அண்மையில் படித்த புத்தகம்: தொலைபேசி நாட்கள்
ஆசிரியர் : விட்டல்ராவ்
பதிப்பகம் : அம்ருதா
பதிப்பகம்
மொத்த பக்கங்கள் :286 முதல்
பதிப்பு 2024 விலை ரூபாய் 250
நமது வாழ்க்கையோடு இயைந்த ஒன்றை எழுத்தில் காணும்போது
அனிச்சையாகவே அந்த எழுத்தில் நாம் ஒன்றிவிடுகிறோம்.1984-பிப்ரவரி
15-ல் தொடங்கி 2020 ஜனவரி 31 வரை தொலைபேசி இலாக்காவில் வேலை பார்த்த எனக்கு அப்படித்தான் விட்டல்ராவ் அவர்களின்
‘தொலைபேசி நாட்கள்’ என்னும் நூலும் அமைந்தது.வாழ்க்கைக்கும்,வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு
ஒரு காரணமாகவும் அமைந்த தொலைபேசித்துறையில் வேலை பார்த்த நாட்களை மீண்டும் அசை போடுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த
நூல் அமைந்தது.
“இந்தியத் தொலைபேசியின் இலட்சக்கணக்கான
பணியாளர்களில் ஒருவனாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு அதை ஓரளவுக்கு ஆவணப்படுத்தும் ஆர்வம் இருந்தது.” என்று இந்த நூலின் என்னுரையில் எழுத்தாளர் விட்டல்ராவ்
அவர்கள் எழுதியிருக்கிறார்.ஓரளவுக்கு அல்ல பெருமளவுக்குத் தன்
பணிக்காலத்தை,பணிக்காலத்தில் தொலைபேசித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களை
இயல்பான நடையில் எழுதியிருக்கிறார்.1963-ஆம் ஆண்டுத் தொலைபேசித்துறையில்
,சென்னையில் பணியில் சேர்ந்திருக்கிறார்.35 ஆண்டுகாலம்
பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இந்தக்காலத்தைக் கட்டுரைகளாகக்
கொடுத்திருக்கிறார். “ இக்கட்டுரைகளில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை, எரிச்சல், எதிர்ப்பு, உவகை ,சாகசம், வரலாறு என்று பல்வேறு சங்கதிகள் அடங்கியுள்ளன. அவை வாசகர்களுக்கு உவப்பளிக்கும் என்ற நம்பிக்கையும்
எதிர்பார்ப்பும் எனக்கு உண்டு” என்றும்
என்னுரையில் திரு.விட்டல்ராவ் அவர்கள் எழுதியிருக்கிறார்.
மொத்தம் 25 கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன .முதல் கட்டுரையின் தலைப்பு ‘தொலைபேசிநாட்கள்’. அதுவே நூலின் தலைப்பாக மாறி இருக்கிறது. இந்த நூலில் தொலைபேசி எந்த ஆண்டுக்
கண்டுபிடிக்கப்பட்டது என்ற வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது 1876 இல் தோன்றிய தொலைபேசி 1881 லேயே சென்னைக்கு
வந்துவிட்டது என்னும் குறிப்பும் இருக்கிறது. தொலைபேசியைப் பற்றிய வரலாறு, அதில் சென்னை தொலைபேசி வளர்ந்த விதம் ,அதனுடைய வரலாறு என்று மிக நுணுக்கமான விவரங்களை இந்த நூல்
கொடுக்கிறது.இதில் ரெவின்யூ ஸ்டாம்ப் என்று
ஓர் அத்தியாயம் இருக்கிறது. எத்தனை இளைஞர்களுக்கு
இந்த அத்தியாயம் புரியும் என்பது
தெரியவில்லை ஆனால் மிக நுட்பமாக அந்த ரெவென்யு ஸ்டாம்ப் என்பது எவ்வளவு
முக்கியமானது எப்படி அதற்குப் பற்றாக்குறை ஏற்படும், சம்பளம்
வாங்குவதற்கு அது எவ்வளவு முக்கியத்துவமானது என்பதைக் கதையாகவும்
நிகழ்வுகளின் வழியே அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் எழுதியிருக்கிறார். இப்போதெல்லாம்
சம்பளம் வங்கி கணக்கில் வந்து விழுந்து விடுகிறது நாம் தேவைப்படும் போது எடுத்துக்
கொள்கிறோம் ஆனால் மாஸ்டர் ரோலில் ரெவினியூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப் போட்டு சம்பளம்
வாங்கிய காலத்தை மிகப் பசுமையாக
நினைவுபடுத்துகிறார்...
கடன்கார சொசைட்டி என்று
ஒரு கட்டுரை இருக்கிறது மிக ரசித்துப் படித்தேன் சம்பளம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்குச் சொசைட்டி முக்கியம்
,சொசைட்டி தந்த கடன் முக்கியம் என்பதை நகைச்சுவையோடு எழுதியிருக்கிறார் தடை
செய்யப்பட்ட இடம் எப்படிப் பிற்காலத்தில் தாராளமாகப் புழங்கும் இடமாக மாறியது என்பதையும்
எப்படி இருந்து எஸ்டிடி ஐஎஸ்டி போன்ற வசதிகள் வந்தன அதனால் பாரம்பரியமான தொலைபேசி
ஆபரேட்டர்கள் எப்படித் தங்கள் வேலையை இழந்தார்கள் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்
எல்லாத் தொலைபேசி நிலையத்திலும் வட்டிக்குக் கொடுப்பவர் ஒருவர் இருந்தார், இருக்கின்றார் என்பதுதான் எதார்த்தம் .அதைப் பென்னிஸ் என்பவர் மூலம் அவர்கள் எப்படிப்பட்டவர்கள், எப்படி வசூல் செய்வார்கள் என்பதை எல்லாம்..அவர்களின் கொடு மனதை
அம்பலப்படுத்தி எழுதி இருக்கிறார்.
தொழிற்சங்கங்களைப் பற்றியும் 1968 போராட்டத்தில்
முன்னணியில் இருந்து தான்
போராட்டத்தில் கலந்து கொண்டதையும்
அன்று அரசின் கெடுபிடிகளையும் அதையெல்லாம் தாண்டி தொழிலாளர்கள் ஒன்று திரண்டதையும்
அனுபவத்தோடு எழுதியிருக்கிறார் 1968இல் எனக்கு வயது நான்கு. 60 போராட்டம் 68 போராட்டம் என்று
தொழிற்சங்கத் தலைவர்கள் சொல்வார்கள் ஆனால் அதில் பங்கு கொண்டவர் அதனை
எழுத்தாக வடிக்கும்பொழுது அதை வாசிப்பது உணர்ச்சிவசப்பட வைக்கிறது .
சில தலைப்புகள் சிரிப்பு வர வைக்கின்றன. ஐயா இந்த டயல்
சுத்தினா அப்படியே நிக்கி…என்பது அப்படிப்பட்ட ஒரு தலைப்பு. இந்த நிக்கி
என்னும் சொல்லாடல் தூத்துக்குடி, திருநெல்வேலி
பகுதிக்கே உரித்தான ஒன்று. அங்கிருந்து
சென்னைக்கு வந்திருக்கக்கூடிய ஒரு கடைக்காரரின் பெயரைக் குறிப்பிட்டு அந்த
நிகழ்வை சொல்லும் விதமாக அந்த டயல் என்று சொல்லக்கூடியது ,எப்படி எல்லாம் மாறியது காலப்போக்கில் மாறியது என்னும்
வரலாற்றையும் இணைத்துக் கொடுத்திருக்கிறார்.
பல விதமான மனிதர்களைச் சந்திக்கின்ற ஓர் இடம்தான் தொலைபேசி
நிலையம். சென்னை மதுரை போன்ற நகரங்களில் வேலை பார்த்து ஆயிரக்கணக்கான
தோழர்கள் கூட, நபர்களோடு பழகக்கூடிய வாய்ப்பு தொலைபேசி
துறையில் வேலை பார்த்த ஒவ்வொருவருக்கும் உண்டு. அதுவும்
தொழிற்சங்கவாதியாக இருந்தால் இன்னும் கூடுதலாக மனிதர்களைப் பற்றி அறிந்து
கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு. அதனை எல்லாம் மிக
எதார்த்தமாக எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்கள் பதிந்து இருக்கிறார். இந்த நூலைப் பொறுத்த அளவில் 1960 இல் இருந்து ஒரு 35, 40 ஆண்டுக் காலத் தொலைபேசி வரலாற்றை
அறிந்து கொள்ளலாம் எப்படி பழைய தானியங்கி
தொலைபேசி நிலையங்கள் எலக்ட்ரானிக் எக்சேஞ்ச்சுகளாக மாறின, பின்பு அவை எப்படி RLU,RSU தொலைபேசி நிலையங்களாக மாறின
என்பதை எல்லாம் விவரித்திருக்கிறார். அப்படி
மாறியதால் விரிந்த பரப்பில் இருந்த தொலைபேசி நிலையங்கள் எப்படிச் சின்னச் சின்ன வீடுகளுக்குள்
அமைந்தன, அதற்குத் தொழில்நுட்பம் எப்படி எல்லாம் வழி வகுத்தது
என்பதை ஒரு கதையாகக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் திரும்பி பார்க்கின்ற பொழுது 90களில் நிகழ்ந்த
நிகழ்வுகளை அப்படியே நம் கண் முன்னால் நிறுத்தி இருக்கிறார் ஒரு தொலைபேசிக்காக 4 ஆண்டுகள் 5 ஆண்டுகள் காத்திருந்தது, OYT என்று சொல்லக்கூடிய,அதிகப் பணம் கட்டி முன்னுரிமை விண்ணப்பங்கள் கூட ஓராண்டுக்கு மேல்
காத்திருந்து தொலைபேசி இணைப்பைப் பெற்ற
நிகழ்வுகளைக் குறிப்பிட்டு இருக்கிறார். இன்றைக்கு ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும்
தெருத்தெருவாக எங்கள் சிம்கார்டை
வாங்குங்கள் என்று கூவிக்கொண்டு
இருக்கக்கூடிய நிலையில், தொலைபேசிக்காக வருடக் கணக்கில்
காத்திருந்தார்கள் என்ற வரலாறு எல்லாம் இன்றைய தலைமுறைக்கு வியப்பாகக் கூடத் தோன்றலாம் ஆனால்
அதுதான் நிகழ்ந்தது
1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட தொலைபேசித்துறை என்பது வேறு. 2010 க்கு பின்பு ஆண்டிராய்டு
செல்பேசிகள் வந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் ,இணையம் வந்த
பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்,இன்று பிஎஸ்என்எல் நிறுவனம் இருக்கக்கூடிய நிலைமைக்கு
யார் காரணம், இவற்றையெல்லாம் இந்த நூலினுடைய தொடர்ச்சியாக எழுதலாம்..
இந்த நூல்
எனக்கு ஒரு நல்ல வாசிப்பு
அனுபவத்தைக் கொடுத்த நூல். தொலைபேசித்துறையில் வேலை பார்த்தவன் என்ற வகையில்
தொலைபேசி வரலாற்றை அறிந்து கொள்வதோடு, என் வாழ்வில் என்
துறையில் நடந்த பல நிகழ்வுகளை இந்த நூலின் வழியாக மீண்டும் ஒருமுறை நினைவு கொள்ளக்
கூடிய வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நூலுக்கு
அணிந்துரை எழுதியிருக்கும் திரு.சந்தியா நடராசன்
அவர்கள் “ விட்டல்ராவின் தொலைபேசி நாட்கள்’ தொலைபேசித் துறையின் வரலாறாகவும் ,நேற்றைய சென்னையின்
காட்சிகளாகவும் கலை,இலக்கியக் குறிப்புகளாகவும் மூன்று பரிணாமங்களில்
ஒன்றை ஒன்று விலகாமல் உருப்பெற்றிருக்கிறது.தொலைபேசித்துறை சார்ந்தவர்கள்
கட்டாயமாகவும்,மற்றவர்கள் சந்தோஷமாகவும் படிக்கலாம்;படிக்கவேண்டும் “ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மைதான்.தொலைபேசித்துறையில் வேலைபார்க்காத ஒருவரும்
இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்துப் படிக்கமுடியும்.
புத்தகம் பேசுது என்னும் இதழில் இந்த நூலைப்பற்றி எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் எழுதிஇருந்தார் விட்டல்ராவ்
அவர்களைப் பேட்டி எடுத்து எழுதி இருந்தார். தொலைபேசித் துறையில் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு பாவண்ணன் அவர்கள்.ஏறத்தாழ நூறு நூல்களை எழுதியவர்.தொடர்ந்து இன்றும் எழுதிக் கொண்டு இருப்பவர். பணி நிமித்தமாக்க் கர்நாடகாவிற்குச் சென்று கன்னட மொழியைக் கற்றுக் கொண்டு
கன்னடத்தில் இருந்து தமிழுக்குப் பல
மொழிபெயர்ப்புகளைக் கொடுத்தவர்.
https://vaanehru.blogspot.com/2015/05/blog-post.html,
https://vaanehru.blogspot.com/2014/02/blog-post_11.html
https://vaanehru.blogspot.com/2016/12/blog-post_13.html
https://vaanehru.blogspot.com/2019/04/blog-post.html
https://vaanehru.blogspot.com/2014/01/blog-post_12.html
பல படைப்புகளைக் கொடுத்தவர்.மேலே
இருக்கும் சுட்டிகள் எல்லாம் அவருடைய நூல்கள் பற்றி எனது வலைத்தளத்தில் நான் எழுதியவை.பாவண்ணன் அவர்கள் தனது வலைத்தளத்திலும் இந்த ‘தொலைபேசி நாட்கள் ‘ நூலைப் பற்றி எழுதியிருக்கிறார்.திரு. விட்டல்ராவ் அவர்களின் நண்பர் பெங்களூரில் இருந்து மறைந்த சந்திரசேகர்
அவர்களைப் பற்றிய விவரிப்பு நம் நெஞ்சைத் தொடுகிறது
“ தொலைபேசி ஊழியர்கள் எல்லோரும் பழையனவற்றை நினைத்துப் பார்த்து பெருமூச்சு
விடாத நாளே இல்லை. பெருமூச்சு விடாத தொலைபேசி ஊழியர்களே கிடையாது.” என்று குறிப்பிடும் திரு.விட்டல்ராவ் அவர்கள் “
ஒரு கனவாக- கதையாக- கற்பனையாக, ஓரியண்டல் டெலிஃபோன் கம்பெனியாகப் பிரிட்டிஷ் தனியார் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, அரசுடமையாகி தபால் தந்தி இலாக்கா என்றானது. பிறகு அதில் தபாலையும் தந்தியையும் விட்டு விட்டு தொலைபேசி தனியாகப் பிரிக்கப்பட்டுத் தொலைத்தொடர்பு இலாகா என்றானது அதுவும் இறுதியில் பாரத் சஞ்சார்
நிகாம் (BSNL) லிமிடெட் என்றானது” என்று இந்த நூலின் இறுதியில் நூல் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
நல்ல அறிமுகம் தொலைபேசி நாட்களுக்கு .விட்டல்ராவ் இப்படி ஒரு புத்தகம் எழுதியிருப்பதை இப்போதுதான் அறிகிறேன்.வாய்ப்பு கிடைத்தால் அதாவது புத்தகம் கிடைத்தால் கண்டிப்பாக வாசிப்பேன்.(வாசிப்போர் களம்..வாட்சப் குரூப்பில்)
ReplyDeleteநன்றிங்க சார்.
ReplyDeleteநல்ல அறிமுகம். நமது வீட்டு நூலகத்தில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.நன்றி தோழர் நேரு.
ReplyDelete