Tuesday, 27 June 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(18)

 

                       வகுப்பிற்குப் போன ஒரே தலைமை ஆசிரியர்


 தொண்டியிலிருந்து பாகனேரி என்னும் ஊருக்கு எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்களுக்கு மாறுதல் கிடைத்திருக்கிறது.அந்த மாறுதலைப் பற்றியும் அந்த ஊரில் வேலை பார்த்த அனுபவத்தையும் சார் சொல்வதைக் கேட்க நகைச்சுவையாகவும் ஈர்ப்பாகவும்  இருந்தது .பாகனேரி என்னும் ஊருக்கு நான் சென்றதில்லை. பாகனேரியைப் பற்றி இணையத்தில் தேடியபோது  

 “(பாகனேரிஊராட்சி )தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோயில் வட்டாரத்தில் அமைந்துள்ளதுஇந்த ஊராட்சிசிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2857 ஆகும். இவர்களில் பெண்கள் 1574 பேரும் ஆண்கள் 1283 பேரும் உள்ளனர்.” எனத் தகவல்கள் கிடைத்தது.

இனி எங்கள் தலைமை ஆசிரியர் சொற்களில்..“எனக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சொன்னதைப் போலவே இரண்டு நாளில் தொண்டியிருந்து மாறுதல் உத்தரவு பாகனேரி என்னும் ஊருக்கு வந்தது.பாகனேரி என்னும் ஊர்,காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த உ.சுப்பிரமணியம் அவர்களின் சொந்த ஊர்.அந்த ஊரில் அப்போது வேலை பார்த்த தலைமை ஆசிரியர் மேல் ஏகப்பட்ட புகார்கள்.அன்றைக்கு உ.சுப்பிரமணியம் அவர்கள்தான் அந்தப்பகுதியின் எம்.எல்.ஏ.அவரே நேரிடையாக வந்து சி.இ.ஓ.விடம் புகார் பண்ணியிருக்கின்றார்.அவரை மாற்றி விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.இவர்கள் அதற்கு,அவரை மாற்றி விட்டு புதிய ஆளைப் போடுவதற்கு ஆளைத் தேடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.என்னை பாகனேரியில் போட்டுவிட்டு,அவரை மாற்றி விட்டார்கள்.

 என்னிடம் சி.இ.ஓ. “ “நேரே நீங்கள் இங்க சி.இ.ஓ.ஆபிசுக்கு வந்து விடுங்கள்.பாகனேரியில் மீட்டிங் இருக்கிறது.என்னோடு நீங்கள் அங்கு வாருங்கள்.உங்களை நானே அறிமுகம் செய்து வைக்கின்றேன் “ என்று சொன்னார்.நான் போனேன்.அதே மாதிரி சி.இ.ஓ.வே என்னை அறிமுகம் செய்து வைத்தார்.சி.இ.ஓ,உ.சுப்பிரமணியம் அவர்களைப் பார்த்து “இந்தாங்கய்யா,புது ஆளைப் போட்டாச்சு,சரிதானே “ என்றார். அவர் “ சந்தோசம் “ என்று பதில் சொன்னார்.

 அந்தப் பள்ளிக்கூடமும் அப்படித்தான்.பள்ளிக்கூடம் நம்ம ஊர்(சாப்டூர்) மாதிரி ஊரை விட்டு வெளியே ரொம்ப தள்ளி…ஆனால் மெயின்ரோட்டில் பஸ்ஸில் போய் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இறங்கிக் கொள்ளலாம்.அந்தப் பள்ளிக்கூடத்திலும் எல்லா வசதியும் இருந்தது.அதுவும் ஒரே ஒருவர்,மலேசியா போய்விட்டு வந்தவர் ,அந்தப் பள்ளிக்கூடத்தை முழுவதும் அவரே கட்டிக் கொடுத்திருக்கின்றார்.மலேசியாவில் இருந்ததனால்,எல்லா வசதியும் பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றார்.அரசுப் பள்ளி என்றாலும் பர்னிச்சர்,டைப்ரைட்டர் எல்லாம் புதிதாக இருந்தது.எல்லா கிளாஸ் பிள்ளைகளுக்கும் உட்கார பர்னிச்சர் இருந்தது.கரண்ட் எல்லாம் இருந்தது. ஆனால் நான் வேலைபார்த்த இடங்களிலேயே ஒர்ஸ்ட்(worst) ஸ்கூல் அதுதான்.நிர்வாகம் சரியாக இல்லை.ஆசிரியர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.நிர்வாகம் சரியில்லாததால் அந்த இடம் ஒரு தண்டனைக்கு உரிய இடமாகவே கருதப்பட்டது.

 மிகப்பெரிய ஊருங்க பாகனேரி,மிகப்பெரிய ஊர். இரண்டு ஜாதிகள்தான் பெரும்பான்மை.ஒரு ஜாதிக்காரர்களில் பெரும்பாலோர் மலேசியா சென்று வந்தவர்கள்.அவர்களின் வீடுகள்,வணிகர்களின் வீடுகள் எல்லாம் பார்த்தால் பெரிய,பெரிய வீடுகள்.வசதியான ஊர்.அந்த ஊருக்குப் போய்ச்சேர்ந்தேன்.போய் எல்லாவற்றையும் பார்த்தேன்.எனக்கு முன்னால் இருந்த தலைமை ஆசிரியரின் தவறான நிர்வாகத்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் முரடர்களாக மாறிவிட்டார்கள்.எதுக்கும் கீழ்ப்படிவதில்லை என்று முடிவெடுத்து அங்கு இருந்தார்கள்.

 நான் அவர்களிடம் பேசினேன்.“ வாங்க,உங்கள் குறைகள் எல்லாம் என்னன்னு சொல்லுங்க..எல்லாம்(அடிப்படைக் கட்டமைப்பு) இங்கே இருக்கு.இங்கே வேண்டாதது எதுவும் இருந்தால் சொல்லுங்கள்,மாற்றிக் கொள்வோம்.இங்கு படிக்கிற எல்லாருமே கிராமத்து ஏழை வீட்டுப்பிள்ளைகள்தான்.பாகனேரி பணக்கார வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் மதுரையில் படிக்கின்றார்கள்.நாம ஏதாவது இந்தப் பிள்ளைகள் நன்றாக படிக்க வைப்பதற்கு செய்யணும் “ என்று சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் மனதை எல்லாம் மாற்றினேன்.

அவர்கள் மனம் மாறுவதற்கு நான் வகுப்பு எடுப்பதும் ஒரு காரணமாக அமைந்தது.தலைமை ஆசிரியர் ஆன பிறகு ,வகுப்பிற்குப் போன ஒரே தலைமை ஆசிரியர் நான்தான்.அது ரொம்ப முக்கியமானதுங்க.10-ஆம் வகுப்பிற்கு கண்டிப்பாக நான் ஆங்கிலப்பாடம் எடுப்பேன்.கணித ஆசிரியர் இல்லையென்றால் கணிதப் பாடம் எடுப்பேன்.அது ஒரு பிளஸ் பாயிண்டுங்க எனக்கு.அதனால் மற்ற ஆசிரியர்களால் நான் சொன்னதை ஒன்றும் தட்ட முடியவில்லை.அதே மாதிரி அந்தப் பள்ளியில் வேலை பார்த்த பல ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவைகள் போன்றவை எல்லாம் வராமல் இருந்தது.அவற்றையெல்லாம் நானே எழுதி,அலுவலகத்திற்கு அனுப்பி வாங்கிக் கொடுத்தேன்.அதனால் அவர்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்.” என்று குறிப்பிட்டார்.

 ஒரு தலைமைப்பொறுப்பில் இருப்பவர்,தனக்குக் கீழே இருப்பவர்களை எப்படிக் கருதுகிறார் என்பதுதான் அந்த இடத்தில் வேலை நடப்பதற்கான அடிப்படை.சிம்பதி,எம்பதி என்ற இரண்டு சொற்களைச்சொல்லும்போது,ஒருவரை அவர் இடத்தில் பொருத்திப்பார்த்து, நமது செயல்பாடுகள் அமைவதை எம்பதி என்று சொல்வார்கள். பெரும்பாலான தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் வெற்றி பெறுவதற்கு இந்த எம்பதி என்பதுதான் அடிப்படை.

 எனது தலைமை ஆசிரியர் அவர்களை நான் சந்தித்த வேளைகளில் சில நேரங்களில் சில கருத்துகளில் அவரோடு நான் முரண்பட நேர்ந்ததுண்டு. ஆனால் அவர் எதிர்கருத்தைச்சொல்கிறேன் என்றோ, நீ என்னிடம் படித்த பையன்..எனக்குத் தெரியாததா? என்ற நோக்கிலோ எப்போதும் என்னை அணுகியதில்லை. சில நேரங்களில் அவரின் மாணவனான நான் சொல்வதை அவர் மாணவரைப் போல அமைதியாக முழுமையாகக் கேட்பதைப் பார்த்து நான் வியந்து இருக்கிறேன். ஆனால் முழுமையாகக் கேட்டுவிட்டுத் தனது கருத்தை நான் சொன்னதையும் வைத்து இணைத்துச்சொல்வார்.அந்த அணுகுமுறைதான் அவரின் வெற்றிக்கு அடிப்படை என்று நினைக்கிறேன்.

 அந்த ஜனநாயகத்தன்மை,அடுத்தவர்கள் சொல்வதை முழுமையாகக் கேட்கவேண்டும் என்ற புரிதல்…அந்த அணுகுமுறைதான் அவரோடு வேலைபார்த்த பல ஆசிரியர்களையும் அவரோடு இணைந்து பல வேலைகளைச் செய்வதற்கு தூண்டியிருக்கிறது.பாகனேரி ஊரில் அவர் சொல்லிய “இங்கு படிக்கிற எல்லாருமே கிராமத்து ஏழை வீட்டுப்பிள்ளைகள்தான்.” என்ற புரிதல்,அரசுப்பள்ளிகளில் படிக்கிற பிள்ளைகள் ஏழை வீட்டுப்பிள்ளைகள்,அவர்கள் முன்னேற கல்வி ஒன்றே வழி.அதனைக் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்தப்பள்ளி மூலமாக நமக்குக் கிடைத்திருக்கிறது.அதனைக் கொடுப்போம் என்ற அணுகுமுறைதான் அவரின் வாழ்க்கை முழுவதும் இருந்திருக்கிறது.

 புகழ்பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் “ ஐயா,நான் தங்களுக்குக் கடன்பட்டவன்” எண்று தனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களைச்சுட்டிக் காட்டுவார் .(கனவு ஆசிரியர் புத்தகத்தில்).தான் ஏழாவது படிக்கும்போது,தன்னைக் கண்டுபிடித்தது தனது தமிழ் ஆசிரியர்தான் என்பதைச்சொல்லிவிட்டு “ஆசிரியர்கள் என்பவர்கள் மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள்,வெளிகளின் காற்றை உங்களுக்கு,நமக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள்,எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஒளி தந்தவர்கள்,அவர்கள் கைகளில் விளக்குகள் இல்லை,அவர்களே தீபங்களாக இருக்கிறார்கள் “ என ஒளி கொடுக்கும் தீபங்களாக ஆசிரியர்களைச்சுட்டிக் காட்டுவார்.அப்படித் தான் வேலை பார்த்த ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் இருட்டை விளக்கி ஒளி தந்தவராக எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் இருந்திருக்கின்றார்.பாகனேரியில் வேலைபார்த்த மீதி அனுபவத்தை எங்கள் தலைமை ஆசிரியர் சொன்னதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

                                                     (தொடரும்)


 

 

No comments:

Post a Comment