Friday, 6 October 2023

தந்தை பெரியாரும் காந்தியாரும் ...முனைவர் வா. நேரு

 அக்டோபர் 2, 2023 காந்தியார் அவர்களின் 154ஆம் பிறந்த நாள். தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாரைக் கொன்றவர்களின் தத்துவத்தைக் கொண்டவர்களின்

கைகளில் இன்று இந்திய அரசாங்கம் இருக்கிறது.ஒரு பக்கம் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்துக்கொண்டே மறுபக்கம் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சையைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

1927-இல் தந்தை பெரியாரிடம், காந்தியார் நடத்திய விவாதத்தில் காந்தியாருக்குப் புரியும்படியாக சில விசயங்களைப் பெரியார் புட்டுப் புட்டு வைக்கின்றார்.



வைக்கம் போராட்டத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. 1933ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையும் உரிமைக்கான சட்ட சீர்திருத்தத்தை காந்தியார் வலியுறுத்துகின்றார். ஆனால் இன்றைய ஆர்.எஸ்எஸ். இயக்கத்தின் முன்னோடியான மதன் மோகன் மாளவியா அது கூடாது, தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என காந்தியோடு வாக்குவாதம் செய்கின்றார்.காந்தியார் வலியுறுத்திய மசோதாவின் இறுதி முடிவு உயர் ஜாதி இந்துக்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் இதனை எதிர்த்து மதன் மோகன் மாளவியா 1933,ஜனவரி 23- அன்று வாரணாசியில் ‘சனாதன தர்ம மகாசபை’க்கு அழைப்பு விடுத்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.
(நன்றி : பி.பி.சி.தமிழ்)

இந்து மதத்தில் நாம் எளிதாகச் சீர்திருத்தம் செய்து விடலாம் என்று நினைத்த காந்தியாரின் செயல்பாடுகளே அவரின் இறப்புக்குக் காரணமாக அமைகிறது.
காந்தியடிகள் இந்து மத நம்பிக்கை கொண்டவர்தான். மிக ஆழமாக அதனை நம்பியவர்தான். ஆனால் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தனக்குத் தெரிந்த வழியில் போராடினார், வாதாடினார். தீண்டாமைக்கு ஊற்றுக்கண் ஜாதி என்பதும், ஜாதி இந்துமதம் பெற்ற பிள்ளை என்பதும், அதனை விடாமல் வளர்த்துவருவது இந்துமதம்தான் என்பதும் காந்தியாரின் வாழ்க்கையில் இறுதிக்கட்டப் பகுதியில்தான் அவருக்குப் புரிந்தது. அதுவரை தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பியவர் காந்தியார்.

1948- ஜனவரி 30-ஆம் நாள்,இந்துத்துவா வெறி கொண்ட நாதுராம் கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப்படுகின்றார். காந்தியாரின் மரணம் தந்தை பெரியாரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. காந்தியாரின் கொலை பற்றி, “காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.

இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்திருக்கவே வேண்டும்.

அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும்.

இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்’’ (குடிஅரசு, 31-.1-.1948). அறிக்கையில் இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவு என்று குறிப்பிடுகின்றார். காந்தியின் மேல் இரக்கம் கொண்டு எழுதுகின்றார்.அது மட்டுமல்லாது இந்த நாட்டிற்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் சூட்டுங்கள் என்று குறிப்பிடுகிறார்.

காந்தியாரைப் பற்றி “சுய நலமும் கொஞ்சமும் இல்லாமல், தனது முப்பது ஆண்டுகால வாழ்க்கையையும் இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் நன்மைக்காகவே, தன் மனதில் எது நன்மை என்று பட்டதோ, அவ்வழியிலேயே உழைத்த பெரியார் காந்தியார், பலாத்கார முறைகளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாமல் அகிம்சையையே தன் கருவியாகக் கொண்டவர்.மத இயலில், மதத்திற்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் வற்புறுத்தியவர்…’’ என்று காந்தியாரைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழில் எழுதுகின்றார். அது மட்டுமல்லாது,

“பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது. அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை ஏற்றுவிட்டன.

காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதரப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.

வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதரபாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர் (குடிஅரசு, 7.-2.-1948).

மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாசத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். என்று தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார். காந்தியாரின் 154-ஆம் பிறந்த நாளான இந்த நேரத்தில் அதற்கு நேர் எதிராக அரசியல், மத வேறுபாடுகளை வைத்து மனிதர்கள் அடித்துக் கொல்லப்படும் அவல நிலையை இந்தியாவில் பார்க்கின்றோம்.

இந்த ஆபத்தினை முன்கூட்டியே உணர்ந்ததுபோல் தந்தை பெரியார் அவர்கள் காந்தி இறந்த சமயத்தில் இந்த நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்கள் செய்யவேண்டியது என்ன என்பதைக் குறிப்பிடுகின்றார். ”காந்தியார் பலியாக்கப்பட்டதன் காரணமாய் இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாசிரம தர்மமுறை, அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான உரிமை(பிறவி உரிமை) முறை இனி கிடையாது. வர்ணமுறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிராதயங்களும் இந்தச் சுயராஜ்யத்தில் இனி அனுஷ்டிக்கப்படமாட்டாது.இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் “ என்று சுயராஜ்ய சர்க்கார் ஏற்பாடு செய்து விடுவார்களேயானால்,இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும், ஒரே அடியாய்த் தீர்ந்துவிடும்.” என்று ‘குடிஅரசில்’ எழுதுகின்றார்.

‘குடிஅரசு’ இதழ் தொகுப்பில் 1948ஆம் ஆண்டிற்கான தொகுப்பின் வழியாக காந்தியார் இறந்தபோது, தந்தை பெரியார் அவர்களின் உள்ளக்கிடக்கையும், நாட்டுக்காக உழைத்த ஒருவரை இப்படி அநியாயமாகக் கொன்று விட்டார்களே என்னும் கவலையையும்,இந்த நேரத்திலாவது இந்த சனாதனத்தை ஒழிக்க இந்த ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்களா என்பதற்கான வேண்டுகோளையும் நம்மால் அறிய முடிகிறது.

ஜாதி அமைப்பு காந்தியாரின் பெயரை வைத்து வேகமாக வளர்கிறது. இந்துத்துவக் கோட்பாடு வளர்வதற்கு காந்தியை நன்றாகப் பார்ப்பனர்கள் பயன்படுத்து
கிறார்கள்.’நோகாமல் நொங்கு தின்பது’ என்னும் கிராமத்துப் பழமொழியைப் போல காந்தியின் பெயரைப் பயன்படுத்தி நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் அதிகமாகின்றார்கள்.இதற்கெல்லாம் காரணம் காந்தியின் பெயர்தான் என்பதை உணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் 1957-இல் ‘காந்தி பட எரிப்பு’, ‘காந்தி பொம்மை உடைப்பு’ போன்ற போராட்டங்களை அறிவிக்கின்றார்.தனது கருத்தை மிக விளக்கமாக ‘விடுதலை’யில் எழுதுகின்றார். “தான் 1927-இல் மகாத்மா என்று காந்தியாரை எழுதாததை,பேசாததை எப்படியெல்லாம் எதிர்த்தார்கள், அதற்கு தான் என்னென்ன பதில் சொன்னேன்” என்பதையெல்லாம் எழுதுகின்றார்.

தந்தை பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி வழியாக காந்தியாரைப் பார்க்கின்றபோது, நமக்கு காந்தியாரின் மேல் பரிதாபமே ஏற்படுகிறது.பார்ப்பனர்களின் வஞ்சகத்தால் வீழ்ந்த ஒரு மாபெரும் ஆளுமையை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. பார்ப்பனியத்தின் கைகளில் சிக்கிய ஒரு பொம்மையே காந்தியார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. ♦

நன்றி : உண்மை இதழ்   அக்டோபர் 1 - 15, 2023   

No comments:

Post a Comment