Friday, 30 April 2021
பகுத்தறிவுப் பாவேந்தர் : உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!
Thursday, 29 April 2021
நாய் எரிக்கும் இடத்தில்........
நாய் எரிக்கும் இடத்தில்
நாட்டுக் குடிமக்களை
எரித்துக்கொண்டிருக்கிறார்கள்
எதற்கு இத்தனை
ஆயிரம் கோயில்கள் நம் நாட்டில்
எது தேவை மக்களுக்கு
கரோனா நமக்குப்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...
பரந்து கிடக்கிறது பிரபஞ்சம்
இருண்டு கிடக்கிறது
சாதிகளால்,மதங்களால்
இந்தியனின் மனம்...
ஒட்டு மொத்தமாய்
ஒரே வண்டியில்
22 சடலங்கள்....
வர்ணப்படி-சாதி பார்த்து
அடுக்கினாயா இறந்த உடல்களை?
எது தேவை மக்களுக்கு
கரோனா நமக்குப்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...
அரசு இடத்தை எல்லாம்
ஆக்கிரமித்து
வழிபாட்டுத்தலங்கள்
அமைத்தார்கள்...
அமைக்கிறார்கள்....
எல்லா வெற்று இடங்களையும்
சடலம் எரிக்கும் சுடுகாடுகளாய்
மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
நம் தலைநகர் வாசிகள்..
எது தேவை மக்களுக்கு
கரோனா நமக்குப்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது..
மற்ற நோயாளிகளுக்கு
மருத்துவமனைகளில்
குருதியே கிடைக்கவில்லை....
எந்த மதமானால் என்ன?
எந்த சாதியானால் என்ன?
எனது உறவின் உடம்பில்
ஓடுவதற்கு
அவர் உயிர் பிழைப்பதற்கு
கொஞ்சம் உங்கள் குருதி
கொடுக்க இயலுமா?
வேண்டுகோள்கள் வந்தவண்ணம்....
எது தேவை மக்களுக்கு?
கரோனா நமக்குப்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது..
செத்து விழுகிறார்கள் மக்கள்...
இந்த நிலையில்
தேவையா ஐ.பி.எல்.
கிரிக்கெட்டு விளையாட்டுகள்?
விளையாடிய வீரரே
வெறுத்துப்போய் வெளியேறுகிறார்..
எது தேவை மக்களுக்கு?
கரோனா நமக்குப்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.
ஐ. நா.வின் உதவிகள்
எங்களுக்கு வேண்டாம்..
சீனாவின் ஒத்துழைப்பு
எங்களுக்கு வேண்டாம்...
இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
வெளிநாட்டு பத்திரிக்கைகள் எல்லாம்
திமிர்பிடித்த....
திறனற்ற மோடி அரசென
விமர்சித்திருக்கின்றன....
அகண்ட பாரதக்கனவு காணும்
ஆட்சியாளர்கள்
நாட்டின் அவலங்களைத்
திரையிட்டு மறைக்க நினைக்கிறார்கள்...
ஆக்ஸிஜன் தேவை எனக் ககறியவர்
மேல் வழக்குப் பதிவு
சாமியார் ஆளும் உ.பி..யில்..
எப்படிப்பட்ட ஆட்சி
தேவை மக்களுக்கு.?..
கரோனா நமக்குப்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...
உடை வெளுக்கும் தோழரைக்
கடவுள் முன்னேற்றுமா?
அவர் வளர்க்கும்
கழுதை முன்னேற்றுமா ?
எனக் கேட்ட புரட்சிக்கவிஞரின்
பிறந்த நாள் இன்று....
கடவுளின் பெயரால்
கலகம் செய்து
ஆட்சியைப் பிடித்தவர்கள்
வெறும் காட்சியாளர்களாய்...
மூட நம்பிக்கை முடைநாற்றம்
வீசுகின்ற பழமைவாதிகளாய்...
எப்படிப்பட்ட ஆட்சி
தேவை மக்களுக்கு.?..
கரோனா நமக்குப்
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது...
வா.நேரு,
29.04.2021
Sunday, 25 April 2021
பகடி செய்கிறாயே!
திடீரெனத்
தரையில் போடப்பட்ட
மீன்களாய் கரோனா
நோயாளிகள் .....
ஆக்ஸிஜன் ஆக்ஸிஜன்
எனும் அழுகுரல்
இந்திய நகரங்கள் பலவற்றின்
வளிமண்டலத்தை நிரப்புகிறது...
..
கோமியத்தால்
எல்லாவற்றையும்
குணமாக்கிவிடலாம் என
எண்ணும் குணக்கொழுந்துகள்
மத்திய ஆட்சியில்
அமர்ந்திருக்கிறார்கள்...
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
வாங்கவா ? வேண்டாமா?...
எவரிடம் வாங்குவது?....
முடிவெடுக்க மோடி அரசு
.எட்டு மாதங்கள் எடுத்திருக்கிறது...
முடிவெடுக்க எடுத்த தாமதத்தால்
மருத்துவமனைகள் கதறுகின்றன...
மருத்துவர்கள் அழுகிறார்கள்...
கரோனா நோயாளிகள்
மூச்சுத்திணறி சாகிறார்கள்.....
அவலம் நெஞ்சைப் பிழிகிறது...
பதினான்கு மாநில
மக்கள் அழுகுரலைத் தடுக்க,,
பி.எம்.கேர் நிதியிலிருந்து
வெறும் 200 கோடி கொடுத்திருந்தால்
ஆக்ஸிஜன் இருந்திருக்கும்...
வல்லுநர்கள் சொல்கிறார்கள்
மராட்டிய அரசு
கரோனா தடுப்பில் தோற்றுப்போய்விட்டது...
அறிவிப்பவர் மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர்...
அட அறிவிலிகளா!
உத்தரப்பிரதேசத்தில் என்ன வாழ்கிறது?
வரிசையாய் வீடுகள் எரியும் நேரம்
பக்கத்து வீட்டுக்காரன் அணைக்கவில்லை
என்று பகடி செய்கிறாயே!
உன் வீடும்தானே எரிகிறது?...
அனைத்தையும் தீர்த்துவைக்கும்
அரிய சஞ்சீவி என்று
மோடியைப் புகழ்ந்துகொண்டிருந்த்
சங்கிகள் ஒன்றும்
மாறுவதாகக் காணோம்.....
எல்லாம் பண்டிதர் நேரு
ஆட்சியால்தான் என்று
மந்திரம் போல டுவிட்
செய்து கொண்டிருக்கிறார்கள்...
அறிவியல் மனப்பான்மை
இல்லா ஆட்சியாளர்கள்
அழிவைத்தான் தருவார்கள்....
மதவெறி அடிப்படை
ஆட்சி நாட்டு
மக்களை மாண்டு
போகத்தான் செய்யும்.
கும்பமேளா எனும் கரோனா மேளா
நடத்திவிட்டு
கை மீறிப்போய்விட்டது எனக்
கையைப் பிசையும் ஆட்சியாளர்களே
ஆட்சிக் கட்டிலிலிருந்து
கீழே இறங்குங்கள்.....
மதத்தையும் அரசையும்
பிரித்து ஆட்சியை நடத்துவர்கள்
இனியாவது இந்தியாவை
ஆளட்டும்......
...
வா.நேரு
26.04.2021
இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும்.....
அன்பு நண்பர் நேரு அவர்களுக்கு,
செல்லாத பணம் பற்றி *உங்கள் பார்வையில்* எழுதப்பட்ட உங்களது மதிப்புரை மிகச் சிறப்பு. குறை ஒன்றும் இல்லை. எனினும் என்னுடைய பார்வையில் அந்தப் புத்தகம் பற்றிய மதிப்பீடு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மாறுபட்டது.
2019 லேயே அந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை நமது குழுவில் பதிவு செய்துள்ளேன். அந்தப் பதிவின் பிரதி என்னிடம் இப்போது இல்லாததாலும், புத்தகத்தை வாசித்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும் என் நினைவிலிருந்து எழுதுகிறேன்.
கதையின் நாயகி படித்தவள். ஓரளவு வசதியான குடும்பத்தைச் சார்ந்தவள். படித்த இந்தக் காலத்துப் பெண்கள் ஓரளவேனும் தெளிவான முடிவெடுக்கக் கூடியவர்கள் (என்று நம்புகிறேன்). அப்படிப்பட்ட நாயகி ஆட்டோ ஓட்டும் ஒரு ஆணாதிக்க வெறியுள்ள குடிகார, பொறுக்கியைக் காதலனாக வரிப்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை; தமிழ் சினிமாவில் மட்டுமே இது நடக்கும். யதார்த்தம் அப்படியில்லை. அந்தக் குடிகார, பொறுக்கி காதலனுக்காக தனக்குக் கிடைத்த அரிதான வேலை வாய்ப்பை உதறிவிட்டு அவனைக் கரம் பிடிக்கிறாள். யாருடைய அறிவுரையாலும் அவள் முடிவை மாற்ற முடியவில்லை. சரி, கல்யாணம்தான் ஆகிவிட்டது; அதற்குப் பிறகும் அவன் திருந்தவில்லை. நாயகியின் மீது வன்முறை பிரயோகம் அதிகமாகிறது. அப்போதாவது அவனைப் பிரிந்து வந்து விடலாம். செய்யவில்லை. கணவனே கண் கண்ட தெய்வம்? வன்முறையின் உச்சமாக அவள் தீயில் கருகி உயிருக்குப் போராடி மரணம் அடைகிறாள். மரண வாக்குமூலத்தில்கூட அந்தப் பொறுக்கிக்கு நல்ல சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டு இறக்கிறாள். என்னே பதிவிரதா மகிமை!
நாயகியை ஒரு படிக்காத தற்குறியாய், பத்தாம்பசலியாய் படைத்து அவளின் குடும்பம் வறுமையில் வாடுவதாய்க் காட்டியிருந்தால் ஒருவேளை அவளின் தவறான முடிவிற்கும், திருமணம் ஆகியபின் தொடரும் அதீத வன்முறையைச் சகித்துக் கொண்டு பிறந்தவீடு வராமல் இருப்பதற்கும் ஒரு நியாயம் இருப்பதாகக் கருதலாம். அப்படியும் தீயில் வெந்து சாகும் தருவாயில் கொடுக்கும் மரண வாக்குமூலத்தில் கணவனைக் காப்பாற்ற முயல்வது அபத்தத்தின் உச்சம். ’நாடகக் காதல்’ என்று சில அரசியல் தலைவர்கள் சொல்லுவதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது.
காலம் காலமாய், திருவள்ளுவர் முதற் கொண்டு (தெய்வம் தொழாள்…) பெண்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட அடிமைத்தனத்தை அவர்களுக்குத் தரும் கல்வி விலக்கும் என்று பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் வளர்த்த நம்பிக்கையைத் தகர்த்து, என்னதான் படித்தாலும் பெண் அடிமையாக, கையாலாகத்தனம் உள்ளவளாக, புழுவினும் கேவலமாகத் தான் இருக்கிறாள் என்று இந்தக் கதையில் இமையம் நிறுவுகிறாரா? அநீதி கண்டு பொங்கி எழாமல் அதற்கு பணிந்து போவதுடன் அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருவதுபோல் நாயகி நடந்து கொள்வது அயற்சியையும் கோபத்தையும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு உண்டாக்குகிறது. இதை இமையம்தான் எழுதினாரா என்று வியக்க வைக்கிறது. மற்றபடி மருத்துவமனை நிகழ்வுகள் மனம் கலங்கும்படி இருக்கின்றன.
சாகித்ய அகடாமி விருதுக்கு இமையம் 100 சதம் தகுதியானவர் என்பதில் துளியும் ஐயமில்லை. அதற்காகத் தேர்ந்தெடுத்த நாவல்தான் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு விருதும் சமூக நீதி, பெண் விடுதலை, சமூக முன்னேற்றம், சமுதாய முன்னெடுப்பு, மனித நேயம் ஆகியவற்றைப் பிரச்சார நெடியின்றி, யதார்த்தமாக, மக்கள் மனதில் படும்படி எழுதப்பட்ட படைப்புகளுக்கே தரப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த வகையில் இமையத்தின் ‘பெத்தவன்’ மிகப் பொருத்தமான தேர்வாக இருந்திருக்கும் என்பதே என் எண்ணம்.
மேலே சொன்னவை ஒரு வாசகனாய் என் சொந்தக் கருத்து. இதில் பல வாசகர்கள் மாறுபடலாம்.
திரு.எஸ்.எஸ். அவர்கள், 'வாசிப்போர் களம் ' வாட்சப் குழுவில் என்னுடைய 'செல்லாத பணம் ' நூல் விமர்சனக்கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதியது.
Friday, 23 April 2021
Wednesday, 21 April 2021
நொடிப்பொழுது தப்பியிருந்தாலும்
இதுதான் வீரம்..
இதுதான் அறிவு..
இதுதான் மனிதம்..
நொடிப்பொழுது தப்பியிருந்தாலும்
நொறுங்கியிருக்கக்கூடும்
விழுந்த குழந்தையோடு
இவரின் உடலும்
சுக்கு நூறாக
உடைந்திருக்கக் கூடும்..
கதறும் தாயின் குரலும்
கண்டு பிடிக்க இயலா
அவள் நிலையும்
கணப்பொழுதில் அவளுக்கு
கண் தெரியவில்லை
என்பதனை இவருக்கு
உணர்த்தியிருக்கக் கூடும்...
என்ன வேகம்...
என்ன விரைவு...
என்ன துணிவு...
இன்று நீ
உலகம் முழுவதும்
அறியப்பட்டிருக்கிறாய்....
உன்னோடு வேலை பார்க்கும்
அனைவரும்
ஒன்றாய் நின்று
கைதட்டி வரவேற்ற அந்த நேரம்!
நாங்களும் கூட அந்த வரிசையி'ல்
நின்று வரவேற்க வேண்டுமென
எங்கள் மனம்....
என்ன மொழி பேசுவாய் நீ!
எங்களுக்குத் தெரியவில்லை...
உனைப்பற்றிய அதிக விவரங்கள்.
நாங்கள் அறியவில்லை...
மகத்தான செயலால்
மனிதர்கள் அனைவர்
உள்ளத்திலும் நிறைந்திருக்கிறாய்.....
உன்னதமான உன் செயலால்
உலகம் முழுவதும்
உன் புகழ் பரவியிருக்கிறது....
அரசாங்க ஊழியர்கள் மேல்
அடுக்கடுக்காய்ப் பழி விழும்
இந்த நாளில்
எடுத்துக்காட்டாய்ப் பாய்ந்து
தன்னுயிர் மறந்து
பச்சிளம் பாலகனின்
உயிரைக் காப்பாற்றியிருக்கிறாய்...
மும்பையின் வாங்கனி
ரயில் நிலையத்தில்
திசை காட்டும் ஊழியராய்
பணியாற்றும் மயூர் செல்கியே!
உன் புகழ் ஓங்கட்டும்!
உன் குடும்பம் உன்னோடு இணைந்து
நன்றாக வாழட்டும் !
வா.நேரு, 21.04.2021
(17.04.2021 சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு அடிப்படையில் எழுதியது)
https://www.bbc.com/news/world-asia-56818056
Sunday, 18 April 2021
மதுரையில் திராவிடப்பொழில் குறித்து எழுச்சியுடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம்
Saturday, 17 April 2021
கிருமிகளும் கிருமி நாசினியும் ....முனைவர்.வா.நேரு
முனைவர்.வா.நேரு
கேள்வி : இப்போது இருக்கிற நிலைமையில் தி.மு.க.வால் பாசிசத்திற்கு எதிராக என்ன சாதித்துவிட முடியும் என்பதற்காக திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறீர்கள்..
தோழர் மருதையன :திமுகாவால் சாதித்துவிடமுடியும் என்பதற்காக இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் சொல்லவில்லை.பாசிசம் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கவேண்டும்.அவ்வாறு தடுப்பதற்கு நமது கையில் இருக்கிற சாத்தியமான ஒரே மாற்று திமுகதான்.கமலஹாசன் இல்லை,விஜயகாந்தும் இல்லை.வேறு யாரும் இல்லை.அதிமுக கூட்டணி ஆட்சியில் அமர்வது என்பது நேரடியாக பாஜகவை ஆட்சியில் அமர்த்துவது போன்றதாகும்.அப்படி அமைந்தால் நாம் நேரடியாக பாசிசத்தின் கீழ் வந்துவிட்டோம் என்று பொருள்.உ.பி.யாக குஜராத்தாக நாம் மாறப்போகிறோம் என்று பொருள்.இதைத் தடுக்கவேண்டும். -
தோழர் மருதையன் அவர்களின் பேட்டியைப் படித்தபோது ,மகிழ்ச்சியாக இருந்தது.
Thursday, 15 April 2021
நம்பிக்கையற்றுப்போவதே .....
நீண்ட வரிசையில்
காத்திருக்கிறார்கள் மக்கள்
நெடு நேரமாகவும்
காத்திருக்கிறார்கள்....
ஊடகங்கள் காட்டிய
பிம்பம்
சுக்கு நூறாய் உடைகிறது...
வளர்ச்சி வளர்ச்சி என்று
காட்டப்பட்ட இடத்தின்
சுடுகாட்டில்தான்
மக்கள் நீண்ட வரிசையில்
நெடு நேரமாகக்காத்திருக்கிறாரகள்...
இறந்து போன உறவுகளின்
பிணங்களோடு சுடுகாட்டில்
வரிசை வரிசை வரிசையாக...
எரிக்க இடமில்லை...
மணிக் கணக்காய்
காத்துக்கிடப்பதாய்
வ்ரும் செய்திகள் சொல்கின்றன....
ட்ரம்ப வருகை எனச் சொல்லி
உண்மையை மறைக்க
சுவெரழுப்பி மறைத்தார்கள்....
வரிசையாய் நிற்கும்
பிணத்தின் நாற்றம்
ஆட்சியின் நாற்றமாய்
உலகெங்கும் நாறுகிறது..
தன் மாநிலத்து நிலைமை இது..
இதைக் கவனிக்க நேரமில்லை
மேற்கு வங்கத் தேர்தலில்
ஒத்தைக்கு ஒத்தை நிற்கும்
பெண்ணுக்கு எதிராய்
மல்லுக்கட்டும் மனநிலையில்
நம்மை ஆள்பவர்கள்.....
சதீஸ்கர் மாநிலத்து
அமைச்சருக்கு முன்னால்
உரத்த குரலில் அழுகிறார்
துடிக்கின்றார்.. வார்த்தைகளால்
வெடிக்கின்றார்.. விம்முகின்றார்
மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்
பார்ப்பதற்கு யாருமில்லை...
பிணமாய் என் தந்தையைக்
கொண்டு செல்கிறேன்..
ஓட்டுக் கேட்க வரும் அமைச்சரே..
இது உங்கள் கண்களுக்குத்
தெரியலையா என்று துடிக்கும்
அப்பெண்ணின் வேதனைக்கு
என்ன பதில்? எவர் தருவார் பதில்?.
கும்பமேளா என்னும் பெயரில்
கொத்து கொத்தாய்க்கூட்டம்...
பக்தி என்னும் பெயரில்
நடக்கும் கூத்தும்...கும்மாளமும்
மாஸ்க்கை எங்கோ மாட்டிக்கொண்டு
வாழும் விலங்குகளாய்
வரிசை வரிசையாய்
எந்த வித இடைவெளியும் இன்றி
உலகம் நம்மைப்
பார்த்து சிரிக்கிறதே...
முக நூலில் மருத்துவர்
அய்யா சோம இளங்கோவன் பதிவு
அழுவதா! சிரிப்பதா...
இங்கு ஆள்பவர்களின்
கோமாளித்தனங்களைப் பார்த்து.....
நம்பிக்கையற்றுப்போவதே
அனைத்திலும் ஆபத்தானது....
ஆள்பவர்களின் மேலான
நம்பிக்கை அற்று விழுகிறது....
அறிவார்களா? அவர்கள்.....
பாகுபாடு காட்டும்
பழமைவாதிகளே
நம் ஆட்சியாளர்கள்...
மக்களின் மனதில்
ஆழமாக விதை விழுகிறது...
ஒரு நாள் அது
வெடித்துச்சிதறும்
அப்போது ஆணவமும்
அதிகாரமும் தூள்-தூளாகும்
வா.நேரு,16.04.2021
அறிவுவழி காணொலி நிகழ்ச்சி- 'பேரறிஞர் அம்பேத்கர் ' என்னும் தலைப்பில் ஆற்றிய உரை
https://youtu.be/xWWoF0Dq4_U
அறிவுவழி காணொலி நிகழ்ச்சியில் நேற்று(15.04.2021) 'பேரறிஞர் அம்பேத்கர் ' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் இணைப்பு.
தோழர் ஓவியாவின் உரையின் சில துளிகள்
சத்தமிட்டுப் பேசிக்கொள்ளும்
பெண்களே...
உங்களுக்காகத்தான் பேசுகிறோம்
நாங்கள்...
கொஞ்ச நேரம் மட்டும்
உங்கள் செவிகளை
எங்கள் பக்கம் கொடுங்கள்
என வேண்டுகோள் வைக்கின்றார்....
வைதீகத் திருமணம்
நம்மை நாமே இழிவுபடுத்துவது..
சுயமரியாதைத் திருமணம்
நமக்கு நாமே
மரியாதை செலுத்துவது...
எங்களது பிள்ளைகளிடம் நாங்கள்
முதலில் திருமணம் வேண்டுமா
என்பதனை முடிவு செய்யுங்கள்
என்றுதான் சொல்கின்றோம்..
அப்படி வேண்டும் என்று முடிவெடுத்தால்
இணையரைத் தேர்ந்தெடுத்து
எங்களிடம் சொல்லுங்கள்...
என்றும்தான் சொல்கின்றோம்...
பின்பு இப்படி
திருமணத்தை முடித்துவைக்கிறோம்
என்றுதான் சொல்கிறோம்
1946-ல் தந்தை பெரியார் பேசிய
உரை உங்கள் கைகளில்
நூலாய்த் தவழ்கிறது...
இப்படி ஒரு திருமணத்தில்
அவர் பேசியதுதான் நூலாய் இன்று....
எவ்வளவு மாறுதலை எதிர்பார்த்து
பேசியிருக்கிறார் அவர்...
இன்னும் அப்படியே இருக்கிறோமே நாம்..
இந்தியாவிற்குள் மாட்டிக்கொண்டதால்
இப்படி இருக்கிறோமோ?....
அமெர்த்தியா சென் சொன்னதுபோல
தனித்துப் போய் இருந்தால்
உலகில் தலை நிமிர்ந்து இருப்போமோ?...
அய்யா விரும்பிய மாற்றம்
அனைத்துமே நிகழ்ந்திருக்குமோ?...
இந்தத் திருமணத்தில்
பெண்கள் நிறைய இருக்கிறீர்கள்
பரவாயில்லை ...குறைவான
நகை அணிந்துதான் அமர்ந்திருக்கிறீர்கள்...
முன்பெல்லாம்
திருமணத்திற்கு மணப்பெண்ணை
அழைத்துச்சென்று அலங்கரித்தார்கள்
இப்போதோ திருமணத்திற்கு வரும்
அனைவருமே அழகு நிலையம்
சென்றுதான் வருகிறார்கள்...
நாம் பெண்கள்...
வெறும் அலங்காரப்பொம்மைகளா நாம்?
நகை மாட்டும் ஸ்டாண்டுகள்தானா நாம்?
கைகளில் உங்களுக்கு கொடுக்கப்பட்ட
அய்யாவின் நூலை வாசித்துப்பாருங்கள்!
சாதி மறுப்புத் திருமணம்
சடங்கு மறுப்புத் திருமணம்
தாலி மறுப்புத் திருமணம்..
காதல் திருமணம்...
ஏற்றுக்கொண்ட இணையர்களின்
பெற்றோர்களுக்கு எங்கள் நன்றி...
கேள்விகளால் அரங்கத்தை
நிமிரச்செய்து
தெளிவான குரலில்
செறிவான கருத்துகளை
மேடையிலே எடுத்து வைத்து...
மதுஸ்ரீ-மணிமாறன்
இணையேற்பு விழாவை
இன்றைய நாளில்
மதுரையில் நடத்திவைத்த
தோழர் ஓவியாவின் உரையின்
சில துளிகள்....
வா.நேரு,14.04.2021
Monday, 12 April 2021
வெறுப்பை உமிழச்சொல்வதே.....
சதுரகிரி மலைஅடிவாரம்
சாரல் சாரலாய்
மனிதர்கள் ஆன்மிகம்
தேடி வரும் இடம்...
அவ்விடத்தில் பிறந்த நான்
பெரியாரின் மனிதத்தால்
ஈர்க்கப்பட்டேன்
ஈர்க்கப்பட்ட பின்தான்
எனக்குத் தெரிந்தது
பெரியாரின் மானுடமே
நாத்திகம் என்று.....
உடன்பிறந்த அண்ணன்
சதுரகிரி மலைக்கு
அமாவாசை தோறும்
மலை ஏறிக்கொண்டிருக்கிறார்...
எனக்கு என்னமோ
இளம் வயது முதலே
பெரியார் திடலே
பிடித்துப்போயிற்று....
சடங்குகளை மறுத்து
சாதிகளை வெறுத்து
மனிதம் மட்டுமே
மனிதர்களின் அடையாளமாய்
மண்ணில் வாழச்செய்யும்
பெரியாரியல் இரத்தத்தில்
ஊறிப்போயிற்று,,
விலங்குகளிடம் அற்புதமாய்
பழகும் நான் அறிந்தோர்
ஏன் இப்படி மனிதர்களிடம்
தள்ளி நிற்கிறார்கள்
எனும் கேள்வி எனக்குள்
நெடு நாளாய் நின்றது...
உயரத்தில் பிடித்து அவள்
தண்ணீரை ஊற்ற
இருகை நிரப்பி
பாப்பாத்தி ஒருவரிடம்
தண்ணீர் குடித்த கதையை
என் தாயார்
என் இளமையில் சொல்லக் கேட்ட
எனக்கு
அண்ணல் அம்பேத்கர்
சொன்ன ஏணிப்படி சாதி அமைப்பு
எளிதில் புரிந்து போயிற்று...
தனக்குக் கீழ்ப்படியில்
இருக்கும் மனிதர்களிடம்
வெறுப்பை உமிழச்சொல்வதே
சாதி அமைப்பு...
அதுவேதான்
இந்து மதம் சொல்லும்
சனாதன அமைப்பு என்னும்
உண்மை புரிந்து போயிற்று...
அண்ணலும் அய்யாவும் ஒன்றுதான்
சாதி ஒழிப்பே மானுட விடுதலை
சாதி ஒழிப்பே மண்ணின் விடுதலை
சாதி ஒழிப்பே சமத்துவம் காட்டும் பாதை...
வா.நேரு
12.04.2021
Thursday, 8 April 2021
நமக்கு என்ன குறை நிகழும்?
ஊக்கமூட்டும்
ஒரு வார்த்தை
ஒரு மைல்தூரம்
எளிதாகக் கடக்க
நெம்புகோல் போல
உதவுகிறது....
படைத்த நூலை
பக்கம் பக்கமாகப்
படித்து
அதில் குறிப்புகளை
எழுதி
எழுதி வைத்த பாராட்டைச்
சொல்வதை விட..
மனதில் எழுந்த
வினாக்களை ஐயங்களை
எழுத்தாளனிடம்
கேட்பதை விட
மிக உயர்ந்த பரிசு
நூலைப் படைத்தவனுக்கு
வேறு என்ன
கிடைத்து விடப்போகிறது...?
எழுதுகிறவன்
எதை நோக்கி எழுதுகிறான்?
தங்கப் பேனா பரிசாகக்
கிடைக்கும் என்றா
வெறும் பேனாவில்
எழுதுகிறான்.?
அன்றாடம் காணும்
அவலங்களை
சொற்களால் விளையும்
கொலைகளை
குவிப்புகளால் விளையும்
குமுறல்களை
ஏதோ ஒரு வகையில்
தவிர்க்கவேண்டும்
எனும் எண்ணோடத்தில்தானே
எழுதுகிறான்/எழுதுகிறாள்....
எழுதும் சொல் ஏதேனும்
ஒன்றிரண்டு
படிப்பவர் மனதில்
தைக்கவேண்டும்...
அதனால் ஒரு
மாற்றம் நிகழல் வேண்டும்.
என்றுதானே எழுதுகிறான்..
படைக்கும் அவசரத்தில்
அடுத்தவர் புத்தகம்
எதனையும் படிக்கும் நேரம்
எனக்கு இல்லை
என்றார் ஒருவர்....
உங்கள் படைப்பும்
குறைப்பிரசவப்
படைப்பாகவே இருக்கும்
என்றேன் நான்....
எவரையும் படிக்காமல்
எனது புத்தகத்தை
எல்லோரும் படிக்கவேண்டும்
எனும் விருப்பம் சரிதானா?
எழுதும் நேரம் போலவே
மற்றவர் படைப்பைப்
படிக்கும் நேரத்திற்கும்
நேரம் ஒதுக்குவோம்...
குப்பையாகக் கருதும்
எழுத்தை
மாற்றி மாற்றிச் சொரிதல்
தேவையில்லை
எனினும்
உண்மையான எழுத்து
என உணரும் நேரம்
ஓரிரண்டு சொற்களால்
படைத்தவனை
வாழ்த்துவதில்
நமக்கு என்ன குறை நிகழும்?..
வா. நேரு, 09.04.2021
பற்ற வைக்கும் வல்லமை......
எதைப் பற்றி எழுதுவது
என நினைக்கையில்
எழுதுவதைப் பற்றி
எழுதுவது என முடிவு....
எவர் எவரோ எழுதியிருக்கிறார்
குன்றென தமிழ்க்கவிதைகள்
குவிந்து கிடக்கிறது இணையத்தில்
இன்னும் ஒரு கவிதை
எழுதுதல் தேவைதானா?
எனும் உனது குரல்
எனக்கும் கேட்கிறது...
அவர் அதை எழுத
இவர் இதை எழுத
நான் எதை எழுத
என யோசித்துக்கொண்டே இராதே!
எழுது தம்பி எழுது...
வானில் பறந்து கிடக்கும்
நட்சத்திரங்களில்
எந்த நட்சத்திரம் நல்ல
ஒளியைத் தரும் என்பதை
எப்படி உணர்ந்து கொள்வது?
ஆயிரக் கணக்கில் வரும்
கவிதைகளில் எந்தக்
கவிதையை ஈர்ப்புக் கவிதை
என ஏற்றுக்கொள்வது?
எது ஈர்ப்பு என்பதனை
முடிவு செய்பவன் வாசிப்பவன்..
முடிவை வாசிப்பவனிடம் விடு...
பாடல் படைக்கும் தொழிலை
தொடர்ந்து கொண்டே இரு....
ஒற்றை வரி
உலகில் தீப்பிடிக்க
வைக்கக் கூடும்..
ஒற்றை வரி
உலகில் பொதுமையைக்
கொண்டு வரக்கூடும்...
ஒற்றை வரி ..
வீட்டிற்குள் அடைக்கப்படும்
பெண்களின் சிறைகளை
உடைக்கக்கூடும்
ஒற்றை வரி
மனித நேயத்தை உலகில்
வளர வைக்கக் கூடும்...
அந்த ஒற்றை வரி
எது என்பது
உனக்கும் தெரியாது
எனக்கும் தெரியாது...
எந்த மொழியில்
எழுதக் கூடும் எனத் தெரியாது..
ஆனாலும் அந்த ஒற்றை வரி
கவிதை வரியாகத்தான்
இருக்கக் கூடும்....
ஏனெனில் பற்றவைக்கும்
வல்லமை கவிதை
வரிகளுக்கு மட்டுமே உண்டு...
எழுது...தம்பி...எழுது.. எழுது.
வா.நேரு,08.04.2021
Tuesday, 6 April 2021
திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்....
அவள் இருதலைக்
கொள்ளி எறும்பு
போலத் திணறுகிறாள்..
எது சரி என
முடிவெடுக்க முடியாமல்
திணறுகிறாள்...
நடக்கப்பழகிய
காலம் முதலே
அவள் மனதில்
கடவுள் நம்பிக்கையை
புகுத்திய பெற்றோர்.....
இதிகாசப் புராணக்
கதைகள் எல்லாம்
உண்மையென்றே நம்பி
கேட்டு வளர்ந்த பெண் அவள்..
தும்மும்போதும்
கதவில் இடிக்கும்போதும்
இடியோசை கேட்கும்போதும்
இறைவனை அழைத்தே
பழக்கப்பட்டவள் அவள்....
எத்தனை முறை
அழைத்திருக்கிறாய் கடவுளை...
எப்போதாவது வந்திருக்கிறாரா?...
என ஒரு கேலிப்புன்னகையோடு
கேள்விகளாகக் கேட்கிறான்
காதல் கணவன்...
'சாதலும் வாழ்தலும் அற்ற
இடமாய்'
காதல் களிப்பினில்
கட்டிலில் திளைத்திருக்கும்
வேளையில்
எல்லா இடத்திலும்
இருக்கும் கடவுள்
இப்போதும் பார்த்துக்
கொண்டிருக்கிறாரா?
எனக் கேட்கிறான்....
காது ஓரத்தில்
முத்தங்களைக் கொடுத்தபடி...
அன்பு மழையில்
நனைக்கும் கணவனின்
அன்பினில் எக்குறையும்
இல்லை இல்லறத்தில்...
நம்பிக்கைகள் மேல்
கேலி கிண்டல்களின்
வழியாக வந்து விழும்
அடியால்
உண்மை எது?பொய் எது?
என முடிவெடுக்க முடியாமல்
திக்கித் திணறி
இல்லறத்திற்குள்
நுழைந்தவுடனேயே
முடிவெடுக்க முடியாமல்
திகைத்துப் போய்க் கிடக்கிறாள் அவள்,,,
வா.நேரு,07.04.2021