Friday, 19 November 2021

திறனாய்வு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எழுத்தாளர் அர்ஷா மனோகரன் அவர்களின் திறனாய்வு....தீவிர சிகிச்சைப் பிரிவு

 சிறுகதை

தீவிர சிகிச்சைப் பிரிவு
எழுத்தாளர் : முனைவர் வா. நேரு
"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் நீங்கள்
எங்களுக்குக் கொடுக்கும் பரிசு"
என்ற மருத்துவமனை வாசகத்தோடு ஆரம்பிக்கிறது தீவிர சிகிச்சைப் பிரிவு.
எழுத்தாளர் வாசகனின்
மதநம்பிக்கைகளையும் நடைமுறை சிக்கல்களையும் நாசுக்காய் சுட்டிக் காட்டி வாசிப்பின் முடிவில் நம்பிக்கை சார்ந்த உணர்ச்சிகள் அடிப்படையில் கட்டுண்டு கிடக்கின்ற மூளைக்குள் இருக்கின்ற கற்பனை கடவுளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்து சமூகத்தின் குறைகளை வாசகனுக்கு சுட்டிக்காட்டுகிறார். தெளிவான சிந்தனையை தூண்டி வாசகனின் சிந்தனையை சீரமைத்து அதையே பரிசளித்து அனுப்பி வைக்கிறார்.
கதையின் நாயகன் முத்து
கடவுள் நம்பிக்கை மீதான தன் ஆதங்கத்தை வாழ வேண்டியவர்கள் ஏன் சாக வேண்டும் மருத்துவமும் காப்பாற்றாது நம்பிக்கையும் காப்பாற்றாது என்றான பிறகு சிலைகளும் சித்திரங்களும் பூஜைகளும் வேண்டுதல்களும் ஆரத்தி ஆராதனைகளும் எதற்கு என்ற சாமானியனின் பிரதிநிதியாகிறான்.
தனியார் மருத்துவமனைகளின் தேவையற்ற வசதிகளும் தேவைக்கதிகமான கட்டணங்களையும், முடிவில் அவர்களது கையறு நிலையும் நிச்சயமற்ற உத்தரவாதமற்ற சிகிச்சையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அது என்ன தொழில் கூடமா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயிர்களைக் காப்பாற்ற நம்பி வருகின்றவர்களின் வாழ்க்கை அதன்பின் அடங்கி இருப்பது ஒரு குடும்பத்தின் கண்ணீர்
குறிப்பிட்ட நபரின் குடும்பத்திற்கான முக்கியத்துவமும் என எத்தனை எத்தனை நுணுக்கங்கள் உள்ளடக்கிய இந்த வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கட்டணங்கள் நியமிக்கப்பட்டு உயிர்களோடு விளையாடும் தனியார் மருத்துவ மனைகள் எங்கே போய்க்கொண்டிருக்கிறன.
எல்லோரும் தனியார் மருத்துவமனையை நோக்கி விரைகிறோம் அப்படியென்றால் அரசின் ஒதுக்கீடுகளும் அரசு மருத்துவமனைகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ஏன் நாம் அங்குச் செல்வதில்லை என்ற எண்ணங்களும் பல்வேறு கேள்விகளை மனம் கேட்கத் தொடங்க சிந்தனைகள் வேறு திசை நோக்கி விரியத் தொடங்கி விட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு என்று தனி மருந்தக பிரிவு இருக்கக் கூடாதா என்பதில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய மருத்துவமனைகளின் நெருக்கடிகளையும் நமது பதட்டத்தைப் புரிந்து கொள்ளாத எதிராளியின் குணத்தையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.
எல்லா மனிதர்களும் தனக்கு ஏற்படுகின்ற பயம் சுயநலம் இவற்றால்தான் இறைவனைத் தேடுகிறான் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதையே எழுத்தாளரும் சுட்டிக்காட்டுகிறார்.
மருத்துவமனைகளும் மருத்துவ கட்டணங்களும் அவை வெறும் தொழிற்சாலை கூடங்களே.
ஒரு ரயில் பெட்டியைப் போல் மருத்துவமனையும் பல்வேறு மனநிலையில் உள்ள மனிதர்களைச் சுமக்கிறது. புதிய வரவு மகிழ்ச்சியையும் ஒரு உறவின் மறைவு துன்பத்தையும் தருகிறது இந்த இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் மனிதன் படுகின்ற அல்லோலங்கள் தான் எத்தனை எத்தனை?
வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒன்றைத் தவிர மருத்துவமனைக்கு வர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
வயது வித்தியாசமின்றி போராடும் நோயாளர்கள் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் குடும்பத்தார். முயற்சிக்குத் தடை நிற்கும் மருத்துவமனை கட்டணங்கள். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் நம்பிக்கை.
கடைசியில் கைவிட்ட கடவுள்கள்
என் ஆசிரியரின் ஆதங்கம் நம்மைத் தொற்றிக்
கொள்கிறது.
கல்வியும் மருத்துவமும் அனைத்து சாமானியர்களுக்கும் குறைவின்றி கிடைக்க வேண்டும் அதில் எந்த பாகுபாடும் ஏற்றதாழ்வும் இருக்கக்கூடாது. பிறந்த எல்லா உயிர்க்கும் வாழும் உரிமை உண்டு அவ்வுரிமை பணத்தால் நிர்ணயம் செய்யப் படக்கூடாது.
வீட்டைவிற்று காட்டைவிற்று இறுதியில் பயனற்றுப் போன மருத்துவமும் செலவழித்த பணமும் நெஞ்சைப் பிழிகிறது.
மருந்துகளும் மருத்துவரும் இருக்கின்ற இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுள் எதற்கு அவரால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும் மருத்துவமனைக்குள் மத வழிபாட்டுக் கூடங்கள் எதற்கு?
இப்படி மனித உணர்வுகளோடு விளையாட உன்னதமாகக் கட்டமைக்கப்பட்டுத் திட்டமிட்டுத் திருடும் கூட்டங்கள் கையில் அல்லவா
மருத்துவமும் கல்வியும் இன்று சிக்கி தவிக்கிறது.
ஒரு இடத்தில் கூட கதையை வாசிக்கின்றோம் என்ற எண்ணம் வரவில்லை.
ஒரு மருத்துவமனையில் உட்கார்ந்து அனுபவித்த காட்சிகளாகவே உணரமுடிந்தது கதையின் இறுதிக் காட்சி நம்மை ஒரு சில நிமிடங்கள் உலுக்கிவிட்டது அந்த குழந்தைச் சாமி படத்தை விட்டு தந்தை பின் கதறிச் செல்லும் காட்சி மனம் கனத்தது. கண்முன் விரித்த அத்தனை காட்சிகளும் உண்மைக்குச் சாட்சிகளே.
அருமையான
வாசிப்பு அனுபவமும் சமூக கல்வியையும் போதித்தது இச்சிறுகதை.

No comments:

Post a Comment