தமிழ் இணையப் பயிலரங்கம்
எழுத்துரு அளவு
மக்கள் பல்கலைக்கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் சார்பாக தமிழ் இணையப் பயிலரங்கம் 20.05.2012 காலை 10 மணி முதல் மாலை 7 வரை நடைபெற்றது. தந்தை பெரியாரின் வழிமுறையே மக்கள் நலனை முன்னிட்டு வேறு யாரும் சிந்திக்காத வழியில் சிந்திப்பது, அதனை செயல்படுத்த எத்தனை இடை யூறுகள் வந்தாலும் எதிர்கொள்வது, இறுதி வெற்றி நமதே என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்பது, வெற்றி பெறுவது என்னும் வழிமுறையாகும். அந்த வழியில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த தமிழ் இணையப் பயிலரங்கத்தில் பங்கு பெற்றோருக்கு ஒரு புதிய அனுபவமாகவும் அமைந்தது. தொடக்க விழா தொடக்க விழாவில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவரையும் வரவேற்றார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை முதன்மையர் பேரா.க. திருச்செல்வி தலைமையுரையாற்றினார். பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அறிமுகவுரையாற்றினார். மக்கள் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
கிராமப் பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவரது உரை அமைந்தது. மிக சமீபத்தில் வெளிவந்த சுபாரட்டோ பாக்சி என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகமான M.B.A. at 16 A teenagers guide to Business... என்னும் புத்தகத்தில் இருந்த வாழ்க்கை வரலாறுகளை சுட்டிக்காட்டினார். சாதாரண கிராமத் தில் பிறந்து வளர்ந்த அவர்கள் எப்படி பெரிய ஆட்களாக வளர்ந்தார்கள் என்பதனையும், அதற்கு இணையம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதனை யும் புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி உரை யாற்றினார். இணையத் தினை சரியாகப்பயன்படுத்து வதன் மூலம் பலவகை களில் முன்னேறலாம் என்பதனை எடுத்துக்காட்டினார். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் கா.செந்தில்குமார் அவர்கள் நன்றி கூற காலை தொடக்க விழா முடி வுற்றது. வந்திருந்த பயிற்சியாளர்கள், விருந்தினர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, கணினி அறைக்கு வந்து சேர்ந்தோம்.
திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார். (20.5.2012 வல்லம்)
பயிற்சியின் ஆரம்பத்தில் தடுமாற்றம்
ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், அனைவரும் லேப்டாப் எனப்படும் மடிக் கணினி முன் அமர்ந்தனர். பயிற்சியாளர்களில் 80 சதவீதம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலோர் இப்போது தான் கணினியைப் பயன்படுத்துகிறோம் என்று கூறிட கணினி வகுப்பினை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் எடுக்க ஆரம்பித்தார். கணினியைப் பற்றி, இணையம் பற்றிய வரலாறுகளை எடுத்துக்கூறிவிட்டு , நோட்பேடு எனப்படும் கணினி மென்பொருளை திறந்து ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள் என பணித்தார். பல பேர் அப்போதுதான் தட்டுத்தடுமாறி கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தனர். அடுத்து தேடு தளம் என்றால் என்ன என்பதனைக் கூறி கூகிள் என்னும் தேடுதளம் பற்றிய குறிப்புகளைத் தந்தார். கூகிள் என்னும் தேடுதளத்தில் தமிழிலேயே நீங்கள் தேடலாம் என்பதனைத் தெளிவுபடுத்தினார். தமிழில் நீங்கள் தட்டச்சு செய்யலாம் என்பதனைக் குறிப்பிட்டு தமிழெழுதி என்னும் (Tamil editor) இணைய தளத்தினை பயிற்சியாளர்களுக்கு அறிமுகப் படுத்தினார். தமிழ் எழுதி என்னும் பகுதிக்குச் சென்று தங்கள் பெயரை, தங்கள் ஊர்ப்பெயரை எல்லாம் அடிக்க ஆரம்பித்தவுடனேயே பயிற்சி பெறுபவர்களிடம் ஓர் உற்சாகம் பற்றிக்கொண்டது. கணிப்பொறியைக் கையாளுவது மட்டுமல்ல, அதில் தமிழில் தாங்கள் விரும்பியவண்ணம் அடிக்கலாம் என்பதனை நேரடியாகக் கற்றுக்கொண்டனர். கணினி கற்றுக் கொள்வது கடினமல்ல, இணைய இணைப்பு இருந்தால் தமிழில் நமது கருத்துகளை பகிர்ந்து கொள்வது கடினமல்ல என்பதனை உணர்ந்து கொண்டனர். கணினியில் தட்டச்சு செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் கை தூக்குங்கள் எனச்சொல்ல, அப்படி கை தூக்கியவர்களிடத்தில் அருகில் சென்று எப்படி தட்டச்சு செய்வது என்பதனை தெளிவுபடுத்தினர். தெளிவுபடுத்தும் பணியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமாக இந்த பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மின்னஞ்சலும் நடைமுறை வாழ்வும்
அருமையான மதிய உணவு பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப்பின் பயிற்சி பெறுபவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஏற்கெனவே கணினி தெரிந்தவர்களுக்கு, மேலும் பல செய்திகளை வழங்கும்முகமாக பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்பு எடுத்தார். ஜிமெயிலில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என்பதனை வா.நேரு விளக்கிக்கூறி, ஒவ்வொரு படியாக கேட்கும் விவரங்களை பதிவு செய்யச் சொல்ல, பயிற்சி பெறுவோர் தங்களுக்குரிய மின்னஞ்சல்களை உருவாக்கிக்கொண்டனர். மின்னஞ் சல் அனுப்புவது எப்படி, மின்னஞ்சலில் உள்ள பல்வேறு வசதிகள் போன்றவை சொல்லித்தரப்பட்டது. சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன? பேஸ் புக்கைப் பயன்படுத்துவது எப்படி, நாம் எப்படி கேள்விகள் கேட்கலாம், பதில்கள் எப்படிக் கொடுக்கலாம் போன்ற வற்றை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி விளக்கினார். எங்கு போனாலும் மின்னஞ்சல் இனித் தேவை, மின்னஞ்சலின் பாஸ்வேர்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதும் சொல்லப்பட்டது. விக்கிபீடியா என்னும் இணைய தளத்தின் பயன், அதில் சென்று எப்படி கருத்துக்களை எழுதுவது, தவறாக யாரும் எழுதி யிருந்தால் எப்படி சரி செய்வது போன்றவை விளக்கிக் கூறப்பட்டன.
இணைய இணைப்பில் நீங்கள் தனியாக அமர்ந்திருந் தாலும், நீங்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்னும் உண்மையை உணர்ந்து செயல்படுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கதவு எண்ணும், தெருப்பெயர், ஊர்ப்பெயர் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு இணைய இணைப்பிற்கும் அய்.பி. எனப்படும் இணைய முகவரி இருக்கிறது, எளிதாக யார், எதனை எங்கிருந்து அனுப்பியிருக்கின்றார்கள் என்பதனை கண்டுபிடிக்க இயலும் என்பவை போன்ற நடைமுறை உண்மைகளை, பயிற்சியாளர்களுக்கு செய்தித்தாள் களில் வந்த சில செய்திகளைக் குறிப்பிட்டு பயிற்றுநர்கள் விளக்கினர்.
நமது வலைதளங்கள்
நமது விடுதலை இணைய தளத்தின் முகவரி, விடுதலை இணைய தளத்தில் உள்ள
Periyar.org மற்றும் பெரியார் பண்பலை , எப்படி விடுதலை இணைய தளத்தில் சென்று நமது கருத்துகளை எழுதுவது போன்ற பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டன. உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு என நமது பத்திரிகைகள் அனைத்திற்கும் இருக்கும் வலைத் தளங்கள் விளக்கப் பட்டன.
நடக்க இருப்பவை பகுதியில் எப்படி கழக நிகழ்வுகளைப் பார்ப்பது என்பது விளக்கப்பட்டது. பின்பு பிளாக் என்றால் என்ன? பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் வ.மாரிமுத்துவின் தமிழோ வியா.பிளாக்ஸ்பாட். காம்
(tamizhoviya.blogspot.com..) மற்றும் பல தனிப்பட்ட மனிதர்களால் இயக்கப்படும் வலைத் தளங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. பயிலரங்கத்தின் இறுதிப் பகுதியில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலந்து கொண்டார். தோழர்களின் வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட்டு சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.
சான்றிதழும் நன்றியும்
பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாலை 5.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் மு. அய்யாவு அவர்கள் தலைமையு ரையாற்றினார். அவர் தனது உரையில் ஏன் கணினி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கி மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் உரையாற்றினார். சான்றிதழ் வழங்கிய தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், இந்த பயிற்சி ஒரு தொடக்கமே, இப்பயிற்சியினைத் தொடர்ந்து முயற்சி எடுத்து நல்ல நிலையில் கணினியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டு 1998-இல் முதன்முதலில் தான் கணினியை இயக்கிய சூழலை எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்ற வருடம் தந்தை பெரியார் பிறந்தநாள் ஆண்டு மலரில் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்கள். இங்கு சிறப்பாக நடந்து முடிந்தி ருக்கிறது.இன்னும் பல ஊர்களில் இந்த தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்த பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில மாணவரணி தோழர் திராவிட எழில் மற்றும் பேராசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார் தலைமை நிலையச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். தொடர்ந்துஅனைவ ருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை மேடையில் வந்து தெரிவித்தனர். கணினி பயிற்சி பெற்ற கொத்தனார் முருகேசன் சொன்னார், நான் 6ஆம் வகுப்புதான் படித்திருக் கிறேன். கணினியை என் னால் இயக்க முடியும் என்று நினைத்ததே இல்லை, இன்று இயக்கினேன், மிக்க நன்றி என்றார், கும்பகோணத்தை சேர்ந்த நாட்டியக் கலைஞர் தமிழ்விழி சொன்னார், நான் மட்டும் இங்கு வந்து கணினி கற்றுக்கொள்ளவில்லை, , எங்கள் அம்மாவும் வந்து கற்றுக்கொண்டார்கள்,மிக்க மகிழ்ச்சி என்றார்.
வடசேரி பன்னீர்செல்வம் தனது மகளோடு ஒரு விண்ணப்பத்தை நிரப்பும்போது , மின்னஞ்சல் இல்லாமல் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை , இப்போது கற்றுக்கொண்டேன் , மிக மிக நன்றி என்றார். ஓவியர் சுந்தர் , சிறீரங்கம் தமிழ் செல்வன்,ஆசிரியர் அன்பரசு எனக் கருத்து தெரிவித்த அனைவருமே மிகப் பயனுள்ள பயிற்சி எனத் தெரிவித்தனர்.இறுதியாக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் கூடுதல் இயக்குநர் பேரா. முனைவர்.ந.சிவசாமி அவர்கள் நன்றி கூறினார். கணினி கற்றவர்களே, அடுத்த வேலை என்ன? வலைத் தளங்கள் என்பது இன்றைக்கு பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில் உள்ளது. திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றி, திராவிட இயக்கம் பற்றி கண்டபடி எழுதுகிறார்கள்.பதிலடி கொடுக்காமல் பார்ப்பனர்கள் திருந்த மாட்டார்கள். அவர்கள் எந்த மொழியில், நடையில் எழுது கிறார்களோ அதே மொழியில், அதே நடையில் நமது தோழர்கள் பதில் கொடுக்க வேண்டும். வரலாற்றைத் திரித்து எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். விடுதலை இணைய தளத்தை தோழர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். பொதுவானவர்கள் என்ற போர்வை போர்த்தி பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் இடக்கு மடக்காய் எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
மின்னஞ்சலை நன்றாகக் கையாளத் தெரிய வேண்டும். நக்கீரன் போன்ற பத்திரிகைகள் 500 வார்த்தைகளுக்குள் கருத்துக்கூற வசதி செய்து கொடுக்கின்றார்கள். நறுக்கென்று சுருக்கமாய் செய்தியை சொல்லத் தெரியவேண்டும், ஆதாரத் தோடு சொல்லத் தெரியவேண்டும்.பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இயக்க தோழர் களோடு நட்பில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது மரியாதைக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல " நமது இயக்கம் பிரச்சார இயக்கம்". இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக தமிழ் இணைய தளப் பயிற்சியினைப் பெற்றவர்கள் இணைய வழிப் பிரச்சாரத்தை செய்தல் வேண்டும், அதுவே உண்மை யான நன்றியாகும். தோழர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கணினி ஆசிரியராய் வகுப்பெடுத்தார், கணினி இணைப்பில் தொழில்நுட்ப மேலாளராய் சரி செய்தார், பேஸ் புக் , மற்றும் நமது விடுதலை இணைய தளத்தில் சென்றபோது இயக்கத்தோழராய் கருத்து களை முன்வைத்தார். வலைத்தள உருவாக்கத்தில் கணினி மென்பொருள் வல்லுநராய் கணினி நுட்பங் களைச் சொன்னார்.
இந்தப் பயிலரங்கத்தில் அவரின் பன்முகப்பணி பெரிதும் பாராட்டத்தக்கது.துணைவேந்தர் அவர் களின் வழிகாட்டுதலில் பேரா.கா.செந்தில்குமார், பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி திரு. பாண்டியன், பேரா. இளங்கோ, முனைவர் அதிரடி க.அன்பழகன் என ஒரு பேராசிரியர்கள் குழுவே முனைப்புடன் செயல்பட்டு இந்த நிகழ்வை வெற்றி கரமாக நடத்திட பேருதவி புரிந்தன