Sunday, 30 July 2017

அண்மையில் படித்த புத்தகம் : அச்சம் தவிர் ...........ஆசிரியர் : வெ.இறையன்பு

அண்மையில் படித்த புத்தகம் : அச்சம் தவிர்
ஆசிரியர்                    : வெ.இறையன்பு
பதிப்பகம்                    :ஸ்ரீ துர்க்கா பப்ளிகேஷன்ஸ,சென்னை-5 பேச :98848 07831
பக்கங்கள்                    : 79, இரண்டாம் பதிப்பு அக்டோபர் 2016, விலை ரூ 60/-

                          நல்ல எழுத்தாளர்,பேச்சாளர், இளைஞர்கள் பலருக்கு ஊக்க சக்தியாகத் திகழும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி திரு.வெ.இறையன்பு அவர்களால் எழுதப்பட்டுள்ள புத்தகம் இந்தப்புத்தகம்.பலர் தாங்கள் வேற்று மொழியில் படித்ததை தமிழில் மொழிபெயர்ப்பு எனச்சொல்லாமல் எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் தன்னைச்சார்ந்த அனுபங்களை, தன்னுடைய இளமைக்காலம் முதல் இன்றைக்கு வரை வெற்றியாளராகத் திகழ்வதற்கான அடிப்படைகளை அழகு தமிழில் படிப்பவர்களை குறிப்பாக மாணவர்களை  ஈர்க்கும்வண்ணம் சொல்லியிருக்கின்றார்.

                         இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பயம், எதனைப் பார்த்தாலும் பயம். பாம்பக்கண்டால் பயம் சரி, பல்லியைக் கண்டாலும் தலையில் விழுந்து விடுமோ என்னும்  பயம்.அச்ச உணர்வு என்பது இன்றைக்கு நம்மைச்சுற்றி இருக்கும் மாணவர்களை, அவர்களின் பெற்றோர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.ஏய்,அச்சப்படுவதிற்கு எல்லாம் ஒன்றும் இல்லை, இதுதான் வழிமுறை, இப்படி இப்படிப் போனால் வெற்றி பெறலாம், நான் வெற்றி பெற்றது இப்படித்தான், இந்த இந்த வழிமுறைகளில்தான் வெற்றி பெற்றேன், நீயும் வா, நான் கடைப்பிடித்த வழிமுறைகளைக் கடைப்பிடி,இல்லை என்னுடைய அனுபவத்திலிருந்து உனக்கான வழிமுறைகளை நீயே கண்டுபிடி, கடைப்பிடி, வாழ்க்கையில் வெற்றி பெறுவாய் என்று ஆற்றுப்படுத்தும் புத்தகம்தான் இந்தப்புத்தகம்.

                             நூலின் தலைப்பே 'அச்சம் தவிர்' என்பதுதான். பெற்றோர்களுக்கு வரும் அச்சம், மாணவர்களுக்கு வரும் அச்சம், பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு வரும் அச்சம், போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு வரும் அச்சம் என தேர்வு சம்பந்தமான அத்தனை அச்சங்களையும் அகற்றி, வா, வா, அச்சம் தவிர், வெற்றி பெறு எனச்சொல்வதுதான் இந்தப்புத்தகம். 'நிறைய மாணவர்கள் நன்றாகப்படித்தாலும் அச்சம் ஏற்படுகிறபோது படித்தவற்றை மறந்து சாலையின் நடுவே நின்றுவிடும் வாகனமாய் தேர்வு அறையில் தடுமாறி விடுகிறார்கள் .விளையாட்டு மட்டுமல்ல, தேர்வும் ஓர் உத்தியே ' என முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். உண்மைதான்.அந்த உத்திகள் கிராமப்புறத்தில் படிக்கும் ஓர் அரசுப்பள்ளி மாணவனுக்கு கிடைத்தால் அவன் வெற்றி பெறுதலும், வேகம் பெறுதலும் எளிது. அந்த உத்திகள் இந்தப்புத்தகத்தில் நிறைய உள்ளன.

வெற்றி பெறுவதற்கு என்ன முதலில் தேவை, என்னால் முடியும் எனும் எண்ணம். அந்த ஆக்கபூர்வ எதிர்பார்ப்பை பெற்றோர்கள், பள்ளிகள், கல்லூரிகள் எப்படி மாணவர்களுக்கு ஏற்படுத்த முடியும் என்பதனை எடுத்துச்சொல்லும் அதே வேளையில் நடைமுறையில் இருக்கும் எதிர்மறை எதிர்பார்ப்பு விளைவுகளையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்குகின்றார் நூலாசிரியர். " தேர்வு என்பதும், படிப்பு என்பதும், பள்ளி என்பதும் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. மதிப்பெண்கள் பெறுவது ஒன்றுதான் ஒரு மனிதனுடைய வெற்றி தோல்விகளை முழுமையாக நிர்ணயிக்கும் என்பது முற்றிலும் தவறு ' என்று சொல்லும் நூலாசிரியர், ஐன்ஸ்டீனின் வாழ்க்கையை உதாரணமாகக் காட்டுகின்றார்.

" மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும் ,மிகச்சிறப்பு வாய்ந்த படிப்பு எனப்போற்றப்படுகிற கல்வியைப் பயின்றவர்களையும் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவர்களில் பலர் தற்குறிகளாகவும் ,சுய நலமிகளாகவும் ,தங்களைத்தாண்டி உலகம் இல்லை என்று கருதுபவர்களாகவும் ,அவர்கள் பணியைத் தவிரத் தெரிந்துகொள்ள வேண்டியது எதுவுமில்லை என்பவர்களாகவும் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் " எனக்குறிப்பிட்டு அதற்கான காரணங்களை அலசி அதனைத் தவிர்ப்பதற்கான காரணங்களைக் குறிப்பிடுகின்றார்.

ஆங்கிலத்தில் வெற்றி பெறுவது எப்படி? நமது தமிழை வேற்று நாட்டில் இருந்து வந்து படித்து,அறிந்து, மகிழ்ந்து தமிழில் இலக்கியம் படைத்த ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்களின் வைராக்கியத்தை உள்வாங்கிக்கொள்ளுங்கள். அப்புறம் ஆங்கிலத்தை எழுத,பேச படியுங்கள் என்று கூறி எப்படி எப்படி எல்லாம் நமது ஆங்கில புலமையை மேம்படுத்தலாம் என்று வழிகளைச்சொல்கின்றார்.கல்லூரியில் பேசச்சொல்லும் போது ஆங்கிலத்திலா? தமிழிலா எனக்கேட்டு, ஆங்கிலம் எனச்சொன்னால் 1 மணி நேரத்திற்கு மேலாக ஈர்ப்பாய், அழகாய் ஆங்கிலத்தில்  நூலாசிரியர் பேசுவதை கேட்டிருக்கிறேன். நான் வியந்திருக்கிறேன். கிராமத்தில் பிறந்த தனக்கு நினைத்தவுடன் ஆங்கிலத்தில் பேசும் வல்லமை எப்படி வந்தது,எந்தெந்தப் பயிற்சியால் வந்தது  என்பதற்கான விவரங்களை இந்தப்புத்தகத்தில் கொடுத்திருக்கின்றார். நாமும் பயன்பெறலாம். நமது மாணவர்களும் பயன்பெறலாம்.
நேர மேலாண்மை என்றால் என்ன ? என்ன ? ..தடிமனாய் இருக்கும் புத்தகங்களை வாங்கி நேர மேலாண்மை குறித்து படிப்பதா...இல்லை, இல்லை என்று சொல்கின்றார் தனது அனுபவத்தால்."நேர மேலாண்மை என்றால் எந்த நேரத்தில் எதைச்செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் அதனைச்செய்வதுதான். சிறுநீர் கழிக்கும் நிர்ப்பந்தம் உடலை உலுக்கும்போது, சிறுகதையை வாசித்துக்கொண்டிருந்தால் அது நேர மேலாண்மையல்ல.தேர்வுக்கு முதல் நாள் விடிய விடியப் படித்து விழிகளைக் கெடுத்துக்கொண்டால் அது நேர மேலாண்மையல்ல. இந்த நொடியில் என்ன முக்கியம் என்பதைப் பொருத்து துரிதமாகவும் ,நேர்த்தியாகவும் முழுமையாகவும் செயல்படுவது மட்டுமே நேர மேலாண்மை " எனக்குறிப்பிட்டு நேர மேலாண்மையை மிக விரிவாக மனதில் பதியும் வண்ணம் சொல்லியிருக்கின்றார்.

பலவற்றை உடனே நாம் மறந்து விடுகிறோம். சிலவற்றை ஆண்டுகள் பல ஆனால்கூட நாம் மறப்பதில்லை...ஏன்? எப்படி... அதற்கான காரணத்தை  மேல்மனம்,ஆழ்மனம் என்பதனை அறிவியலோடு விவரித்துச்சொல்கின்றார்.அதனைப் படிப்பதற்கும், தேர்வுக்கும்  எப்படி பயன்படுத்துவது என்பதனைச்சொல்லியிருக்கின்றார். தேர்வில்,வாழ்வில் வெற்றி என்பது நமது ஊக்கத்தைப் பொறுத்தது. அதற்கு  மாணவர்களை ஊக்கப்படுத்தக்கூடிய திரைப்படங்களைப் பார்க்கவும்,இனிய புத்தகங்களை வாசிக்கவும் சொல்கின்றார்.

என்னோடு கல்லூரியில் ஒரு  நண்பர் பி.எஸ்.ஸி வேதியியல் படித்தார். அருமையாகப்படிப்பார். அருமையாக வினாக்களுக்கு பதில் சொல்வார். ஆனால் அவரது எழுத்து கோழி கிண்டியதுபோல இருக்கும். அதனாலேயே அவருக்கு தேர்வில் மதிப்பெண் குறையும். கையெழுத்தை மட்டும் அவர் திருத்தியிருந்தால் கல்லூரியிலேயே முதல் மாணவராக வந்திருப்பார். 'கையெழுத்தை சீரமைக்கவே முடியாது ' என்பது மூட நம்பிக்கை எனச்சொல்லும் இந்த நூலின் ஆசிரியர் சீரமைப்பதற்கான வழிகாட்டுதலை சுட்டிக்காட்டுகின்றார்.

      ஐ.ஏ.எஸ்.தேர்வில் முதலில் வெற்றிபெற்றால் கூட உடலால் தனது ஐ.பி.எஸ். கனவு தகர்ந்ததையும், மார்புச்சுற்றளவை கூட்டுவதற்காக தான் மேற்கொண்ட அவசர உணவு, உடல்பயிற்சிகளை வேடிக்கையாகக் குறிப்பிடுகின்றார்.உடல் நலம், போதிய தூக்கம் பற்றி தன்னுடைய, தனது நண்பர்களின் அனுபவங்களைச்சார்ந்து வாசகர்களோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றார்.எப்படியெல்லாம் உடல் நலத்தை பேணலாம் என்பதையும் தேர்வுக்கு முதல் நாள் போதிய தூக்கம் தேவை என்பதையும் மிகவும் வலியுறுத்திச்சொல்கின்றார்.

தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய பல செய்திகளை கடைசி அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். முடிவில் 'கல்வி என்பது சுத்தியலால் உடைக்கப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, அன்பினால் திறக்க வேண்டிய ரசவாதம் ' எனக்குறிப்பிடுகின்றார். அந்த ரசவாதம் எப்படி அன்பாக நிகழ்த்தப்படவேண்டும் மாணவர்களால், பெற்றோர்களால், கல்வி நிலையங்களால் என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி. சொல்லப்பட்ட விதத்தில் மிக அழுத்தமாகவும், எடுத்துக்காட்டுகளோடும், தனது அனுபவங்களோடும் சொல்லப்பட்டுள்ளது. மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.


Thursday, 27 July 2017

கால்களில் செருப்பில்லாமல்.......



அனல் பறக்கும்
சாலைகளில்
கடக்கும்போதும்
கூலி வேலை செய்யும்
ஆட்களைத் தாண்டும்போதும்
எப்போதும் கால்களைக்
கவனிக்கிறேன்......
செருப்பு அணிந்திருக்கிறார்களா?
எனக் கண்கள்
கவலையோடுதான்
கவனிக்கின்றன.....
எல்லோருக்கும் எல்லாம்
என்பதெல்லாம்
இந்த நாட்டில்
கானல் நீர்தானோ?.....

அன்றொரு நாள்
செவக்காட்டிற்கு
நானும் தங்கையும்
தம்பியுமாய்
அதிகாலையில்
சென்றுவிட்டு
வெயில் ஏறிய நேரத்தில்
கால்களில் செருப்பில்லாமல்
திரும்பிய நேரத்தில்

சுட்ட தரையும்
கொதித்த மணலுமாய்
கால்களில்
தீப்பற்ற......
தாள இயலாமல்
செவக்காடு முதல்
ஓட்ட ஓட்டமாய்
அழகாபுரிச்சாலைவரை
மூவரும்
ஓட்டப்பந்தயத்தில்
ஓடி வந்ததுபோலவே
ஓடி வந்தது நினைவிருக்கிறது.....

அய்நூறு அறநூறு
எனப் பிள்ளைகளுக்கு
புதுச்செருப்பு
வாங்கும் நேரமெல்லாம்
கால்களில் செருப்பில்லாமல்
ஓடி வந்த நினைவு
மனதிற்குள் ஓடுகின்றது
நீளும் நினைவுகளாய்.....

                                                           வா.நேரு.....27.07.2017