Tuesday, 20 June 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(17)

            எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ண முடிந்தது...

தொண்டியில் தான் வேலை பார்த்த அனுபங்களை என் தலைமை ஆசிரியர் சொல்லியிருப்பதால் அந்த ஊரைப் பற்றி இணையத்தில் தேடினேன்.தொண்டி என்பது மிகப்புகழ் வாய்ந்த ஊர் என்பதையும் .அந்த ஊரைப் பற்றிய பல செய்திகள் இணையத்தில் கிடைப்பதையும் அறிய முடிந்தது.

.“தொண்டி (ஆங்கிலம்:Thondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்இராமநாதபுரம் மாவட்டத்தின் 7 பேரூராட்சிகளில் ஒன்றாகும். இது திருவாடானை வட்டத்தில் உள்ளது. இது 12 வருவாய் கிராமங்களைக் கொண்டது. இது இராமநாதபுரத்திலிருந்து 44 கிமீ தொலைவிலும், சிவகங்கையிலிருந்து 58 கிமீ தொலைவிலும், தேவக்கோட்டை ரஸ்தா தொடருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,859 வீடுகளும், 18,465 மக்கள்தொகையும் கொண்டது.

இது 10.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 132 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருவாடானை (சட்டமன்றத் தொகுதி)க்கும்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.இது தொண்டி ஊர் பற்றிய செய்தி.

இனித் தொண்டியில் என் தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் வேலை பார்த்த அனுபவங்கள் அவரது சொற்களில் .” தொண்டியில் பள்ளி கட்டமைப்பு பக்காவாக இருந்தது. கட்டிடங்கள்,நூலகம் எல்லாம் மிக நன்றாக இருந்தது.நிறைய முஸ்லிம்கள் இருக்கும் பகுதி அது.முதலில் தனியார் பள்ளியை ஆரம்பித்திருக்கிறார்கள்.பின்பு அப்படியே அதனை அரசாங்கத்திற்கு கொடுத்து விட்டார்கள்.மின்சாரம் உட்பட அனைத்து வசதிகளும் இருந்தது.புதிதாக நாம் எழுதி வாங்க வேண்டியதாக ஒன்றும் இல்லை.என்ன அங்கு பிரச்சனை என்றால் தொலைதூரம்.தங்கினாலும் அந்தக் காலத்தில் சாப்பாடு கிடைக்காது.தங்க வீடும் எளிதாகக் கிடைக்காது.இது எல்லாம் அங்கு இருந்த குறைபாடுகள்.அந்தப் பள்ளியின்  தண்ணீர் வேறு குடிக்க முடியாது.(கடல் பக்கத்தில் இருப்பதால் உப்பாக இருக்குமாங்க சார்-நான்) .இல்லை,கலங்கலாக இருக்கும்.ஒரிஜினல் தண்ணீரே அப்படி.சுண்ணாம்புத் தண்ணீர் என்பார்கள்.மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று அங்கிருந்து ஒருவர் மதுரை மாவட்டம் வந்திருக்கிறார். நான் அவருக்குப் பதிலாக அங்கு போகிறேன். இவ்வளவு வசதிகள் இருந்தால்கூட அங்கு பள்ளி வளர்ச்சி இல்லை. காரணம் அங்கு இருக்கும் ஆசிரியர்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்பைக் கோரவில்லை.ஒரு சர்வாதிகாரமாகத்தான் இருந்திருக்கிறார்கள். சட்டப்படி ஆசிரியர்களுக்கு என்ன செய்யலாம் என்பதைக் கூட அவர்கள் செய்யவில்லை..”அவ்வளவுதாய்யா…”இப்படியே. சொல்லி இருக்கிறார்கள்.அது அன்றைக்கு இருந்த சூழல். தமிழ்நாடு முழுவதும் இருந்த நிலைமை அதுதான்.

 

நான் சென்றவுடன் முதலில் ஆசிரியர்கள் கூட்டம் போட்டேன்.அவர்களிடம் பேசினேன்.அவர்கள் தங்கள் குறைகளை எல்லாம் சொல்லி புலம்பினார்கள்.”சொல்லுங்க,என்னென்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் “ என்று பொறுமையாக அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டேன்.”அது வரவில்லை,இது வரவில்லை” என்று சொன்னார்கள். “எல்லாவற்றையும் எழுதிக் கொடுங்கள் “ என்று சொல்லி எழுதி வாங்கினேன்.அதோடு நிர்வாகத்தில் ஆசிரியர்களைக் கொண்டு வரவேண்டும்.அது கட்டாயம் .கொண்டு வரவேண்டும்.அதாவது வரும் நிதிகளை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? என்று சொல்லி ஒவ்வொரு நிதிக்கும் ஒவ்வொரு கமிட்டி அமைக்கவேண்டும்.அதில் ஆசிரியர்கள்தான் இருக்கவேண்டும்.அதைக்கூட அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் அவர்களாகச் செலவழித்துவிட்டு,பின்பு ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.படிக்கத் தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்குவது போல வாங்கி இருக்கிறார்கள்.

 

நான் ஆசிரியர்களை அழைத்து,கமிட்டி எல்லாம் போட்டு ,நீங்கள் செயலாளராக  இருங்கள்,நீங்கள் உறுப்பினராக இருங்கள் என்று சொல்லி கமிட்டி அமைத்தது எல்லாம் ஆசிரியர்களுக்கு மிகப்புதிதாக இருந்தது.இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க சார் என்றார்கள்.பரவாயில்லை,என்று சொல்லி அப்புறம் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொன்னேன்.அதையெல்லாம் கிளார்க்குகளிடம் சொல்லி டைப் செய்யச்சொன்னேன்.தொண்டிப் பள்ளிக்கூடத்தில் டைப்ரைட்டர் எல்லாம் மிக நன்றாக இருந்தது.கிளர்க்குகள்  நிறைய இருந்தார்கள்.பெரிய இரும்பு  நாற்காலி இருந்தது.அவர்களை எல்லாரையும் இணைத்து,ஆசிரியர்களிடமே ‘என்ன பத்திரிக்கை வாங்கலாம்,நீங்களே சொல்லுங்கள் “ என்று சொல்லி பிறகு எல்லோரின் கருத்துப்படி சில பத்திரிக்கைகளை பள்ளிக்கூடத்திற்கு வாங்கினோம்.

 

அதற்கு அடுத்து வேறு என்ன செய்யவேண்டும் ,சொல்லுங்கள் என்று ஆசிரியர்களிடமே கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லைங்க சார் என்று சொன்னார்கள்.எல்லாவற்றையும் அவர்களின் ஒத்துழைப்போடு ஒழுங்கு பண்ண முடிந்தது.மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க முடிந்தது.மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைய எல்லோரும் சேர்ந்து உழைத்தோம்.

எனக்கு வீடு ஒன்றும் கிடைக்கவில்லை.பள்ளிக்கூடத்திலேயே தங்கிக் கொண்டேன்.டாய்லெட் உட்பட எல்லாம் அந்தப் பள்ளியில் இருந்தது.அதனால் ஒன்றும் பிரச்சனை இல்லாமல் அங்கேயே தங்கினேன். சனி,ஞாயிறு மட்டும்தான் ஊருக்குப் போவேன்(சாப்டூர் போல).அப்படி ஒரு தடவை போனபோது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை(C.E.O)வைப் பார்த்தேன். சார்,இப்படி நான் தொண்டியில் வேலை பார்க்கின்றேன்.என் குடும்பம் மதுரையில் இருக்கிறது.வெகு தூரமாக இருக்கிறது.எனக்கு இராமநாதபுரம் மாவட்டத்திலேயே  கூட பக்கத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் கிடைத்தால் பரவாயில்லை என்று சொன்னேன்.அப்படியா என்று கேட்டார்.சரி நீங்கள் போங்கள் என்றார். இரண்டு நாளில் எனக்கு தொண்டியில் இருந்து மாறுதல் செய்து உத்தரவு வந்தது ….என்றார்.

எனது தலைமை ஆசிரியரின் சொற்களை வைத்துப்பார்க்கிறபோது,அவர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியராக இருக்கும்போது முழுமையான ஜனநாயகவாதியாக இருந்திருக்கிறார்.அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து சென்றால்தான் மாணவர்களுக்கு முழுப்பயனையும் கொடுக்க இயலும் என்ற அடிப்படையில் வேலை செய்திருக்கின்றார்.மாணவர்களின் குறைகளைத் தீர்த்து அவர்களைப் படிப்பதற்கு தூண்டியதுபோலவே,ஆசிரியர்களின் குறைகளைத் தீர்த்து அவர்கள் உற்சாகமாக வேலை செய்யும் ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறார் என்பது புரிகின்றது.ஒருவர் மனநிறைவாக,உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போதுதானே அவரது சொற்களும் உற்சாகமாக இருக்கும்,மாணவர்களையும் உற்சாகப்படுத்தும்..

           (தொடரும்)

 

No comments:

Post a Comment