அய்யா அறிவுக்கரசு அவர்களின் 85-ஆம் ஆண்டு பிறந்த நாள்(01.11.2024) இன்று.கடந்த 25,30 வருடங்களாக நவம்பர் 1 என்றால் அதிகாலை அவரை அழைப்பேன்.பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வேன்.கொஞ்ச நேரம் அப்படியே உரையாடல் தொடரும். அய்யா ஆசிரியர் அவர்கள் காலையிலேயே அழைத்து பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னதை மகிழ்ச்சியோடு சொல்வார்.மற்றும் அழைத்த முக்கியமான பிரமுகர்களைச் சொல்வார். என்னைப் பற்றி,என் குடும்பத்தினர் பற்றி விசாரிப்பார்.அவரோடு அறிமுகமான பின்பு எந்த ஆண்டும் அவருக்கு நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்லாமல் இருந்ததில்லை.இன்று அவர் இல்லை. ஆனால் அவர் எழுதி வைத்துசென்ற 37 நூட்கள் இருக்கின்றன.முழுக்க ,முழுக்க 37 நூட்களும் திராவிட இயக்கத்தை,பெரியாரியலை அடிப்படையாகக் கொண்டவை.
வீரியமிக்க எழுத்துகள் அவரின் எழுத்துகள்..ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால்,அதற்கான புத்தகங்கள் அனைத்தையும் ஒரு சேர சேகரித்து வைத்துக்கொள்வார்.அவற்றைப் படிப்பார்.அவற்றிலிருந்து குறிப்புகளை எடுப்பார்.அவர் எழுதும் புத்தகத்தில்,எந்தப் புத்தகத்தில் இருந்து அந்த தகவலை எடுத்தேன் என்னும் குறிப்பைக் கொடுப்பார்.முழுவதுமாக தரவுகளைச் சேகரித்து விட்டு,எழுத அமர்ந்தால் எந்த விதமான அடித்தல் திருத்தல் இல்லாமல் ஒரே மூச்சாக எழுதி முடித்து விடுவார். திருப்பி திருப்பி,திருத்தி எழுதும் பழக்கம் அவரிடம் இல்லை.ஓரிருமுறை நான் கேட்டிருக்கிறேன்.அய்யா,திருப்பி திருத்தி எழுதினால் இன்னும் நன்றாக வருமல்லவா ? என்று..இப்போதே நன்றாகத்தான் வந்திருக்கிறது.படிக்கும் உங்களைப் போன்றவர்கள் ஏதும் திருத்தம் இருந்தால் சொல்லுங்கள் என்பார். படித்துப் பார்த்தால் முழு திருப்தியாக நமக்கும் இருக்கும்.
தி வீக்,தி மனோரமா,தி இல்லிஸ்ட்ரேட் வீக்லி போன்ற ஆங்கிலப்பத்திரிக்கைகளுக்கு சந்தா கட்டி பல வருடங்கள் படித்தவர்.நிறைய ஆங்கிலப் புத்தகங்களும் படிப்பவர். ஆங்கிலத்திலும் அப்படி ஒரு புலமை.படித்தது அந்தக் காலத்து 11-ஆம் வகுப்புதான். மேலே படிக்க விரும்பி,வீட்டில் வேண்டாம் என்று சொன்னாதால் படிக்க இயலாமல் போனவர். அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆலோசனையால் போட்டித்தேர்வு எழுதி வருவாய்த்துறையில் எழுத்தராகப் போனவர்.உதவி கலெக்டருக்கு மேலான பதவியான வருவாய் கோட்டாட்சியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். 'அதற்கு இது வயது அன்று ' என்னும் தன் வரலாறு புத்தகத்தில் அவரின் வாழ்க்கையைப் பற்றிய பல செய்திகளை எழுதியிருப்பார். தன்னுடைய தொழிற்சங்கப் பணியில் பெற்ற பதவிகளையும் உலக சுற்றுப் பயணங்களையும்,தனக்கு கிடைத்த விழுப்புண்களையும் அந்தப் புத்தகத்தில் எழுதியிருப்பார்.
அவரது 75-ஆம் ஆண்டு விழா கடலூரில் மிக சிறப்பாக நடைபெற்றது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் கடலூரில் ,அய்யா ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடந்த பெரும் விழா.இதே நவம்பர் 1-ல். அவரது மருமகன் திராவிடர் கழகப் பொறுப்பாளர் அய்யா பேரா.ஜெயக்குமார் அவர்கள்தான் முன்னின்று இதற்கான ஏற்பாடுகளைசெய்தார். மிக அழகான,நிறைய தகவல்கள் அடங்கிய பவளவிழா மலர் வெளியிடப்பட்டது.
நவம்பர் 1 என்றவுடன் அதிகாலையிலேயே அய்யா சு.அறிவுக்கரசு அவர்களைப் பற்றிய நினைவுகள் அலைஅலையாக வருகிறது.இப்போது அவர் இல்லை எனினும் நினைவுகளில் வாழ்கிறார்.வாழ்வார். புகழ் வணக்கம் அவருக்கு!
வாழ்க அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் புகழ்!.
https://vaanehru.blogspot.com/2014/10/blog-post_31.html