படிக்கும் காலத்திம் நம் மனதில் நிறைந்த ஆசிரியரை பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்பது தனித்துவமானது.தன் நிகர் இல்லாதது.கடந்த 17.01.2023 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் 'என்னும் புத்தகத்தை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களோடும்,எழுத்தாளர் இமையம் அவர்களோடும் இணைந்து உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.அந்த நிகழ்வுக்காக 16-ம் தேதியே சென்னை சென்றிருந்த நிலையில் ,ஒரு வாட்சப் குழுவின் மூலமாக ,சென்னையில் வசிக்கும் எனது வேதியியல் பேராசிரியர் திருமிகு.பா.குத்தாலிங்கம் சார் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு கரிம வேதியியல்(ஆர்கானிக் கெமிஸ்டிரி) பாடம் எடுத்தவர் பேரா.திருமிகு.பா.குத்தாலிங்கம் சார் அவர்கள்.கரிம வேதியியலில் அப்படி ஒரு ஆழமான புலமை அவருக்கு.மிகப்பெரிய கரும்பலகை வகுப்பில் இருக்கும்.கார்பனுக்கு உரிய குறீயீடான C என்பதைப் போட்டுவிட்டு அதன் மூலம் கிடைக்கும் அத்தனை டிரைவேட்டிஸ் அனைத்தையும் ஒரு வரைபடமாக அந்தப் பெரிய கரும்பலகையில் வரைந்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.இன்னும் கொஞ்ச நேரம் பாடம் எடுக்கமாட்டாரா என்று நினைக்கும் அளவிற்கு அவரின் பாடம் நடத்துவது இருக்கும்.
வேதியியல் துறைத்தலைவராக பேரா.தாசன் பெர்ணாண்டோ அவர்கள் இருந்தார்.அவர் கல்லூரியின் முதலாம் ஆண்டில் கார்பனின் இணைதிறனை(வேலன்சி)யை விளக்குவதற்காக 2 மாணவர்களை அழைத்து கைகளை நீட்டச்சொல்லி,மிக எளிமையாக விளக்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் தாசன் பெர்ணாண்டோ சாரின் வகுப்பில் நிறைய அரட்டை இருக்கும்.பாடம் நடத்துவதுதோடு சேர்த்து உலக விசயம் முதல் ஹாஸ்டலில் படிக்கும் புத்தகம் வரை அவரின் அறிவுரை இருக்கும்.கேலியும் கிண்டலுமாக பாதி வகுப்பு ஓடும்.
பேரா.குத்தாலிங்கம் சார் அவர்களின் வகுப்பில் ,பாடம் தவிர்த்து எந்த உரையாடலும் இருக்காது.ஆனால் அந்த கரிம வேதியியலை விளக்குவதற்கும்,எளிமையாகப் புரிய வைப்பதற்கும் அவர் கொடுக்கும் உதாரணங்கள் மிக ஈர்ப்பாக இருக்கும்.எனக்கு நன்றாக இருக்கிறது. எனது அப்பாவைப் பெற்ற பாட்டி,சின்னக்குட்டி அவ்வா தன்னுடைய 100 வயதில் எங்கள் ஊரில் மறைந்துவிட்டார். பாட்டியின் இறப்புக்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பிய நான்,திருச்செந்தூர் கல்லூரி விடுதிக்கு மதியம் 2 மணிக்கு எல்லாம் வந்து விட்டேன்.அன்றைக்கு விடுப்பு எழுதிக் கொடுத்திருந்தேன். ஆனாலும் கடைசி வகுப்பு குத்தாலிங்கம் சார் வகுப்பு என்றவுடன் ,போய் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேன்.அவர் அட்டெண்டெண்ஸ் ரிஸிஸ்டரைப் பார்த்துவிட்டு, என்ன நேரு, நீ லீவு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது,.நீ வகுப்பில் அமர்ந்திருக்கிறாய் என்றார். ஆமாம் சார்,பாட்டி இறந்ததிற்காக சொந்த ஊருக்குப் போய்விட்டு இன்று மதியம்தான் வந்தேன். உங்கள் வகுப்பு இருப்பது நினைவுக்கு வந்ததும் ,வகுப்பறைக்கு வந்துவிட்டேன் என்றேன். 40 ஆண்டுகளுக்குப் பின்னால் திரு.குத்தாலிங்கம் சார் அவர்களைப் பார்த்தபொழுது இதனை நினைவு கூர்ந்தேன்.
அண்மையில் என்னோடு பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்த்த டெக்னிக்கல் சூபர்வைசர் திரு.ஏ.ராசா சார் அவர்களைப் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப்பின் பார்த்த நிலையில் அவர்,தன்னோடு இருந்த நண்பருக்கு என்னை அறிமுகப்படுத்தியபோது, " சார்,இவர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை பசங்களுக்கு புரியற மாதிரி நடத்துவார் சார்.எனது பையனுக்கு வீட்டில் வந்து 4,5 மணி நேரம் நடத்தினார்..." என்று 10,15 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை நினைவுபடுத்தினார். எனது உறவினர் வீட்டுப்பிள்ளைகள்,நண்பர் வீட்டுப்பிள்ளைகள் என்று நான் கரிம வேதியியல் நடத்தியவர்கள் நிறைய உண்டு.இப்படி வேறு துறையில் வேலை பார்த்துக்கொண்டு,ஆசிரியர் தொழிலில் இல்லாத ஒருவன், கரிம வேதியியலைப் பற்றி புரியுமாறு நடத்துவதற்கு அடிப்படையான பேராசிரியர்கள் திரு.தாசன் பெர்ணாண்டோ சார் அவர்களும்,நான் சென்னையில் பார்த்த திரு.பா.குத்தாலிங்கம் சார் அவர்களும்.
நானும் எனது நண்பர்கள் சிலரும் மதுரை மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் சென்று படிப்பதற்கு காரணமாக இருந்த, தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல் நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்து பின்பு தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற எனது +2 வேதியியல் ஆசிரியர் திரு.முத்துராமலிங்கம் அவர்களைப் பற்றிக் கேட்டார்.அவர் தொடர்பில் இருப்பதையும்,சென்ற ஆண்டு மார்ச்மாதம் நடந்த முதல்வர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுச்சொற்பொழிவில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்ததையும் குறிப்பிட்டேன்.
மிக நிறைவாக பாடங்கள் எடுத்த,திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் திருமிகு.இரா.கனகசபாபதி,இன்று திருச்செந்தூரில் வசிக்கும் பேரா.கி.ஆழ்வார் ஆகியோருடனான அனுபவங்களை எல்லாம் எனது பேரா.திரு.குத்தாலிங்கம் சார் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.தன்னுடைய மகன் அமெரிக்காவில் பணியாற்றுவது பற்றியும் அங்கு இருக்கும் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றுவது பற்றியும் குறிப்பிட்டார்கள். அவர் சென்னையில் இருக்கும் தனது மகள் வீட்டிற்கு வந்த நேரத்தில் அவரைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..திரு.குத்தாலிங்கம் சார் அவர்களின் மனைவி,அவரின் மகள்,பேரக்குழந்தை ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.தனது பேத்தி வரைந்து சுவரில் மாட்டியிருக்கும் படங்களை எல்லாம் பேரா.குத்தாலிங்கம் சார் காட்டினார்.அருமையாக இருந்தன அந்தப் படங்கள்.அந்தப் படங்களுக்கு முன்னால் நின்றே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
என்னோடு படித்த சில பழைய மாணவர்கள் மற்றும் எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் சிலரைப் பற்றியும் அவரின் மூலமாக அறிய முடிந்தது.16-ந்தேதி காலை என்பது மிக மகிழ்ச்சியான ஒரு சந்திப்பாக வாழ்க்கையில் அமைந்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
இந்தப் பதிவைப் படிக்கும் போது எனக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. சில ஆசிரியர்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் உங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி. அவர்கள் வழியில் நீங்களும் சிலருக்கு ஆசிரியராக விளங்கியது சிறப்பு.
ReplyDeleteநான் 1973 197 பேட்ஜ் நீங்கள் எந்த வருடம்
ReplyDeleteசில ஆசிரியர்கள் மனதில் அடிக்கடி உலம் வருவார்கள். சிலர் அன்பாக பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள், சிலர் எதிர்மறையாக உள்ளவர்கள். அவர்கள் நம்மை எதிர்கால வாழ்விற்கு செதுக்கியவர்கள். மிக்க நன்றியோடு நினைவுகூறுகிறேன் அவர்களை.
ReplyDeleteவணக்கம். நான் 1981-1984 சார்.
ReplyDeleteஆமாம் சார்மனதில் நீங்காத இடத்தை நமக்கு விருப்பமான ஆசிரியர்கள் பெற்று விடுகிறார்கள்.ஆசிரியர் தொழிலுக்கே உள்ள சிறப்பு அது.
ReplyDelete