Thursday, 30 May 2024

அடுத்தவர் எப்படி எழுதிட இயலும்?..

 

அடுத்தவர் எப்படி எழுதிட இயலும்?..

 

இந்த அறுபது ஆண்டுகளில்

கற்றுக்கொண்டதை

அனுபவமாய்ப் பெற்றுக்கொண்டதை

ஏதோ ஒரு இலக்கிய வடிவில்

பதிவிடும் ஆவல் இருக்கிறது..

எனது ஏழு புத்தகங்களில்

இயன்றதைப் பதிந்திருக்கிறேன்

என்றாலும் இன்னும் பதிவிட

வேண்டியவை ஏராளம் இருக்கிறது..

 

பத்தாண்டுகளுக்கு முன்னால்

அய்யா அறிவுக்கரசு சொன்னார்

இன்னும் கொஞ்சம் எழுத

வேண்டியிருக்கிறது

முடித்துவிட்டால்

வரும் சாவை ஏற்றுக்கொள்ளலாம்என்றார்..

சாவைப் பற்றி அவர் அப்போது பேசியது

எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது..

அவரிடம் ஏன் இப்படி எனக் கேட்டேன்?..

யார் இருக்கப்போகிறார் இங்கே நிரந்தரமாய்

போவதற்குள் என்ன செய்யவேண்டும்

என்பதைச்செய்திடல் வேண்டும்என்றார் அவர்..

எப்போதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு

எனும்வகை உரையாடல்தான் அவரிடம்..

முப்பேத்தேழு புத்தகங்களை எழுதிப்

பதிப்பித்து நம்மிடம் கொடுத்துவிட்டு

இந்த வருடம் திடீரென நம்மிடமிருந்து

விடைபெற்றுக்கொண்டார்

 

உன் எழுத்தை எவர் எழுதிட இயலும்..

எழுது,எழுது என்பார் புதுக்கோட்டை பாலா..

அவரவர் சூழல்..

அவரவர் அனுபவம்

அவரவர் எண்ணம்

அவரவர் குடும்பம்

அவரவர் அறிவு

அடுத்தவர் எப்படி எழுதிட இயலும்?..

இல்லாதபோது எவர் எழுதுவார்

நம் அனுபவத்தை.…

 

எழுதிடல் வேண்டும் இன்னும் எழுதி

நூல்களைப் பதிப்பித்தல் வேண்டும்..

இன்னும் எளிமையாய் வாழ்ந்திடல் வேண்டும்

முடிந்தளவு மற்றவர்க்கு உதவிட வேண்டும்..

..

91 வயதிலும் அயராது பரப்புரை செய்யும்

அய்யா ஆசிரியர் அடிச்சுவட்டைத்

தொடர்ந்திடல் வேண்டும்

சாகும்போதும் பெரியார் கொள்கையைப்

பறை சாற்றிச் சாகவேண்டும்…

 

 

                                          வா.நேரு,

                                          31.05.2024

 

6 comments:

  1. உண்மை தான். இன்றாவது நினைத்ததை எழுதி விட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன். ஆண்டுகள் பல கடந்து விட்டது. ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஆசை மட்டும் மாறவில்லை

    ReplyDelete
  2. நிச்சயம் நிறைவேறும் .அதற்கான முயற்சி எடுங்கள்.

    ReplyDelete
  3. நம் அனுபவத்தை,எழுதும்போது அது யாருக்காவது வழிகாட்டியாக அமையக்கூடும்.எழுதிக் கொண்டே இருங்கள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தங்கையே ,எழுதுவோம்..

      Delete
  4. அவரவர் அனுபவம் அவரவருக்கே..என்றாலும் இல்லாதபோது எவர் எழுதுவார் நம் அனுபவத்தை என்பது அருமை..உந்தும் பதிவு.நன்றி அய்யா

    ReplyDelete
  5. வா.நேரு31 May 2024 at 03:28

    மகிழ்ச்சி...எழுதுவோம்.

    ReplyDelete