Friday, 28 July 2023

ஆடுகளைப் பார்த்து ஏமாறாதீர்கள்…

 


இளம் வயதில்

நான் பார்த்த ஓர் ஆள்

காவி கட்டி இருப்பார்

அப்போது அவருக்கு வயது

ஐம்பதுக்கும் மேல் இருக்கும்

முகம் முழுக்கத் திருநீறு இருக்கும்

 

ஆட்கள் மிகுதியாய் இருக்கும்

தெருவில் நடக்கும்போது

நடக்கும் வழியில் இருக்கும்

முட்களை எல்லாம் எடுத்து

ஓரமாகப் போடுவார்…

 

கனிவு பொங்கப் பேசுவார்..

கதைகள் எல்லாம் சொல்வார்..

எவனுக்கும் பயப்பட மாட்டேன் என்பார்..

அவரின் செயல்களைப் பார்த்தால்

கரை புரண்டு ஓடுகிறதோ

மனித நேயம் எனத்தோன்றும்..

 

 

காசுக்காகக் கொலைசெய்யும்

சிலரைக் காவலர்கள் பிடித்தபோது

இந்த ஆளும் நடுவில்

இருந்ததைப் பார்த்தபோதுதான்

‘அடப்பாவி ‘ எனக் கத்தத் தோன்றியது..

 

ஆடுகளைத் தோளில் போட்டு

இருப்பவன் எல்லாம் புத்தன் அல்ல..

ஆடுகளைப் பார்த்து

ஏமாறாதீர்கள் தமிழர்களே

என்று சொல்லத்தோன்றியது…

 

 

                              வா.நேரு,

                              28.07.2023.

Thursday, 27 July 2023

கறுப்புடை தரித்த அணி...

 


மக்களவையில்

இந்தியாவைக் காப்பாற்ற

‘இந்தியா’ அணியின்

உறுப்பினர்கள்

கறுப்பு உடை தரித்து

‘உரிமை முழக்கங்களை ‘

எழுப்புகிறார்கள்

 

தமிழ்நாட்டை பார்ப்பனியம்

சூழப்போகிறது...

இந்த நாள்  நமக்கெல்லாம்

துக்க நாள்...

கருப்புடை அணிந்து

கறுப்புக் கொடி ஏற்றுங்கள் என்றார்

தந்தை பெரியார்...

சுதந்திரம் வாங்கிய நாளில்..

 

இன்று காவி

இந்திய நாட்டையே

சூழ்ந்து நிற்கிறது...

வஞ்சகமும் சூழ்ச்சியுமாய்

படுபாதகம் செய்யும் சனாதனத்திற்கு

எதிராய் எல்லோரும் ஒன்றாய்

கருஞ்சட்டை உடையில்

மக்களவைக்குள்..

 

காவிகள் ‘மோடி,மோடி’ எனக்

கத்திக்கொண்டு இருக்கிறார்கள்...

பெற்ற சுதந்திரம் பறிபோய்விடுமோ..

ஜெர்மனியின் நாஜிகள் மீண்டும்

காவிப் போர்வைக்குள்

இந்தியாவில்

கால் பதித்துவிடுவார்களோ

எனும் அச்சத்தில்

‘இந்தியா’ எனும் பெயரில்

ஒன்றிணைந்து இருக்கிறார்கள்...


பட்டியல் இனத்து மக்களே

பழங்குடி மக்களே...

பிற்படுத்தப்பட்ட மக்களே...

சிறுபான்மை மக்களே..

ஒட்டு மொத்தத்தில்

பார்ப்பனரல்லாத மக்களே..

உங்களை எல்லாம் காப்பாற்ற

நாங்கள் ஒருங்கிணைந்து

கறுப்புடை தரித்து நிற்கின்றோம்

 

நீங்கள் எப்போது எங்களுக்கு

ஆதரவாய் ஒன்றிணையப்

போகிறீர்கள் என்று உரக்கக்

கேட்பது போல

உரிமை முழுக்கம் இடுகிறார்கள்

கறுப்புடை தரித்த நம்

மக்களவை உறுப்பினர்கள்..

 

கறுப்புடை எப்போதும்

பார்ப்பனரல்லாத மக்களை

ஒருங்கிணைக்கும்...

போராட்ட உணர்வேற்றும்...

பகை யார் என்பதைத்

தெளிவாக வரையறைக்கும்...

வந்து பார் என அறிவுத்திறமையால்

எதிரிக்கு அச்சமூட்டூம்...




 

‘கறுப்புடை ‘ தரித்த

‘இந்தியா ‘அணி வெல்லட்டும்..

மணிப்பூர் கொடுமைக்கெல்லாம்

முடிவு கட்டட்டும்....

 

                               வா.நேரு,

                                27.07.2023

Tuesday, 25 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(22)...முனைவர் வா.நேரு

 

அய்யா,என் மகனை உருப்படி ஆக்கி விட்டீர்கள்…

 

ஓர் ஆசிரியருக்குக் கிடைக்கும் மரியாதை என்பது சொற்களால் விளக்க முடியாதது.இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் நன்றி உணர்ச்சியால் வரும் மரியாதை அது.மதுரையில் இருக்கும் பிரபல வழக்கறிஞர் அண்ணன் சுந்தரம் அவர்கள்.எனது சொந்த ஊரான சாப்டூருக்கு மிக அருகில் இருக்கும் வண்டப்புலியைச்சார்ந்தவர். என்னோடு பத்தாம் வகுப்பில் அந்த ஊரைச்சேர்ந்த நண்பர்கள் ராஜாராம்,கிருஷ்ணமூர்த்தி(இப்போது காவல்துறை உதவி ஆய்வாளர்) ஆகியோர் உடன் படித்தனர்.அண்ணன் கல்யாணசுந்தரம் என்ற சுந்தரம் என் அண்ணனோடு பதினொன்றாம் வகுப்புவரை படித்தவர்.படிக்கும் காலத்தில்  சேட்டை என்றால் அப்படி ஒரு சேட்டை பண்ணும் கோஷ்டியைச்சார்ந்தவர்.வாழ்க்கையில் உறவினர் ஒருவர் சொன்ன சொல்லால் மனக்காயம் பட்டு ,ஒரு திருப்புமுனையால் வாழ்க்கையில் உந்தப்பட்டு பல மொழிகளைக் கற்று,இன்றைக்கு மிகப்பெரிய வழக்கறிஞராக மதுரையில் வசிப்பவர்.சாப்டூரில் அவர் 6-ஆம் வகுப்பில் மூக்கையா வாத்தியாரிடம் ஆங்கில எழுத்துகளைக் கற்றுக்கொண்டதை,ஆங்கில மனப்பாடப் பாட்டை தமிழில் எழுதிக் கொண்டு வந்து அதை வாசிக்கும்போது திரு.கோதண்டராமன் வாத்தியாரிடம்  மாட்டிக்கொண்டதை எல்லாம் சொல்லும்போது வாய்விட்டுச் சிரிக்கலாம்.அவரோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கு மிகப்பிடிக்கும்.நிறைய விசயங்களைப் பேசுவார்.உரிமையோடு எதார்த்தமாகவும் எங்கள் வட்டார மொழியையும் இணைத்துப் பேசுவார்.


“டேய், நான் சுப்புலாபுரம் போய்,மூக்கையா வாத்தியாரைப் பார்த்து,காலில் விழுந்து வணங்கி வந்தேன்” என்றார் ஒருமுறை.அண்ணன் சுந்தரத்திற்கு 6-ஆம் வகுப்பு பாடம் எடுத்தவர் திரு.மூக்கையா ஆசிரியர் அவர்கள்.’அவர் எல்லாம் இல்லாவிட்டால், நான் எல்லாம் உருப்பட்டிருக்கவே மாட்டேன்’என்றார்.ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஆசிரியரைச்சென்று பார்த்து அவரை வணங்கி வந்தேன் என்று சொல்லும்போது அவரிடம் இருந்த அந்த நன்றியுணர்ச்சி சொற்களில் தெரிந்தது. மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.உயரத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறோம்,எந்த இடத்தில் ,எப்படிப்பட்ட சூழலில் இருந்து படித்து இன்றைக்கு உயரத்தில் உட்கார்ந்திருக்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர்கள் ஆசிரியர்கள்தான்.


திரு.வீரிசெட்டி சார் அவர்களை நான் தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்க்கும்போது அடிக்கடி பார்ப்பேன்.சில நேரங்களில் இப்போது தல்லாகுளம் வாடிக்கையாளர் சேவை மையம் இருக்கும் இடத்திற்கு முன்னால் இருக்கும் டீக்கடையில் டீ குடிப்போம்.எப்போதும் டீயை ஆற்றித்தான் எனது தலைமை ஆசிரியர் குடிப்பார். பல் பிரச்சனையால் சூடாக சாப்பிடுவதில்லை என்றார் ஒருமுறை.பல நேரங்களில் அவருக்கு கொடுக்கும் டீயை வாங்கி முழுமையாக ஆற்றி நான் கொடுப்பேன்.அப்புறம் எனது டீயை நான் குடிப்பேன்.டீ குடிப்பதற்கும் அவர் கொஞ்சம் நேரம் எடுத்துக்குடிப்பார்.அப்படி ஒருமுறை நான் டீயை வாங்கி ஆற்றிக்கொண்டிருக்கும்போது ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்தப் பக்கம் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் எனது தலைமை ஆசிரியரைப் பார்த்தவர் ,வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு எங்கள் அருகில் வந்தார்.தமுக்கம் மைதானத்திற்கு முன்னால் ரோட்டில் இருக்கும் டீக்கடை அது.எப்போதும் வாகனங்களும் ஆட்களுமாக வெகு பரபரப்பாக இயங்கும் சாலை அது. நிறுத்திவிட்டு மேலே ஏறி வந்தவர்,எனது தலைமை ஆசிரியரின் காலில்  நெடுஞ்சாங்கிடையாக முழுமையாக விழுந்து வணங்கினார்.நானும் அவர் அருகில் இருக்கிறேன்.நான் சட்டென்று விலகினேன்.எனது தலைமை ஆசிரியர் அவரது பெயரைச்சொல்லி,’எழுந்திருங்க,எழுந்திருங்க,ஏன் இப்படி ரோட்டில்’ என்றார்.பின்பு அந்தக் காலில் விழுந்த நபர் எனது தலைமை ஆசிரியரிடம் நலமெல்லாம் விசாரித்தார்.இவரும் அவரிடம் நலமெல்லாம் விசாரித்தார்.அவர் சென்ற பிறகு அவர் யாரென்று நான் விசாரித்தேன்.

தான் வேலை பார்த்த … பள்ளியில் வேலை பார்த்த அலுவலர் அவர் என்றார். ஒரு சிக்கலில் அவர் மாட்டிக் கொண்டார்.அந்த நேரத்தில் அந்தச்சிக்கலில் இருந்து அவர் வெளியே வர நான் உதவினேன்.அந்த நன்றியுணர்ச்சியோடு இருக்கிறார் என்றார்.இப்படி பல பேருக்கு இக்கட்டான நேரங்களில் எனது தலைமை ஆசிரியர் உதவியிருக்கிறார்.


சாப்டூரில் தலைமை ஆசிரியராக திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் வேலை பார்த்த போது நடந்த ஒரு நிகழ்வு.அவரே சொல்லியது.எங்கள் ஊர் பெரியராஜா அவர்கள் எங்கள் தலைமை ஆசிரியரின் செயல்பாட்டால் ஈர்க்கப்படடு,பல முறை இவரிடம் பேசியிருக்கிறார்.இவரும் அவருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து பேசியிருக்கிறார்.


எங்கள் சாப்டூர் பேருந்து நிலையத்திலிருந்து எங்கள் ஊர் அரசு உயர் நிலைப்பள்ளி 1 கி.மீ.தூரத்திற்கு மேல் இருக்கும். பேருந்தை விட்டு இறங்கி,ஊரின் நடுத்தெரு வழியாக நடந்து ,ஊரைக் கடந்து அழகாபுரிச்சாலைக்குச்செல்லும் வழியில் இருக்கும் பள்ளிக்கு செல்லவேண்டும்.அந்த அழகாபுரிச்சாலையில்தான் எங்கள் ஊர் ஜமீந்தார்கள் திரு.பெரியாராஜா,திரு.தர்மராஜா அவர்களின் பங்களாக்கள் இருக்கிறது.அப்படி ஒரு முறை எங்கள் ஊர் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி,ஜமீந்தார் பங்களாவுக்கு அருகில் வரும்போது,பெரியராஜா அவர்கள் அங்கு நின்று கொண்டு இருந்திருக்கிறார்.எங்கள் தலைமை ஆசிரியர் வணங்கி இருக்கிறார் .எங்கள் தலைமை ஆசிரியருடன் பெரியராஜா அவர்கள்  பேச ஆரம்பித்திருக்கிறார்.இவரும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்..அப்போது அந்த வழியாக தலையில் கடலைக் கொடிக் கட்டை தூக்கிக்கொண்டு வந்த விவசாயி,எங்கள் தலைமை ஆசிரியரைப் பார்த்தவுடன் ,தலையில் இருந்த சுமையை ஓரமாக இறக்கிவைத்துவிட்டு, ‘அய்யா எனது பிள்ளையைப் படிக்க வச்சுட்டீங்க,ஆர்வமாகப் படிக்கிறான் இப்போது.அவனை உருப்பட வைத்து விட்டீர்கள் “ என்று சொல்லி எனது தலைமை ஆசிரியர் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.எங்கள் ஊரின் மிகப்பெரும் பணக்காரரான ஜமீந்தார் பெரியராஜா அவர்களுக்கு எங்கள் தலைமை ஆசிரியரின் மேல் மரியாதையும் ஈர்ப்பும் வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.


என்னைப் பொறுத்த அளவில் நான் காலில் விழுவதை ஏற்றுக்கொள்ளாதவன்.என்னுடைய சிறு வயதில்,எனது அம்மாவைப் பெற்ற பாட்டி,(எங்கள் அவ்வா..சண்முகத்தாய்) ‘டேய் ,உங்க அப்பா இறந்தபிறகு,உங்களை எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்க அம்மா வளக்கிறா,அவ காலில் விழுந்து கும்பிடு ‘ என்று சொன்னபோது, “என் காலில் மட்டுமல்ல,வாழ்வில் எவர் காலிலும் விழக்கூடாது “என்று எனது அம்மா சொன்ன சொல் இன்றும் கூட மனதில் நிற்கிறது.தந்தை பெரியாரின் பெரியாரியலைப் பின்பற்ற ஆரம்பித்த பின்பு,அரசியல்வாதிகள் எல்லாம் அவரவர் தலைவர்கள் காலில் விழுந்து வணங்குவதைப் பார்க்கும்போது மனதிற்குள் ஒரு மெல்லிய புன்னகை ஓடும்.அவை எல்லாம் பிரதிபலன் பார்த்து காலில் விழுவது.அதைச்சிலர் கலையாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூத்தவர்கள் காலில் விழுவது,தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் காலில் விழுவது என்பது மரியாதை காராணமாக பலர் விழுந்து வணங்குகிறார்கள்.அது சரியா?தவறா என்ற விவாததிற்குள் நான் போக விரும்பவில்லை.ஆனால் திரு.வீரிசெட்டி சார் அவர்களின் காலில் அவ்வளவு நன்றி உணர்ச்சியோடு பலர் விழுந்து வணங்கியதை நான் பார்த்திருக்கிறேன்.அப்படி பல மாணவ,மாணவிகள் ,உடன் பணியாற்றிய ஆசிரியர்கள்,ஊழியர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மை புரிந்தவராக,அவர்கள் மனதில் என்றும் நன்றி உணர்ச்சியை .ஏற்படுத்தக் கூடியவராக எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்…

                            (தொடரும்) 

Thursday, 20 July 2023

அண்மையில் படித்த புத்தகம் : கழிவறை இருக்கை...வா.நேரு

 

அண்மையில் படித்த புத்தகம் : கழிவறை இருக்கை

நூல் ஆசிரியர் : லதா
வெளியீடு     : நோராப் இம்ப்ரீண்ட்ஸ்,சென்னை-90
முதல் பதிப்பு  : நவம்பர் 2020
மொத்த பக்கங்கள் : 224, விலை ரூ 225

இந்த நூலின் ஆசிரியர் லதா ஆங்கில முதுகலைப் பட்டம் பெற்றவர்.நிதி நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர்.கார்ப்பரேட் துறையில் 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்.இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராக உருவெடுத்தவர்.பத்திரிக்கை ஆசிரியர்.மொழிபெயர்ப்பாளர்.2017-ஆம் ஆண்டு டாய்லெட் சீட் என்னும் ஆங்கில நூலை எழுதியுள்ளார்..தான் எழுதிய ஆங்கில நூலான டாய்லெட் சீட் என்னும் ஆங்கில நூலை தமிழில் கழிவறை இருக்கை என்னும் தலைப்பில் மொழி பெயர்த்து 2020-ல் வெளியிட்டுள்ளார். இது தவிர விரலிடை வெளிச்சம் மற்றும் பார்வை வெளிப்பயணம் என்னும் இரண்டு நூல்களை 2018-ல் வெளியிட்டுள்ளார்.

கழிவறை இருக்கை என்னும் இந்த நூல் கட்டுரைகளின் தொகுப்பு.'வாழ்வின் தேவைகள் ' என்னும் முதல் கட்டுரையில் ஆரம்பித்து ' இப்போதைய தேவையும் எதிர்காலத்தின் நம்பிக்கையும் ' என்னும் இறுதிக்கட்டுரை வரையிலான மொத்தம் 32 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.வாழ்வின் அடிப்படைத் தேவைகள் என்று நாம் உணவு,உடை,இருப்பிடம் என்னும் மூன்றை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் அடிப்படைத் தேவைகள் நான்கு. மேலே சொல்லப்பட்ட மூன்றோடு காமம் என்பதையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர் ஆதி மனிதனின் அடிப்படைத்தேவைகள் உணவும்,காமமும் மட்டுமே.மனிதன் நாகரிகம் அடைந்த பிறகு வந்ததுதான் உடையும்,இருப்பிடமும் என்று சொல்கின்றார்.ஆகவே உடைக்கும் இருப்பிடத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட காமத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூலாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

" காமம் என்ற அழகான,எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசியமான ஓர் அடிப்படை வாழ்வாதாரம்,இங்குக் கேவலப்பட்டு ,மற்றவர்களைத் தாக்கவும்,அழிக்கவும் ,அடிமைப்படுத்தவும் உபயோகப்படும் ஓர் அபாய மிக்க சாதனமாகிவிட்டது " என்று குறிப்பிடும் லதா " காமம் குறித்தான உரையாடல்கள் வெளிப்படையாக இருக்குமேயானால் ,நம் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் வன்புணர்வுகளை,பாலியல் தொந்தரவுகளை,மனப்பிறழ்வுகளின் வழியாய் நடக்கும் இழிவுகளைக் குறைக்கவும், நம் வருங்கால சந்ததியினரை இம்மாதிரியான மன,உடல் ரீதியான பிரச்சனைகளிலிருந்து காக்கவும் வழி வகுக்கலாம் " என்று குறிப்பிடுகின்றார்.

அண்மையில் மதுரையில் நான் கேட்ட  ஓர் உரையாடல்  எனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. 'பாவம்பா அந்தப் பிள்ளை.பத்தாவது படிக்கிற பிள்ளை. எவனோ அந்தப் பிள்ளையைக் கர்ப்பமாக்கி விட்டு விட்டான். நீயா விஷம் குடிக்கிறியா? இல்லை நாங்க விஷம் குடிக்கவா ?' என்று சொல்லிச் சொல்லி டார்ச்சர் கொடுத்து அந்தப்பிள்ளையை அப்பனும் ஆத்தாளும் சேர்ந்து விஷம் குடிக்க வச்சுட்டானுக. நோய் வாய்ப்பட்டு நிகழ்ந்த மரணம் போல மறைத்து விட்டார்கள் " என்று அந்த உரையாடல் நகர்ந்தது. உரையாடியவர்கள் மிகக் கவனமாக அந்தப் பெண்ணின் பெயரையோ,பள்ளியின் பெயரையோ சொல்லவில்லை.நாம் அழுத்திக் கேட்டாலும் விடை வராது.இளம் வயதிலிருந்து இந்த மாதிரியான உரையாடல்களை,செய்திகளை நாம் கேட்டுக் கொண்டுதான் வளர்ந்து வந்திருக்கிறோம்.எத்தனை இளம்பெண்கள் இப்படிச்சாகடிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் போயிருக்கிறார்கள்.இந்த மாதிரியான செய்திகள் வராமல் இருக்க சமூகம் என்ன செய்ய வேண்டும்,பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தான உரையாடலாக இந்தப்புத்தகம் இருக்கிறது.பேசுங்கள் வீட்டிலேயே காமம் பற்றி பேசுங்கள் என்று சொல்கின்றார்.மகனுக்கு அப்பாவும்,மகளுக்கு அம்மாவும் காமம் பற்றிய விவரங்களைக் குறிப்பிடவேண்டும் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நமது சமூகம் இன்னும் ஆணாதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது.காமத்தைப் பற்றி பெண் பேசுவது,எழுதுவது என்பதே ஒரு குற்றமாகத்தான் பார்க்கப்படுகிறது. ‘ஆண்கள் காமத்தை பொதுவில் பேசுவது அங்கீகரிக்கப்படுகிறது.பேசவும் செய்கிறார்கள்.ஆனால் பெண்கள் பொதுவாக பேசுவதில்லை.அப்படிப் பேசிவிட்டாலும் அவளை மனிதர்கள் பார்க்கும் கோணமே வேறுமாதிரி இருக்கிறது. ‘ என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் காமத்தைப் பற்றிப் பேசினாலே அவள் ஒரு மோசமான பெண்ணாகத்தான் இருப்பாள் என்று இந்தச் சமூகம் கருதுகிறது என்பதனை எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறாள் என்று குறிப்பிடும் ஆசிரியர் அப்படிப் பெண்ணைப் பொருளாகப் பார்ப்பவர்கள் ஆண்கள் மட்டுமல்ல,பெண்களும் அப்படித்தான் பார்க்கிறார்கள்.பெண் குழந்தைகள் வளர்க்கப்படும் முறையே அப்படித்தான் இருக்கிறது என்பதனைச்சுட்டுகிறார்.’ அவள் வளர்க்கப்படும் முறையிலேயே அவள் ஒரு பொருளாக,அறிவில்லாதவளாக,அழகானவளாக,மற்றவரை ஈர்க்க வேண்டியது ஒன்றே குறிக்கோளாக வாழ வைக்கப்படுகிறாள் ‘ அதனைப் போலவே ‘ஓர் ஆணாதிக்க சமூகத்தில் ,பெரும்பாலான மதங்களே பெண் என்பவள் ஆணிற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும் சமூகத்தில் ,ஒரு பெண் பொருளாக மட்டுமே பார்க்கப்படுவதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை ‘ என்பதனையும் குறிப்பிடுகிறார்.

இந்த நூலில் 'திருமணம் எனப்படும் அமைப்பு','திருமணமும் குடும்பமும்' 'சொந்தம் கொண்டாடும் மனப்பான்மை ' போன்ற தலைப்புகளில் கணவன் மனைவி உறவு மற்றும் குடும்பம் பற்றிய பல செய்திகளை மிக வெளிப்படையாக நூலாசிரியர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், " ஆண்-பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன்-மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம்.நமது கல்யாணத்தத்துவம் எல்லாம் சுருக்கமாகப்பார்த்தால் ,பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர,வேறு ஒன்றுமே இல்லை " என்று தந்தை பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள் ' என்னும் புத்தகத்தில் குறிப்பிடுவதைப் போல பெண்ணை இந்த திருமணமும் குடும்பம் என்னும் அமைப்பும் எப்படி எல்லாம் கட்டுப்படுத்துகிறது என்பதனை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.




"தொப்புள் கொடி அறுபட்டதிலிருந்து நம் குழந்தைகள் தனி மனிதர்கள் என்பதை உணரவேண்டும்.பெற்றோர் என்ற ஒரே காரணத்தால் நாம் கையில் எப்பொழுதும் ஒரு தடியை வைத்துக் கொண்டு சுற்றுவது சரியில்லை.அவர்களை நம்முடன் வாழும் இன்னொரு தனி மனிதராக நட்புடன் வளர்க்கக் கற்க வேண்டும்.நாம்தான் அவர்களின் நெருக்கமான தோழனாக/தோழியாக இருக்க வேண்டும்.இது மட்டுமே அவர்கள் சரியான பாதையில் பயணிக்க வைக்கும் யுக்தியாகும்" என்று நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.ஒரு மனிதரிடம் ஒரு குழந்தை போக விரும்பவில்லை என்றால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி,அந்த மனிதரிடம் குழந்தைகளைப் போக வைக்காதீர்கள். அவர் எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் குழந்தைக்கு போக விருப்பமில்லை என்றால்,ஏதோ ஒரு காரணம் குழந்தைக்கு இருக்கும்.அந்தக் காரணத்தை ,நம் குழந்தை நம்மிடம் சொல்லக்கூசலாம்,சொல்லாமல் இருக்கலாம்...அதனால் குழந்தையின் போக்கில் இருக்க விடுங்கள் என்று சொல்லும் கருத்து ஒரு வித்தியாசமான கோணமாக எனக்குத் தோன்றியது.

நூலில் நிறைய மேற்கோள்கள் இருக்கின்றன. காதலுக்கும் காமத்திற்குமான தொடர்பு,திருமணம் கடந்த உறவு,சுய இன்பம் குறித்த புரிதல்  போன்றவை ஒரு புதிய கோணத்தில் காமத்தை பார்க்கும் பார்வையை கொடுக்கின்றன.மூளையில் ஏற்படும் இராசயண மாற்றங்கள் பற்றியும்,காமம் அதிகமாக இருப்பதற்கும் ,இல்லாமலேயே இருப்பதற்குமான பலவிதக் காரணங்களை அறிவியல் உலகம் இன்றைக்கு இருக்கும் நவீன அறிவியலைக் கொண்டு ஒருபக்கம் விளக்க முற்படும் நிலையில் உளவியல் வழியாக காமம் பற்றிய பல புரிதல்களை வாசகர்களுக்கு கொடுக்க லதா முயற்சி செய்திருக்கிறார் இந்த நூலில்.காமம் பற்றிய தனது கருத்துகளின் மூலம் உலகத்தின் சிந்தனை போக்கை மாற்றிய சிக்மெண்ட் பிராய்டின் எழுத்துகள் போல பல இடங்களில் வாசிப்பவரை திடிக்கிட வைக்கிறார் லதா.


"லதா எழுதியிருக்கும் கட்டுரைகளில் சில நுட்பமான புள்ளிகள் இருக்கின்றன.இவர் தொட்டுச்செல்லும் கட்டுரைப் பொருள்கள் மிகவும் கவனமாகக் கையாளவேண்டியவை.தேர்ந்த தெளிவின் நீட்சியே அத்தகைய கருத்துக்களை வழங்க உதவும் " என்று இந்த நூலுக்கு 'உறைந்து சில்லிட்ட பனிக்கட்டி உடையும் ;உருகும்! " என்னும் தலைப்பில் முனைவர் தமிழ்மணவாளன் அணிந்துரை அளித்திருக்கிறார். ஒளவை பாடிய காமம் பற்றிய பாடலை சுட்டிக்காட்டி,பல நூற்றாண்டுகளுக்கு முன்பே காமம் பற்றி பெண்களே வெளிப்படையாக பேசிய தமிழ் சமூகம் எப்படி காலப்போக்கில் இப்படி மாறிப்போனது என்று வியப்படைந்து எழுதியுள்ளார்.உலகப்பொதுமறையாம் திருக்குறளின் 'காமத்துப்பால் ' மிகவும் வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் காமத்தை அணுகும்,விளக்கும் இலக்கியம் தானே. இன்றைக்குக் கூட காமத்துப்பாலை விட்டுவிட்டு அறத்துப்பாலையும்,பொருட்பாலையும் மட்டும் படித்தால் போதும்,காமத்துப்பால் படிக்கவேண்டாதது என்று சொல்லும் மனிதர்களும் நம்மைச்சுற்றி இருக்கத்தானே செய்கிறார்கள்...

"பெண் விடுதலை பேசும் நூல்களுள் இந்நூல் புதிய துணிச்சலான முயற்சி! பேசக் கூடாதென்ற பேசாப்பொருளை விரிவாகத் தரவுகளுடன் பேசுகிறது.ஒவ்வோர் ஆணும் பெண்ணும் படிக்கவேண்டிய நூல்! " என்று ஒரு விரிவான அணிந்துரையை 'பெண்ணியப்பார்வையிலிருந்து ..." என்று தலைப்பிட்டு முனைவர் நா.நளினிதேவி கொடுத்திருக்கின்றார்.இவர் 'அகவிடுதலையே பெண் விடுதலை ' என்னும் துணிச்சலான நூலினை எழுதியவர்.லதாவுக்கு முன்பே சமூகம் போட்டு வைத்திருக்கும் பல முகமூடிகளை பேனா முனையில் எழுதி அகற்ற முயற்சி செய்தவர் என்பதால் இவரது அணிந்துரையும் நூலைப்போலவே காட்டமாக இருக்கிறது.

" என் அனுபவங்களிலிருந்து ,என் சுற்றுச்சூழலில் நான் பார்த்தவைகளிலிருந்து ,மற்றவரிடம் கேட்டுத்தெரிந்தவைகளிலிருந்து,காமத்தை மிக எளிமையான முறையில் ஆராய்ந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது." என்று நூலாசிரியர் என்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆனால் நம்மைப்பொறுத்தவரையில்,தமிழ்ச்சமூகச்சூழலில் இது பெரும் முயற்சி.'மீ டூ ' இயக்கம் போல தன் வாழ்வில் நடந்த சில பாலியல் அத்துமீறல் செய்திகளை அவர் பகிர்ந்திருப்பதைப் படிக்கும்போது நெஞ்சம் பதறுகின்றது.எனக்கு மட்டுமல்ல, இதைப்போன்ற பல நிகழ்வுகள் பல பெண்களின் வாழ்க்கையில் இருக்கிறது.அதையெல்லாம் கேள்விப்பட்ட பின்புதான் இந்தப்புத்தகத்தை நான் எழுதத்துணிந்தேன் என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.


காமம் என்பதை பொத்தி,பொத்தி மறைத்து வைத்து,அவர்களுக்கு என்னவென்றே தெரியாமல் திருமணத்தை நடத்திவைத்து அதற்குப் பின் துன்பப்படும் குடும்பங்கள் நிறைந்தது நமது சமூகம்.செல்பேசி வழி இணைய இணைப்புகள் கிடைத்த இந்தக் காலகட்டத்தில் வன்மமும்,வக்கிரமும் நிறைந்த பாலியல் காட்சிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் எளிதில் கிட்டுகின்றன.இதனை முறைப்படுத்த எந்த வழியும் இல்லாமல் சமூகம் திண்டாடும் இந்த நேரத்தில் வழி தவறி,வாழும் முறை தவறி நம் இளைஞர் சமுதாயம்,மாணவர் சமுதாயம் கெட்டுப்போகாமல் இருக்க சில முன்னெடுப்புகள் தேவையாக இருக்கிறது.அப்படிப்பட்ட முன்னெடுப்பை எடுக்க நம்மை வலியுறுத்தும் நூலாக இந்த நூலை நாம் பார்க்கவேண்டும்.

உரையாட வேண்டிய பல கருத்துகளை உள்ளடக்கியதாக இந்த நூல் இருக்கிறது.இதில் இருக்கும் கருத்துகள் அனைத்தையும் ,நூறு சதவீதம் நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை.ஆனால் இந்த நூலைப் படித்து முடித்தவுடன் இதைப்பற்றிப் பேச வேண்டிய,அறிய வேண்டிய தேவை இருக்கிறது என்பதனை நம்மால் உணரமுடியும்.பழமைவாதிகள் படித்தால் அவர்களை அதிர்ச்சி கொள்ள வைக்கும் நூல் ஏனென்றால் பேசப்படாத பொருளைப் பற்றி ஒரு பெண் எழுதிய  நூல்.இப்படி ஒரு பெண் எழுதலாமா?,பேசலாமா? என்று சிலர் விமர்சனம் வைக்கக்கூடும். இன்றைக்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்கள்தான்.3 வயதுக்குழந்தை முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு சமூகத்தில் காமம் பற்றிப் பேசாமல்,அதைப் பற்றிய உரையாடல் இல்லாமல் எப்படி கடக்க இயலும்?...

ஒரு பெண்ணுக்கு இந்த உலகம் என்பது 'காமம் சூழ் உலகாக' இருக்கிறது. எந்த இடத்தில்,யாரால் தனக்குப் பாலியில் தொந்தரவு நிகழும் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க இயலாத உலகமாக இந்த உலகம் இருக்கிறது.எங்கு நிகழ்ந்தாலும்,யாரால் நிகழ்ந்தாலும் அதற்கான பழியை,வேதனையை,துன்ப வாழ்வைச்சுமக்கும் உயிராகப் பெண்ணே இருக்கிறாள்.ஏன் சில நேரங்களில் உயிரைத் துறக்கும் உயிராகவும் பெண்ணே இருக்கிறாள் எனவே ஒரு பெண் இதைப்பற்றி பேசத்துணிந்ததை நாம் பாராட்ட வேண்டும்.இன்னும் நிறைய பெண்கள் இதுபற்றிப் பேச வேண்டும்.

"எனக்குத் தெரிந்தவரையில் தமிழில் இத்தனை வெளிப்படையாக ஒரு புத்தகம் இதுவரை வந்ததாக நினைவில்லை.ஒரு தேர்ந்த மனநல ஆலோசகரும் ஒரு மகத்தான மனோதத்துவ நிபுணரும் சேர்ந்து எழுதிய புத்தகமாகவே இதை நான் பார்க்கிறேன்.யாருமே பேசாத விஷயங்களை லதா மிகவும் காத்திரமாக முன்வைத்திருக்கிறார் "என்று எழுத்தாளர் பவா.செல்லத்துரை குறிப்பிட்டதை இந்த நூலின் பின் அட்டையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.நாம் வாசிக்க வேண்டிய புத்தகம். வாசித்து யோசிக்க வேண்டிய புத்தகமும் கூட.

வா.நேரு.மதுரை.

Wednesday, 19 July 2023

அழிவது அனைத்தும்தான்…

 

    

நடுரோட்டில் நாம்

நடந்து கொண்டிருக்கும்போது

நம் உடலில் இருக்கும் சட்டை

திடீரெனத் தீப்பற்றி எரிந்தால்..

 

காய்ந்து நிற்கும் மரம்

நம் கண்முன்னே

எந்தவிதத் தீயும் இன்றித்

திடீரெனத் தீப்பற்றி எரிந்தால்…

 

நம்கண் முன்னே

விலங்குகள் எல்லாம்

திடீர் திடீரென

இறந்து விழுந்தால்…

 

இவைகள் எல்லாம் கற்பனைகள்

இல்லை நண்பர்களே…

வெகுவிரைவில் நடக்க இருப்பவை..

எந்த ஆண்டும் இல்லா

அனல் காற்றால்

கதி கலங்கி நிற்கிறது இத்தாலி…

ஐரோப்பா நாடுகள் பலவும்

அமெரிக்க நாடும்

அனல் காற்றால் பொசுங்கும்

அவல நிலை உலகெங்கும்..


எக்குத்தப்பாய் உயர்ந்து 

நிற்குது வெப்பநிலை

சீனாவில் ஜப்பானில்

மனிதர்கள் மட்டுமல்ல…

விலங்குகளும் கூட

வெயிலுக்கு அஞ்சி

பதுங்கு குழிகளைத்

தேடி ஓடும் அவலம்..

 

இயற்கையை அழித்தால்

மனிதன்

இயற்கையாலேயே சாவான்…

பேராசை விடு மனிதா !

இயற்கையை நேசி…

மரங்களை வளர்…

பல்லுயிர் போற்று..

இல்லையெனில்

அழிவது மனிதர்கள் மட்டுமல்ல

உலகின் அனைத்து உயிர்களும்தான்..

                      வா.நேரு

                      19.07.2023

..

 

 

Tuesday, 18 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(21)

 

 சக ஆசிரியருக்கும் பாடம் நடத்திய தலைமை ஆசிரியர்.

எங்கள் ஊரைச்சேர்ந்த திரு.கோதண்டராமன் அவர்கள் சாப்டூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் வேலை பார்த்தார்.நாங்கள் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது அவர்தான் எங்களுக்கு கணிதப் பாடம் எடுத்தார்.மிக நன்றாக புரியுமாறு நடத்துவார்.எங்கள் ஊர்  மாணவ-மாணவிகளுக்கு எல்லாம் அவர்தான் வழிகாட்டி.என்ன படிக்கவேண்டும் என்பதுமுதல்,படிப்பதற்கு வங்கிக் கடன் வாங்குவதுவரை பல பேருக்கு அவர் கணித ஆசிரியராக இருந்தபோதும் சரி,அதற்குப் பின் ஏ.இ.ஓ.வாக இருந்தபோதும் சரி,ஓய்வு பெற்ற பிறகும் சரி சாப்டூரைச்சார்ந்த மாணவ-மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு நீண்டகால வழிகாட்டியாக இருந்து வருகின்றார்.

நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஊரைச்சேர்ந்த தமிழ் அய்யா குழந்தைவேல் அவர்கள் தமிழ்ப்பாடம் எடுப்பார்.ஒரு முறை தமிழ்ப்ப்பேப்பரைக் கொடுக்கும்போது ‘உனக்கு மதிப்பெண் குறைத்துப்போட வேண்டும்,போடவேண்டும் என்று நினைத்து திருத்துகிறேன்,ஆனால் நீ எழுதி இருப்பதைப் பார்க்கும்போது அதிக மதிப்பெண் போட்டுவிடுகின்றேன்” என்றார்.அப்போது கிடைத்த மிகப்பெரிய ஊக்க டானிக் அது எனக்கு.அமைதியாக ஆனால் மிக ஆழமாக பாடம் நடத்துவார். ஓய்வு பெற்ற பின்பும் உயர்கல்வி படித்தார்.இப்போது நினைவுகளில் வாழ்கிறார்.

அதைப்போல எங்கள் ஊரைச்சேர்ந்த சுப்பிரமணியம் வாத்தியார்..செஸ் விளையாடுவதில் அப்படி ஒரு ஆளுமை அவருக்கு செஸ் விளையாட்டு புரிந்ததால் என்னவோ பாடம் நடத்துவதிலும் அப்படி ஒரு புரிதலோடு நடத்துவார்.அதைப்போல செம்பட்டியில் இருந்து வந்த ஆசிரியர் திரு.தர்மக்கண்ணு அவர்கள் நினைவில் நிற்கிறார்.

இப்படி பல ஆசிரியர்கள் நினைவில் வருகிறார்கள்.எங்களுக்கு 6-ம் வகுப்பு பாடம் எடுத்த திரு.மூக்கையா ஆசிரியர் அவர்கள் மறக்க முடியாத ஆசிரியர்.6-ம்வகுப்பிற்கு வரும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்க அவர் எடுத்த முயற்சிகள் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாதது.அண்மையில் சுப்புலாபுரத்தில் தலைமை ஆசிரியராக இருக்கும் எனது தங்கை வா.சாராதாவைப் பார்க்கச்சென்றிருந்தபோது திரு.மூக்கையா வாத்தியாரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அவரையும் அவரது இணையர் திருமதி கருப்பாயி டீச்சர் அவர்களையும் பார்த்துப்பேசினேன்.அப்போது திரு.வீரிசெட்டி சார் அவர்களின் பேச்சு வந்தது.அப்போது திரு.மூக்கையா வாத்தியார் சொன்னார்,” நேரு, நான் அப்போது ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரமாக பி.எட்.படித்தேன். எனக்கும் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் பாடம் எடுத்தார் “ என்றார்.வியப்பாக இருந்தது எனக்கு.  மாணவர்களுக்கு மட்டுமல்ல,சாப்டூரில் இருந்த நேரத்தில் சக ஆசிரியருக்கும் பாடம் எடுத்திருக்கிறார்.

மரியாதைக்கும் பேரன்பிற்கும் உரிய எனது ஆசிரியர் திரு.மூக்கையா வாத்தியார் அவர்களோடு நான் ...

இதுதான் எனது தலைமை ஆசிரியர்.தன்னைச்சுற்றி இருக்கும் ஆசிரியர்கள்,பணி ஆட்கள் இவர்கள் அனைவருக்கும்  நேர்மையான முறையில் எந்தெந்த வகையில் எல்லாம் உதவ முடியுமோ அத்தனை வகையிலும் அவர் உதவி செய்து இருக்கிறார் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்

ஒரு உயர்ந்த நோக்கத்தை மனதில் வைத்து அதற்காக உழைக்கின்றபோது ,இயல்பாகவே எல்லோருடைய ஆதரவும் கிடைக்கிறது. நாங்கள் படிக்கின்ற காலத்தில் ஆறுமுகம் என்றொரு உடற்பயிற்சி ஆசிரியர் இருந்தார்.அவரைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்கள்.அவருக்கும் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சாருக்கு முன்னால் இருந்த தலைமை ஆசிரியருக்கும் எப்போது பார்த்தாலும் சண்டை,சத்தம் இருக்கும். ஆனால் திரு.வீரிசெட்டி சார் அவர்கள் வந்தபிறகு அவரின் செயல்பாடு முழுவதுமாக மாறியது.அப்படி ஒரு ஒத்துழைப்பை பள்ளியின் வளர்ச்சிக்கு கொடுத்தார்.எங்கள் ஊரைச்சேர்ந்த ஆசிரியர்கள்,வெளியூர் ஆசிரியர்கள்,பள்ளியின் நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் எங்கள் தலைமை ஆசிரியர் திரு.வே.வீரிசெட்டி சார் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்தனர்.

காலையில் 9.30க்கு பள்ளி ஆரம்பிக்கும் .அதற்கு முன்னால் 8.30 முதல் 9.30 வரை ஸ்டடி இருக்கும்.அதாவது எல்லா மாணவ,மாணவிகளும் வந்து அவரவர் இருக்கையில் உட்கார்ந்து முதல் நாள் பாடத்தைப் படிக்கவேண்டும்.அதனைக் கண்காணிப்பதற்கு ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வரவேண்டும்.இந்தக் காலை ஸ்டடியைக் கவனிப்பதற்கு பல ஆசிரியர்கள் தன்னார்வமாக முன்வந்தார்கள்.

எங்கள் ஊர் ஜமீந்தார் அவர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு. ‘என்ன நடக்குது நம்ம பள்ளிக்கூடத்திலே,படிக்கிற பையன்கள்தான் பள்ளிக்கூடத்திற்கு வேகமாக ஓடுகிறார்கள் என்றால்,வேலை பார்க்கிற ஆசிரியர்களும் அப்படி ஒரு ஓட்டமும் நடையுமாக போகின்றார்கள் “ என்று பார்த்து வியந்து பின் எங்களது தலைமை ஆசிரியர் அவர்களின் செயல்பாடுகளைக் கேள்விப்பட்டு,அவர் அங்கு வேலை பார்க்கின்றபோதும் சரி,அதற்கு பின்னாலும் சரி மிகப்பெரிய ஆதரவாக இருந்தார் என்பதை அடிக்கடி எனது தலைமை ஆசிரியர் அவர்கள் கூறியிருக்கின்றார்.

எங்கள் ஊரில் வேலைபார்த்தபோது,கல்விக்கு கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்தை பள்ளிக் கட்டமைப்புக்கும் கொடுத்தார்.அவர் காலத்தில்தான் பள்ளிக்கு மின்சாரம் வந்தது ,பின்பு கிணற்றுக்கு மோட்டார் பைப் போடப்பட்டது.பள்ளிக்கூடம் இருக்கும் நிலப்பரப்பை ரிக்கார்டுகளை வைத்து சரிபார்த்து பின்பு முழுவதுமாக ஒரு கேட் போல பள்ளியைச்சுற்றி கருவேலை மர வேலி அமைக்கச்செய்தார்.அதைப்போல பள்ளி நுழைவு வாயில் அமைக்கப்பட்டு எல்லோரும் வந்து போவது போல அந்த  நுழைவு வாயில் அமைந்தது.பள்ளியில் சின்ன மேடை கட்டப்பட்டு ,அதில் கொடிக்கம்பம் நடப்பட்டது.சுதந்திர தினத்திற்கும்,குடியரசு தினத்திற்கும் அந்த மேடையில் இருக்கும் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

மாணவர்களிடம் எவ்வளவு அக்கறையாக இருக்கிறாரோ அவ்வளவு கண்டிப்பாகவும் இருப்பார். நான் வாழ்க்கையில் ஆசிரியர்களிடம் அடிவாங்கியது மிகக்குறைவு .இப்போது  எங்கள் ஊரில் ,காங்கிரசு கட்சியில் இருக்கும் கொத்தனார் சுப்பையா என்னோடு படித்தவன்.பத்தாம் வகுப்பறையில் எதற்காக சண்டை போட்டோம் என்று நினைவில்லை.ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் அடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது திரு.வீரிசெட்டி சார் அவர்கள் வந்து விட்டார். ஏண்டா சண்டை போடுறீங்க என்று கேட்டு,அவர் எனது கன்னத்தில் அறைந்த அறை இன்றைக்கும் பசுமையாக நினைவு இருக்கிறது.அதைப்போல சுப்பையாவுக்கு அப்படி ஒரு அடி.அதற்குப் பின் நானும் சுப்பையாவும் வகுப்பறையில் சண்டை போடவே இல்லை.

பிற்காலத்தில் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, மாணவர்களை அடிப்பது தவறு என்று சட்டம் வந்தது குறித்து எல்லாம் அவருக்கு மனக்குறை இருந்தது. ‘தவறு செய்யும் மாணவனை எப்படித் திருத்துவது,அறியாத வயது,தான் செய்வது என்னவென்றே தெரியாமல் செய்யும் வயது. கண்டிக்காமல் விட்டு விட்டால் மீண்டும் மீண்டும் அந்தத் தவறைச்செய்து ,நாசமாகிப் போவானே , “ என்பார்.

“மாணவர்களை அடிக்காமல் ஆசிரியர்களால் திருத்த முடியும்தானே சார் “ என்றேன் நான் ஒருமுறை. ‘இல்லை, நீங்கள் எல்லாம் மேல் நாட்டு கல்வி முறையைப் பார்த்து விட்டு அதனைப்போல நமது நாட்டிலும் செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.  நமது நாட்டில் இப்போதுதான் முதல் தலைமுறை,இரண்டாவது தலைமுறை படிக்க வருகின்றார்கள்.அவர்களுக்கு படிப்பு என்றால் என்ன?படிப்பினால் நமக்கு கிடைக்கும் உயர்வு என்ன? என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை.நாம்தான் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.அதற்கு கண்டிப்பு வேண்டும் ” என்றார். கடைசிவரை மாணவர்களை,மாணவிகளை அடித்துத் திருத்தும் உரிமை ஆசிரியர்களுக்கு இருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் அவருக்கு இருந்தது.

                                                  (தொடரும்)

 

Wednesday, 12 July 2023

தூப்புக்காரி...நாவல் பல மொழிகளில்..

தரமான எழுத்து தரும் அங்கீகாரமானது தனித்துவமானது.எதனோடும் ஒப்பிட இயலாதது.வாழ்நாள் முழுவதும் உச்சி முகர்ந்து பாராட்டி,படித்த,படிக்கின்ற வாசகர்கள் தரும் பாராட்டு என்பது அப்படி ஒரு மகிழ்ச்சி தருவது.அப்படி ஒரு மகிழ்ச்சியில் தோழர் மலர்வதி இப்போது இருக்கின்றார்.'தூப்புக்காரி 'என்னும் தன்னுடைய முதல் நாவல் மூலம் படிப்பவர்களின் மனம் தொட்ட அந்தத் தோழர் தன்னுடைய எழுத்தால் தலை நிமிர்ந்து நிற்கின்றார்.

'தூப்புக்காரி ' நாவலைப் படித்து விட்டு அது தந்த தாக்கத்தால் அந்த நூலைப் பற்றி புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட நூல் விமர்சனக் கூட்டத்தில் பேசினேன். மிக ஈர்ப்பாக இருந்த நூல் அது.உண்மையைச்சொல்லும் நூல்.எனவே இயல்பாக பேச முடிந்தது.

அந்த நூல் விமர்சனத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவில் வசிக்கும் பேரா.திரு.சோம.வேலாயுதம் அவர்கள் ,அமெரிக்காவிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்,ஆனால் பிறப்பு அடிப்படையில் அந்தத் தொழில் அவர்களுக்கு வருவதில்லை.வருமானத்திற்காக எவரும் அந்தத் தொழிலை மேற்கொள்ளலாம் என்று சொன்னதோடு நிற்காமல்,அமெரிக்காவில் இந்தத் துப்புரத்தொழில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பல படங்களோடு,தொழில் நுட்ப வசதிகள் எல்லாம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் எடுத்துக்காட்டி அடுத்து ஒரு கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசினார்.

இப்படி தூப்புக்காரி நாவல் படிப்பவர்களை மட்டுமல்ல,படித்து விட்டு  ஒருவர் சொல்வதைக் கேட்பவர்களையும் ஈர்க்கும் அருமையான நூல்.அந்த நூல் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது,மலையாளத்தில் வந்திருக்கிறது,இப்போது கொரிய மொழியிலும் வந்திருக்கிறது என்பதை அந்த நூல் ஆசிரியர் பகிர்ந்திருக்கிறார். இனி அந்த நூல் மொழி பெயர்ப்புகள் பற்றி அந்த நூலின் ஆசிரியர் தோழர் மலர்வதியின்  நெகிழ்வான பதிவு  

"தூப்புக்காரி வெளிவருவதற்கு முன்பான அணிந்துரைக்காக இலக்கிய தந்தை பொன்னீலனை அவர் இல்லத்தில் சந்தித்த போது ‘இலக்கியம் பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா? மக்கா’  என்று தான் வரவேற்றார். 


இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் எவரையும்  அப்போது நானும் அறிந்திருக்க வில்லை தான். வாழ்வியலின் படிப்பினைகளும், வாழ்க்கை களம் தந்த காயங்களையும்  சேகரித்து எழுத வந்த எனக்கு இலக்கிய உலகின் பெருங்கடலின் கரை கூட தெரியாத நிலையில் தூப்புக்காரி ஏற்படுத்திய அதிர்வலைகள் இப்போதும் அடங்கிய பாடில்லை. 

அதற்கு பிறகும் பல நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகளென இலக்கிய போக்கு விரிவடைந்து போய் கொண்டிருந்தாலும் மலர்வதிக்கான இலக்கிய அடையாளம் தூப்புக்காரியாகவே இருக்கிறது.

 இந்த நாவல் வெளிவருவதற்கும் முன்னே  வாசித்த என் இலக்கிய தந்தை பொன்னீலன் என்னோடு ஒரு தீர்க்கத்தரிசனம் சொன்னார்.. ‘மக்கா நீ நல்ல ஒரு குழந்தையை பெத்துருக்க...எந்த மாசு மருவும் இல்லாம உன் இலக்கிய தாய்மை பெற்ற உன் தூப்புக்காரி இருக்காளே.. உனக்கான வெகுமதியை உனக்கு வாங்கி தருவா...’ என்று முதற்சங்கு அலுவலகத்தில் வைத்து சொன்ன சொல் இப்போதும் எனக்குள் ஒலிச்சிட்டே இருக்கு. 
  
   நண்பர் ஒளிவண்ணனின் எமரால்டு பதிப்பகத்தில் தூப்புக்காரி ஆங்கில மகளாக 20.2.2020 அன்று பிறந்தாள். ஆங்கில  மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவில்  இலக்கிய தந்தை பொன்னீலன் தலைமை தாங்க, முதல் பிரதியை அப்போதைய ஆட்சியாளர் மு. வடநேரே   வெளியிட, திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தின் முன்னாள் தலைவர் கே. செல்லப்பன் பெற்றுக்கொண்டார். 

தூப்புக்காரியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க பல்வேறு தரப்பிலிருந்து மிகவும் ஆர்வம் காட்டினார்கள். முழுக்க முழுக்க வட்டார வழக்கு மொழியாக தூப்புக்காரி இருந்த காரணத்தினால், இதே பகுதியை சார்ந்தவளுக்கே அது கை கூடும் என்ற கருத்து நிலவிய போது முன் வந்தவர்களே பேராசியர். ஹேம்லின், சூசன் ராய். இவர்கள் இருவரும் செய்த  மொழிபெயர்ப்பு பணி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. வரிக்கு வரி படித்து அதில் சிக்கி, அதற்கான சரியான மொழிக்காக தவித்து, அதே உயிரோடு ஆங்கிலத்தில் கொண்டு வர பல இரவுகள் உறங்கியிருக்கவில்லை என்பது எனக்கு தெரியும்.    தமிழின் அதே சுவையோடு உயிரோடு தூப்புக்காரியை ஆங்கில பிள்ளையாக உருமாற்றி அதே தலைப்பையும் நழுவ விடாமல் செய்து முடித்து, புத்தகம் வெளியேறிய தருணத்தில் கொரோனாவின் கோரப்பிடியில் எல்லாமே சிக்குண்டு போனது. 

ஒரு படைப்பானது ஆங்கிலத்தில் வரும் போது அது உலகளாவிய கவனம் பெறுகிறது என்றெல்லாம் என்னை பலரும் உற்சாகப்படுத்திய நிலையில் கொரோனா காலத்தில் ஆங்கில மகள் சிக்குண்டு போனாள் என்பதில் மொழிபெயர்ப்பாளர்களுக்கும், நண்பர் ஒளிவண்ணனுக்கும் எனக்கும் தான் சங்கடம்  இருந்தது.

இந்த நிலையில் மலையாள இலக்கியத்திலும் தூப்புக்காரியின் முகம் மலர எழுத்தாளர் பால்சர்க்கரியா வழி செய்தார். மலையாளத்தின் முன்னணி பத்திரிகையான மாத்ரு பூமி சார்பான மொழி பெயர்ப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் என் தூப்புக்காரி  மலையாளத்திலும் வர போகிறாள். 

இதே நிலையில் கடந்த வாரம், எமரால்டு பதிப்பக நண்பர் ஒளிவண்ணன் ஒரு செய்தியை கடத்தினார்.
‘தோழர் மலர்வதி.. தமிழ்நாடு அரசின் மொழி பெயர்ப்பு   மானிய திட்டத்தின் உதவியுடன் உங்கள் தூப்புக்காரி கொரியா மொழியில் வர போகிறது. சந்தோசப்படுங்கள்..தூப்புக்காரி இனி பல மொழிகளில் வர போகிறாள்’ என்ற தகவலை சொன்ன போது இலக்கிய தந்தையின் தீர்க்கத்தரிசனத்தையே நினைத்தேன். 

’என்னிக்கோ ஒரு நாள் என் மகா உச்சத்தில வருவா..வருவாண்ணா வருவா..தாமர பூவுக்க  வேரு தொழியில கிடந்தாலும்  அதுக்க மூஞ்சி மேல் நோக்கி சிரிக்கிறது போல எனக்க மொவளும் ஒரு நாளு உச்சத்தில வருவா’ என்று தூப்புக்காரியில் வரும் பூவரசி பேசுவது போலவே நானும் தூப்புக்காரி மகளை பெருமையோடு பார்க்கிறேன். அவள் ஏழை தான்..புறக்கணிக்கப்படுகிறவள் தான்...ஏமாற்றங்களால் நொறுங்கி போனவள் தான்..ஆனால் அவள் உச்சம் தொடுவாள்.

இந்த பயணத்திற்கான பின் புலமாக இருந்த தோழமைகள் ஹேம்லின், சூசன் ராய் எப்போதும் நன்றிக்கும் அன்புக்கும் உரியவர்கள்..அது போலவே எமரால்டு பதிப்பக ஒளிவண்ணன்...என் இலக்கிய தந்தை பொன்னீலன்...எல்லாவற்றிற்கும் மேலாக தூப்புக்காரியை சொந்த மகளாக ஏற்றுக்கொண்ட என் அன்பு வாசகர்களுக்கு எப்போதும் என் அன்பின் நன்றிகள்..."

அடுத்தவர்கள் உயர்வில் அகம் மகிழும் அண்ணன் ,எமரால்டு பதிப்பக உரிமையாளர் கோ.ஒளிவண்ணன் ஆங்கில மொழி பெயர்ப்புக்கான முன் முயற்சியை எடுத்திருக்கிறார்.பாராட்டுகள் அவருக்கு.மனமார்ந்த வாழ்த்துகளும் பாரட்டுகளும் தோழர் மலர்வதி...அத்ற்குப்  பின் எத்தனையோ படைப்புகளை கொடுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் எழுத்தின் அடையாளமாக நிற்கும் ;தூப்புக்காரி ;உலக மொழிகள் எல்லாவற்றிலும் போகட்டும்.அதன் மூலம் ஒரு சாதிக்கு என ஒதுக்கிவைத்திருக்கும் தூப்பு வேலை அனைவரும் பார்க்கும் வேலையாக மாறட்டும்.சாதி ஒழியட்டும்.இழிவு நீங்கட்டும்.

Tuesday, 11 July 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(20)

 

                சாப்டூரில் இரவு நேரப்படிப்பு


இதுவரை வெளிவந்த 19 கட்டுரைகளும் எனது தலைமை ஆசிரியர் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் தன் நினைவுகளாக என்னிடத்தில் கூறியவை.சாப்டூரில் தான் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றிக் கூறுகின்றபோது,அதுதான் உங்களுக்குத் தெரியுமே என்று சொல்லிவிட்டார்.

உண்மைதான் 1979-பள்ளிக்கூடம் திறந்து ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துத்தான் திரு.வே.வீரி(செட்டி) சார் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்தார்.நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.அவர் வந்த நாள் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,சராசரியான உயரத்தைவிட சற்றுக்குறைவாக இருந்த எங்கள் தலைமை ஆசிரியர் வந்தவுடன் பொறுப்பு ஏற்பதற்கு முன் பள்ளிக்கூடத்தில் இருந்த மேசை,நாற்காலிகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு,கணக்குப்படி பெற்றுக்கொண்டது நினைவு இருக்கிறது.

அப்போது சாப்டூர் பள்ளிக்கூடத்தில் ஒரு கூரை போடப்பட்ட வகுப்பறையும் இருந்தது.இப்போது சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் நுழைந்தவுடன் வரும் முதல் பள்ளிக்கூடக் கட்டடம் இருந்த இடத்தில் இருந்தது.எங்கள் ஊரில் முடிதிருத்தும் கடை வைத்திருக்கும் திரு.சுப்புராமன் அவர்களின் தம்பி நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன் என்னோடு படித்தான்.நவ நீதகிருஷ்ணனின் அண்ணன்கள் சுப்புராமன்,நடராசன்,மோகன்,மூர்த்தி என அனைவரும் மிக நன்றாகப் பழகுவார்கள்.பேசுவார்கள்.அவர்களில் திரு.மோகன் அவர்கள் படித்து பட்டம் பெற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் வேலைக்குச்சென்றார் .தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஏதாவது ஒரு ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அந்த  நிறுவனம் ஒரு கட்டடம் கட்டித்தரலாம் என்று முன்வந்தபோது,அந்தக் கட்டடத்தை எங்கள் ஊருக்கு வாங்கித்தந்து,அருமையான கட்டடமாக அந்த நிறுவனம் கட்டிக் கொடுத்தார்கள்.அதுவரை அது கூரை வேயப்பட்டதாகத்தான் இருந்தது.திரு.மோகன் அவர்கள் அந்த வாய்ப்பை எங்கள் ஊருக்கு வாங்கிக் கொடுத்தது மிகப்பெரும் செயல்.இப்படிப் படித்து நல்ல நிலையில் இருக்கும் பலருக்கும் பசுமையான நினைவுகளாக இருப்பது பள்ளிக்கூடத்து நினைவுகளே..அந்தப் பள்ளிக்கூடத்து கல்வியால்தான் பட்டம் பெற்றோம்,பதவி பெற்றோம் என்னும் நன்றி உணர்ச்சியே.

எங்கள் ஊருக்கு அரசுப்பள்ளி வந்த  நிகழ்வை பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். 1964-ல்தான் எங்கள் ஊருக்கு அரசுப்பள்ளி வந்திருக்கிறது.அப்போதெல்லாம் அரசுப்பள்ளி ஒரு ஊருக்கு வருவது என்றால் அரசாங்கத்திற்குப் பணம் கட்டவேண்டுமாம்.எங்கள் ஊர் ஜமீந்தார் குடும்பத்தின் சார்பாகத்தான் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கான (20 ஏக்கர் என நினைக்கிறேன்) இடம் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.அது மட்டுமல்லாது அரசாங்கத்திற்கு கட்டவேண்டிய பணத்திற்காக சாப்டூர் ஜமீந்தார் திரு.பெரியராஜா அவர்களும் வசூலுக்கு வந்து பெரியவர்கள் எல்லாம் பணம் போட்டு,அரசாங்கத்திற்குப் பணம் கட்டி அதன் மூலமாக பள்ளிக்கூடம் வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

1979-ல் அரசாங்கப் பள்ளிக்கூடம் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது.எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. சில ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.சிலர் நடத்த மாட்டார்கள்.படிக்கும் மாணவர்கள் படிப்பார்கள்.படிக்காத மாணவர்களைப் படியுங்கள் என்று சொல்வதற்கோ,உனக்கு என்ன பிரச்சனை ,ஏன் படிக்க மாட்டேங்கிறாய்,ஏன் குறைவாக மார்க் எடுக்கிறாய் என்று கேட்பதற்கோ பெரிய முன்னெடுப்புகள் ஒன்றும் இல்லை.

நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பத்தாம் வகுப்பு படித்த முதல் மதிப்பெண் எடுத்த மாணவரின் மதிப்பெண் 59 சதவீதம்.அப்படி இருந்த நிலையில்தான் எங்களுக்கு திரு.வே.வீரிசெட்டி சார் அவர்கள் தலைமை ஆசிரியராக வந்தார்கள்.

மிகவும் பின் தங்கிய சூழல்.எதற்குப் படிக்கவேண்டும் என்பதோ ,எப்படி படிக்கவேண்டும் என்பதோ தெரியாத பின்னணி.வயக்காட்டுக்கு,செவக்காட்டுக்கு அலைந்துகொண்டு மாணவர்க்ள் பள்ளிக்கு வந்த நேரம்.முதலில் அவர் பெற்றோர் கூட்டம் போட்டு,இந்த வருடம்,உங்கள் பிள்ளைகளுக்கு அரசுத்தேர்வு,எஸ்.எஸ்.எல்.சி.பரீட்சை இருக்கிறது.தயவுசெய்து இந்த வருடம் உங்கள் பிள்ளைகளைப் படிக்கவிடுங்கள்.வேறு வேலைகளைச்செய்யச்சொல்லாதீர்கள்.லீவு போடச்சொல்லாதீர்கள்.உறவினர்கள் திருமணம்,உறவினர்கள் ஊரில் திருவிழா,கோவில் விழா போன்றவைகளுக்கு எல்லாம் நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு லீவு போடச்சொல்லி கூப்பிட்டுப் போக நினைக்காதீர்கள் என்று சொன்னார்.இதைத் தான் வேலைபார்த்த எல்லாப்பள்ளிக்கூடத்திலும் அரசுப்பொதுத்தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறார்.

எங்கள் கிராமமான சாப்டூரில் 1979-ல் ஒரு சில வீடுகளில்தான் மின்சாரம் இருந்தது.பள்ளிக்கூடத்தில் மின்சார வசதி இல்லை.வந்தவுடன் ஒரு பக்கம் மின்சாரம் வேண்டும் என்று எழுதிப்போட்டு,அதற்கான ஏற்பாடுகளைச்செய்து கொண்டிருந்த நேரத்தில் எங்கள் ஊரின் ஜமீந்தார் பங்களாவிலிருந்து ஒரு மின்சார வயரை மரங்களில் கட்டி இழுத்து வந்து,தற்காலிமாக மின்சார வசதியை ஏற்படுத்தினார்.எங்களை எல்லாம்  நைட் ஸ்டடிக்கு வரச்சொன்னார்.மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டு,மீண்டும் இரவு 7 மணிக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வருவோம்.இரவு 9.30 மணிவரை அங்கு உட்கார்ந்து படிப்போம்.கணக்கு,ஆங்கிலம் பாடம் சந்தேகங்கள்,புரியாதவற்றை திரு.வே.வீரிசெட்டி சாரிடம் கேட்போம்.அவரும் சொல்லிக்கொடுப்பார்.டியூசன் போலத் தனிக்கவனம் எடுத்து நடத்தினார்.ஆனால் கட்டணமாக ஒரு ரூபாய் கூட வாங்கியதில்லை.

நேற்று என்னோடு படித்த நண்பன் சாப்டூர் மா.சுந்தரசேகரிடம்(பி.காம்) பேசியபோது,’அவர் நைட் ஸ்டடி வச்சு ,என்னையெல்லாம் வரச்சொல்லவில்லை என்றால் நான் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணியிருக்க மாட்டேன்’ என்றான்.திருப்பூரில் எஸ்.எம்.பேக் டிரேடர்ஸ் என்னும் கடையை ஆரம்பித்து .பொருளாதார ரீதியாக மிக வலுவான நிலையில் இருக்கும் எனது நெருங்கிய நண்பன் கா.சுப்பிரமணியத்திடம்(B.Sc) பேசியபோது “ஏய்,வீரிசெட்டி சார் வரவில்லை என்றால் நான் எல்லாம் எப்படி பாஸ் செய்து இருப்பேன்.எங்க வீட்ல ஒத்த அரிக்கேன் லைட்தான் இருந்துச்சு.அவர் கரண்ட் ஏற்பாடு செய்து,பள்ளிக்கூடத்திற்கு இராத்திரியில் வரச்சொல்லி,தினந்தோறும் 2,3 மணி நேரம் படிப்பதற்கான வசதி ஏற்படுத்தி,படிக்க வைக்கவில்லை என்றால் எப்படி பாஸ் பண்ணியிருப்பேன் .அவர் வந்து என்னென்ன செயல்கள் செய்தார் “ என்று வரிசையாக பட்டியலிட்டு நன்றியுணர்ச்சியோடு பேசினான்.இதுதான் பல மாணவர்களின் நிலைமை.அந்த  நைட் ஸ்டடி என்பது ,ஒரு இடத்தில் எந்தவிதமான தொந்தரவுகளும் இன்றி நாங்கள் படிக்க உதவியது. நாங்கள் பத்தாம் வகுப்பில் வெற்றி பெறவும்,நல்ல மதிப்பெண் எடுக்கவும் உதவியது.

இன்றைக்கும் பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது,அவர் பள்ளிக்கூடத்திலேயே தங்கியிருந்தது.அவராக சமைத்து,வெறும் சோற்றுக்கஞ்சியை தேங்காய்ச்சில்லை வைத்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தது,கழிப்பறை வசதி கூட இல்லாத காலகட்டத்தில் ,தனியாகக் காட்டுக்குள் இருந்த பள்ளிக்கூடத்தில்  தங்கி இருந்தது என அவர் தன் வாழ்வில் கடைப்பிடித்த எளிமை வேறு எந்த அரசுப் பணியாளருக்கும் இல்லாதது…

இந்த உலகம் பேசுவதைவிட ,நம் செயல்களைத்தான் மிக உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறது.அப்படி நல்ல செயல்களின் மூலமாக மாணவ,மாணவிகளின் மனதில் இடம்பெறும் நல்ல ஆசிரியர்கள்,அவர்களின் வாழ்நாள் முழுவதும் நன்றிக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி சார் அவர்கள்..

         ( தொடரும்…)

Saturday, 8 July 2023

மெல்லிய குரலில் சீட்டி அடித்தபடி

                                                 


வரிசையாக நோயாளிகள்

அமர்ந்திருக்கும் அறைக்குள்

அமர்ந்திருக்கிறேன் நான்…

 

நோயாளிகளின் முகங்களில்

இருக்கும் துயரத்தை விட

அதிகமான துயரம் அவர்களோடு

உடனிருப்பவர்களின் முகங்களில்…

 

எவ்வளவு பணத்தைக் கேட்பார்களோ

இம்மாம் பெரிய மருத்துவமனையில்

என்னும் கேள்வி தெரிகிறது

ஒவ்வொருவர் முகத்திலும்…

 

சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும்

அந்தத் தாயின் முகம் முழுக்க

கவலை ரேகைகள்…

என்னைச் சீக்கிரம் அழைத்துக்கொள்..

என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர்..

அவர்  நம்பிக்கை அது …

என்றாலும் தன் உடலில் இருக்கும்

உயிர் விடுபட வேண்டுமென அவர்

மனதார விரும்புவது அவரது

சொற்களில் தெரிகிறது…

 

கை நிறைந்த மருத்துவச்சோதனை

காகிதங்களோடு நிற்கும் அவர் மகள்

சும்மாயிரு என்று கொஞ்சம்

அதிகாரக்குரலில் அம்மாவை அடக்குகிறாள்..

அம்மாவுக்கு ஆகும் செலவின் எரிச்சலில்

ஆவேசப்படுகிறாளோ?...

"நீண்ட ஆயுள் என்பது

வரமல்ல..

சாபம்" எனும் கவிக்கோ அப்துல் ரகுமானின்

கவிதை வரிகள் ஓடுகிறது மனதிற்குள்...


முகக்கவசங்களோடு செவிலியர்கள்

இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறார்கள்..

கோட்டுகள் மாட்டிய மருத்துவர்கள்

பேசிக்கொண்டே நடக்கிறார்கள்…


இத்தனைக்கும் நடுவில் உற்சாகமாய்

மெல்லிய குரலில் சீட்டி அடித்தபடி

தரையை அழுத்தித் துடைத்துக்கொண்டிருக்கிறாள்

ஒரு இளம்பணிப் பெண்…


                                     வா.நேரு

                                      08.07.2023

 

 

Friday, 7 July 2023

நாத்திகமும் கவிஞர்களும்...முனைவர் வா.நேரு

                                                



கவிஞர் ஷெல்லி இலக்கிய உலகில் கொண்டாடப்படும் ஒரு கவிஞர் .அவருடைய கவித்துவத்தற்காக ,உணர்ச்சிக்காக,அவரது கவிதைகளில் இருக்கும் இயற்கை அழகு வர்ணனைக்காக அவரைப் போற்றுபவர்கள் பலர் உண்டு. ஆனால் நம்மைப் பொறுத்த அளவில் கவிஞர் ஷெல்லி அவர்களைப் போற்றுவதற்கான அடிப்படை அவர் ஒரு நாத்திகக் கவிஞர் என்பதால் ஆகும்.அவர் மறைந்து 201 ஆண்டுகள் (ஜூலை 8,1822) ஆனபோதிலும்  நம்மைப் போன்றவர்களால் நினைக்கப்படுவராக மனித நேயர்கள் போற்றும் கவிஞராக ஷெல்லி விளங்குகிறார்.அவர் உலகில் மிக நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்த கவிஞர் இல்லை,மிகக் குறைந்த வயதில்,30 ஆண்டுகள் மட்டுமே உலகில் வாழ்ந்து மறைந்த கவிஞர் ஆவார்.

“மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ-மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி “என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டார்.

நான் ஏன் நாத்திகன் எனத் தோழர் பகத்சிங் நூலாக எழுதினார்.தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பை ஒரு முழக்கமாகவே மக்கள் மத்தியில் எடுத்துவைத்து பரப்புரை செய்தார்.இவையெல்லாம் 20ஆம் நூற்றாண்டின் செயல்பாடுகள் . ஆனால் 1811லேயே கவிஞர் ஷெல்லி அவர்கள் ‘நாத்திகத்தின் அவசியம் ‘ என்று ஒரு சிறு வெளியீட்டை வெளியிட்டிருக்கிறார். அதன் பக்கங்கள் என்னமோ 10 பக்கங்கள்தான். ஆனால் ஆத்திகர்கள் உலகத்தை ஒரு கலக்கு கலக்கி அலறவைத்த வெளியீடாக அந்த வெளியீடு அமைந்திருக்கிறது.


                            


கவிஞர் ஷெல்லி...

கடவுள் இல்லை என்று எவரும் மனதால்கூட நினைக்கக்கூடாது என்று மக்களை மந்தைகளாக மதவாதிகள் ஆக்கிவைத்திருந்த காலம் அது. திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு வாசகங்களோடுதான் தொடங்குகிறது.அழுத்தம் திருத்தமாக ‘கடவுள் இல்லை,கடவுள் இல்லை,கடவுள் இல்லவே இல்லை,கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்,கடவுளைப் பரப்பியன் அயோக்கியன்,கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி “ என்னும் தந்தை பெரியார் கொடுத்த கொள்கை முழுக்கத்தோடுதான் கூட்டங்கள் தொடங்குகின்றன.

ஜாதி ஒழிய,மனித நேயம் வளர,பெண்ணுரிமை அடைய  நாத்திகத்தை நாம் கட்டாயம் பேச வேண்டும் எனச்சொல்கிறோம்.விளக்குகிறோம்.ஏனென்றால் மதங்கள் வளர்ப்பது அறியாமையை,காட்டுமிராண்டித்தனத்தை,அடக்குமுறையை.எனவே இவற்றை உடைக்க வேண்டுமென்றால் மக்கள் மனதில் இருந்து கடவுள் என்னும் கருத்தை உடைக்கவேண்டும்.அதற்கு நாத்திகத்தை நாம் பரப்பவேண்டும்.தான் வாழ்ந்த காலத்திலேயே கவிஞர் ஷெல்லி அவர்கள் கடவுள் மறுப்புக் கவிதைகளை எழுதியிருக்கிறார்.கடவுள் மறுப்பைத் துணிந்து பேசியிருக்கிறார்.

.18 வயதில்  படிக்கும் காலத்திலேயே மதங்களுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை எழுதிப் பரப்பியிருக்கிறார்..'நாத்திகத்தின் அவசியம்' என்ற தலைப்பில் வெளியீட்டைத் தன் நண்பரோடு இணைந்து வெளியிட்டதற்காக,நாத்திகக் கருத்துகளைப் பரப்பியதற்காக ,கவிஞர் ஷெல்லி அவர் படித்த பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்நீ நாத்திகன்,உன் குழந்தைகள் உன்னிடம் வளர்ந்தால் அவர்களும் நாத்திகக் கருத்துக்களைக் கற்றுக்கொள்வார்கள்.ஆதலால் உன் குழந்தைகள் உன்னிடம் வளரக்கூடாது,வேற்று ஆட்கள்,பக்தர்களிடம் தான் உன் குழந்தை வளரவேண்டும் என்று அன்றைய நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருக்கிறது.நீதிமன்றங்கள் எப்போதும் விசித்திரமான தீர்ப்புகளை வழங்குவதில் அன்று முதல் இன்று வரை ஒன்றுதான் போலும்..செவ்வாய் தோசம் குறித்து அலாகாபாத் நீதிமன்றம் அண்மையில் கொடுத்த தீர்ப்பு நினைவுக்கு வருகிறது.நீதி வழ்ங்கும் இடத்திலேயே இப்படி மூட நம்பிக்கை அழுக்கு மூட்டைகள் அமர்ந்து கொண்டிருந்தால் உலகம் என்னாவது?

நாத்திகம் பொது உடமையோடு இணைகிறது. நாத்திகம் பொது உரிமையைப் பேசுகிறது. ஆத்திகம் தனி உடைமையை ஆதரிக்கிறது. இன்னும் கேட்டால் தனி உடமைக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள,பாதுகாப்பு அரணை ஏற்படுத்திக்கொள்ள உருவாக்கிய ஒரு கருவிதான் கடவுள்,மதம் என்பன எல்லாம்.ஆத்திகம் விதிக் கோட்பாட்டைச் சொல்கிறது. சனாதானம் பேசி மனிதர்களை வர்ணங்களாகப் பிரித்து,ஜாதிகள் என்னும் ஏற்றத்தாழ்வு படிக்கட்டுகளுக்குள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதர்களைத் திணிக்கிறது. எனவே இப்போது நாத்திகத்தின் அவசியத்தை பேச வேண்டிய அவசியம் கூடுதலாக இருக்கிறது.

நாத்திகர்களைத் துன்புறுத்தக்கூடாது என்னும் கோரிக்கையை ‘நாத்திகத்தின் அவசியம் ‘ என்னும் நூலில் கவிஞர் ஷெல்லி குறிப்பிடுகிறார். துன்புறத்தக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறார் என்றால் நாத்திகர்கள் என்பதற்காகவே துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள்.சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள்.கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.வரலாறு முழுக்க இதற்கான சான்றுகள் இருக்கிறது. இன்றைக்கும் கூட மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் நாடுகளில் நாத்திகர்கள் என்பதற்காக மரண தண்டனை கொடுப்பதும் துன்புறுத்துவதும் நாடு கடத்துவதும் நடக்கும் நிகழ்வுகளாக இருக்கும்போது 200 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லவும் வேண்டுமா நாத்திகர்களுக்கு நடந்த கொடுமைகளை..

கவிஞர் ஷெல்லி அவர்கள் தான் வாழ்ந்த 30 ஆண்டுகளுக்குள் 24 படைப்புகளைக் கொடுத்திருக்கிறார்.சுப்பிரமணிய பாரதியார் ஷெல்லிதாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டவர்,கவிஞர் ஷெல்லியை விரும்பியவர் என்பதால் கவிஞர் சுப்பிரமணிய பாரதியையும் கவிஞர் ஷெல்லியையும் ஒப்பிட்டு  நிறையக் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் கருத்து ஒற்றுமை என்று வருகின்றபோது’தன்னை நிரந்தர நாத்திகன் ‘ என்று கையெழுத்து இட்டு,தான் வாழ்ந்த காலம் முழமைக்கும் நாத்திகக் கருத்துகளைத் தன் கவிதையின் வழியாகப் பரப்பிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களோடு ஒப்பிட்டு நிறையக் கட்டுரைகள் இணையத்தில் ஏற்றப்படவேண்டும்.ஏனென்றால் பாரதிக்கும் ஷெல்லிக்கும் இருக்கும் ஒற்றுமைகளைவிட பாரதிதாசனுக்கும் ஷெல்லிக்கும் இருக்கும் ஒற்றுமைகள் அதிகம்.சுப்பிரமணிய பாரதி கடவுள்களை மிகுதியாகப் பாடியவர்.ருசியாவில் ஏற்பட்ட மாபெரும் பொதுவுடமைப் புரட்சியைக் கூட ‘ காளி தன் கடைக்கண் காட்டிவிட்டாள்,ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி ‘ என்று எழுதியவர்.

தந்தை பெரியாரின் நாத்திகக் கருத்துகளை,கவிதை வரிகளாக்கி தமிழர்களின் நாவுகளில் நடனமாட விட்டவர் புரட்சிக்கவிஞர். ‘உடை வெளுக்கும் தோழரைக் கழுதை முன்னேற்றுமா? கடவுள் முன்னேற்றுமா? ‘ எனக்கேட்டவர்.’கேட்டுக்குத் தெய்வம் என்றே பெயர் ‘ என்று உரைத்தவர்,

’கடவுள் கடவுள் என்று எதற்கும் கதறுகின்ற மனிதர்காள்…கடையர் செல்வர் என்ற தொல்லை கடவுள் பேர் இழைத்ததே’ என்றவர்,’எல்லாம் கடவுள் செயல் என்று துடை நடுங்கும் ‘கூட்டத்தைக் தன் பாக்களால் கேலி செய்தவர் 

,’காசைப் பிடுங்கிடுவதற்கே- பலர்

 கடவுள் என்பார்

 இரு காதையும் மூடு

கூசி நடுங்கிடு தம்பி-கெட்ட

கோயிலென்றால் ஒரு காதத்தில் ஓடு'

‘என்று வழிகாட்டியவர்,’காணாத கடவுள் ஒரு கருங்குரங்கு ‘ எனச்சுட்டிக்காட்டி கடவுளை,மதத்தை,சாதியைச்சாடியவர்.இப்படி நாத்திகக் கருத்துகளில் ஒன்றுபடும் கவிஞர்களாக புரட்சிக்கவிஞரும் கவிஞர் ஷெல்லியும் திகிழ்கின்றனர். இன்று புதிது புதிகாகக் கவிஞர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். எழுதிக் குவிக்கின்றார்கள்.ஆனால் நாத்திகத்தை எழுதுகின்ற கவிஞர்கள் எத்தனை பேர் என்று எண்ணிப்பார்த்தால் மிகக் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

 நாத்திகத்தைத் தன் பாடலின் கருத்தாக எழுதுவதற்கு கவிஞர் ஷெல்லி அவர்கள் காலத்தில் இருந்ததைப் போன்ற தடைகள் இன்று இல்லை.ஆனால் நாத்திகத்தைத் தன் கவிதைப் பொருளாக எழுதுவதற்கு உரிய துணிச்சலும் சமூக அக்கறையும் இன்றைக்கு எழுதும் பல கவிஞர்களுக்கு இல்லை.தந்தை பெரியார் அவர்கள்  “மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் கடவுளை மறுக்கிறானோ-மறக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு சமுதாய முன்னேற்றம் இருக்கிறது என்பது எனது உறுதி “ என்ற கூற்றின் அடிப்படையில் மக்கள் கடவுளை மறுப்பதற்கு,கடவுளை மறப்பதற்கு கவிதை பாட கவிஞர்கள் முன் வரவேண்டும்.’நாத்திகத்தின் அவசியம்’ ;குறித்து கவிதைகள் எழுதவேண்டும்.அதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், கவிஞர் ஷெல்லி போன்றவர்களை முன் உதாரணமாகக் கொள்ளவேண்டும்.

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ்..ஜூலை 1-15