தோழர் அர்ஷா அவர்கள் வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவின் மூலமாக அறிமுகமானவர்.மிகத் தீவிரமான வாசகர்.மிக நல்ல நூல் திறனாய்வாளர்.அவர் எனது 7-வது புத்தகமான,கனவு போலத்தான் நடந்தது என்னும் நூலினை வாசித்துவிட்டு, முக நூலில் அவரது கருத்துகளைப் பகிர்ந்து இருந்தார்.ஒரு நூல் ஆசிரியனுக்கு வேறு என்ன பரிசு வேண்டும்? ஒருவர் படித்து தன் கருத்தினைப் பகிர்வதைத் தவிர...நன்றி தோழர் அர்ஷா அவர்களுக்கு... நூல் பற்றிய அவரது கருத்துகள் கீழே...
முனைவர்
வா. நேரு அவர்களின் கனவு போலத்தான் நடந்தது (அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்)
நூல் மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர் திரு. வே. வீரி செட்டி அவர்களின் தாக்கத்தை அழகாக விவரிக்கிறது. கீழடி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், கற்பித்தல் முறைகளைத் தாண்டி, மாணவர்களிடம் ஆசிரியர் ஏற்படுத்திய ஆழமான மன உறவுகளைப் பற்றிச் சொல்லுகிறது.
திரு. வீரி செட்டி, ஒரு கல்வியாளரைத் தாண்டி, மாணவர்களின் அறிவுத் தாகத்தைத் தூண்டி, ஒரு தந்தையைப் போல் வாழ்வை வழிகாட்டிய ஆசிரியர். அவரது செயல்பாடுகள், ஒரு நல்ல ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி குறித்து இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்நூல், ஜப்பானிய எழுத்தாளர் சுதூகோ குராயான் எழுதிய "டோட்டோசான்" நூலின் நினைவுகளைப் புத்துயிர்ப்பிக்கிறது. டோட்டோசான் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களை அன்புடன் வளர்த்தார் என்று அந்த நூலில் விவரிக்கப்படுகிறது. இதை வாசித்தபோது, திரு. வீரி செட்டி அவர்களும் இதுபோல தங்கள் மாணவர்களை வழிநடத்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவியதை பார்க்க முடிகிறது.
10வது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் அதனை நிரப்பும் வகையில் தானே சென்று கற்பித்த திரு. வீரி செட்டி, மற்ற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
பள்ளியில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவி பள்ளிக்கு வராமல் இருந்தது அவரை கவலைக்குள்ளாக்கியது. பல ஆசிரியர்கள் கவலைப்படாமல் இருந்தபோது, அவர் நேரில் மாணவியின் வீடு தேடி சென்றார். நிலைமையைப் புரிந்து கொண்டு, பெற்றோர்களிடம் நீண்ட நேரம் விவாதித்து, இஸ்லாமிய சமுதாயத்தில் பெண் பிள்ளையைப் படிக்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவர் பெற்றோர்களுக்கு பெண் கல்வி பற்றி புரிய வைத்து, அம் மாணவியை பள்ளிக்கு அனுப்ப செய்கிறார். அந்த மாணவி தனது உயர்கல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறாள். இது, இந்த ஆத்மார்த்தமான சமுதாய பணியை தலைமை ஆசிரியரின் பல சேவைகளைக் குறிக்கின்ற புத்தகமாக இது அமைந்திருக்கிறது.
மேலும், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களை செல்வந்தர்களிடமிருந்து பெற்று வழங்குகிறார். கிராமப்புறம் வந்த மாணவர்களை கற்றுக்கொள்ளத் தூண்டும் வகையில், அவர் ஒழுங்குகளை ஏற்படுத்தி, பாடத்தை எடுக்கும் பணியையும் செய்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்திருந்தாலும், அவர் மாணவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்திருக்கிறார். இதனால், அவரது வாழ்க்கை பல துயரங்களை எதிர்கொண்டு, அதையெல்லாம் மீறி, மாணவர்களின் நலன் குறித்து ஒருபோதும் கவலைப்படாமல் உழைக்கிறார்.
இந்த நூல், மாணவர்களின் நலனில் அயராது உழைத்த ஆசிரியரின் உன்னத குணங்களை நமக்கு உணர்த்துகிறது. அவர், மாணவர்களுக்கு ஒரு கல்வியாளர் மட்டுமல்ல, ஒரு முழுமையான வாழ்க்கை வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
இந்த நூல், ஒரு தலைமை ஆசிரியரின் பாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்த அற்புதமான நூலை படைத்த முனைவர் வா. நேரு அவர்களுக்கு நன்றி!
அர்ஷா
No comments:
Post a Comment