Friday, 17 May 2024

அண்மையில் படித்த புத்தகம் : முட்டிக்குறிச்சி – நாவல்

 

அண்மையில் படித்த புத்தகம் : முட்டிக்குறிச்சி  நாவல்

ஆசிரியர் : சோலச்சி

பதிப்பகம் : எழுத்து பிரசுரம்,(ஸீரோ டிகிரி- ஒரு பிரிவு) சென்னை-40

முதல் பதிப்பு : அக்டோபர் 2023

மொத்த பக்கங்கள் : 260 ,விலை ரூ 320

கதை சொல்வது என்பது எளிதான காரியம் அல்ல ஆனால் கதையை,  நெடுங்கதையை எழுத்தின் வழியாகச் சொல்லத் தெரிந்தவர்கள் காலம் கடந்து வாழ்கிறார்கள். கதைகளின் மூலம் நம்மோடு உறவாடுகிறார்கள், பேசுகிறார்கள்., சிரிக்க வைக்கிறார்கள்,.அழுக வைக்கிறார்கள்,சமூகத்தின் அவலங்களை உணர வைக்கிறார்கள். ஏன் இந்த உலகம் இப்படி இருக்கிறது ? என்பதை நமக்கு நாமே கேள்வி கேட்பதற்கான உந்து சக்தியாக இருக்கிறார்கள். எனவே கதை சொல்லுதல் என்பது அறிய கலை என்றாலும் கூட ஒருவரைக் காலம் கடந்து நிற்க வைக்கும், பேச வைக்கும் ,எழுத வைக்கும் கலை.  அந்த வகையில் தன்னுடைய முதல் நாவலான முட்டி குறிச்சி என்னும் நாவலின் மூலமாகக் காலம் கடந்து நிற்கப் போகும் எழுத்தாளர் நான் என்பதை நமக்கு மிக அழகாக உணர்த்தி இருக்கிறார் சோலச்சி அவர்கள் .



 இந்த நாவலில் எழுத்தாளர் சோலச்சி  அவர்கள் யார் மேல் தொடக்கூடாது, யாருடன் பழகக் கூடாது என்று புறம் தள்ளி ஒதுக்கி ஒடுக்கி வைத்திருந்தீர்களோ அவர்கள் மீது அன்பு கொண்டு எல்லோரும் மனிதர்கள் தான் என்ற நிலையை உருவாக்கி உங்களுக்குள் ஒரு சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, சமூக நீதியை நிச்சயமாக உருவாக்கலாம்  என்று குறிப்பிட்டு மேலும் “ எதை எழுத வேண்டும் என எண்ணுகிறேனோ அதை எனக்கா நேரம் கிடைக்கும் பொழுது எழுதி வருகின்றேன். அதை வாசித்து உங்கள் இதயக் கரங்களில் ஏந்திக் கொண்டாடுவதும் கொட்டி கீழே தள்ளுவதும் உங்கள் கைகளில் தான் என்று என்னுரையில் எழுதி இருக்கிறார். இதை வாசித்து முடித்தவுடன் இதயக் கரங்களில் ஏந்திக் கொண்டாடத்தான் தோன்றியது எழுத்தின் வலிமையை  ஆழமாகப் புரிந்து கொண்டவன் என்ற அடிப்படையில் மகத்தான எழுத்து இது என்று கொண்டாடத் தோன்றுகிறது

நாவலின் உள்ளே நுழைவதற்கு முன்பே : தன்னுடைய வருவாயில் பெரும்பகுதியை ஏழை,எளிய மாணவச்செல்வங்களுக்கு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி தாயாக வாழ்ந்துகொண்டிருக்கும் பணி நிறைவு பெற்ற தமிழ் விரிவுரையாளர் எங்கள் அம்மா நா.விஜயலெட்சுமி அவர்களுக்கு இந்நூல்என்னும் வரவேற்பே இந்த நூலாசிரியரின் மனப்போக்கைக் காட்டிவிடுகிறது. அதைப்போல கொரனாக் காலத்தில் தானும் நண்பர்களும் இணைந்து  உணவு வழங்கிய பணியைக் குறிப்பிடுகிறபோது,  நூலாசிரியரின் களப்பணியும் நம்மை ஈர்க்கிறது.

இது ஒரு வாழ்வியல் நாவல்.மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்க்கையை அடிப்படையாக அமைத்து எழுதப்பட்ட நாவல்.ஏன் நமக்குக் கல்வி மறுக்கப்பட்ட்து?, ஏன் இப்படிப்பட்ட  வேலைகளைச் செய்யப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்? என்பதைப் பற்றிய புரிதல் இல்லாத தலைமுறையைப் பற்றிய நாவல். ஆனால் அவர்களிடம் இருந்த,இருக்கும் மருத்துவத்தை,மனிதநேயத்தை,கடும் உழைப்பை,,கண்ணியமிக்க வாழ்க்கையை,சின்னச்சின்ன உரசல்களோடு முடிந்துவிடும் கோபத்தை அழகியலோடு எடுத்துவைக்கிறது.

மொத்தம் 28 அத்தியாயங்கள் உள்ள இந்த நாவல் காதலைப் பேசுகிறது.இயற்கை மருத்துவம் பேசுகிறது.இந்த மண்ணின் மைந்தர்களான ஆதிக்குடிகளிடம் இருக்கும் பெருந்தன்மையை, பெரும்போக்கைப் பேசுகிறது.உயர்ஜாதி எனப்படுவோரின்  நயவஞ்சகத்தைப் பேசுகிறது.அவர்கள் அபகரித்துக்கொண்ட மண்ணைப் பேசுகிறது. எனக்கு இந்த நாவலைப் படித்தபொழுது இந்தியக் குடிசை என்னும் பிரஞ்சுப் புதினம் நினைவுக்கு வந்தது.( https://vaanehru.blogspot.com/2018/10/blog-post.html)

நாவல் முழுக்க இயற்கையோடு இணைந்த வருணனைகள் கொட்டிக் கிடக்கின்றன.. நாவலின் முதல் அத்தியாயத்தின் இரண்டாம் பாரா, “ வெள்ளி மறைந்து வெகு நேரமாயிருந்தது.விடியலை கீழ்வானம் உதித்துக்கொண்டிருந்தது.கூரையிலிருந்து குதித்து ஓடிய சேவல்…” எனத்தொடரும் வருணனைகள் நமக்கு அந்தச்சூழலை அப்படியே ஓவியமாய்ப் படம் பிடித்துக்காட்டுகின்றன. பாலாயி, நாரங்கி,பொன்னழகி,அழகப்பன் என்னும் கதாபாத்திரங்கள்,நாவலை முழுக்க நகர்த்திச்செல்பவர்கள் முதல் அத்தியாயத்திலேயே அறிமுகமாகின்றனர் அவரவர் இயல்புகளோடு.. தீத்தான்,பிரமையன்,கண்டவனார் என்னும் பாத்திரப்படைப்புகளும் மனதில் நிற்கின்றார்கள்.மாட்டுக்கறியின் வாசனை நாவல் முழுவதும் நம்மைச் சுண்டி இழுக்கிறது.

எழுத்தாளர்,சமூகச் செயற்பாட்டாளர் கீதா இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் மாதவிடாய் என்று ஒரு குறும்படம் எடுத்து தமிழ்நாடு முழுவதும் அவரும் அவருடைய இணையர் திரு இளங்கோவன் அவர்களும் அந்தக் குறும்படத்தினை ஒளிபரப்பி  மாதவிடாய் காலங்களில் ஒதுக்கி வைக்கப்படும் பெண்களின் அவல நிலையை எடுத்துக்காட்டினார்கள். அதேபோல முட்டி குறிச்சி என்றால் என்ன என்பதை இந்த நாவலை படிக்கும் பொழுது உணர முடிந்தது.

சீன நாட்டில் கூட ஒருவர் வீட்டில் இறந்தவிட்டால், குழந்தைபிறப்பின்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று பிள்ளைப்பெறவேண்டும் என்னும் மூட நம்பிக்கையால்  ஒரு பெண் இறப்பதைக் குடும்பம் என்னும் மொழிபெயர்ப்பு நாவல் பேசும்.( https://vaanehru.blogspot.com/2014/01/blog-post_23.html)  முட்டிக்குறிச்சி என்னும் அந்த  அநீதிக்கு எதிராக ஒரு சூழ்ச்சியைச் செய்துதான் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவு செய்து இந்த நாவலின் நாயகி அதை அமல்படுத்தும்போது படிப்பவர்களுக்கு இது சரியான செயல்தான், கைதட்டிப் பாராட்ட வேண்டிய செயல்தான் என்பதைத் தனது எழுத்தின் மூலமாக இயல்பாக நகர்த்திச் செல்கிறார் சோலச்சி.

காடுகளை,மலைகளை,மலைக்குள்ளும் காடுகளுக்குள்ளும் இருக்கும் மூலிகைகளை, அந்த மூலிகையைப் பறித்து மக்களின் நோயைப்போக்கும் இயற்கை வைத்தியர்களை,விஷப்பாம்பு கடித்தால் கூட அதை முறிக்கும் வல்லமையை, மருத்துவத்தைக் கையில் கொண்டிருக்கும் மக்கள், சாதிப்பாம்பு தீண்டும்போது அதனை  முறியடிக்கும் வழி தெரியாமல் திக்கித் திணறுவதை இந்த நாவல் அருமையாகச் சுட்டிக் காட்டுகிறது. எதுவுமே மிகை இல்லை, ஒரு சார்பு இல்லை. ஏன் ஓங்கி ஒலிக்கும் குரலாகக் கூட இல்லை. மிக இயல்பாக மனச்சாட்சி உள்ள மனிதர்களோடு, அவர்களின் மனங்களோடு பேசும் இயல்பான நடையை இந்த நாவல் பெற்றிருக்கிறது

நான் கதைக்குள்ளே நிறையப் போகவில்லை.இதனை வாசிக்கும் நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. மொத்தப் பக்கங்களையும் ஒரு பத்து,இருபது வரிகளில்  கதைச்சுருக்கமாகச்  சொல்ல நான் தயாராக இல்லை. ஆனால் இந்தக் கொரோனா காலகட்டத்தில் தன் மனதில் தோன்றிய மனிதநேயத்தை, செயல் வடிவமாக்க தனக்குக் கிடைத்த நட்போடு இந்தக் கதையைப் பகிர்ந்து கொண்ட போது ஏன் இதை ஒரு நூலாக நீங்கள் வெளியிடக்கூடாது என்று அவர் கேட்டதாக எழுதி இருக்கிறார்.அந்த நண்பர் பி.தாமோதரன் அவர்களுக்கும் நன்றி.

இந்த நாவலின்  ஒவ்வொரு பக்கத்திலும் வர்ணனை நிரம்பி இருக்கிறது. வாழ்க்கை நிரம்பி இருக்கிறது.ஜாதிய அடுக்கில் -கீழடுக்கில் வலிந்து திணிக்கப்பட்ட  மக்களின் உயர்வான எண்ணங்கள் நிரம்பி இருக்கிறது. ஜாதி அடுக்கில் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணம் கொண்ட சில மனிதர்களின் கீழான செயல்களும் சில பக்கங்களை நிரப்பி இருக்கின்றன.அந்த அடுக்கில் இருந்தாலும் மனிதநேயம் கொண்டு உதவும் மனிதர்களும் இந்த நாவலில் இருக்கிறார்கள். கீழான செயல்களைச்செய்தவர்கள் கடைசியில் மாட்டிக்கொள்வதும் தண்டனை பெறுவதும் இந்த நாவலில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

வர்ணாசிரம அடுக்கில் எந்த ஜாதியும் உயர்ந்த ஜாதி இல்லை, எந்த ஜாதியும் கீழான ஜாதி இல்லை பிரித்து வைத்தவர்களின் மனதில் இருந்த சூழ்ச்சி,கொடுமை து. உழைக்கும் மனிதர்களின் உழைப்பைச்சுரண்ட அவர்கள் செய்த நயவஞ்சகத்தின் நச்சு விளைவு அது.  அந்த  நஞ்சை இன்னும் நீங்கள் சுமந்து கொண்டு இருக்க வேண்டுமா? என்னும் கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது அறிவியல் இன்றைக்கு இமையமாய் வளர்ந்து நிற்கிறது. மரபணு ஆராய்ச்சி உலகத்தில் உள்ள மக்கள் எல்லாம் ஓரிரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தான், அவர்களின் வழித்தோன்றல் தான் என்னும் உண்மையை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.இந்த அறிவியல் யுகத்தில்தான் நாங்கள் முகத்தில் இருந்து பிறந்தவர்கள் என்று சிலர் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.குடிக்கும் குடிநீரில் கூட மலத்தைக் கலக்கும் கொடுமையும், ஆணும் பெண்ணும் மனமொப்பிக் காதலித்துத் திருமணம் செய்தால் அகங்காரம் கொண்டு ஆணவக் கொலை செய்யும் அக்கிரமமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மண்ணில் மனித நேயத்தைச் சொல்லும் இந்த மாதிரியான கதைகள் என்பது இன்றைய தேவை, அதைச் சிறப்பாகவே சோலச்சி சொல்லியிருக்கிறார்.

எந்த இடத்திலும் கதை ஓட்டத்தைத் தொய்வில்லாமல் ,அதே நேரத்தில் கதையை மிக நுட்பமாக உரையாடல்களால், கதாபாத்திரங்களின் மன ஓட்டங்களால் நகர்த்திச் சென்று இருக்கும் இந்தக் கதை சொல்லும் பாங்கு முதல் நாவலுக்கான  எழுத்தாக இல்லாமல் ஏதோ ஒரு 100 நாவல் எழுதிவிட்டு 101 வது நாவலை எழுதியிருக்கும் எழுத்தாளர் போல இயல்பான நடையாக இருக்கிறது. இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.தமிழ் நாவல் இலக்கிய உலகிற்கு ஓர் அற்புதமான புதிய  படைப்பாளி கிடைத்துள்ளார் என்று. சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் இமையம், பெருமாள்முருகன் ,அழகியபெரியவன், ,அகிலா எனப் புகழ்பெற்ற ஆளுமைகளோடு வைத்துக் கொண்டாடத்தக்க வகையில் இவரின் முதல் நாவலே அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள் தோழர். அடுத்து அடுத்து  உங்கள் நாவல்கள் வரட்டும்.தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்,தோழர் காரல்மார்க்சும் கனவு கண்ட புதிய உலகம் அமைய ,சாதியற்ற-சமத்துவ மனித நேயச் சமுதாயம் அமைவதற்கு உங்கள் எழுத்து உறுதுணையாக  அமையட்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.



 

முனைவர் வா.நேரு,

தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.

17.05.2024

 

 

7 comments:

  1. நூல் விமர்சனம் நூலைவாங்கி படிக்கத் தூண்டுகிறது. அருமை.

    ReplyDelete
  2. நன்றி.ஆமாம்.படிக்கவேண்டிய நாவல்...

    ReplyDelete
  3. தோழர் வணக்கம், விமர்சனத்தை வாசித்துவிட்டு கண்கலங்கினேன். எனது எழுத்திற்கும் செயல்பாடுகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.
    பேரன்பின் வழியில்
    சோலச்சி

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. பேரன்பும், மகிழ்ச்சியும் தோழர்.

    ReplyDelete
  6. முனைவர். வா. நேரு , இந்த நாவலை மிகவும் இரசித்து வாசித்து இருக்கிறார் என்று கருதுகிறேன் . புதிய எழுத்தாளருக்கு இந்த மதிப்புரை தன்னம்பிக்கை கொடுப்பதாக இருக்கும். வாங்க வேண்டிய நூல்கள் பட்டியலில் இந்த நூலை சேர்த்துக் கொள்கிறேன். நல்லதொரு நாவலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி .நன்றிங்க அண்ணே...

    ReplyDelete