Monday, 19 December 2022

வியப்புமிகு எழுத்தாளர்.....

                                                                                                    

எழுத்து, உலகின் பல நாடுகளை பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு உயர்த்தி-யிருக்கிறது. மாபெரும் மனிதர்கள் பலரை மாபெரும் நிலைக்கு உயர்த்துவதற்கு உறுதுணையாக புத்தகம் இருந்திருக்கிறது.பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்கு அளித்த தோழர் காரல் மார்க்ஸ், பேரறிவாளர் அண்ணல் அம்பேத்கர், அண்ணல் காந்தியார், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் எனப் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட காரணமாக இருந்தவை புத்தகங்கள் என்பதை நாம் அறிவோம்.உலகத்தின் போக்கை _ கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்னும் மாயப்பிம்பத்தை உடைக்க சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கோட்பாடு புத்தகம்தான் காரணமாக இருந்தது.மாயப்பிம்பங்களை உடைக்கும் மகத்தான கருவிகளாகப் புத்தகங்கள்தான் இருந்தன _ இன்றைக்கும் இருக்கின்றன.



தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றிய நேரத்தில் எல்லாம் தன்னுடைய கருத்துகளுக்கான ஆதாரங்கள் இருக்கும் புத்தகங்களைத் தன்னோடு எடுத்துக்கொண்டு போய்,தான் வாசிப்பது மட்டு-மல்ல,கூட்டத்தில் இருக்கும் எவராவது ஒருவரை அழைத்து, வாசிக்க வைத்து அதன் உண்மைத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் என்பது வரலாறு.

தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 90ஆம் பிறந்த நாள் டிசம்பர் 2.. நாமெல்லாம் கொண்டாடி மகிழும் நாள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பன்முக ஆற்றலில் எழுத்து ஆற்றலை எண்ணி எண்ணி வியக்கத் தோன்றுகிறது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்துப் போராளியாக, பகுத்தறிவுக் கருத்துகளை தந்தை பெரியாரின் எண்ணங்களை, சிந்தனைகளை எழுத்து வடிவில் கொண்டு செல்வதில் அய்யா ஆசிரியர் அவர்களின் பங்கு என்பது மிகப் பெரியது. எண்ணி எண்ணி மகிழத்தக்கது.


இந்தியாவைப் பொறுத்த அளவில், பார்ப்-பனர்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட, இல்லாததை எல்லாம் இருப்பதாகக் காட்டி மக்கள் மத்தியில் மாய வலை வீசப்பட்ட _ வீசப்படும் நூல் பகவத் கீதை. கடவுளால் மனிதனுக்கு உபதேசிக்கப்பட்டது என்று சொல்லி,எளிதாக இந்த நூல் எவருக்கும் புரியாது, எல்லாமே பூடகமாகத் தத்துவங்களாகத்தான் இருக்கும் என்ற மாயபிம்பங்களால் கட்டப்பட்ட, அந்த நூலின் உண்மைத் தன்மையைப் போட்டுடைத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். பல பதிப்புகளைக் கண்டு, இன்றைக்கும் புதிதாக வாசிக்கும் எவருக்கும் பல வியப்புகளைத் தரும் அரிய நூல் ’கீதையின் மறுபக்கம்‘. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்,நம் பரம்பரை எதிரியான இராம.கோபாலனுக்குப் பரிசாக அளித்த பெருமை பெற்ற நூல்; ‘கீதையின் மறுபக்கம்‘. ஆகும். ’கீதையின் மறுபக்கம்‘ நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அதுவும் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் இராமாயண ஆராய்ச்சி என்னும் நூலை ஆக்கினார். அது பல மொழிகள் கடந்து இன்றைக்கும் ஆரியர்களை அச்சுறுத்தும் ஒரு நூலாக இருக்கிறது. தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு அய்யா ஆசிரியர் அவர்கள் மகாபாரத ஆராய்ச்சி என்னும் நூலை ஆக்கிக் கொடுத்திருக்கிறார். ராமாயணம் போலவே மகாபாரதம் எப்படி நம் மக்களை மயக்கப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதனை மிகத் தெளிவாக நாம் அறிந்துகொள்ள உதவுகிற நூல்.. ’பிராமணியம்‘ என்னும் தத்துவம் இன்றைக்கும் எப்படி தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதுகிறது என்பதைப் பல்வேறு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டும் நூல் ‘வெறுக்கத்தக்கதே பிராமணியம்‘ என்னும் நூலாகும்.


தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.இந்துத்துவா அமைப்பினர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரியமிக்க ஆரிய எதிர்ப்புக் கருத்துகளை மறைத்து, ’இந்துத்துவா அம்பேத்கர்‘ என்னும் பொய்யைப் பரப்பும் இந்த நாள்களில் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகங்கள் பெரிய அளவில் பரப்பப்பட வேண்டியவை.’விசாவுக்காக காத்திருக்கிறேன்’, ’டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்‘, ‘அருண்ஷோரியின் அம்பேத்கர் பற்றிய நூலுக்குப் பதில்’.’டாக்டர் அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவியது ஏன்’ போன்ற பல புத்தகங்கள் அய்யா ஆசிரியர் அவர்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.


இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் வியந்து பார்க்கும் திருமண முறை, தந்தை பெரியாரால் அறிமுகப்

படுத்தப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணம்‘. இலட்சக்கணக்கான திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன _. நடந்துகொண்டிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணம் பற்றிய ஓர் ஆவணம் போன்ற புத்தகம் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும் ‘ என்னும் நூலாகும்.

குறைந்த விலையில் நிறைந்த கருத்துகள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை வெளியிடுவது தந்தை பெரியாரின் பழக்கமாகும். அந்த

வகையில் பல சிறு சிறு புத்தகங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. ’நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?’, ’தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை‘, ‘தேவை பாலியல் நீதி’, ’திராவிடர் கழகத்தில் மகளிர் சேரவேண்டும் ஏன்’, ’வர்ணதர்மமும் பெண்ணடிமையும்‘ போன்ற புத்தகங்கள் பெண்ணுரிமை சார்ந்த புத்தகங்கள்.


‘கோயில்கள் கோபுரங்கள் ஏன்?எதற்காக?’ ,’சக்தி வழிபாடு’, ’கல்லூரிகளில் சோதிட நம்பிக்கையா?’ போன்ற பல புத்தகங்கள் மூட நம்பிக்கைகளின் முதுகெலும்பை முறிப்பவை.இது தவிர அய்யா ஆசிரியர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘குடிஅரசு’ இதழ்களின் தொகுப்புகள் ‘ போன்றவை பல தொகுப்புகளாக வந்து வரலாற்றை வருங்காலச் சந்ததிகளுக்கு சிறப்பாக எடுத்துக்காட்டும் தொகுப்புகளாக அமைந்துள்ளன.

‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்னும் புத்தகம், ‘ இருபத்தோராம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!’ என்னும் புத்தகம், ‘வைக்கம் போராட்ட வரலாறு’, ‘காஞ்சி சங்கராச்சாரியார் யார்? _ ஓர் ஆய்வு ‘காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்‘ என அய்யா ஆசிரியர் அவர்கள் ஆக்கிக் கொடுத்திருக்கக்கூடிய புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.


எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை பெரியாரின் தத்துவத்தைப் பத்து வயதில் ஏற்று,மேடை ஏறி உரையாற்றியது மட்டுமல்லாது, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தந்தை பெரியாரின் கொள்கை வழியில் அமைந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மற்றவர்க்-கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழும் அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ இதுவரை 16 தொகுப்புகள் வந்துள்ளன. வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பை பத்திரிகைகளும் தலைவர்களும் பாராட்டி மகிழ்ந்தனர் _ மகிழ்கின்றனர்.” “‘வாழ்வியல் சிந்தனைகள்‘ நூலை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழி பெயர்க்க வேண்டும்” என்று வி.பி.சிங்கும்,”நாட்டு மக்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய, அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சிறந்த கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு”, என்று மு.கருணாநிதியும், “இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்” என்று நீதியரசர் பெ.வேணுகோபாலும், ”என்சைக்ளோபீடியா போல் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஆழ்ந்த கருத்துகள்.இது ஒரு பல்கலைக் களஞ்சியம்.இதில் செய்திகள் அதிகம்.


அதைவிடக் கருத்துகள் அதிகம்’’ என்று இரா.செழியனும், ‘ நல்ல படைப்பு’ என்று டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களும், ‘சிறப்பான நூல்’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்களும், ‘ஞானப்பெட்டகம் என்று குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாரும், ‘பயனுள்ள கட்டுரை’ என்று முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமியும் , ‘சுத்தமான அறிவு’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் பாராட்டுகிறார்கள்” என்று பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் ‘தமிழர் தலைவர் கி.வீரமணியின் வாழ்வும் பணியும்’ என்னும் நூலில் குறிப்பிடுவார்.அது மட்டுமல்லாது அந்த நூலில் “கி.வீரமணியின் படைப்புகளில் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்த நூல் இதுவாகும். இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது அவரது எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்றும் அவர் குறிப்பிடுவார்.


வாழ்வியல் சிந்தனைகள் வந்துள்ள கட்டுரைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளன.வாழ்க்கையைச் செப்பனிட உதவியுள்ளன.கண்மாயில் நிரம்பி இருக்கும் நீர் பல வாய்க்கால்களின் வழியாகப் பாய்வது போல,வாழ்வியல் சிந்தனைகளின் கட்டுரையை அடிப்படையாக வைத்து பல புதிய நூல்கள் வந்துள்ளன.வெண்பா அடிப்படையில் மதுரை சுப.முருகானந்தம் அவர்கள் ‘வாழ்வியல் வெண்பா ‘ என்னும் நூலை வெளியிட்டுள்ளார்.ஆங்கிலத்தில் வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் மொழி பெயர்க்கப்பட்டு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில இதழில் மாதந்தோறும் வெளிவருகிறது. புதுக்கவிதை வடிவில் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துகளை பலர் வடிக்கின்றனர்.இப்படி பல நூல்களுக்கான ஆதாரக் கொள்கலனாக அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள் அமைந்துள்ளன.


அய்யா ஆசிரியர் அவர்களின் இந்த 90 ஆண்டுகால வாழ்க்கையில் 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக அமைந்த வாழ்க்கை. சுற்றுப்பயணம் செய்து கொண்டேயிருக்கும் நம் தலைவர் அவர்கள் தீவிரமான வாசிப்பாளர். வாசிப்பைச் சுவாசிப்பவர்.வாசிப்பது மட்டுமல்லாது புத்தகங்களை, கட்டுரைகளை, அறிக்கைகளைப் படைத்துக்கொண்டே இருக்கிறார். அவரின் புத்தகங்கள் காலத்தை வென்று வாழும் சக்தியுடைய புத்தகங்களாக இருக்கின்றன. ஒரு பக்கம் தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பறைசாற்றும் புத்தகங்களைப் படைக்கும் அதே நேரத்தில், எல்லோரும் வாழ்வில் நிம்மதியாக வாழவும், வாழும் நாள்களில் மகிழ்ச்சியாக வாழவும், உடல் நலத்தோடு, மன நலத்தோடு வாழவும் வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள் நமக்கு வியப்புமிகு எழுத்தாளராகவே இருக்கின்றார்.அவர் இன்னும் பல நூறு புத்தகங்கள் படைக்கும் வண்ணம் நீடூழி வாழவேண்டும்! வாழ வேண்டும்! என்று விரும்புகின்றோம்; வணங்குகின்றோம்; வாழ்த்துகின்றோம்.

.....முனைவர்.வா.நேரு......


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் டிசம்பர் 1-15

No comments:

Post a Comment