Thursday, 18 November 2021

தீவிர சிகிச்சைப் பிரிவு.....திறனாய்வு.....எழுத்தாளர் வாசுகி தேவராஜ்

 தீவிர சிகிச்சைப் பிரிவு - வா.நேரு

*******************************************
சமூகத்தின் இன்றியமையாத ஒரு அங்கமான மருத்துவமனையில் நிகழும் சம்பவம் தான் கதை.
"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு" இப்படியாக கதை களமாட ஆரம்பிக்கும் ஆசிரியர் கதையின் சூழலையும் காட்சியையும் அழகாய் அடையாளம் காட்டிவிட்டு நிற்கிறார்.
மருத்துவமனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் எத்தனை கலை நயத்துடன் கட்டப்பட்டிருந்தாலும் அதை ரசிக்கவோ ஆராதிக்கவோ யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அல்லது மனம் அதில் ஒன்றுவதில்லை. அதிலும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களின் நிலை பரிதாபகரமானது.
சில பல லட்சங்களை கொடுத்து அம்மாவை காப்பாற்ற துடிக்கும் முத்துவோடு இன்னும் சில நோயாளிகளின் உறவினர்கள்...
பாம்பு கடித்த பையனை தூக்கி வந்தவர்கள், விபத்தில் சிக்கிய மகனை கொண்டு வந்தவர், காய்ச்சல் கண்ட கணவரை அழைத்து வந்த குடும்பம் என பலர்....
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டவர்களை பிணமாக எடுத்துச் செல்லும் சூழல்...
இவையெல்லாம் முத்துவுக்கு பழக்கப்படாதவை. ஒவ்வொரு நிகழ்வும் முத்துவை பெரிதும் பாதிக்க, மனிதர்களின் ஆற்றாமை துயரங்களை மிகச் சாதரணமாக கடக்கும் மருத்துவமனை ஊழியர்கள் புதிராக தோன்றுகிறார்கள்.
அவர்களின் இறுகிய மனப்போக்கை விலைமகளுடன் ஒப்பிட்டு காட்டுவது கொஞ்சம் நெருடல் தான்.
(மருத்துவமனை ஊழியர்கள் மனப்போக்கு பழக்கத்தால் - யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக்கொள்வதால் வரும் உணர்வு. விலைமகள் வாழ்வை வெறுத்து விரக்தியில் வரும் உணர்வு. இரண்டையும் ஒப்பீடு செய்வது சரியல்ல என்பது என் கருத்து)
மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிக்காக இரக்கப்பட்டு கலங்க ஆரம்பித்தால் மற்ற நோயாளிகளின் நிலை என்னவாகும் என்பதையும் சொல்லியிருக்கலாம்.
காய்ச்சல் கண்ட தந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கும் சிறுமி கடவுள் படத்தை வைத்து பிரார்த்தனை செய்தபடி இருக்கிறாள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்களே அது போல.
"இனிவரும் உலகம்" புத்தகத்தில் பெரியாரின் சொற்களை "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும்" எடுத்தாண்ட விதம் அழகு.
(பெரியாரின் புத்தகத்தை அடுத்த தலைமுறையை தேட வைக்கும் இடம்)
மருந்து வாங்குமிடத்தில் தாமதமாவது, பொறுப்பற்று நடந்து கொள்வது கண்டிக்கபட வேண்டிய ஒன்று தான்!
மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஆபத்து நேர்கையில் தத்தளித்து போகும் மனம் தன்னையும் அறியாமல் கடவுளை நாடுவதும் பிரார்த்தனை பலிக்காவிட்டால் உடைந்து போய் கடவுளை திட்டி தீர்ப்பதும் சாமானியர்களின் வாழ்வில் நிகழும் யதார்த்தம் என்பதை செல்வி மூலம் அழுத்தமாக சொல்கிறார் ஆசிரியர்.
வாழ்த்துகள் சார்
நேசமுடன்
வாசுகி தேவராஜ்

No comments:

Post a Comment