திருப்பிக்
கொடுக்கப்படாத
சில புத்தகங்கள்
அலமாரிக்குள்
அகப்படுகின்றன…
கொடுக்கப்படாத
புத்தகங்களின்
வழியாக
புத்தகத்தைக்
கொடுத்தவரைப்
பற்றிய நினைவுகள்
நீள்கின்றன….
வெகு நேரம்
ஆழ்ந்து வாசிக்கும்
அவரின் குணத்தை
அவர் கொடுத்த
புத்தகத்தின்
வழியாக
சுவாசிக்க முடிகிறது…
திருக்குறள்
பற்றிய
அவரின் புத்தகம்
திருக்குறள்
கட்டுரைகளைப்
பதிப்பிக்க
அவர் அலைந்த
அலைச்சலை நினைவுபடுத்துகிறது…
புத்தகங்களாய்ப்
படித்து படித்து
படித்த புத்தகத்தில்
அடிக்கோடிட்டு
அடிக்கோடிட்ட
எழுத்துகளை
தனியாக நோட்டுப்புத்தகத்தில்
எழுதிவைக்கும்
அவரின் வாசிப்பை
அடிக்கோடிட்ட
ஒரு புத்தகம்…
கொடுக்கப்படாத
ஒரு புத்தகம்
நினைவுபடுத்துகிறது…
புதுமைப்பித்தனை
அழகிரிசாமியை
இன்னும் சில
படைப்பாளிகளை
தான் படித்து
சிலாகித்ததைச்
சொல்லிச்சொல்லி
என்னை அவர்களைப்
படிக்கவைத்த
நண்பரின் புத்தகம்
ஒன்றும்
கொடுக்கப்படாத
புத்தகமாய்
அலமாரிக்குள்
இருக்கிறது…
புத்தகத்தைத்
திருப்பிக்கொடுத்தால்
அவர்களின் வாரிசுகளில்
யார் இதைப்
படிப்பார்?
யார் இதைப்
பாதுகாப்பார் ?
எனும் கேள்வி
எழ
கொடுக்கப்படாத
புத்தகங்கள்
கொடுக்கப்படாமலேயே
இருக்கட்டும்
எனத் தோன்றுகிறது…
வா.நேரு
13.12.2022
ஆனால், வாங்கியது உரிய நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
ReplyDeleteஆமாம் அண்ணே...
ReplyDelete