழகக்கூடியவர். ஒரு அருமையான இயக்கத்தவரை, குடும்ப நண்பரை இழந்தோம் என்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டக் கழகப்பொறுப்பாளர்கள் அனைவரும் கண்ணில் நீர் மல்க இரங்கலுரை ஆற்றி அண்ணன் மனோகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

               அண்ணன் சி.மனோகரன் அவர்களின் கண்கள்  மதுரையில் உள்ள அரவிந்த கண் மருத்துவமனைக்குத்  தானமாக வழங்கப்பட்டன.அவரது உடல் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் , உடலைத் தானமாக வழங்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கலுரை ஆற்றினார். அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கலுரையை வாசித்தும், தன்னுடைய வீர வணக்கத்தைச்செலுத்தியும் , தூத்துக்குடியில் அய்யா பெரியார் சிலை அமைவதற்கும் , படிப்பகம் அமைவதற்கும் அவரின் பங்களிப்பை, கொடையுள்ளத்தை நினைவு கூர்ந்தும் உரை நிகழ்த்தினார்.

                           முதலில் அவர்கள் குடும்பத்தில் , அண்ணன் சி.மனோகரன் அவர்களின் தம்பி பேராசிரியர் சி.மகேந்திரன் அவர்களைத்தான் நான் அறிவேன். பேரா.சி.மகேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி வெண்ணிலா அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல்பரிசு பெற்றவர். அவரின் திருமணத்தின் மூலம் சி.மகேந்திரன், பின்பு அவரின் மூலம் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் பழக்கம். ஆனால் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரின் வெள்ளை உள்ளமும், நகைச்சுவை உணர்வும், இயக்க நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்னும் உந்துதலும் மிக நெருக்கமாக ஆக்கியது. அடிக்கடி மதுரை தல்லாகுளம் வருவார். ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு டீயைக் குடிப்போம். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்குச்செல்வோம். லேட்டஸ்டாக வந்த லேப்டாப் , ஆண்டிராய்டு எனக்கையில் வைத்திருப்பார். மைக்ரோ சிம், நானோ சிம் என செல்லில் போடுவார். எங்கு சென்றாலும் இண்டர் நெட் பயன்படுத்துவார். எனது மெயிலுக்கு விடாமல் ஏதேனும் தகவலகள், உலக அதிசயங்கள், மருத்துவக்குறிப்புகள் என அனுப்பிக்கொண்டே இருப்பார்.கடந்த முறை குடும்பத்தோடு குற்றாலம் சென்ற நேரத்தில் அவரின் உதவி மறக்க முடியாதது.

                     வெளியூர் செல்வது, மற்றும் இயக்க நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் சரியாக வந்துவிடுவார். அவர் வருகிறார் என்றாலே தாமதமாக வரும் ஆட்கள்கூட சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். கடந்த மாதம் சேலம் பொதுக்குழுவுக்குச்சென்ற போது, காலை 6 மணியிலிருந்து நாகமலைப்புதுக்கோட்டையில் வீட்டிற்குவெளியே நின்றிருக்கிறார், நாங்கள் சென்றது 6.30க்கு. அரைமணி நேரமாக வாசலிலேயே நிற்கிறேன் என்றார். ஏன் வந்தவுடன் வீட்டிற்குள்ளிருந்து வரலாமே என்றால் , என்னால் லேட் ஆகக்கூடாது என்றார். அதே போல் வெளியூர் செல்லும்போது பேச ஆரம்பித்தால் பட்டாசு வெடித்ததுபோல நாம் சிரித்துக்கொண்டே போகலாம். அவ்வளவு நகைச்சுவை இருக்கும் அவரது பேச்சில். பணத்தை எப்போதும் பெரிதாக நினைக்க மாட்டார். ஆனால் எப்போதும் கணக்கு வழக்கு சரியாக இருக்கவேண்டும் என நினைப்பார். பெரியாரியல் அடிப்படையில் சிலரோடு வாதிட்ட வாதங்களை விவரிப்பார். மிகவும் ஆர்வமாக இருக்கும். ஆறாவது படிக்கும்போது தந்தை பெரியார் அவர்கள் தூத்துக்குடியில் விடுதியில் தங்கியிருந்தபோது வாயிற்காப்பாளராக நின்ற கதையைக் கூறுவார். எல்லோருக்கும் உதவுவார். இயக்க நிகழ்வுகளுக்கு கொடுப்பதற்கு யோசிக்க மாட்டார். தாராளமாக தருவார். உடன் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார். இயக்க தோழர்களுக்கு மிகப்பெரிய தோழராக வாழ்ந்திருக்கிறார். தான் மறைந்த பின்பும் தனது கண்களையும், உடலையும் தானமாக வழங்கி பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்ததுபோலவே மறையவும் செய்திருக்கிறார். இறக்கும்போது கூட ஏதாவது நகைச்சுவையாக கூற வேண்டும் என நினைத்திருப்பார் போலும். மலர்ந்த முகமாய் உடல் இருந்தது. இருப்பவர் எல்லாம் ஒரு நாள் இறப்பது உறுதி. ஆனால் இருந்தபோதும், இறந்தபோதும் மற்றவர்களின் நலனை முன்னிறுத்திய, இயக்க நிகழ்வுகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்களின் புகழ என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவரின் தொண்டறம்.  

Monday, 19 January 2015

திருக்குறளை கையில் வைத்து......

திருக்குறளின் பெருமை
சொல்லும் அறிஞர்கள்
பங்கேற்ற கூட்டத்தில
பங்கு பெறும்
வாய்ப்புக் கிட்டியது !

அருகில் வந்த ஒருவர்
இன்னொரு ஆளைச்  சுட்டினார்
அண்டை மாநிலத்தவர்
அளவு கடந்த பற்று
அவருக்கு குறளின்
மேல் என்றார்

தாய்மொழி அவருக்குத்
தமிழ் அல்ல
தமிழ் நாட்டில்
வேலை பார்த்ததால்
தமிழ் அறிவார்
அளவற்ற ஆர்வம்
திருக்குறளின் மேல்
சில ஆண்டுகளாய்
என்றார்

உள்ளப்டியே மகிழ்ச்சி
அடைந்தேன்
நானாகச்சென்று வலிய
வாழ்த்துத் தெரிவித்தேன்
வள்ளுவத்தைப் பற்றி
அவர் எழுதிய நூல் ஒன்று
அவர் கையில் இருந்தது
வாங்கினேன் படித்தேன்

பாம்பை மிதித்ததுபோல்
திடுக்குண்டேன்
யார் நீ என்றேன்
பகக்த்து மாநிலத்தில்
இருந்து அனுப்பப்பட்ட
இந்து அடிப்படைவாதியோ
என்றேன்
இல்லை இல்லை என்றான்

அய்நூறுக்கும் மேற்பட்ட
திருக்குறளுக்கு புது உரை
எழுதவேண்டும்
அதற்கு ஒரு கருத்தரங்கம்
நடத்தல் வேண்டும் என்றான்
ஏன் எழுதிய உரைகளுக்கு
எல்லாம் என்ன குறை என்றேன்

ஆன்மிகம்தான் குறளுக்கு
அடிப்படை
வீடு பேறு அடைவதுதான்
குறளைப் படிப்பதன் நோக்கம்
என்றான்
தருண்விஜய்யின் தயவால்
வட  நாட்டுப்பகுதிகளுக்கு
குறள் போவதற்குள்
அனைத்தையும் மாற்றி
வீடு பேறு பெற
வழிகாட்டும்  நூல் இது
எனபதனை நிருபித்தல்
வேண்டும் என்றான்
அதற்கான உரைதனை
எழுதல் வேண்டும் என்றான்

தனி ஒருவன் அல்ல
இவன் !
காந்தியைக் கொல்ல
அனுப்பப்பட்ட ஆள்போல
ஒரு காரியத்திற்காக
அனுப்பப்பட்ட ஆள்
என்றுணர்ந்தேன் !

ஆபத்து வந்தது
தமிழர்களே !
முகமதியரும்
கிறித்துவரும்
சைவரும் சமணரும்
புத்த மதத்தினர்
நாத்திகர் என
அனைவரும் விரும்பும்
குறளை
வேதத்தின்
சாரமென சாற்றித்திரிந்த
ஒரு கூட்டம்
மிகத் தந்திரமாய்
உலக்ப்பொதுமறையை
தங்கள் மதத்து
குப்பிக்குள் அடைக்க
சூழ்ச்சி  செய்கின்றார்!


எப்பொருள் யார்யார்
வாய்க்கேட்பினும்
எவன் சொன்னான்
இத்தனை நாட்களாய்
சொல்லாமல் இன்று
எதற்குச்சொன்னான்
என்பதையும் இணைத்துப்
பார்ப்பீர் !
அயல் மொழியான்
குறளை விரும்புகிறேன்
என்று சொன்னால்
அவனது அடிப்படை
என்ன என ஆராய்வீர் !

பிறப்பில் குற்றம்
இருந்தால் ஒழிய
வேம்பு இனிக்காது
என்றார் பெரியார் !
மதம் மறந்து
திருக்குறள் எனில்
ஒன்றிணையும்
தமிழரைத் தன்வயப்படுத்த
தந்திரம் செய்கிறான் !
குண்டக்க மண்டக்க
குறளுக்கு உரை எழுதி
தன்னிடம் காட்டிய
தறுதலையின்
அனைத்துப் பிரதிகளையும்
பணம்  கொடுத்து வாங்கி
அத்தனையையும்
தீயிக்கு இரையிட்ட
வள்ளல்  பாண்டித்துரை போல
செய்ய வேண்டிய நேரம் இது !


'பிறப்பொக்கும் ' என்பதனை
பொறுக்க இயலாக் கூட்டம்
வர்ணங்களைக் கடவுளே
படைத்தான்
உனது சாதித்தொழிலை
நீ செய்,அதனால் நீ
வீடு பேறு அடைவாய்
எனச்சொல்லும் கூட்டம்
திருக்குறளை கையில் வைத்து
நயவஞ்ச்கமாய் காய்களை
நகர்த்துகிறது ! உணர்வீர்
உணர்த்துவீர் !

                                        ------ வா. நேரு ----------









 

Tuesday, 13 January 2015

உணர்த்தும் நாளாய்.....


தமிழருக்குத்  தைமுதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு எனத்
தமிழ்ப்பெரியோர்கள்
வரையறைத்துத் தந்ததை
எம்மினத்துப் பரம்பரைப்
பகைவர்
மதமுகமூடி அணிந்து கொண்டு
அல்ல , அல்ல
சித்திரை முதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு என்று
சொல்கின்றார் ,
அதற்கும் சிலர்
தமிழ் படித்தோர்
துணைக்கு நிற்கின்றார் !!!

சாதிகளால் பிரிந்து
வீதிகளில் சண்டையிடும்
தமிழனை 'நீ தமிழன்' என
நினைவுபடுத்த
தை முதல் நாள்
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது !

'பிறப்பொக்கும் எல்லா
உயிர்க்கும் 'என்னும்
குறள் வழியில்
ஆதியில் இல்லையடா ஜாதி !
இது தமிழர்கள் வாழ்வில்
பாதியில் வந்த அநீதி !
என்பதனை அறைந்து
செப்பும் நாளாய் தைமுதல் நாள்
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது !


பெருவிலங்குகள் மத்தியில்
உடைகள் இல்லா
சிறுவிலங்குகளாய்
மற்ற நாட்டுக் காடுகளில்
மாந்தர்கள் வாழ்ந்த நிலையில்
நாடு சமைத்து
நல் இல் அமைத்து
அகம் படைத்து புறம்படைத்து
அதற்கு இலக்கணமும் வகுத்து
வாழ்ந்த தமிழன்
இன்று வாழும் நிலைகண்டு
'ஏ, தாழ்ந்த தமிழகமே ! '
என உணர்த்தும் நாளாய்
தை முதல் நாள்
தமிழ்ப்புத்தாண்டு வருகிறது !

ஜாதி ஜாதியாய் நம்மைப்பிரித்த
குள்ள நரிக்குணமுடையார்
குறித்து வைத்த
சோதிடப்புரட்டுகளுக்குத்
துணை போகவே
அளக்கின்றார்
தமிழ்ப்புத்தாண்டு
சித்திரையென்று
செவியில் ஏற்றாதே !
செவிட்டில் அறைவதுபோல் சொல்
தைமுதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டு என்று !

தமிழர்கள் யாவருக்கும்
தமிழ்ப்புத்தாண்டு பொங்கல்
உழவர் திருநாள்
வாழ்த்துக்கள்!

 எழுதியவர் : வா.நேரு
நாள் : 01/13/2015
Nantri : Eluthu.com

Tuesday, 6 January 2015

நிகழ்வும் நினைப்பும்(29) :ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியாரு ஜாக்கிரதை

நிகழ்வும் நினைப்பும்(29) :ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியாரு ஜாக்கிரதை

எத்தனையோ செய்திகள் அந்த ஆசிரமம் பற்றி, பெற்ற மகளை அங்கு விட்டுவிட்டு எப்படி நிம்மதியாக இருந்தார்கள். 'பிகே' இந்திப்படத்தில் , போலிச்சாமியாரின் சீடராக கதாநாயகியின் அப்பா வருவார். அவரை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாக இருக்கும். சாமியாரே கதி என இருக்கும் அவர் கடைசியில் திருந்துவதாகக் காட்டுவார்கள். மெத்தப்படித்தவர்கள், மேதாவிகள் எனத் தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்வோர், அழைத்துக்கொள்வோர் பலர் இன்னும் பல்வேறு சாமியார்களிடம் தங்கள் குடும்பததுப்பிள்ளைகளை எல்லாம் பக்தி என்று விட்டிருப்போர் சிந்திக்க. சில ஆண்டுகளுக்கு முன்னாலேயே, திராவிடர் கழகத்தின் சார்பாக ஒரு இசைத்தட்டு வெளியிடப்பட்டது. ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சாமியாரு ஜாக்கிரதை .....எத்தனை சொன்னாலும் திருந்தவே மாட்டோம் என்றால் என்னதான் செய்வது. இனி நக்கீரனில் வந்த செய்தி தங்களுக்காக .   



நித்தியின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன்! மகளை இழந்த தாய் பேட்டி!


திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்தியினர். இவர்களது 24 வயது மகள் சங்கீதா. இவர், பி.சி.ஏ., படித்த பின்னர், கர்நாடக மாநிலம், பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன், துறவி பயிற்சிக்கு சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த, 28ம் தேதி, ஆசிரமத்தில் மர்மமாக இறந்தார். தனது மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாகவும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஜான்சி ராணி பெங்களுரு ராம்நகரம் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள நான், எனது மகள் சங்கீதாவையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினேன். பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் எனது மகள் துறவி பயிற்சிக்காக சேர்ந்தார். நானும் அங்கு செல்வேன். இந்தநிலையில் நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ வெளியானபோது நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அந்த மாதிரி ஒரு தவறான செய்தி கொண்ட வீடியோவை எனது மகள் தனது லேப்டாப் மற்றும் பென் டிரைவில் வைத்திருந்தார். அதனுடன் ஊருக்கு வந்தாள். ஆசிரமத்தில் தவறான செயல்கள் நடக்கிறது என்றாள். 

சங்கீதா ஊருக்கு வந்தவுடன், அம்சானந்தா மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் சங்கீதாவின் லேப்டாப் மற்றும் பென்டிரைவை வாங்கி அதில் இருந்தவற்றை அழித்தனர். எங்களை நித்தியானந்தாவிடம் அழைத்துச் சென்றனர். அங்கு நித்தியானந்தா என்னிடம், நானும் ரஞ்சிதாவும் இருந்த வீடியோவை வெளியிட்டாங்க. அந்த வீடியோ வைத்தே என்னை ஒண்ணும் பண்ண முடியல. உன் பொண்ணு லேப்டாப்ல இருக்கும் வீடியோவை வைத்து என்ன பண்ண முடியும் என்று மிரட்டினார்.

நான் என் பெண்ணை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன். முதலில் விட்டுவிடுவதாக சொன்ன நித்தியானந்தா, அதன் பிறகு என் மகளை தனிமை சிறையில் அடைத்தார். நடிகை ரஞ்சிதா என் மகளை பளார் என்று அறைந்தார். ஒன்றரை வருடமாக நான் என் மகளை பார்க்க சென்றால், தூரத்தில் நிற்க வைத்து காட்டுவார்கள். பேச விடமாட்டார்கள். 

அந்த ஆசிரமத்தில் நிறைய மர்மங்கள் உள்ளது. அங்கு நிறைய தவறுகள் நடக்கிறது. என் கண் முன்பாகவே சிலையை ஒழுங்காக அலங்காரம் செய்யவில்லை என்று ஒரு சீடரை 10 பேர் சேர்ந்து அடித்ததை பார்த்தேன். அதுமட்டுமல்லாமல் அந்த ஆசிரமத்தில் புகார் செய்பவர்கள் ஒவ்வொருவரை பற்றியும் அவர்கள் தவறான செக்ஸில் ஈடுபட்டதாக ஒரு வீடியோவை நித்தியானந்தாவே தயாரிப்பார். 

என் மகளை அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னபோது என்னை மிரட்டினார். என் மகள் தைரியமானவள். தவறுகளை தட்டிக்கேட்பவள். நான் எனது ஊரில் இருந்தபோது எனக்கு திடீரென போன் வந்தது. சங்கீதா மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறினார்கள். நான் பதறிப்போய் வந்தேன். வந்த இடத்தில் இறந்துவிட்டதாக கூறினார்கள். என் மகளின் உடலை தனியார் மருத்துவமனையில் சட்ட விரோதமாக பிரேத பரிசோதனை செய்துள்ளனர். எனது மகளின் உதடு மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்தது. எனது மகள் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் போலி வீடியோவை தயாரித்து நித்தியானந்தா இணையதளங்களில் பரப்பிவிட்டுள்ளார். 

நடந்த சம்பவம் குறித்து ராம்நகரம் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளோம்.  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திங்கள்கிழமை கர்நாடக உள்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்பு கேட்டுள்ளோம். 

நித்தியானந்தாவின் தவறான நடவடிக்கைகளை வெளி உலகத்துக்கு காட்டாமல் ஓய மாட்டேன். நித்தியானந்தா தவறான செய்கையில் ஈடுபடுகிறார் என்பதற்கான நிறைய ஆதாங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் இப்போது சொன்னால் ஆசிரமத்தில் தங்கியிருக்கக் கூடிய எனக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு வரும். அதனால் இப்போது அதை நான் சொல்லவில்லை. விரைவில் இதுபற்றிய உண்மைகளை வெளியிடுவேன் என்றார். 

செய்தியாளர்களின் சந்திப்பின்போது ஜான்சிராணியின் வழக்கறிஞர், கர்நாடகா வாட்டாள் நாகராஜ் கட்சி பிரமுகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உடனிருந்தனர்.
Nantri Nakkeeran

Saturday, 3 January 2015

தோழர் கந்தசாமியும் தற்காலிக பணி நீக்கமும் - (சிறுகதை) -வா. நேரு

                               
அப்பொழுதுதான் ஆர்ப்பாட்டம் முடிந்திருந்தது. உற்சாகமாக " ஜிந்தாபாத், ஜிந்தாபாத் ,இன்குலாப் ஜிந்தாபாத்" என்று ஆரம்பித்த முழக்கம் அடங்க 15 நிமிடங்கள் ஆனது. தொழிற்சங்கம்,தொழிற்சங்கக் கோரிக்கைகள், கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டம், தர்ணா, ஊர்வலம் போன்றவை மாறனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்தன. வேலைக்கு வந்து 7, 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும் இன்றைக்குத்தான் வேலைக்கு வந்தது போல் இருக்கிறது . அலுவலகத்திற்குள் வந்து அலுவலக வேலையைக் கற்றுக்கொண்ட அளவிற்கு மாறன் தொழிற்சங்கங்களைப்பற்றியும் அறிந்துகொண்டான். தொழிற்சங்கத்திற்குள் வந்து வேலை செய்ய ஆரம்பித்து இன்று அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தின் கிளைச்செயலாளராகவும் ஆகியிருந்தான்.மற்றவர்களுக்காக நேரத்தைச் செலவழிப்பது, பணத்தை செலவழிப்பது, பன்முகம் கொண்ட மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்வது எனத் தொழிற்சங்கம் இவனுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. தொழிற்சங்கத்தில் ஈடுபடுவதற்கே இந்த 'ஜிந்தாபாத், ஜிந்தாபாத், இன்குலாப் ஜிந்தாபாத்' முழக்கங்கள்தான் காரணம். " அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடாமல் அநீதி களைய முடியாது; பாடுபடும் தொழிலாளிக்கு சாதி இல்லை, மதம் இல்லை ; கொடி உண்டு ,கொள்கை உண்டு ;கோரிக்கைகள் பலவும் உண்டு; கோரிக்கையை வென்றெடுக்கத் தெம்பு உண்டு, திராணி உண்டு ; வீரவணக்கம், வீரவணக்கம்; குண்டடி பட்டுச் சாய்ந்தபோதும் ; குருதி மண்ணில் கொட்டியபோதும் ; கொள்கை முழக்கம் செய்திட்ட ; எங்கள் அருமைத் தோழர்களே; எங்கள் அருமைத்தோழியர்களே ; வீரவணக்கம், வீரவணக்கம் ; உங்களுக்கு எங்கள் வீரவணக்கம் " என்று முழக்கங்களைக் கேட்கிறபோது தன்னையறியாமலேயே ஒரு வேக உணர்வு உள்ளுக்குள் ஊடுருவதை மாறன் உணர்ந்திருக்கிறான்.


கூட்டத்தின் சிறப்பு உரையை மாவட்டச்செயலாளர் கந்தசாமி பேசுவார் என அறிவிக்கப்பட்டது. மெல்ல தென்றல் போல பேச்சை ஆரம்பித்தார் கந்தசாமி. இன்னும் கொஞ்ச நேரத்தில் தென்றல் புயலாக மாறும்.  கந்தசாமி, மாறனுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவும் , ஆலோசகராகவும் அந்த அலுவலகத்தில் இருந்தார். கந்தசாமியைப் பார்த்தவுடன் யாருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்ற உணர்வு வரும். நல்ல பருத்த உடல், நெடிய உருவம்,லேசாக முன் தலையில் வழுக்கை விழுந்த உருண்டை முகம்,  யாரையும் எளிதாக அளந்துவிடக்கூடிய கூரிய கண்கள், எவருக்கும் பயப்படாத நெஞ்சம்,உடன் வேலை பார்க்கும் தோழர்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் உதவ நீளும் கரங்கள் என்று கந்தசாமி அந்த அலுவலகத்தில் வலம் வந்தார். அந்த அலுவலகத்தில் பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு அவரைப் பார்த்தால் பயம்தான், யார் என்றாலும் நேருக்கு நேர் பேசிவிடுவார். நம் மடியில் கனம் இல்லை, எவனுக்கும் எதற்கும் பயப்படவேண்டும் என்பார் மாறனிடம். ஒரு தொழிற்சங்கவாதிக்கு முதல் தகுதி சுய நலம் இல்லாமையும் , பயப்படாமையும் என்பார். இரண்டுமே அவரிடம் இருந்ததால் தொழிலாளர்களின் ஈர்ப்புசக்தியாக அவர் இருந்தார்.அவரது பேச்சு எப்போதுமே துப்பாக்கியில் இருந்துவரும் குண்டு போலத்தான் இருக்கும். வெற்றுப்பேச்சே இருக்காது. சரியான இலக்கை நோக்கிப் பாயும் சக்தி வாய்ந்த ஆயுதமாக அவரின் பேச்சு அமைவது , போராட்டக்காலங்களில் எல்லாம் மிகப்பெரிய வாய்ப்பாக தொழிற்சங்கத்திற்கு அமையும். கூட்டம் முடிந்ததும் அன்றைக்கு கோட்டப்பொறியாளருடன் பேட்டி இருந்தது. கிளைச்செயலாளர் என்ற முறையில் சில பிரச்சனைகளைப் பற்றிப்பேசித்தீர்ப்பதற்காக கோட்டப்பொறியாளர் பேட்டிக்கு மாறன் மனு கொடுத்திருந்தான். மாவட்டச்செயலாளர் கந்தசாமியும் மாறன் வேலைபார்க்கும் கிளையிலேயே இருந்தது வாய்ப்பாக இருந்தது மாற்னுக்கு. எந்தப்பேட்டி என்றாலும் மாவட்டச்செயலாளரோடு போவது, பேசித்தீர்ப்பது ,பிரச்சனை தீரவில்லையென்றால் மாவட்டச்சங்கத்திற்கு அந்தப்பிரச்சனையை கொண்டு செல்வது என்ற வகையில் தொழிற்சங்க வேலையைப்பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.கந்தசாமி  சிறப்புரை முடிந்தவுடன் மீண்டும் கோரிக்கைகளுக்கான ஒலி முழக்கம் எழுப்பப்பட்டது.

கோட்டப்பொறியாளரின் அறைக்கு முன்னால் மாறனும் கந்தசாமியும் நின்றனர். இருவரும் வந்திருப்பதை துண்டுச்சீட்டில் எழுதி வெளியே இருந்த உதவியாளரிடம் மாறன் கொடுத்திருந்தான். அழைப்பு வரும்வரை வெளியில் நின்று கொண்டிருந்தனர்.கிளைச்செயலாளராக மாறன் பதவியேற்றவுடனேயே கந்தசாமி மாறனுக்கு வாழ்த்துக்களைச்சொல்லிவிட்டு, பாக்கெட் நோட் வைத்திருக்கிறீர்களா என்றார். மாறன் "இல்லை" என்றான். " முதலில் ஒரு பாக்கெட் நோட் வாங்கிக்கொள்ளுங்கள். நமது கிளையில் மட்டும் 120 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வகை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையான வேலையை, கோரிக்கையை கிளைச்செயலாளரிடம் சொல்லுவார்கள். அனைத்தையும் தினந்தோறும் முதலில் நோட்டில் குறித்துவையுங்கள். சொல்லும் தோழருக்கோ, தோழியருக்கோ தாங்கள் சொல்வது கேட்கப்படுகிறது, குறிக்கப்படுகிறது , பிரச்சனை தீர வழி ஏற்படும் என்னும் நம்பிக்கை முதலில் ஏற்படவேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். உறுப்பினர்களின் வீடுகளில் நடைபெறும் நல்லது,கெட்டதுகளில் முதலில் நில்லுங்கள். கிளை மட்டத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரவில்லையென்றால், மாவட்டத்திற்கு பிரச்சனையைக் கொடுங்கள். மாவட்ட அளவிலும் பிரச்சனை தீரவில்லையென்றால் மாநில அளவில் அல்லது அகில இந்திய அளவில் என்று பிரச்சனையின் தன்மையால் மேலே, மேலே கொண்டு சென்று பிரச்சனையை தீர்க்க நாம் தூண்டிக்கொண்டே இருக்கவேண்டும். பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் பல பிரச்சனைகள் வரும்.மனதையும் கையையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும், எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் சந்திக்கலாம்.உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் வருவது எங்களைப்போன்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது தம்பி " என்றார்.

கோட்டப்பொறியாளரின் அறைக்குள் செல்லுமாறு அவரின் உதவியாள்ர் கூறினார். மாறனையும், கந்தசாமியையும் பார்த்த கோட்டப்பொறியாளர் ஆழ்வார் 'வாருங்கள் , வாருங்கள் ,உட்காருங்கள்' என்றார். " வணக்கம் , எங்கள் முன்னால்  கிளைசெயலாளரே "என்று சொல்லிக்கொண்டே கந்தசாமி  உட்கார்ந்தார். 'உட்காருங்கள் ,மாறன் ' என்றார். மாறனும் உட்கார்ந்தான். அந்த நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை பதவிஉயர்வு வாய்ப்புக்கள் நிறைய இருந்தன. சாதாரண குழிதோண்டுபவராக உள்ளே நுழைந்து, துணைப்பொது  மேலாளர் என உயர்பதவிவரை பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள், பணியாற்றுபவர்கள் இருந்தனர். அப்படி சாதாரண நிலையில் இருந்து இன்று கோட்டப்பொறியாளராக இருப்பவர்தான் ஆழ்வார். அவரைப்பற்றிக் கந்தசாமி ஏற்கனவே மாறனிடம் கூறியிருந்தார். என்னதான் நம்ம ஆட்களாக இருந்தாலும், அதிகாரப் பதவி என்று போய்விட்டால் அதற்கேற்றாற்போல் குணம் மாறும். நாம்தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பார். என்னோடு சேர்ந்து கோஷம் போட்டவர்தான் , கொடி பிடித்தவர்தான் , சில நேரங்களில் தொழிற்சங்கத்தைப்பற்றி  ஒன்றுமே தெரியாத அதிகாரிகளிடம் பிரச்சனையைப் பேசித் தீர்த்துவிடலாம் ,நம்மகிட்ட இருந்து போறவங்ககிட்ட பிரச்சனையைத் தீர்ப்பதுதான் கடினமாக இருக்கும் என்பார்.

பிரச்சனைகளைப் பற்றி கோட்டப்பொறியாளரிடம் பேச ஆரம்பித்தனர். ஏற்கனவே பட்டியலை மாறன் கொடுத்திருந்ததால் ஒவ்வொன்றாக பேச வாய்ப்பாக இருந்தது. சில பிரச்சனைகள் எளிதாக தீர்க்கப்பட்டன. சில என்னால் முடியாது, பொது மேலாளரிடம் பேசித்தான் தீர்க்கவேண்டும் என்றார் கோட்டப்பொறியாளர். ஒரு 30 நிமிடங்களில் பேட்டி முடிந்தது. பேட்டி முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் , கந்தசாமி ' ஒரு முக்கியமான் விசயம் பற்றி உங்களிடம் பேசவேண்டும், பேட்டியில் நாங்கள் அதனை எழுதிக்கொடுக்கவில்லை ' என்றார். கோட்டப்பொறியாளர் ' பரவாயில்லை , சொல்லுங்கள் ' என்றார். " தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் அழகர்சாமியின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் " என்று கந்தசாமி சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே " அவனுக்குஎல்லாம் வக்காலத்து வாங்கி பேச வருகிறீர்களே , உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா ? " என்றார் கோட்டப்பொறியாளர் ஆழ்வார். உடன் இருந்த மாறனுக்கு தூக்கி வாரிப்போட்டது. கந்தசாமியின் இயல்பு தெரியும் மாறனுக்கு. ஏதோவில்லங்கம் ஆகப்போகிறது , கோபமாக கநதசாமி வார்த்தைகளைக் கொட்டப்போகிறார் என்று நினைத்தான். ஆனால் இயல்புக்கு மாறாக , ' தொழிற்சங்கப்பணிக்கு, பொது வாழ்க்கைக்கு என்று வந்து விட்டால் வெட்கத்தை எல்லாம் பார்க்க முடியுமா மிஸ்டர் ஆழ்வார் ? எங்களுக்கு வெட்கம் இல்லைதான் , அழகர்சாமிக்கு ஏதாவது வழி ஏற்படவேண்டும் அல்லவா, அவன் தற்காலிக நீக்கம் ஆகி 6 மாதங்கள் ஆகிவிட்டது" என்றார் கந்தசாமி.

ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு அப்படியே மனக்கண் முன்னால் ஓடியது மாறனுக்கு. மாறனும் அன்றைக்கு வேலையில்தான் இருந்தான். அழகர்சாமி அன்றைக்கு வேலைக்கு அரைமணி நேரம் தாமதமாக வந்தான். தாமதமாகும் என்று ஏற்கனவே செக்சன் மேலாளரிடம் சொல்லவும் இல்லை. எங்கோ திருமணம் என்று போய்விட்டு, திருமண பார்ட்டி என்று சொல்லி மதுவையும் அருந்திவிட்டு அரைமணி நேரம் தாமதமாக வந்த அழகர்சாமியை , செக்சன் மேலாளர் சுப்பையா ஏன் தாமதம், ஏன் போனில் சொல்லவும் இல்லை என்று கேட்க, சாரி சார் என்றுதான் அழகர்சாமி ஆரம்பித்தான். ஏதோ சுப்பையா சொல்ல, தள்ளி இருந்த மாறன் அந்த நிகழ்வு இடத்திற்கு வருவதற்கு முன்னால் கைகலப்பு ஆகிவிட்டது. சுப்பையாவும், அழகர்சாமியும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டார்கள். பின்பு மாறனும், மற்றவர்களும் அவர்களை விலக்கிவிட, அரசாங்க சட்டத்தின்படி சண்டையிட்ட இருவரும் உடனே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். சூபர்வைசர் சுப்பையா ,ஒரு வாரத்தில் மீண்டும்பணியில் சேர அனுமதிக்கப்பட்டார். இப்பொழுது வேலைபார்த்துக்கொண்டிருக்கின்றார்.அழகர்சாமி சஸ்பண்டு ஆகி 6 மாதம் ஆகின்றது.அவனது நடவடிக்கைகளால் வெறுப்புற்ற எவரும் மேலதிகாரிகளிடம் பேசவில்லை. மாறனும்கூட இரண்டுபேரும் அவனது கிளைத்தொழிற்சங்கத்தில் உறுப்பினர் என்றாலும் அழகர்சாமி குறித்துயோசிக்கவில்லை. நிர்வாகமாகப் பார்த்து  அவனை வேலைக்கு எடுத்தால் எடுக்கட்டும், இல்லையேல் கிடக்கட்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தான். இப்பொழுது கந்தசாமி அவனைப்பற்றித்தான் கோட்டப்பொறியாளரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

கந்தசாமி பேசிக்கொண்டிருந்தார் " சார், நான் அழகர்சாமி செய்தது சரியென்று சொல்லவில்லை. அவனது தவறுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. ஏதோ தப்பு நடந்து விட்டது. திருந்திவிட்டேன் என்று சொல்கின்றான். அவன் ஒருவன் தான் அவர்கள் வீட்டில்  வேலை பார்ப்பவன். அம்மாவும், அப்பாவும் வயதானவர்கள். அப்பாவுக்கு ஆஸ்தமா பிரச்சனை. மாதம் மாதம் இவன்தான் மருந்து வாங்கிக்கொடுக்கவேண்டும். இரண்டு தங்கைகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள். இவன்தான் கல்லூரிக்குப் பணம் கட்டவேண்டும். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்றாலும் அவனை நம்பி 4 பேர் இருக்கின்றார்கள். அவனது சம்பளம்தான் அவர்களுக்குச்சோறும் மருந்தும் கொடுக்கிறது. அவனை மட்டும் பார்க்காதீர்கள் சார். அவனது குடும்பத்தைப்பாருங்கள். அவனது பரம்பரையிலேயே முதல் முதல் அரசாங்க வேலைக்கு வந்தவன். பக்குவம் இல்லை சார்.அவன் கெட்டவன் இல்லை, சமூக விரோதி இல்லை. சரிப்படுத்துவோம் . சரிப்படுத்துவதற்கு நான் பொறுப்பு எடுத்துக்கிறேன். கொஞ்சம் கருணை காட்டுங்கள் சார் "  தன் நிலையிலிருந்து மிகவும் இறங்கி வந்து கோட்டப்பொறியாளரிடம் கெஞ்சுவது போலக் கேட்டுக்கொண்டிருந்தார் கந்தசாமி. மாறனுக்குமிகவும் வருத்தமாக இருந்தது. இந்த அழகர்சாமிப்பயல் செய்த வேலை, அவனுக்காக சிங்கம் போய் மன்னிப்புக்கேட்பதுபோல கந்தசாமி இந்தக் கோட்டப்பொறியாளரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாரே என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஒரு அரைமணி நேரம் நடந்த உரையாடலுக்குப்பின் கோட்டப்பொறியாளரை சம்மதிக்க வைத்தார் கந்தசாமி. மிகவும் வித்தியாசமான அனுபவமாக மாறனுக்கு இந்த நேர்முகம் அமைந்தது. வெளியில் வந்த கந்தசாமி, "மாறன், அழகர்சாமியை போனில் பேசி தொழிற்சங்க அலுவலகத்திற்கு வரச்சொல்லுங்கள் " என்றார். தொலைபேசியில் அழைத்து அழகர்சாமியிடம் சொன்னான். அரைமணி நேரத்தில் அரக்க , பறக்க வந்து சேர்ந்தான் அழகர்சாமி. அழகர்சாமி ஆள் பாதியாக இளைத்துப்போயிருந்தான். அழகர்சாமியைப் பார்த்ததும் " உட்காருங்கள் தோழர் " என்றார் கந்தசாமி. அழகர்சாமி உட்கார, அவருக்கு அடுத்து மாறனும் உட்கார்ந்தான்.
கடுமையாக ஆரம்பித்தார் கந்தசாமி " அரசாங்க வேலைன்னா என்னான்னு நினைச்சுகிட்டேங்க, உங்க இஷ்டத்திற்கு தாமதமாக வருவீங்க, கேட்ட சூபர்வைசரோடு வாக்குவாதம் பண்ணி , சண்டை போடுவீங்க, உங்களைக் காப்பாத்த நாங்க, தொழிற்சங்கம் போயி பேசணுமா,நீங்க செஞ்ச தப்புக்கு உங்களை வேலையை விட்டே நிரந்தரமாக தூக்கலாம், எங்களாளையும் ஒன்றும் பண்ண முடியாது , நீங்க பண்ணின தப்பு அந்த அளவுக்கு கடுமையானது, தெரியுமா ? " என்று நிப்பாட்டினார்.
மெளனமாக நின்று கொண்டிருந்த அழகர்சாமி தெரியும் என்று தலையாட்டினான். " என்ன படிச்சிருக்கே, பி.எஸ்.ஸி .முடிச்சிட்டு ,பரீட்சை எழுதி பாஸ் பண்ணி , இங்கே வேலைக்கு வந்திருக்க, எததனை பேரு பி.இ.., எம்.இ.ந்னு முடிச்சிட்டு 5000 ரூபாய்க்கும், பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கும் அவதிப்பட்டுக்கிட்டு இருக்காங்கன்னு , தெரியுமா ? " என்றார்.
"கிடைத்த வேலையை ஒழுங்காகக் காப்பாத்த தெரியலே, திருமணத்திற்கு போனேன்னு குடிச்சிட்டு வந்திருக்க, அப்படியே ஒன்னை போலீசில் அதிகாரி கிட்ட ஒப்படைச்சு, ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் குடிச்சிருக்கே என்பதை உறுதிப்படுத்தி கொடுத்திருந்தா, உன் வேலையே  போயிருக்கும், குடிச்சிட்டு வந்து தகராறு பண்ணினேன்னு உன்னையை ஜெயிலுக்குள்ளேயும் போட்டிருக்க இயலும் , முதலில் மனுசனா இருக்க பழகு , மத்தது எல்லாம் தானா வரும் " என்றார்.

" நாங்க அதிகாரிகிட்டே பேசி மறுபடியும் உன்னையை வேலைக்கு சேர்ப்பதற்கு பேசி வந்திருக்கின்றோம். பழையபடி ஏதாவது இப்படி தப்பு பண்ணினா நாங்க வந்து நிப்போம், யூனியன் வந்து காப்பாத்துமுன்னு நினைக்காதே, நாங்க மதத்தோடு குருமார்கள் இல்லை. எத்தனை தடவை தப்பு பண்ணுக்கிட்ட வந்தாலும் காசை உண்டியல்ல போடு, பாவ மன்னிப்பு உனக்கு கிடைக்கும்ன்னு சொல்றதுக்கு. உனக்காக இல்லை, உங்க வயசான அப்பா, அம்மா, படிக்கிற உன் தங்கச்சிங்க  இவங்களை மனசுலே வச்சு பேசி உன்னைக் காப்பாத்தி விட்டிருக்கிறோம் நானும் மாறனும். இதேபோல் இனி ஒருமுறை நடந்தா, நிர்வாகம்  உன்னையை டிஸ்மிஸ் பண்ணும், அப்படி டிஸ்மிஸ் பண்ணினால் நாங்க யாரும் ஏன்னு கூடக் கேட்க மாட்டோம் " என்று சொல்லச்சொல்ல , சிலையாக நின்ற அழகர்சாமி" இல்லை, தோழரே , இனி நான் தப்பு செய்ய மாட்டேன், ஆறு மாதத்தில் பட்டு அழுந்திட்டேன். என்னை மன்னுச்சிடுங்க " என்று காலில் விழ வந்தபோது சட்டென்று அழகர்சாமியை பிடித்து நிறுத்திய கந்தசாமி, "இதெல்லாம் வேண்டாம், ஒழுங்காக வேலையைப் பார். நாமெல்லாம் இந்த மாதிரி அலுவலகத்திற்குள்ளேயே நுழைய முடியாத நிலைமை இருந்தது.கூடப்போனா செக்யூரிட்டி வேலைக்கு நம்மளை எடுத்தான் .  இன்றைக்கு எவ்வளவோ மாறியிருக்கு. நமக்கு கிடைக்கிற இந்த வாய்ப்பைப்பார்த்து, நமது பிள்ளைகள், நம்து ஒடுக்கப்பட்ட வகுப்பைச்சார்ந்த பிள்ளைகள் மேலும் ,மேலும் உள்ளே வருவதற்கு என்ன வழி என்று பார்க்கவேண்டும். வந்த ஒருத்தன் , இரண்டுபேரும் வெளியே தள்ளப்படுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தக்கூடாது " என்று கந்தசாமி சொல்லச்சொல்ல அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.

                            தப்பு பண்ணிய குழந்தையை நன்றாக அடித்து கண்டித்துவிட்டு , பின்பு உணவைக் கொடுத்து சாப்பிடச்சொல்வது போல , "சரி வாங்க அழகர்சாமி, மாறன் , உள்ளேயிருக்கும் சுப்பயாவையும் கூப்பிடுங்க, அவர்கிட்டே அழகர்சாமி மன்னிப்பு கேட்கட்டும், பின்பு மொத்தமாக டீக்குடிக்கப்போகலாம்"  என்று சுப்பையாவை வெளியே வரவழைத்தார். சுப்பையாவிடம் " தோழரே, இனி அழகர்சாமி ,மரியாதையாக உங்களிடம் நடந்து கொள்வார். அதற்கு நான் பொறுப்பு, உங்களிடம் மன்னிப்பு கேட்பார் அழகர்சாமி " என்று சொல்ல , சுப்பையாவின் காலிலும் விழப்போன அழகர்சாமியைத் தடுத்து நிறுத்தினார் சுப்பையா. " என் மகன் வய்சு தம்பி நீங்க, டக்கென்னு உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடாதீங்க, சிந்தின வார்த்தைகளை மறுபடி அள்ள முடியாது. போங்க , போங்க , போய் ஒழுங்கா வேலையைப் பார்த்து வாழ்க்கையில் உருப்படற வேலையைப் பாருங்க "  என்றார். கொஞ்ச நேரத்தில் இடமே கல, கலப்பாக மாறியது. அனைவரையும் அழைத்துக்கொண்டு கந்தசாமி முன் செல்ல மாறனும் மற்றவர்களும் டீக்கடைக்குச்சென்று கொண்டிருந்னர். .


Friday, 2 January 2015

நிகழ்வும் நினைப்பும் (28) மூடத்தனத்தின் முடை நாற்றம் : போலி பெண் சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற சகோதரர்கள்

நிகழ்வும் நினைப்பும் (28) மூடத்தனத்தின் முடை நாற்றம் : 

                    படித்தவர்கள் மத்தியில் பரவிக்கிடக்கும் மூடத்தனத்தையே ஒழிக்க முடியவில்லை; படிக்காத -அறியாமையில் கிடக்கும் இந்திய மனிதர்களை எப்படி மாற்றுவது என்று யாருக்கும் தெரியவில்லை. பில்லி, சூனியம் மந்திரம் செய்ய என்னை நாடுங்கள், எனது செல்போனில் கூப்பிடுங்கள் என்று அரசு பேருந்தில் விளம்பரம் செய்கின்றார்கள். கடவுள் இல்லை, கடவுள் இல்லை , கடவுள் இல்லவே இல்லை என நாம் விளம்பரம் செய்கிறோம் என்று எழுதிக்கொடுத்தால் பேருந்தில் போடுவார்களா என்ன ? சாமியார்கள், மந்திரவாதிகள் என்று தங்களைத்தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் மூடத்தனமான பேச்சுக்களைக் கேட்டு ,தங்கள் மூளையைக் கழட்டிவைத்து அஞ்ஞானத்தில் ஆழும் மனிதர்களை என்ன செய்வது ? நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு செய்தி தமிழ் இந்து நாளிதழில் வந்துள்ளது. படித்துப்பாருங்கள். சோதிடன் சொன்னதைக் கேட்டு பெற்ற பிள்ளையைக் கொல்பவர்கள், சாமியார் சொன்னாள்.  என்று தாயைக் கொல்பவர்கள் என்னும் செய்திகளோடுதான் சொர்க்கவாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசி என்னும் செய்திகளும் வருகின்றன. இரண்டுக்கும் ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லை; பொய்யை நம்பி மூடத்தனத்தில் மூழ்கும் கொடுமைதான் .இது ஆரம்பம், அது உச்சம். இனி செய்தி :

போலி பெண் சாமியார் பேச்சைக் கேட்டு பெற்ற தாயைக் கொடூரமாகக் கொன்ற சகோதரர்கள்: மகாராஷ்டிராவில் பயங்கரம்

"உங்கள் பணக்கஷ்டம் தீர வேண்டுமென்றால் பலிகொடுப்பது அவசியம் என்று பெண் மந்திரவாதி கூறியதால் பெற்ற தாயையும், இரு சகோதரர்கள் கொன்றனர்."

அக்டோபர் 30-31 தேதிகளுக்கு இடையிலான நள்ளிரவில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ஆனால், பலியிடப்பட்ட இரண்டு பேர்களின் உடல்கள் திரம்பகேஸ்வரில் உள்ள தேகிஹார்ஷ் என்ற கிராமத்தில் கிடைத்ததையடுத்து துப்பு துலக்கப்பட்டு இந்தச் செய்தி இரண்டு சகோதரர்களை கைது செய்த பிறகே வெளியாகியுள்ளது.

கொலை செய்யப்பட்ட தாயாரின் பெயர் புதாபய் டோரி (65), இவரது உறவினர் காஷிபாய் வீர் (வயது 80).

இந்த பயங்கரக் கொலைகள் தொடர்பாக போலீஸார் தாயைக் கொலை செய்த 2 சகோதரர்கள் உட்பட 10 பேரை கைது செய்து, பல்வேறு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இது பற்றி போலீஸ் தரப்பு கூறுவதாவது: காசிநாத், கோவிந்த் டோரி என்கிற 2 சகோதரர்கள் பொருளாதார அளவில் கஷ்டமான காலத்தில் இருந்துள்ளனர். இதனையடுத்து யார் யார் பேச்சையோ கேட்டு பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கே என்பவரைச் சென்று சந்தித்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் விவரம் உட்பட அனைத்தையும் அந்த பெண் மந்திரவாதியிடம் தெரிவித்துள்ளனர்.

அந்த மந்திரவாதி உடனே, சகோதரர்களின் தாயார் புதாபாய் டோரி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடையே தீயசக்திகள் உள்ளன. அத்தீய சக்திகளை ஒழித்தால் மட்டுமே உங்கள் கஷ்டம் நீங்கும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சகோதரர்கள் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.

“பெண் மந்திரவாதி பச்சிபாய் காட்கேயின் அறிவுரையின் படி சகோதரர்கள் தன் தாயார் புதாபாய் டோரியையும் அவரது சகோதரி ராஹிபாய் பிங்ளி என்பவரையும் அழைத்து வந்தனர். 80 வயது உறவினர் காஷிபாய் வீர் என்பவரும் உடனிருந்துள்ளார். பூஜை செய்வதான பாவனையுடன் தொடங்கியது பரிகாரம். 

திடீரென அந்தப் பெண் மந்திரவாதி சகோதரர்களின் தாயார் புதாபாயையும், 80 வயது காஷிபாய் மற்றும் ராஹிபாய் பிங்ளி ஆகியோரை தாறுமாறாக அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதில் 65 வயது தாயார் புதாபாய் மற்றும் 80 வயது காஷிபாயும் கொலை செய்யப்பட, ரிஷிபாய் பிங்கிள் எப்படியோ அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்”என்று நாசிக் ஊரகக் காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் மோஹித் கூறினார்.

கொலை செய்ததோடு புதாபாயின் கண்களையும் எடுத்துள்ளார் பெண் மந்திரவாதி. நவம்பர் 1ஆம் தேதி தாயார் மற்றும் காஷிபாய் உடல்களை சகோதரர்கள் கிராமத்தில் இருந்த வயல் ஒன்றில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். ....

ந்ன்றி : தி இந்து -தமிழ் - 31.12.2014 

Thursday, 1 January 2015

உலகத்தில் விடியலுக்கான வெளிச்சங்கள்.....

ஆங்கிலப் புத்தாண்டு
பிறந்திருக்கிறது !
புதிய வருட வரவு
எப்போதும் நம் வாழ்வில்
தொலைந்து போன
ஒரு வயதை
நினைவுபடுத்துகிறது !

இருட்டுக்களால் தொலைந்த
வருடங்களைவிட
வெளிச்சங்களாய் வர
இருக்கும் வருடங்கள்
உற்சாகம் அளிக்கிறது !

கடவுளை மறுப்பவர்கள்
எண்ணிக்கை உலகெங்கும்
ஆண்டுதோறும்
உயர்ந்து கொண்டேயிருக்கிறது !
உலகத்தில்
விடியலுக்கான வெளிச்சங்கள்
தெரிகின்றன !

மத நஞ்சை தங்கள்
கழுத்துக்களில்
தொங்கவிட்டிருந்தவர்கள்
தாங்களாகவே அறுத்து
எறிய
அறிவியல் வழிவகுத்திருக்கிறது

பச்சிளங்குழ்ந்தைகள்
படிக்கும் வேளையில்
குண்டுகள் துளைத்ததும்
குருதிகள் கொட்டிட
குழ்ந்தைகள் துடித்ததும்
அவனவன் கடவுளை
அவனவன் காப்பாற்றுகிறேன்
என ஆயுதங்களைத் தூக்கலும்
அட்டூழியம் செய்தலும்
மனச்சாட்சியுள்ள
மனிதர்களை உலுக்கியிருக்கின்றன

எல்லாம் வல்ல கடவுள்
இவ்வளவு கையாலாகாதவனா ?
எனும் கேள்வியை
எல்லா மதத்தில் பிறந்த
இளைஞர்களும்
தங்கள் மதத்து குருமார்களிடம்
இயல்பாகக் கேட்கிறார்கள் !


உலகப்பெருவெடிப்பால்
உயிர்கள் உண்டான விதம்
தெள்ளத்தெளிவாய்
விஞ்ஞானிகளால் விளக்கப்பட
இறைவன் படைத்ததாய்
பசப்பியவர்கள்
ஏதேதோ சொல்லி மழுப்புகிறார்கள் !


மத இருள் மேகங்கள்
மையம் கொண்டிருந்த
உலகில்
உண்மை வெண்மேகங்கள்
உலவத் தொடங்கியுள்ளன !
மனித நேயம் என்னும்
ம்ழை பொழிய வழிவகுக்கும்
வெண்மேகங்களை வரவேற்போம் !
உற்சாகமாய் புத்தாண்டை
 வரவேற்போம் ! வரவேற்போம் !

                                                                  -வா. நேரு - 01.01.2015