Saturday, 28 January 2023

நீண்ட நாள் வாழ்வதற்கு வழி காட்டும் எலிகள்

                                        கட்டுரை: நீண்ட நாள் வாழ்வதற்கு வழி காட்டும் எலிகள்

                                                 முனைவர்.வா.நேரு


மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கும் அறிவைப்பெற்றுக்கொள்வதற்கும் நம்மைச்சுற்றி இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் நம்மைச்சுற்றி இருக்கும் விலங்குகளும் பறவைகளும் கூட பயன்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக கடவுளால் தான் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருந்த மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை தன்னுடைய பரிணாம வளர்ச்சிக் கொள்கையால் உண்டாக்கிய சார்லஸ் டார்வின் அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட, பல்வேறு இடங்களில் அவர் கண்ட ஆமைகள்தான் காரணமாக அமைந்தன. தன்னுடைய சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு இடத்திலும் கழுத்து நீண்டும், குட்டையாகவும் அமைந்த பலவகைப்பட்ட ஆமைகள்தான் அவரின் அறிவியல் ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.


சார்லஸ் டார்வின் அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது ஆமைகள் என்றால், இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சிலருக்கு ஒரு வகையான எலிகள் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்துகின்றன.



உலக அளவில் இறக்-கும் மனிதர்களில் இருவரில் ஒருவர் புற்று நோயால் இறக்கிறார் என்று புள்ளி விவரம் கூறுகிறது. எனவே புற்று நோய் வராமல் தடுப்பதற்கு அல்லது வந்து விட்டால் அதனை எதிர்த்து அழிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் அறிவிய-லாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்திருக்கும் எலிவகை என்பது அகழெலி என்று அழைக்-கப்படும் நேக்கட்மோல் எலி. புகழ்பெற்ற பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஸ் பல்கலைக்-கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஸ்மித் என்பவர் தலைமையில் இந்த நேக்கட் மோல் எலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். சுமார் 160 நேக்கட் மோல் எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள், இந்த எலிகளை 60 விழுக்காடு ஈரப்பதத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்து பராமரிக்கின்றனர்.

இந்த நேக்கட்மோல் எலிகளைப் பற்றி இந்தக் கொரோனா காலகட்டத்தில் அறிந்து கொள்வது பயனுள்ளதாகும். இந்தக் கொரோனா காலத்தில் மிக அதிகமாக நாம் கேள்விப்பட்ட சொல் ஆக்ஸிஜன் அளவு. ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் போய் விட்டதா? 90-க்கு மேல் இருக்கிறதா? எனப் படிக்காத மக்கள் கூட விசாரிக்கும் அளவுக்கு இந்த ஆக்சிஜன் அளவு குறித்து ஒரு விழிப்புணர்வு இந்தக் கொரோனா காலத்தில் ஏற்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் போனது, உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படாததால் ஏற்பட்ட உயிரிழப்பு என ஆக்சிஜன் பற்றிய செய்திகளாகவே நாம் இந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாகக் கேள்விப்பட்டோம். ஆக்சிஜன் அளவு வெறும் 5 இருக்கும் நிலையில் ,இந்த எலிகளால் 5 மணி நேரம் உயிர் வாழ முடியுமாம். இவ்வளவு குறைவான நிலையில் ஆக்சிஜன் அளவு இருந்தாலும் நன்றாக வாழும் ஓர் உயிரினம் உலகில் இருக்கிறது என்றால் நமக்கு வியப்பு! அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு நல்ல ஆராய்ச்சிக்கான பொருள். அதனால்தான் இந்த எலிகளைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


இந்த நேக்கட் மோல் எலிகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுவதில்லை. கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா காடுகளில் மட்டுமே இந்த நேக்கட் மோல் எலிகள் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு நம் ஊர் எலிகளைப் போல இல்லாது வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் எலிகள் இவை. இந்த எலியின் வாயிலிருந்து வெளியே பற்கள் நீண்டு இருக்கும். இந்த பற்களின் உதவியோடு பூமியைத் துளையிட்டு பொந்துகளை இந்த எலிகள் அமைக்கின்றன. பல கால்பந்து ஆடுகளங்களின் நீளத்திற்கு இந்த எலிகளின் பொந்துகள் பூமிக்கு அடியில் சுரங்கம் போல பல அறைகளுடன் இருக்கும். என்று குறிப்பிடுகின்றனர். சுரங்கம் தோண்டி ஒரு நகரத்தையே உருவாக்குவது போல இந்த எலிகள் தாங்கள் வாழும் இடத்தை உருவாக்குகின்றன. இந்த எலிகளின் தோல்களில் முடி இருக்காது. வெறும் 13 அங்குலம் மட்டுமே இருக்கும் இந்த எலிகளின் மரபணுக்கூறுகளை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


மனிதர்களின் வயதை அவர்களின் தலையில் விழும் வழுக்கை காட்டுகிறது, நரை முடி காட்டுகிறது. விழுந்து விட்ட பற்கள் காட்டுகின்றன. தோல்கள் சுருங்கி வயதைக் காட்டுகின்றன. ஆனால் அதிக ஆண்டுகள் வாழும் நேக்கட் எலிகளின் வயதைக் கணிப்பது கடினம். ஏனெனில், வயதானால் இவற்றின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குறைந்த அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது. வயதாகும் பாலூட்டிகளிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள் எதுவும் இந்த எலிகளுக்கு ஏற்படுவதில்லை. இதன் இதய செயல்பாடு, உடல் அமைப்பு, வளர்சிதை மாற்றம், எலும்பின் உறுதி என எதிலும் குறிப்பிடும் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை. சிறு வயதில் பார்த்தது போலவே இருக்கும் சில அபூர்வமான வயதான மனிதர்களைப் போல இந்த எலிகள் இருக்கின்றன.இந்த எலிகள் மற்ற எந்த பாலூட்டிகளையும் விட அதிக நாள்கள் பசியைத் தாங்கும் வலிமை பெற்றிருக்கின்றன.


இந்தக் கொரோனா காலகட்டத்தில் நாம் அதிகமாகக் கேள்விப்பட்ட இன்னொரு சொற்றொடர் ‘நோய் எதிர்ப்பு சக்தி’ திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய ‘வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் பழங்கள், காய்கறிகள் உணவுடன், உடற்பயிற்சி போன்றவற்றையும் தொடர்ந்து தனது கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படிப் பார்க்கும்போது இந்த எலிகளுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வியப்புக்குரியது. அதாவது இந்த நேக்கட் மோல் எலிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி மனித உடலில் இருந்தால் மனிதர்கள் சராசரியாக 450 ஆண்டுகள் வாழலாம். அதாவது இந்த எலிகளின் சராசரி வயது 30 ஆண்டுகள். மனிதர்களின் உருவத்துடன் ஒப்பிடும்போது 450 ஆண்டுகள் மனிதர்கள் வாழ்வதற்குச் சமமானது இது. மனிதர்களைப் பாடாய்ப்படுத்தும் நோய்களுள் ஒன்று சர்க்கரை நோய்.இந்த நேக்கட் மோல் எலிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏதும் வருவதில்லை. அதற்கு உறுதுணையாக இதன் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது. என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

.குழு, குழுவாகத்தான் இந்த எலிகள் வாழ்கின்றன. ஒரு குழுவில் 70 முதல் 80 வரை உறுப்பினர்களாக எலிகள் இருக்கும் என்று சொல்கின்றனர். தேனீக்-களில் ராணித் தேனீக்கள் இருப்பதைப்போல ராணி நேக்கட் எலி இருக்கிறது. ஒரு ராணி நேக்கட் எலி இறந்துவிட்டால் அந்த இடத்-திற்கு வருவதற்கு போட்டி இருக்கிறது. சில நேரம் சண்டை கூட நடக்கிறது, ராணி நேக்கட் எலி போல வேலைக்கார நேக்கட் எலிகள் இருக்கின்றன என்று குறிப்பிடுகின்றனர் கூட்டமாக வாழ்வதிலும் கூட நமக்கு இந்த எலிகள் முன்னோடிகள் போலும். பசியைத் தாங்கும் இந்த எலிகள் அதிக வலியைத் தாங்கும் வலிமையும் பெற்றிருக்கின்றன. மற்ற பாலூட்டிகளுக்குத் தோலில் இருக்கும் உணர்வு கடத்தி நரம்புகள்(neurotransmitters) இந்த நேக்கட் மோல் எலிகளுக்கு இல்லை.


80 விழுக்காடு கார்பன்-டை ஆக்சைடும், 20 விழுக்காடு ஆக்ஸிஜனும் இருக்கும் இடத்தில் இந்த எலிகள் நன்றாக வாழ்கின்றன. மற்ற எந்தப் பாலூட்டியாலும் இப்படி வாழ இயலாது. இது எப்படி என்பதையும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். “இது அநேகமாக இவற்றின் உயர் கார்பன்-டை-ஆக்சைடு சூழலில் ஏற்பட்ட பரிணாமத் தழுவலின் விளைவாக இருக்கும்“ என்று ஆராய்ச்சியாளர் ஸ்மித் விளக்குகிறார். இந்த எலிகள் சுவாசித்து வெளியே விடும் கார்பன்-டை-ஆக்சைடு, இவை வசிக்கும் பொந்துகளில் சிக்கி அதிகரிக்கத் தொடங்கும். இது போல வேறு எந்தப் பாலூட்டிகளுக்கும் ஏற்பட்டால், அவை நிச்சயமாக பிரச்சனைக்கு வழிவகுக்கும். கார்பன் டை ஆக்சைடு தண்ணீருடன் வினை புரிந்து, கார்போனிக் அமிலமாக மாறி, நரம்புகளில் வலியைத் தூண்டும். மனிதர்களுக்கு ஏற்படும் முடக்கு வாதம் போன்ற நோய்களில் இந்த வினை தான் நடக்கிறது. இதன் மூலம் அதிக வலி ஏற்படும். ஆனால், நேக்கட் மோல் எலிகளுக்கு இந்த வலி ஏதும் ஏற்படுவதில்லை. இந்த வலி என்பது நமக்கு ஏற்படும் காயத்தின் மீது எலுமிச்சை சாறு அல்லது வினிகரை ஊற்றும் போது ஏற்படும் வலிக்கு ஒப்பானது, என்கிறார் ஸ்மித். இந்த சகிப்புத்தன்மைக்கான மூலக்கூறு அடிப்படையை அவர் ஆய்வு செய்தார். அப்போது இந்த எலிக்கு உணர்வு நரம்புகளின் ஆக்டிவேட்டராக அந்த அமிலம் செயல்படாமல், ஒரு மயக்க மருந்து போல செயல்படக் காரணமான ஒரு மரபணுவை அடையாளம் கண்டார். அதைப்பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது.

மரபணு ஆராய்ச்சி என்பது மனித குலத்தின் மாபெரும் பாய்ச்சல்.மனிதர்களின் மரபணுக்குள் மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களின் ஆராய்ச்சி என்பது மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது மட்டுமல்ல, நோய்களிலிருந்து தப்பிக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும், பல நூறு ஆண்டுகள் வாழ்வதற்குமான வழிமுறைகளைச் சொல்வதாகவும் அமைகிறது.அப்படிப் பார்க்கும்போது இந்த நேக்கட் மோல் எலிகளின் வலி இல்லாத தன்மை,நோய் எதிர்ப்பு சக்தி, கார்பன்-டை ஆக்சைடு அதிகமாக இருக்கும் இடத்தில் வாழுதல், குறைந்த ஆக்ஸிஜன் இருக்கும் இடத்தில் வாழ்தல் எனும் பல காரணிகளை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நேக்கட் மோல் எலிகளின் வாழ்க்கை தான் மனிதர்கள் அதிக நாள் வாழ்வதற்கான இரகசியத்தைச் சொல்லித் தரப் போகிறது.

நன்றி

 1) பிபிசி தமிழ் இணையதளம் ,2.1.2023.

 2) https://en.wikipedia.org/wiki/Naked_mole-rat


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 16-31

          

No comments:

Post a Comment