கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையில் பத்திரிகைகள் மிகப் பெரும் பங்கினை வகிக்கின்றன. ஆண்டுதோறும் மே மாதம் 3-ஆம் தேதியை உலக பத்திரிகை சுதந்திர நாள் என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. பத்திரிகைகளுக்கு அரசாங்கம் நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதற்காகவும், உலகில் உள்ள பல நாடுகளிலும் பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிடும் நாளாகவும், பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் நாளாகவும், பத்திரிகைக்காகச் செய்தி சேகரிக்கும் போது அல்லது உண்மையை பத்திரிகையில் எழுதியதற்காகக் கொல்லப்பட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
1993-ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர தினத்தை அய்.நா. சபை அறிவித்தது. அந்த ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பத்திரிகை சம்பந்தப்பட்ட பல்வேறு தலைப்புகளில் மே மாதம் 3ஆம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு உலகப் பத்திரிகை சுதந்திர நாளான மே- 3ஆம் தேதி, ஊடக சுதந்திரத்திற்காகத் தன் வாழ்வினை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவருக்கு யுனெஸ்கோ நிறுவனம் யுனெஸ்கோ ஃகிலர்மோ கானோ விருது வழங்கிச் சிறப்பிக்கின்றது. கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசாவின் நினைவாக இந்த விருது 1997ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவர் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி, இவரது அலுவலகம் முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார். பத்திரிகை சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு, அதன் பொருட்டு உயிர் நீத்தவர் என்பதால் அவரைப் பெருமைப்படுத்தும் நோக்கில் இந்த விருது அவரது பெயரால் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று ஊடகம் என்னும் பொதுச்சொல் பத்திரிகையையும் குறிப்பிடுகின்றது. அதோடு தொலைக்காட்சிகள், வானொலிகள், இணைய வழிச் செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் என அனைத்தும் ஊடகங்கள் என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு (2022) உலக பத்திரிக்கை சுதந்திர தினக் கருதுகோளாக (Theme) ‘டிஜிட்டல் முற்றுகைக்குள் பத்திரிகைத்துறை’ எனக் குறிப்பிட்டு அதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லா செய்திகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனால் எல்லா பத்திரிகைகளின் விற்பனையும் குறைகிறது.இதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், இன்டர்நெட் வழியாகக் கிடைக்கும் செய்திகளின் உண்மைத் தன்மை பற்றியும், ஊடகங்கள் மற்றும் செய்திகள் பற்றிய கல்வி அறிவை வளர்ப்பது பற்றியும் கடந்த ஆண்டு பேசப்பட்டது. கொரோனா காலத்தில் பத்திரிகைத் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.ஊரடங்கு காலத்தில் எல்லா பத்திரிகைகளும் தங்கள் பத்திரிகைப் பணியை நிறுத்தின. ஆனால், அந்த நேரத்தில் கூட ‘‘விடுதலை’’ பத்திரிகை PDF பத்திரிகையாக அச்சாகி பலருக்கும் வாட்சப், முக நூல், மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு(2023) உலக பத்திரிகை தினக் கருதுகோளாக “உரிமைகளால் ஆன எதிர்காலத்தை உருவாக்குவோம்.அனைத்து மனித உரிமைகளையும் அடைவதற்கான வழி கருத்துச் சுதந்திரமே. கருத்துச் சுதந்திரத்தின் வழியாக மனிதகுலம் மகிழ்ச்சியாக இருக்கவும் மானுட உரிமைகளை அடையவும் வழி வகுப்போம். . (Celebrated every 3rd of May, this year’s theme for the Day will be “Shaping a Future of Rights: Freedom of expression as a driver for all other human rights” (working title), signifying the enabling element of freedom of expression to enjoy and protect all other human rights.) என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஆண்டு முழுவதும் உலக நாடுகள் பேசப்போகின்றன.
வெவ்வேறு நாடுகளில் ஊடக சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. கனடா, அய்க்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. இஸ்ரேல் 88ஆம் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 138ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இடமான 180ஆம் இடத்துக்கு வட கொரியா தெரிவாகியுள்ளது.
இந்தியாவில் ஊடக சுதந்திரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகக் கூறியுள்ள எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்கள் அமைப்பு (ஆர்எஸ்எஃப்) ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்களில் ஒருவராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை பட்டியலிட்டுள்ளது.Reporters Without Borders (RSF) என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை கடுமையாக ஒடுக்கும் நாட்டுத் தலைவர்களின் சித்திரத்தை gallery of grim portraits என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. 37 நாடுகளின் தலைவர்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் சித்திரமும் இடம்பெற்றுள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த அண்மைய ஆண்டு அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதில் ‘மனித உரிமை மீறல் சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. சிறுபான்மை சமூக மக்கள், அரசை விமர்சிப்பவர்கள், பத்திரிகையாளர்கள் குறி வைக்கப்படுகின்றனர்’ என்று இந்தியா குறித்து அதில் கூறப்பட்டுள்ளது.
“இந்தியாவில் அரசு அமைப்புகளால் சட்ட விரோதமான, தன்னிச்சையான கொலைகள் நடந்துள்ளன. சிறைகளில் கைதிகள் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற வழிகளில் நடத்தப்படுகின்றனர். அரசியல் கைதிகள் மனம் போனபடி தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள், ஊடகங்கள் மீது அரசு தடைகளை விதிக்கிறது. செய்தியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன அல்லது குற்றவியல் வழக்குகளால் அவர்கள் அச்சுறுத்தப் படுகின்றனர். இணையத்தைத் தடுப்பதன் மூலம் மக்கள் தொடர்பு சீர்குலைக்கப்படுகிறது.” என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே”
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஊரினை, நாட்டை, இந்த உலகினை ஒன்று சேர்க்க உண்மையைச் சொல்ல வேண்டும். அப்படி உண்மையைச் சொல்லும் ஊடகம்தான் பத்திரிகை. வரலாறு முழுக்க நாம் கவனித்தால் உண்மையைச் சொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதானது இல்லை.அதிலும் பத்திரிக்கைகளின் வழியாக உண்மையைச் சொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக நமது நாட்டில் இல்லை என்பதை மேற்கண்ட அறிக்கைகளும், நாட்டில் நம்மைச்சுற்றி நடைபெறும் நிகழ்வுகளும் நமக்கு உணர்த்துகின்றன.
தான் நடத்திய பத்திரிகைக்கு ‘‘உண்மை’’ எனப் பெயர் வைத்தவர் பெரியார். உண்மையை
மக்கள் மத்தியில் சொல்லி அவர்களை மேம்படுத்துவதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.”
‘இதழ்களின் நிறுவனர், இதழ்களின் வெளியீட்டாளர்,இதழ்களின் ஆசிரியர் ‘என்னும் நிலைகளில் முழு வாய்மைப் போர் நடத்தியவர் தந்தை பெரியார்… இதழ்களை சுயமரியாதை இயக்கத்தின் உயிர்ப்பாகக் கருதினார் பெரியார்… பல்வேறு தடைச் சட்டங்களும், அடக்குமுறைகளும், ஒடுக்குதலும், பறிமுதலும், சிறைத் தண்டனையும், தண்டத் தொகை செலுத்துதலும், வழக்குகளும் நடைபெற்று அனுபவித்து வந்த போதிலும் விடாமல் தொடர்ந்து இதழ்களை நடத்தி தன் முயற்சியில் வெற்றி பெற்றவர் பெரியார். ‘தமிழ்க் கிழமை இதழ் ‘‘குடி அரசு’’, ஆங்கில மாதிகை ரிவோல்ட் (Revolt), தமிழ்க்கிழமை இதழ் ‘‘புரட்சி’’, தமிழ் நாளிதழ் ‘‘பகுத்தறிவு’’, தமிழ்க் கிழமை இதழ் ‘‘பகுத்தறிவு’’, தமிழ் மாதிகை ‘‘பகுத்தறிவு’’, தமிழ் நாளேடு விடுதலை, ஆங்கில மாதிகை ‘‘ஜஸ்டிசைட்‘’ (Justicite) தமிழ் மாதிகை ‘‘உண்மை’’, ஆங்கில மாதிகை ‘‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’’ (The Modern Rationalist) நீதிக்கட்சியின் நாளேடு ‘‘திராவிடன்’’ ஆகியவற்றின் பொறுப்புகளை மேற்கொண்டு நடத்திய நாற்பத்தெட்டு ஆண்டுகாலப் பட்டறிவுப் பழமாக விளங்கினார் பெரியார்“ என்று குறிப்பிடும் அய்யா இறையனார் ‘இதழ்களின் அடிப்படைக் குறிக்கோள் உண்மையாகத்தான் இருக்க முடியும்,இருக்க வேண்டும்“ என்கிறார் (இதழாளர் பெரியார், அ. இறையன்).
பத்திரிகைகளின் அடிப்படைக் குறிக்கோள் உண்மையாக இருக்கும் போது அதற்கு ஏற்படும் இன்னல்களும் அதிகம். தந்தை பெரியார் அனுபவித்த துன்பத்தைவிட கூடுதலான துன்பத்தை அன்னை மணியம்மையார் அவர்கள் நெருக்கடி நிலை காலத்தில் ‘விடுதலை’ பத்திரிகை நடத்துவதில் அனுபவித்தார்கள்.அன்னை மணியம்மையாருக்குப் பின்னால், எதிர் நீச்சல் பாணியில்தான் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யை நடத்தி வருகிறார்கள்.அய்யா ஆசிரியர் அவர்களுக்கு ‘விடுதலை’ பத்திரிகையின் மீது இருக்கும் பிடிப்பு நாம் அனைவரும் அறிந்ததே.60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாளிதழின் ஆசிரியராக இருப்பவர் என்னும் உலகச் சாதனைப் பெருமையை அய்யா ஆசிரியர் அவர்கள் பெற்று, நமக்கெல்லாம் பெருமை சேர்த்துக் கொடுத்திருக்கிறார். தந்தை பெரியார் நடத்திய அத்தனை பத்திரிகைகளையும் ‘‘விடுதலை,’’ ‘‘உண்மை’’, ‘‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’’ பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்துவதோடு, குழந்தைகளுக்கான ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழையும், ஆராய்ச்சிக்கான காலாண்டு இதழாக ‘‘திராவிடப்பொழில்’’ ‘‘இதழையும் நிறுவி தொடர்ந்து நடத்தி வருகிறார். ‘இதழாளர் ஆசிரியர்’ என்னும் நூல் எழுதப்பட்டு வெளிவந்தால்,இளைய தலைமுறைக்கு புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும் புத்தகமாக இருக்கும்.
“(1962) திருப்பரங்குன்றத்தில்நடைபெற்ற தி.மு. கழக 3ஆவது மாநில மாநாட்டில்; “என்னை வெளி மாநில நிருபர்கள்அல்லது வெளி நாட்டு நிருபர்கள்சந்தித்து, ‘‘நீ என்ன தொழில்செய்கிறாய்?’’ என்று கேட்கும்போது, ‘நான் ஒரு பத்திரிகையாளன் என்று சொல்வது வழக்கம்” எனப் பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார்.(திராவிட இயக்க இதழ்கள், மணிவாசகர் பதிப்பகம்).தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்வதில் எப்போதும் பெருமைப்பட்டவர் நமது மேனாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள்.”1967இல் ஒன்பது பேர் கொண்ட தி.மு.க. அமைச்சரவையை அறிஞர் அண்ணா அமைத்த போது, அதில் அய்ந்து பேர் இதழாசிரியர்களாக இருந்தவர்கள் என்பது, திராவிட இதழியல் வரலாற்றில் மட்டும் அல்லாமல், இந்திய இதழியல் வரலாற்றிலேயே தனித்து இடம் பெறத் தக்க ஒரு சிறப்புச் செய்தியாகக் குறிப்பிடப்படுகிறது”..இன்றைய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் தான் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறார்.
“தமிழ், தெலுங்கு, மலையாள, ஆங்கில திராவிட இயக்க இதழ்களின் எண்ணிக்கை 257. திராவிட இயக்க இதழ்களின் முன்னோடியாக வெளிவந்தவை 14 “என திராவிட இயக்க சிந்தனையாளர் க. திருநாவுக்கரசு ‘திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் திராவிட இயக்க இதழ்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். எண்ணிப் பாருங்கள், 70,80 ஆண்டுகளுக்கு முன்னால் 257 பத்திரிகை, 257 பத்திரிகை ஆசிரியர்கள் என்றால் திராவிட இயக்கத்தின் உயிர்மூச்சாய் பத்திரிகைகள்தான் இருந்திருக்கின்றன. திராவிட இதழ்களைத் தொடங்கியவர்களில் பெரும்பாலோர் பொருள் வசதி அற்றவர்கள்.; இயக்கத்தின்மீது உள்ள பற்றும், ஆர்வமும்தான் அவர்களைப் பத்திரிகை நடத்த வைத்திருக்கிறது.
இன்றைக்கு முகநூலும் ,வாட்சப்பும், இன்ஸ்டாகிராமும், வலைத்தளமும் மின்னஞ்சலும் பத்திரிகைகளைப் போலவே செய்திகளைப் பலரிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. இந்த இணைய ஊடகத்திலும் திராவிட இயக்கத்தினர் பெரும்பங்கு ஆற்றுகிறார்கள்..அன்றைக்குப் போலவே இன்றைக்கும் மதவாதிகளால், ஜாதியவாதிகளால் திராவிட இயக்கத்து தோழர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் கெடுபிடி இருக்கிறது. என்றாலும் பத்திரிகை சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் நாளாக, மே 3ஆம் தேதியை நாம் கடைப்பிடிப்போம்.விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.அஞ்சாமல் உண்மைகளை எழுதுவோம். ’எல்லோருக்கும் எல்லாம்‘ என்னும் திராவிட இயக்கத்தின் இலட்சியத்தை அடைய எந்த விலை கொடுக்கவும் தயாராவோம்.
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 01-05-2023
This comment has been removed by a blog administrator.
ReplyDelete