Wednesday, 16 April 2025
Wednesday, 9 April 2025
டொனால்ட் டிரம்ப்...
கடலுக்கு அருகில்
நின்று கடல் அலையே
என் காலைத் தொடாதே
என்று கட்டளையிட்டு
அவமானப்பட்ட
ஆங்கில மன்னன்தான்
நினைவுக்கு வருகிறான்...
அமெரிக்க அதிபர்
டொனால்ட் டிரம்ப்
செயல்களைப் பார்த்து…
வா.நேரு,09-04-2025
Tuesday, 8 April 2025
நினைவில் கொள்கிறேன்....
இன்பமெனினும்
துன்பமெனினும்
இயக்கத்தோடு
பகிர்ந்துகொள்
என்பதுதான்
ஆத்திசூடி எப்போதும்
பெரியார் இயக்கத்தில்…
பிறருக்குப் பயன்படு
அதனால் மகிழ்வுறு
என்பதுதான் தந்தை
பெரியாரின் தத்துவம்…
மிகப்பெரும் துக்கமா?
தனிவாழ்வில்…
இன்னும் தீவிரமாய்
இயக்க வேலைகளில்
ஈடுபட்டு மறந்து
வாழ்
என்பதுதான் அய்யா
ஆசிரியர் வீரமணி
அவர்கள் காட்டும் வழி !
எனது தம்பியின்
நினைவு நாளில்
நினைவில் கொள்கிறேன்
நான் இவற்றை!
வா.நேரு,09.04.2025
Sunday, 6 April 2025
இராமாயணத்து இராமரும் மோடியும்....
இராமாயணத்து இராமரும்
மோடியும் ஒன்று
என்றொருவர் கவிதை
எழுதியிருக்கிறார்...
மோடியை வரவேற்று...
உண்மைதான்...
மனைவியைக் காட்டில்
தவிக்க விட்டுவிட்டு
நாட்டை ஆண்டவர் இராமர்..
மனைவி இருப்பதையே
தேர்தல் பத்திரங்களில்..
சமூகத்திற்கு....
காட்டாமல் குஜராத்
மாநிலத்தை..நாட்டை
ஆண்டவர் மோடி...
விலங்குகள் வாழும்
காட்டில் பயந்து பயந்து
பிள்ளைகளை வளர்த்தாள்
இராமயணத்தில் சீதை..
ஒற்றை அறை வீட்டுக்குள்
பயந்து பயந்து வாழ்ந்தார்...
வாழ்கின்றார் யசோதாபென் மோடி..
இருவரும் ஒன்றுதான்..
சரியாகத்தான் கவிதை
எழுதியிருக்கிறார் அவர்...
வா.நேரு,
06.04.2025
முனைவர் க. சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" — நூல் திறனாய்வு: முனைவர் வா. நேரு
தமிழர் புலப்பெயர்வு என்னும் இந்த நூல் தமிழ்
மரபு அறக் கட்டளையின் இயக்குனர் கா சுபாஷினி
அவர்களால் எழுதப்பட்ட ஓர் அருமையான நூல் . ஓர் ஆராய்ச்சி நூல். எப்படி எல்லாம் தமிழர்கள் காலம் காலமாக புலம் பெயர்ந்தார்கள், எதற்காகப் புலம்பெயர்ந்தார்கள்,ஏன்
புலம்பெயர்ந்தார்கள் புலம்பெயர்கிற அவர்கள் என்னென்ன இன்னல்களை சந்தித்தார்கள்
அல்லது என்னென்ன ஏற்றங்களைச் சந்தித்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நமக்கு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிற ஓர் அருமையான நூலாக
இந்தத் தமிழர் புலப்பெயர்வு என்கின்ற நூல் உலகளாவிய பயணங்கள்- குடியேற்றங்கள்- வரலாறு என்ற
தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த
அறக்கட்டளையின் கிளைகள் இந்தியா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி அமெரிக்கா
போன்ற பல்வேறு நாடுகளில் உள்ளது.
இந்தப் புத்தகத்தினுடைய முதல் பதிப்பு ஜனவரி 2024 ஆம் ஆண்டு
வந்திருக்கிறது மிகக் குறுகிய காலத்திலே ஆறு மாதத்திலேயே இரண்டாவது பதிப்பு ஜூன் 2024-லேயே வந்திருக்கிறது. 374 பக்கங்கள் விலை ரூபாய் 450 ரூபாய். இந்த நூல் காணிக்கை என்று சொல்லி தன் உடலில் காயங்களையும்
மனதில் வலிகளையும் சுமந்து இன்றைய நம் பெருமைகளுக்கு வழி வகுத்துத் தந்த அவர்களுக்கு
என்று கொடுத்திருக்கிறார். அந்த அவர்கள்
என்பவர்கள் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும் உலகின் பல
நாடுகளுக்கும் தீவுகளுக்கும் புதிய வாழ்க்கையைத் தேடிப் பயணம் செய்த தமிழ்ப் பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என்று அவர் கொடுத்திருக்கிறார்.
இந்த நூலுக்கு மிகச் சிறப்பாக வாழ்த்துரையினை
தமிழ்நாட்டினுடைய மாண்புமிகு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நாயகர் அய்யா மு.க,ஸ்டாலின் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல வாழ்த்துரையினை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும்
இலங்கையினுடைய அமைச்சர் மாண்புமிகு திரு செந்தில் தொண்டைமான் அவர்களும்
கொடுத்திருக்கிறார்கள். ஓர்
அருமையான அணிந்துரையை, அணிந்துரையே ஓர் ஆய்வுச்சுருக்கம் போல இருக்கிறது. அதனை ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் திரு ஆர்
பாலகிருஷ்ணன் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல பதிப்புரையை
நிறைய நூல்களைப் படைத்திருக்கக்கூடிய ஆய்வறிஞர் முனைவர் தேமொழி அவர்கள்
கொடுத்திருக்கிறார். முன்னுரையாக
தன்உரையை இந்த நூலினுடைய ஆசிரியர் முனைவர் கா சுபாஷினி அவர்கள் கொடுத்திருக்கிறார்.
நூல்களில் இரண்டு வகையான நூல்கள் இருக்கின்றன. ஒன்று சில நூல்களை
மேலோட்டமாக ஒரே மூச்சிலே படித்து முடிக்கக் கூடிய நூல்கள். இன்னொரு வகை நாம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து சுவைக்க வேண்டிய நூல்கள்.பாதுகாத்து
வைக்க வேண்டிய நூல்கள். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பெல்லாம்
இரண்டாவது வகை. அந்த வகையில் இந்த ‘தமிழர் புலப்பெயர்வு’ இரண்டாவது வகையாக
இருக்கக்கூடிய ஒரு நூலாக இருக்கிறது ஒரே மூச்சிலே படித்துவிட்டு தூக்கிப் போடக்கூடிய ஒரு நூலாக இல்லாமல்
நாம் பாதுகாக்க வேண்டிய, பல நேரங்களில் நாம்
ரெஃபரன்ஸ் நூல் என்று சொல்வோமே அதைப்போல நமக்கு பயன்படக்கூடிய
ஒரு நூலாக இந்தத் தமிழர் புலப்பெயர்வு என்ற நூல் இருக்கிறது.
இந்த நூலில் மொத்தம் 10 அத்தியாயங்கள் இருக்கின்றன.இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி ஒரு 50 நிமிடம் உரையாற்றி இருக்கின்றேன்.வாய்ப்பு இருக்கும்போது
கேட்டுப்பாருங்கள். நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஸ்ரீதேவி(வாருங்கள் படிப்போம்
குழு) தன்னுடைய கருத்தாக “மிக அருமையான புத்தகத் திறனாய்வு.புத்தகம் வாங்கிப் பல நாட்கள்
வாங்கிவிட்டது.எல்லா அத்தியாயங்களையும் அதனுள் இருக்கும் தலைப்புகளின் வரிசையையும்
அதனுள் சொல்லப்பட்ட கருத்துகளையும் மிக விரைவாகவும் சுருக்கமாகவும் கூறி,அதனோடு தொடர்புடைய
மற்ற புத்தகங்களையும் உங்கள் அனுபங்களையும் கூறி புத்தகத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுத்தி
விட்டீர்கள்.
எப்படி மிக அதிகமான தகவல்களை உடைய புத்தகத்தை திறனாய்வு செய்யலாம்
? என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது இன்றைய திறனாய்வு .மிக்க நன்றி அய்யா” என்று
குறிப்பிட்டிருந்தார். நன்றி அவருக்கு.
Tuesday, 1 April 2025
இதழாளர்கள் அம்பேத்கரும் பெரியாரும் – முனைவர் வா.நேரு
காலம் காலமாய் வர்ணத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் நிலையை உணராமல் வாழ்ந்து வந்தனர். ஆடு மாடுகளைப் போல நடத்தப்பட்டாலும், ஏன் நமக்கு இந்த இழிநிலை என்னும் உணர்வு அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்துவதற்கு நம் தலைவர்கள் பத்திரிகைகள் ஆரம்பித்தார்கள்..அப்படி உருவாக்கப்பட்ட பத்திரிகைகளில் மிக முக்கியமானவை (மூக்நாயக்) ‘ஊமைகளின் தலைவன்‘ என்னும் பத்திரிகையும் ‘குடிஅரசு’ பத்திரிகையும் ஆகும்.
‘மூக் நாயக்’ முதல் இதழில் அவ்விதழின் குறிக்கோள் பற்றி எளிமையான முறையில், புரிந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையில், அழுத்தமான வீச்சுடன் அம்பேத்கர் அறிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சமத்துவம் இல்லாத நாடு. இந்தியா பல அடுக்குகளை உடைய கோபுரம் போன்றது. ஆனால், இதற்கு நுழைவாயிலே இல்லை. ஓர் அடுக்கிலிருந்து மற்றொரு அடுக்குக்குச் செல்ல ஏணிப்படிகளும் இல்லை. ஓர் அடுக்கில் பிறந்த ஒருவர் அங்கேயே தான் மடிய வேண்டும்’ என்று எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள ஜாதிப்பிரிவுகள் போல், உலகின் எந்த நாட்டிலும் இல்லை. ஆனால், இன்றைக்குக் கல்வி வளர்ச்சியால், பன்னாட்டுத் தொடர்பால் வெளி நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்களுடன் இந்தச் ஜாதிய மனப்பான்மையையும் கொண்டு செல்கிறார்கள். அம்பேத்கர் அவர்கள் பயப்பட்டதுபோல் இந்தச் ஜாதியக் கொடுமை இந்தியர்களால் உலகமெங்கும் இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள ஜாதியத்திற்கு எதிரான சட்டங்கள் இதனை இன்று உறுதிப்படுத்துகின்றன.
“பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், தீண்டப்படாதவர்கள் என்ற மூன்று பிரிவுகளாக இந்து சமூகம் உள்ளது என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் கடவுள் விலங்குகளிலும் மற்ற உயிரற்ற பொருள்களிலும் இருக்கிறார் என்று தத்துவ விளக்கம் கூறிக் கொண்டும், அதே சமயம் தன் சொந்த மதத்துக்காரர்களையே தீண்டப்படாதவர்களாக நடத்துகின்றவர்களுக்காக இரக்கப்படுகிறேன் என்றும் எழுதி உள்ளார். அறிவையும் கல்வியையும் பரப்புதலை நோக்கமாகக் கொண்டிருக்காமல் பார்ப்பனர்கள் இவற்றை முழுவதுமாகத் தாமே பெற்று ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்காக வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வியும் அதிகாரமும் இல்லாமையே பார்ப்பனர் அல்லாதவரின் பின் தங்கிய நிலைக்குக் காரணம் என்று கருதினார் இறுகப் பிணைத்துள்ள அடிமைத் தளையிலிருந்து, வறுமையிலிருந்து, அறியாமையிலிருந்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைக் காப்பாற்றி மீட்டிட மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது சமூக இயலாமைகளை உணர்த்திடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் (ஆங்கிலத்தில் தனஞ்சய்கீர்; தமிழில் கா.முகிலன்).
‘மூக் நாயக்’ இதழ் சில ஆண்டுகள்தான் நடந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்விக்காக வெளி நாடு சென்ற பின்பு அது நிறுத்தப்பட்டது.மீண்டும் 1927இல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘பகிஷ்கருக் பாரத்’ (நிராகரிக்கப்பட்டவர்களின் இந்தியா) என்னும் ஏட்டை நடத்தியிருக்கிறார். அதுவும் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பல இதழ்களில் அவர் கட்டுரைகளைத் தந்து கொண்டே இருந்திருக்கிறார். நூல்களை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். அவரைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வந்து கொண்டே இருந்திருக்கின்றன. இன்றும் வெளியிடப்பட்டு வருகின்றன.
வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு, அதில் வெற்றி கண்ட பின்பு பார்ப்பனர் சூழ்ச்சியைப் பார்ப்பனர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொண்ட தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதற்கு ஒரு பத்திரிகை அவசியம் என்று உணருகின்றார் வைக்கம் போராட்டத்தில் சிறையில் இருக்கும்போதே அதை முடிவு செய்கிறார். பின்பு தொடர்ச்சியாகக் காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானங்களைக் கொண்டு வர முயன்று, வஞ்சகமாகப் பார்ப்பனர்களால் அந்தத் தீர்மானங்கள் தோற்கடிப்படுவதைக் கண்டு காங்கிரசை விட்டு வெளியே வருவதற்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் ‘குடி அரசு’ இதழைத் தொடங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து, புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு, ‘விடுதலை’, உண்மை போன்ற இதழ்கள்.திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காலத்தில் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் (ஆங்கில இதழ்), பெரியார் பிஞ்சு இதழ், திராவிடப்பொழில் என்னும் ஆராய்ச்சி இதழ் போன்றவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த இரு பெரும் தலைவர்கள் பத்திரிகையை ஆரம்பிப்பதற்கான நோக்கம் என்பது, அடிமைப்பட்ட நிலை இருக்கக்கூடிய மக்கள் தங்கள் நிலையை உணர வேண்டும் அடிமைத் தளையை உடைத்து நொறுக்கி வெளியே வந்து தங்களுக்கான உரிமையைப் பெறுதல் வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம்.
ஆனால், இந்த நோக்கத்தினைச் சிதைக்கும் வகையில் அன்று முதல் இன்று வரை பார்ப்பனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன.” எல்லாவற்றையும்விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே …நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் நடந்து வருவதையும், பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரமே அதன் கொள்கைகளாக இருப்பதையும். நாம் சந்தேகமற- மனப்பூர்வமாகத் தெரிந்திருந்தும், இப்பிரச்சாரங்களுக்குப் பணம் கொடுத்து நாம் நாசமாகப் போவதற்காக இப்பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதென்றால் யாராவது நம்மை அறிவு, புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லக்கூடுமா என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது” என்றார் தந்தை பெரியார்.இந்தக் கூற்று இன்றைக்கும் பொருந்தும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14இல் நாம் ஓர் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம், இதழாளர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இன்றைய புதிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோம்! நமது இதழ்களைப் பரப்புவோம்! தோழர்கள் கலையரசன், சுரேசு போன்றவர்கள் சென்னையில் இருந்து இன்றைய விடுதலைச் செய்தி என்ற தலைப்பில் சிறப்பாக நாள்தோறும் உரையாற்றுவதுபோலப் புதிய புதிய வடிவங்களில் நமது தலைவர்களின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். கற்பிப்போம் ஒன்று சேர்வதற்காக! கற்பிப்பிப்போம் புரட்சி செய்வதற்காக! கற்பிப்போம் பார்ப்பனப் புரட்டுகளை உணர்ந்து நமது மக்கள் மேன்மையடைவதற்காக; அதிகாரங்களைப் பெறுவதற்காக! நமது இதழ்களைப் பரப்புவோம்- அண்ணல் அம்பேத்கரைப் புரிந்துகொள்ள, தந்தை பெரியாரைப் புரிந்துகொள்ள..
நன்றி: உண்மை ஏப்ரல்(1-15),2025 இதழ்.