Monday, 21 March 2022

500 ரூபாய் நோட்டு ...சிறுகதை ..வா.நேரு

                                                                                                             

அந்தப் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் திறந்து கிடந்தது. உள்ளே ஒரு நாய் சுகமாகப் படுத்துக்கிடந்தது. பணம் எடுக்க வந்த வீரன் அந்த நாயை விரட்டினார். ஆனால் அது எழுந்து போகாமல் முறைத்துப்பார்த்தது. அதனை ஒரு வழியாக விரட்டிவிட்டு பணம் எடுக்க ஏ.டி.எம் மெசினைப் பயன்படுத்தினார்.


பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஏ..டி.எம். மெசினிலிருந்து ரூபாய் நோட்டுகள் மொத்தமாய் கீழே விழுந்தன.எப்போதும் நாம் எடுக்காமல் விட்டுவிட்டால் மறுபடியும் உள்ளே போய்விடுமோ என்று அஞ்சுகின்ற அளவிற்கு அந்தப் பெட்டிக்குள்ளே இருந்து எட்டிப்பார்க்கும் ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக, மொத்தமாய் கீழே விழுந்தவுடன்  வீரன் ஒரு நிமிடம் பதறிப் பொனார்.  கீழே குனிந்து ரூபாய் நோட்டுக்களைப் பொறுக்கினார். ஒரு 500 ரூபாய் நோட்டு இரண்டு மூன்றாய் கிழிந்து விழுந்திருந்தது. மீதம் 9 நோட்டுகள் நன்றாக இருந்தன. அந்தக் கிழிந்து விழுந்த நோட்டைக் கையில் எடுத்தார் வீரன். தொட்டவுடன் அப்படியே நோட்டு பொடிப்பொடியாக உதிர்வது போல உதிர்ந்தது. இது என்ன அதிசயமாக இருக்கிறது, ரூபாய் நோட்டு இப்படி உதிர்கிறதே என்று பார்த்த வீரன் என்ன செய்வது என்று முழித்தார்.


வீரன் சென்ற மாதம்தான் தனது 75-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார். வெளியூரில் இருக்கும் மகனும்,மருமகளும்.மகளும்,மருமகனும் தங்கள் பிள்ளைகளோடு வந்திருந்தார்கள். இரண்டு பேருமே சொற்ப வருமானத்துக்காரர்கள். தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.மிக எளிமையாகத் தன் மனைவி மரகதத்தோடும் ,உறவுகளோடும் 75-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார் வீரன். இந்த ஏ.டி.எம்.இல் பணம் எடுப்பது முதலில் தெரியாமல்தான் இருந்தது.சென்ற ஆண்டு வீட்டிற்கு வந்திருந்த பேரனோடு ஏ.டி.எம். மெசினுக்குப் போய் கற்றுக்கொண்டுவிட்ட வீரன்,நன்றாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார். வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஏ.டி.எம். மெசினுக்குச் சென்று தனக்கு வரும் ஓய்வூதியப்பணத்தில் ஆயிரம்,இரண்டாயிரம் என்று எடுத்துக்கொண்டு வந்து பயன்படுத்திக்கொண்டிருந்தார்.


காலையில் மரகதம்தான் ஆரம்பித்தாள்.


"என்னங்க இந்த மாசம் டாக்டர் செக் அப்பிற்கு போகணும். தைப்பொங்கல் வருது கொண்டாடனும்.கொஞ்சம் பேங்க்ல போய் பணம் எடுத்துட்டு வாங்களேன்... " 


"பேங்குக்கு எதுக்குப் போகணும். நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே ஏ.டி.எம் மெசின் இருக்குது ,அங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம் " என்று சொல்லிவிட்டு வந்திருந்தார் அவர்.


மாதம் மாதம் சுகர்,பிரசர் என்று இருவருக்கும் பக்கத்து தெரு மருத்துவரிடம் பரிசோதனைக்கும்,மாத்திரை வாங்கவும் போகவேண்டியிருந்தது. மருத்துவரிடம் ,அளவாகவே எனக்கு மாத்திரை கொடுங்கள்,என் வருமானத்திற்கு என்னால் அதிகமாக எல்லாம் மாத்திரை வாங்க முடியாது என்று சொல்லியிருந்தார். அந்த மருத்துவரும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார்.எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் என்றெல்லாம் நிர்ணயிக்கவில்லை.ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு,அவரின் மருந்துச்சீட்டிலேயே எழுதிவிடுவார்.அதனைப் பார்த்து முன்னால் இருக்கும் ஆட்கள் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று சொல்வார்கள்.


எந்தப் பண்டிகை கொண்டாடவில்லையென்றாலும் தைப்பொங்கலை வீரன் கொண்டாடி விடுவார். அது அவரின் 50 ஆண்டுகாலப் பழக்கம். தைப்பொங்கலுக்கு மட்டும் தனக்கும் தன் மனைவிக்கும் புதுத்துணிகள் எடுப்பார்.அதுவும் குறைந்த விலையில்தான்...


அப்படித்தான் மாத்திரைக்கும்,புதுத்துணிக்கும் என்று பணத்தை எடுத்தார். கொரனாவின் இரண்டாவது அலை என்று தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். போனில் கூப்பிட்டு மகன் "அப்பா,அனாவசியமாக வெளியில் எல்லாம் அலையாதீர்கள்.வயதானவர்களைத்தான் மிக அதிகமாகக் கொரனா தாக்குகிறது.வீட்டிற்குள்ளேயே இருங்கள் " என்று சொல்லியிருந்தான். ஆனால் அத்தியாவசியமான வேலைகளுக்கு வெளியில் வரத்தானே வேண்டியிருக்கிறது என்று வெளியில் வந்திருந்தார் வீரன். 


அந்த நல்ல ஒன்பது 500 ரூபாய் நோட்டுகளைத் தனியாகப் பையில் வைத்தார். கிழிந்து கீழே விழுந்த 500 ரூபாய் நோட்டைத் தனியே வைத்தார். போய் வங்கியில் சொன்னால் புது 500 ரூபாய் கொடுத்துவிடுவார்கள்.இப்போது வெயில் கடுமையாக அடிக்கிறது.மணி 10தான் ஆகிறது. கொஞ்சம் நேரம் கழித்துப்போவோம் என்று நினைத்துக்கொண்டு ,ஏ.டி.எம் மிசினை விட்டு வெளியே வந்து குடையை விரித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கலானார்.


வீட்டிற்கு வந்தவுடன் மனைவியிடம் பணத்தைக் கொடுத்த வீரன்,கிழிந்த ரூபாய் நோட்டையும் மரகதம் கையில் கொடுத்தார். மரகதம் பயந்து போனாள்."ஏங்க ,நமக்கு இருக்கிற பண நெருக்கடியில,இப்படி கிழிஞ்ச 500 ரூபாயோடு வந்து நிக்கிறீங்க.போங்க,போங்க போய் உடனே பேங்க்ல போய்க் கொடுத்து வாங்கிட்டு வாங்க" என்றாள்.


புத்தாண்டில் இரண்டாவது வாரத்திலேயே இப்படியா என்று எண்ணிக்கொண்டே, குடையை விரித்து ,தான் எடுத்த ஏ.டி.எம்.யைத் தாண்டி பேருந்து நிலையத்திற்கு நடக்க ஆரம்பித்தார். ஏ,டி.எம் எப்போதும் போல ,காவலாளி எல்லாம் இல்லாமல் திறந்து கிடந்தது. இப்போது வீரன் பார்க்கும்போதும் அந்த  நாய் மீண்டும் உள்ளே படுத்துக்கிடந்தது. அடுத்து வரும் ஆள், நாயை விரட்டி விட்டுத்தான் பணத்தை எடுக்கவேண்டும். நாய் போக மாட்டேன் என்று அடம்பிடித்தால் வம்புதான் என்று நினைத்தபோது வீரனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே அந்த இடத்தைக் கடந்து, பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.


பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, எதிரில் இருந்த சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தது. வாடை தாங்க முடியவில்லை. புகை எழுந்து அந்தப் பகுதியையே சாம்பல் நிறமாக மாற்றிக்கொண்டிருந்தது. சீக்கிரம் பஸ் வந்தால் பரவாயில்லை என்று நினைத்தார். அரசுப்பேருந்து வந்தால் பரவாயில்லை. சிற்றுந்து வந்தால் இறங்கி கொஞ்ச தூரம் நடக்கவேண்டுமே என்று நினைத்தார். கொரனா காலத்தில் பேருந்துகள் இப்போதுதான் இயங்க ஆரம்பித்திருந்தன.ஆனால் அரசுப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்த பின்பு சேர் ஆட்டோ, சிற்றுந்துகள்தான். சேர் ஆட்டோவில் ஏறி இறங்குவது கடினமாக இருந்தது. மினி பஸ் வந்தவுடன் ஏறி,தந்தி ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்.


தந்தி ஆபிஸ் பக்கம் இருந்து தமுக்கம் பக்கம் போகவேண்டும்.இடைவிடாது வண்டிகளும்,ஆட்டோகளும்,பேருந்துகளும் போய்க்கொண்டிருந்தன. சிலரோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தார் வீரன். இளவயது பையன் டக்கென்று ரோட்டைக் கடந்து அந்தப் பக்கம் போய்விட்டான்.வீரனுக்குத் தயக்கமாக இருந்தது.சில நேரம் காவலர்கள் நின்று நடைபாதையாக வருபவர்களை அந்தப் பக்கம் பயம் இல்லாமல் செல்ல வழி வகுத்தார்கள்.பல நேரம் காவலர்கள் இருப்பதில்லை.வீரனோடு வேலைபார்த்த ஈஸ்வரி இப்படித்தான் ரோட்டைக் கடக்கும்போது விழுந்து,விபத்தில் காயம்பட்டு மூன்று நான்கு மாதம் சிகிச்சை எடுத்தது இந்த நேரத்தில் வீரனுக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.


கூட்டம் கொஞ்சம் அதிகமானவுடன், மெல்ல கூட்டமாக ரோட்டைக் கடக்க முற்பட்டார்கள்..வீரனும் அவர்களோடு இணைந்து நடந்து  வந்து சேர்ந்தார்.உசிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடப்பதைப் போலத்தான் ஒவ்வொருவரும் அந்த இடத்தைக் கடந்தார்கள். மெல்ல நடந்து கருப்பசாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் அந்த வங்கிக்குள் நுழைந்தார்.


உள்ளே செல்வதற்கே ஒரு கூட்டம் இருந்தது. வங்கியின் முன்னால் இருந்த காவலாளி இருவர் உள்ளே இருந்து வந்தபின்பு ,வெளியிலிருந்து இரண்டு பேரை கைகளில் கைகழுவும் திரவத்தைக் கொடுத்துத் ,தேய்த்துக்கொண்டு உள்ளே போக விட்டுக்கொண்டிருந்தார். ஒரு அரை மணி நேரம் நின்ற பிறகு உள்ளே போக முடிந்தது. உள்ளே சென்று ,முன்னால் இருந்தவரிடம் இந்த மாதிரி 500 ரூபாய் நோட்டுக் கிழிந்து விழுந்தது. அதை மாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் 'இங்கு மாற்ற மாட்டார்கள் சார். இருந்தாலும் அந்த 3வது கவுண்டரில் போய்க் கேளுங்கள் சார் " என்று மரியாதையாகச்சொன்னார்.


அந்த 3-வது கவுண்டருக்கு முன்னாலும் ஒரு கியூ இருந்தது. பெரும்பாலும் கையில் செக் வைத்துக்கொண்டு பணம் எடுக்க நிற்பவர்கள்.தான் ஒரு விவரம்தானே கேட்கவேண்டும்.முன்னால் போகலாமா என்று நினைத்தார். இவர் முன்னால் நகர்வதைப் பார்த்தவுடன் ஒரு பெண்மணி வந்து " சார் எதுவென்றாலும் வரிசைதான் ,வரிசையில் நின்று போய்க்கேளுங்கள் " என்றார். சரி என்று வரிசையில் நின்றார்.

 

கண்ணாடியால் தடுப்புப் போட்டிருந்தார்கள்.எல்லோரும் முகக் கவசம் போட்டிருந்தார்கள். வீரனும் போட்டிருந்தார். தன் முறை வந்தவுடன் கிழிந்த 500 ரூபாயை அந்தக் கிளார்க்கிடம் காட்டினார். வாங்கிப் பார்த்த அவர் " என்ன சார், இப்படிப் பொடிப்பொடியா உதிருது? ஏ.டி.எம்.ல பணம் போடுவதெல்லாம் தனியார் கம்பெனிகளிடம் கொடுத்து விட்டார்கள் சார். அவங்க என்ன நோட்டு வைக்கிறாங்கன்னு தெரியலைங்க சார். இந்த வாரத்திலேயே உங்களை மாதிரி நாலஞ்சு பேர்,இப்படி நோட்டுக் கிழிஞ்சு வருதுன்னு சொல்லிட்டாங்க...நாங்க என்ன பண்றது ? " கிட்டத்தட்ட புலம்பினார்.


" சார் நான் ஒரு தப்பும் பண்ணலையே சார்.எப்போதும் போல ஏ.டி.எம்-ல பணம் எடுக்கப்போனேன். இப்படி 500 ரூபாய் கிழிஞ்சு வருது...வர்ற வருமானமே ரொம்ப கொஞ்சம்.இதிலே " என்று வீரன் பேசும்போதே வழிமறித்தார்.


"இப்படிக் கிழிஞ்ச நோட்டை மாத்திறதுக்கு, நீங்க ரெயில்வே ஸ்டேசனுக்கு முன்னாடி இருக்கிற வங்கிக் கிளைக்குப் போகணும்.போய்ச்சொல்லுங்க சார்,உங்களுக்கு  வேற புது நோட்டு கொடுத்தாலும் கொடுப்பார்கள் " என்றார்.


மதியம் 2 மணியானது. வீரனுக்கு .பசித்தது.,வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு நாளைக்குப் போய் ,ரெயில்வே ஸ்டேசன் அருகில் இருக்கும் வங்கிக் கிளையில் போய்ப் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு மறுபடியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடந்து வந்தார். மினிபஸ்ஸில் ஏறி தன்னுடைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ,குடையை விரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.


"ஏங்க,மணி 2க்கு மேல  ஆச்சு.சாப்பிடாமா இவ்வளவு நேரமா " என்று சொல்லிக்கொண்டே மரகதம் சாப்பாட்டை வைக்க,முகக் கவசத்தை வெளியில் குப்பைக் கூடையில் கழற்றிப்போட்டு விட்டு ,கைகளை திரவத்தை வைத்துக்கழுவி விட்டு ,உள்ளே வந்து சாப்பிட உட்கார்ந்தார்.


"ஏனுங்க வங்கியில புது நோட்டு கொடுத்துட்டாங்களா " என்ற மரகதத்திடம் "இல்லைப்பா,ரெயில்வே ஸ்டேசனுக்கு முன்னாடி இருக்கிற வங்கிக் கிளைல போய்க் கேட்கணுமாம் " என்று சொன்ன வீரனிடம் 

"இது என்ன கொடுமையா இருக்கு...இந்த 75 வயசில எங்கெங்க அலையுறது..அவங்க கிழிஞ்ச நோட்டை உள்ளே வச்சுட்டு இப்படி நம்மல அலைய விடுறானுங்களே ' என்ற மரகதத்தை சமாதானப்படுத்தினார் வீரன்.

மறு நாள் காலை ,ரெயிலேவே ஸ்டேசனுக்கு முன்னால் உள்ள வங்கிக் கிளைக்குப் போய்ச்சேர்ந்தார் வீரன்.மேலே முதல் மாடிக்குப் போய்க் கேளுங்கள் என்றார்கள். படிக்கட்டுகளில் மெதுவாக... மெதுவாக ஏறிச்சென்ற வீரன்,அந்த செக்சனைக் கேட்டு உள்ளே போனார்.


அந்தப் பெண்மணி மிகுந்த பரபரப்பாக இருந்தார். ஆனால் உள்ளே போனவுடன் அவருக்கு முன்னால் இருந்த இருக்கையைக் காட்டி,சைகையிலேயே உட்காரச்சொன்னார். "நன்றிங்க அம்மா" என்று சொல்லிக்கொண்டே வீரன் அமர்ந்தார்.செல்பேசியில் அவர் பேசுகிற வழக்கை வைத்து, நெல்லைப் பகுதியைச்சார்ந்தவராக அவர் இருக்கக்கூடும் என்று வீரன் யூகித்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து' என்ன வேணும் உங்களுக்கு ?" என்று அவர் கேட்க ,இவர் கிழிந்த நோட்டைக் காட்டினார். " என்ன இப்படி நோட்டு உதிருது, கவர்மெண்ட் அடிக்கிற நோட்டு இப்படியெல்லாம் உதிராதே இப்ப பொங்கல் சமயம்.நிறைய வேலை இருக்கு. இப்ப  நோட்டை மாத்த முடியாது. ஒரு வெள்ளை பேப்பருல இந்த நோட்டை அப்படியே ஒட்டி,பொங்கல் முடிஞ்ச பிறவு ஒரு வாரம் கழிச்சு வாங்கய்யா" என்றார்.


"இங்க வந்தா உடனே மாத்திக் கொடுத்துருவாங்கன்னு சொன்னாங்களே..."


"இல்லைங்கய்யா, இப்ப  ஒண்ணும் மாத்தித்தர முடியாது" 


"அம்மா உங்கள் தொலைபேசி எண் கொடுக்க முடியுமா? கேட்டுட்டு வர்றனே..." 


'அப்படியெல்லாம் கொடுக்க முடியாதுங்கய்யா, ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பேங்குக்கு வருவாங்க. எல்லாருக்கும் கொடுக்க முடியுமா? அப்படியெல்லாம் கொடுக்க முடியாது ".  சொன்ன வேகத்தில் அவர் அடுத்த அவரது வேலையைப் பார்க்கத்தொடங்கி விட்டார்.


இனி இங்கிருப்பது ஒன்றுக்கும் ஆகாது என்று நினைத்த வீரன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார். மரகதம் இப்போதும் ,"விடக்கூடாதுங்க.உங்காமத் திங்காம 500 ரூபாயை எப்படி விடுறது.பொங்கல் முடிஞ்சவுடனே போய்க்கேளுங்க.கேட்டு 500 ரூபாயை வாங்கிகிட்டு வாங்க" என்றாள்.


பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழிந்ததும் ,மீண்டும் பத்திரமாக வைத்திருந்த அந்த 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு ரெயில்வே ஸ்டேசன் அருகில் இருக்கும் வங்கிக் கிளைக்குச்சென்றார்.அவர் சென்ற முறை பார்த்த அந்தப் பெண் அதிகாரி இல்லை. அவரிடம்தான் மாற்ற முடியும்,அடுத்த வாரம் வாருங்கள் என்று அங்கிருந்த ஒருவர் சொல்ல வீட்டிற்கு வந்து சேர்ந்தார் வீரன்.


மறுபடியும் அடுத்த வாரம் சென்ற போது அந்தப் பெண் அதிகாரி இருந்தார். 


"ஐயா, உங்களுக்கு உதவணும்தான் நினைக்கேன். ஆனா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. கீழ மேலதிகாரி இருப்பாங்க.. அவர்கிட்ட போய்க் கேட்டுட்டு வாங்க. அவர் சரின்னு சொன்னா மாத்தித்தரேன்." 


மீண்டும் கீழ்த்தளத்திற்கு வந்து அந்த மேலதிகாரி அறைக்குச்சென்றார். விஷயத்தைச் சொல்லி தான் ஏ.டி.எம்.மில் எடுத்ததற்கான ரசீதைக் காண்பித்தார்.இந்தத் தேதியில் ,இந்த ஏ.டி.எம் கிளையில் இவ்வளவு பணம் எடுத்தது என்ற விவரம் எல்லாம் இருந்தது. 


"நீங்க பணம் எடுத்தப்ப யாராவது இருந்தாங்ககளா?" 


"நாய் மட்டும்தான் இருந்தது " என்று சொல்ல வாய் நினைத்தது. அதை அடக்கி  'ஒருத்தரும் இல்லை சார் "  என்றார்.


"எந்த விதமான ஆதாரமும் இல்லாம எப்படி சார் நாங்க பணம் தர்றது? எங்க ஏ.டி.எம்.மில் எடுத்த பணம்தான்ங்கறதுக்கு  என்ன ஆதாரம் இருக்கு? என்னால ஒண்ணும் செய்ய முடியாது.மறுபடியும் அந்த அம்மாகிட்டயே போய்க் கேட்டுப்பாருங்க. அவங்க  கொடுக்கறதை வாங்கிக்கோங்க" என்றார்.

மீண்டும் மேல் தளத்திற்கு வந்து அந்த அம்மாவிடம் வந்தார். அவரின் மேல் அதிகாரி சொன்னதைச்சொன்னார். 'அந்தக் கிழிந்த நோட்டை வாங்கி  "ஒரு பக்கம்தான் நம்பர் இருக்கிறது.மற்ற பகுதியெல்லாம் காணவில்லை." என்று சொல்லிக்கொண்டே ஒரு ஸ்கேலைக் கொண்டு வந்து அளந்து பார்த்தார்.


"ஐயா, உங்க நோட்டுக்கு 100 ரூவாதான் கொடுக்கமுடியும். மற்ற பகுதியெல்லாம் இல்லை. இதுவுமே நான் ரிஸ்க் எடுத்துத்தான் கொடுக்கமுடியும்" நிதானமாக வார்த்தை வார்த்தையாக அழுத்திச் சொன்னார். 


"இல்லைங்கம்மா, எனக்கு 100 ரூபா வேணாம். எனது 500 ரூபாயும் கொடுக்க முடிஞ்சா கொடுங்க.. இல்லைன்னா  எதுவும் வேணாம்" 


மவுனமாக அந்த அம்மா கிழிந்த ரூபாய் நோட்டை வீரனிடம் கொடுத்தார். இவ்வளவு நாள் கசங்கக்கூடாது எனப் பாதுகாத்த அதை அள்ளிப் பைக்குள் திணித்தார். வெயிலோடு அலைச்சலும் மன உளைச்சலும் மனதை வாட்டியது. இதில் மூன்று நான்குமுறை ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் அலைந்ததில் போக்குவரத்துச் செலவே 200 ரூபாய்க்கு மேல் ஆகியிருந்தது.  வெளியே வந்த வீரனுக்கு அந்தப் பெரிய விளம்பரப்பலகையில் வெயில் பட்டுக் கண் கூசியது. நிமிர்ந்து பார்த்தார்.


"இந்திய வங்கிகள் எல்லாம் நவீன மயமாக்கப்பட்டு விட்டன..வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துப்பழகுங்கள்!" எழுத்துகள் மின்னிக் கொண்டிருந்தன.


                                                                                                                   வா.நேரு, 21.03.2022








7 comments:

  1. எப்பொழுதும் போல் மிகவும் அருமையான சிறுகதை. நாம் வாழ்க்கையில் எவ்வளவு திட்டமிட்டாலும் சில இடர்களை தவிர்க்க முடியாத நிலையில் இருக்கின்றோம் அதற்கு பொறுப்பற்ற பலர் காரணமாக இருக்கிறார்கள்.

    நமது நேரத்தை பலரும் எவ்வாறு
    கையாளுகின்றார்கள் களவாடுகிறார்கள் என்பதை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள்.

    பல நேரங்களில் இது போன்ற அசௌகரியங்களை பலரும் அனுபவித்திருப்பார்கள் அதை மிகச்சரியாக சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள்.

    கொரோனாவின் கொடூரங்களின் பிணவாடை நம் மூக்கையும் துளைத்துச் செல்கிறது.

    அருமையான உரையாடல்கள் " நாய் மட்டும் தான் பார்த்தது" சரியான சவுக்கடி.

    அற்புதமான படைப்பு பொது சேவைகளில் பணியாற்றுபவர்கள் படிக்க வேண்டிய கதை அரசும் தனியாரும் கவனிக்க வேண்டிய தவிர்க்க வேண்டிய சமுதாய அவலங்கள்...
    அர்ஷா மனோகரன் அவர்கள் வாட்சப்பில்

    ReplyDelete
  2. மட மடன்னு படிக்கிறமாதிரி,அடுத்து என்ன என ஆர்வமா இருக்கிறது கதை.. அண்ணா...
    இழந்தவர்களுக்கு இந்த வலி புரியும்.
    கதை அருமை அண்ணா....

    சித்ராதேவி வேலுச்சாமி அவர்கள் ...முக நூலில்

    ReplyDelete
  3. படித்தவர்களிடமும் விவரமானவர்களிடமே போட்டுப் பார்க்கிறார்கள். இது போன்ற முதியவர்கள், அப்பாவிகள் என்ன செய்வார்கள். மிகவும் அலட்சியம் ஆகிவிட்டது வங்கித்துறை. நானே இப்பல்லாம் வங்கிக்குக் கிளம்பினால்
    ஆ ண்டவனே, இன்றைக்கு எவர் கூடயும்
    சண்டைப்போடாமல் வங்கி வேலை முடித்து வரவேண்டும் என்று வேண்டி கிட்டுதான் போவேன்.
    சபாரத்தினம் அவர்கள் முக நூலில்

    ReplyDelete
  4. உண்மைகளை உடைத்துப்போட்டுவிட்டு உலகம் இங்கே காணத் துடிப்பது எதை? என்ற கேள்வியே 500 ரூபாய் நோட்டு. நம்பிக்கையைப் பொய்யாக்கும் நவீனத்தை, மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்க இயலாத இயந்திரத்தனத்தை எழிலாக்கச்சொல்லும் 500 ரூபாய் நோட்டு!
    மீ மணிகண்டன் அவர்கள் முக நூலில்

    ReplyDelete
  5. மனம் தொட்டது...
    வாழ்த்துகள்...
    முகமது அலி ஜின்னா...முக நூலில்

    ReplyDelete
  6. இந்த அழைக்கழிப்பு பலரும் அனுபவத்தில் கண்ட ஒன்றாகும். கதை அருமை...

    சங்கர் நீதிமாணிக்கம் முக நூலில்

    ReplyDelete
  7. இந்த கொடுமையை நானும் அனுபவிச்சு...பென்சனே 974.00.இதிலே 800.00ரூ அழுத்தினா வராதாம்.500.00 ரூபா நோட்டு மட்டுமே வருமாம்..

    தம்பி தவமணி ...முக நூலில்

    ReplyDelete