Tuesday, 9 May 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(11)

                                        

                  மிக நன்றாகப் படிக்கும் பெண் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை....


தனது பணிப்பண்பாடு அனுபவத்தைத் தொடர ஆரம்பித்தார் எங்கள் தலைமை ஆசிரியர் .

"தேவதானப்பட்டியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எங்கள் இருவரையுமே நத்தத்திற்கு மாற்றி விட்டார்கள்.நாங்கள்(சாரும் அவரது மனைவியும்). மாறுதல் கேட்கவில்லை.ஒரு பெரிய மனிதர் சிபாரிசினால் தேவதானப்பட்டிக்கு ஒருவர் வரவேண்டியிருந்தது.அதற்காக எங்களை மாற்றி விட்டார்கள்.சரி என்று நாங்களும் தேவதானப்பட்டியில் இருந்து மாற்றலாகி நத்தம் வந்துவிட்டோம்.நத்தத்தில் அப்போது பெண்கள் பள்ளி எல்லாம் வந்துவிட்டது.என் துணைவியாரைப் பெண்கள் பள்ளியிலும் ,என்னை ஆண்கள் பள்ளியிலும் மாறுதல் போட்டு விட்டார்கள்.மீண்டும் ஒரு இரண்டு வருடம் நத்தத்தில் வேலைபார்த்தேன்.

நத்தத்தில் இருக்கும் போது மாணவர்களைத் தனது இல்லத்திற்கு வரவழைத்து அவர்களை விவாதிக்க செய்திருக்கிறார்." நத்தத்தில் எனது இல்லத்தில் ஞாயிறுதோறும் மாலை 6 முதல் 7 வரை 10 முதல் 20 மாணவர்கள் வரை வருவார்கள்.பாடங்களில் இருக்கும் சந்தேகங்கள் பற்றி  விவாதிப்பார்கள்.கேள்வி கேட்கத் தயங்கக்கூடாது என்பதை வலியுறுத்தினேன் " என்று குறிப்பிட்டார்.ஒரு ஆசிரியருக்கு தன் பாடத்தில் இருக்கும் தெளிவுதான் மாணவர்கள் மத்தியில் நிற்பதற்கும்,உரையாடுவதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும் தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.பாடம் சம்பந்தப்பட்ட எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேள், நான் பதில் சொல்கிறேன் என்று மாணவர்கள் மத்தியில் நிற்பதற்கு துணிச்சலைத் தருவது பாடம் குறித்த புரிதல்தான்.அதற்குத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொடுக்கிற ஆசிரியர் படித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

எனது தலைமை ஆசிரியர் சில மாதங்களுக்கு முன் கூட பேசிக்கொண்டு இருக்கும்போது 'எந்தப் பாடமாக இருந்தாலும் வாழ்க்கையோடு தொடர்பு படுத்திச்சொல்லித் தரவேண்டும்.வாழ்க்கையின் செயல்பாட்டில் எப்படிப் பயன்படுகிறது என்பதை மாணவ,மாணவிகளுக்கு விளக்க வேண்டும் ' என்றார்.வெறுமனே பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்யச்சொல்லி, எழுதிக் காட்டச்சொல்வதில் ஓர் ஆசிரியரின் வெற்றி இல்லை. வீடு கட்டுவதில்,கடற்பயணத்தில் முக்கோண இயலும்(Trigonometry),பிதாகரஸ் தேற்றமும் எப்படிப் பயன்படுகிறது என்பதை வகுப்பில் விளக்கிச்சொல்ல வேண்டும் என்பார்.அதற்கு அவனை/அவளை கேள்வி கேட்க வைக்க வேண்டும் என்பார்.

தன் பணிக்காலத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை விவரித்தார்.".மிக நன்றாகப் படிக்கின்ற பெண். ஒன்பதாம் வகுப்பில்  காலாண்டு,அரையாண்டு,முழு ஆண்டுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்.. இஸ்லாமிய வீட்டுப்பெண்.பத்தாம் வகுப்பு ஆரம்பித்து விட்டது.அந்தப்பெண் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை.இரண்டு மூன்று நாட்கள் நான் பொறுத்திருந்து பார்த்தேன். வரவில்லை. விசாரித்துப்பார்த்தபொழுது,அந்தப் பெண் பெரிய மனுஷி(பூப்பெய்து விட்டார்) ஆகி விட்டது என்று சொன்னார்கள். அந்தப்பெண் பூப்பெய்தி விட்டதால் ,அவரின் தந்தை நீ பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்ற செய்தி கிடைத்தது.அந்தப் பெண் வீடு எங்கே இருக்கிறது என்று விசாரித்து வைத்துக்கொண்டேன்.

மறு நாள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு அந்தப்பெண்ணின் வீட்டிற்குப் போனேன்.போய் வீட்டிற்கு முன்னால் நின்றேன்.அந்தப்பெண்ணின் தாயார்தான் என்னை முதலில் பார்த்தார். 'வாங்க சார்,வாங்க சார் ' என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் போய் அந்தப் பெண்ணின் தந்தையிடம் போய் இப்படி வாத்தியார் வந்திருக்கிறார் என்று அவர் சொல்வது கேட்டது.ரொம்ப நேரம் கழித்துத்தான் அவரது அப்பா வீட்டை விட்டு வெளியில் வந்தார். வந்தவுடன் 'சொல்லுங்க சார் ,என்ன விசயம் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள் ' என்றார்.'சாரை முதலில் உள்ளே கூப்பிடுங்க' என்று அவரது மனைவி சொல்ல, "வாங்க சார் ,வீட்டிற்குள் "என்று அவர் அழைக்க நான் உள்ளே போனேன்.

நான் உள்ளே போனவுடன் அந்த மாணவி வந்து 'வணக்கம் சார் ' என்று வணக்கம் போட்டு விட்டு உள்ளே போய்விட்டது. முகம் எல்லாம் அழுது அழுது வீங்கி இருந்தது. 'படிக்கவேண்டும் 'என்று சொல்லி அப்பா,அம்மாவிடம் அழுதிருக்கும்போல. அந்தப் பெண்ணின் தந்தையிடம் மிகப்பொறுமையாகப் பேசினேன். 'உங்கள் பெண் மிக நன்றாக படிக்கிறாள்.உறுதியாக 11ஆம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் இடம் பிடிப்பார். மிக நன்றாகப் படிக்கிற பெண். உங்களுக்கும் பெருமை வாங்கிக் கொடுப்பாள்.அவளும் மிக உயர்ந்த நிலைக்குத் தன் கல்வியால் மேலே போகும் வாய்ப்பு இருக்கிறது .பள்ளிக்கூடத்திற்கு தயவு செய்து அனுப்பி வையுங்கள் " என்று அவரிடம் மெதுவாகவும் பொறுமையாகவும் பேச ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் அவர் பிடி கொடுக்கவேயில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரது மனைவியும் அவரிடம் பெண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பலாம் என்று மெதுவாகச்சொன்னார்.கடைசியில் அந்தப் பெண்ணின் அப்பா பெண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப சம்மதித்து மறு நாளில் இருந்து அனுப்பி வைத்தார்.அந்தப் பெண்ணிற்கு அப்படி ஒரு சந்தோசம்.தீவிரமாகப் படித்து, நல்ல மதிப்பெண் 11-ஆம் வகுப்பில் எடுத்து கல்லூரிக்கும் படிக்கப்போனது, நல்ல வேலைக்கு ,அரசு வேலைக்கு அந்தப்பெண் பின்னாளில் போனது என்று குறிப்பிட்டார்.

நன்றாகப் படிக்கும் பெண் வகுப்பிற்கு வரவில்லை, ஏன் வரவில்லை என்று விசாரித்து பின்பு அந்தப்பெண்ணின் பெற்றோரோடு பேசி,பின்பு அந்தப்பெண் பள்ளிக்கு வந்து படித்து பெரிய நிலைக்கு வந்திருக்கிறார் என்றால்,என்ன பிரச்சனை என்று அறியக்கூடிய ஆர்வமும் மாணவ,மாணவிகள் மேல் இருந்த அந்த உண்மையான அன்பும்தான் அவரை வீடு தேடிப் போய் பேச செய்திருக்கிறது.இன்றைக்கும் கூட,  தன் பெண் பிள்ளைகளைப் படிக்கவைப்பதில் பல பெற்றோருக்கு, மனத்தடங்கல் இருக்கிறது.'வேற வீட்டிற்கு போற பொண்ணுதான...காலாகாலாத்தில் கல்யாணம் முடிச்சு கொடுக்கிற வழியைப் பார்ப்போம் 'என்னும் மனநிலைதான் பல பெற்றோருக்கு இருக்கிறது.ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னால் இன்னும் எவ்வளவு கூடுதலாக இருந்திருக்கும்.அந்தக் காலகட்டத்தில் என் தலைமை ஆசிரியரின் முயற்சி என்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. 'ஒரு பிள்ளை படிக்க வரவில்லை, ஆப்சண்ட் போட்டுவிட்டு, இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவோம் ' என்னும் மனநிலை அவருக்கு வரவில்லை.வீட்டிற்கு தேடிப் போய்ப் பேசி அந்தப் பெண் படிப்பதற்கு வழி செய்திருக்கிறார்.

நத்தத்தில் பெண்கள் பள்ளி வந்து விட்டால் கூட தொடக்கக்கால கட்டத்தில் 9,10,11 வகுப்புகள் அந்தப் பெண்கள் பள்ளியில் இல்லாமல் இருந்திருக்கிறது. இப்போதும் கூட பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்கும்போது ஒவ்வொரு வகுப்பாக சில நேரங்களில் அனுமதி கொடுப்பார்கள். முதல் வருடம் 6-வகுப்பிற்கு அனுமதி,இரண்டாம் வருடம் 7-ம் வகுப்பிற்கு அனுமதி என்று போகும்.எனவே இவர் நத்தத்தில் வேலை பார்க்கும்போது நத்தம் பெண்கள் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரைதான் இருந்திருக்கிறது.

 நத்தம் ஆண்கள் பள்ளியில்  9,10,11 வகுப்பில் மாணவிகளும் இருந்திருக்கிறார்கள்.அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் 11-ஆம் வகுப்பில் எல்லா செக்சனிலும் இருந்த மாணவிகளை மட்டும் வைத்து தனியாக ஒரு செக்சன் உருவாக்கியிருக்கிறார்.அதாவது 200 மாணவ,மாணவிகள்... 4 செக்சனிலும் இருந்தால்,பெண்களை மட்டும் ஒரு தனி செக்சனாகப் பிரித்து தலைமை ஆசிரியர் உருவாக்கியிருக்கிறார்.அதற்கு வகுப்பு ஆசிரியராக எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்களை  நியமித்து இருந்திருக்கிறார்.இவர் ஆங்கிலமும் கணக்கும் எடுத்து இருக்கிறார்.70 மாணவிகள்  மட்டுமே இவரது வகுப்பில் இருந்திருக்கிறார்கள். 70 பேரும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். செண்டம் ரிசல்ட்.அதில் ஒருவர் மாநில அளவில் ரேங்க் எடுத்தார். என்பதைக் குறிப்பிட்டார்.

ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தில் படித்த 70 மாணவிகளும் SSLC தேர்வில் வெற்றி பெறுவது,அதுவும் 1970 காலகட்டத்தில் என்றால் அது எவ்வளவு பெரிய வளர்ச்சி.எவ்வளவு பெரிய மகிழ்ச்சியை அந்தக் கிராமத்து மக்களுக்கு கொடுத்து இருக்கும்...இன்றைக்கு(08.05.2023) +2 தேர்வு முடிவுகள் வந்திருக்கிறது. வெற்றி பெற்றவர்களில் பெண்கள் சதவீதம்தான் ஆண்கள் சதவீதத்தை விட அதிகமாக இருக்கிறது,அதைப்போல மதிப்பெண் பட்டியலிலும் பெண்கள்தான் மிக அதிகமாக மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள்.பெண்கள் தங்களை  கல்வி மட்டும்தான் விடுவிக்கும் என்பதில் மிகத்தெளிவாக இருப்பதும் கற்பதும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பெற்றோர்கள் இடத்திலும் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

                                                                                                                    (தொடரும்)



No comments:

Post a Comment