Wednesday, 23 April 2025

புத்தகம் நானும்(3)…

புத்தகம் நானும்(3)…

 உலக புத்தக நாளை முன்னிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில்(2023,2024) எனக்கும் புத்தகத்திற்குமான உறவுகளை நினைத்துப் பார்க்கின்றேன். புத்தக வாசிப்பில் மிகப்பெரிய ஆர்வம் கொண்ட இரண்டு பெரியவர்களை இந்த இரண்டு ஆண்டில் நான் இழந்திருக்கிறேன் .அவர்களில் ஒருவர் திருவீரி(செட்டி) சார் அவர்கள். நிறைய ஆங்கிலப் புத்தகங்களையும் வாசிக்கக் கூடியவர். ஓய்வு பெற்ற பின்னர் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்தவர். அதேபோல திராவிடர்கழகத்தின் செயலவைத் தலைவராக இருந்த அய்யா சு அறிவுக்கரசு அவர்கள்.அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் ஒரு 38 புத்தகங்களை எழுதி, அடுத்த தலைமுறை அவரைப் பற்றி தெரிந்து கொள்கின்ற அளவிற்கு ஒரு பதிவினை செய்துவிட்டுப் போயிருக்கிறார் எழுத்தின் மூலமாகவும்.

 திரு வீரி(செட்டி) சார் அவர்களைப் பொறுத்த அளவில் அப்படி ஒரு பதிவு இல்லை. ஆனால் அவர் இருந்த காலத்தில், அவர் பணியாற்றிய இடங்களில் சந்தித்த அனுபவங்களை எல்லாம் அவரிடமே கேட்டு,பதிவு செய்து, அதனை ஒரு நோட்புக்கிற்குள் எழுதி அவரிடமே காண்பித்து திருத்தி வாங்கி வைத்திருந்தேன். அவர் மறைந்த பின்பு,அவரைப்பற்றி ‘கனவு போலத்தான் நடந்தது’ என்ற எனது ஏழாவது புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் புத்தகம் மிகுந்த மன நிறைவினைக் கொடுத்த புத்தகம் .பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் அவர்கள் இந்த நூலினை தன்னுடைய ‘ கீழடி வெளியீட்டகம் ‘ வழியாக வெளியிட்டார். எனக்கு பத்தாம் வகுப்பு சொல்லிக் கொடுத்த எனது தலைமை ஆசிரியர்... பல ஆண்டுகளுக்குப் பின்னால் அவரைச் சந்தித்தது, பின்பு அவரோடு தொடர்ச்சியான தொடர்பினை புத்தகங்கள் ஏற்படுத்திக் கொடுத்தது அந்த புத்தகத்தின் வழியாக நடந்த உரையாடல்கள் அவரிடம் கிடைத்த எனக்கான அறிவுரைகள், அதன் தொடர்ச்சிகள் என்று இந்தப் புத்தகங்கள்தான் என்னையும் அவரையும் பின்னிப் பிணைத்தது என்று நினைக்கின்றேன்.

 இன்னும் கேட்டால் சில புத்தகங்களை வாசித்து விட்டு மனம் விட்டு அதனை என்னோடு விவாதிக்கக் கூடியவராக அவர் இருந்தார். அப்படி விவாதிப்பதற்கு ஒரு களத்தை கொடுத்ததும் புத்தகம் என்று தான் சொல்ல வேண்டும். அவர் புத்தகத்தை வாசிப்பது மட்டுமல்ல வாசித்த புத்தகங்களில் இருந்து தனக்குப் பிடித்த பகுதிகளை எல்லாம் தனியாக டைரியில்,நோட்டில் எழுதி வைத்துக் கொண்டே இருந்தவர் .எனவே அவருடைய வாழ்நாள் முழுவதும் புத்தகம் தான் அவருடைய உயிர்த் துடிப்பாக இருந்தது. அந்த வகையில் இந்த இரண்டு ஆண்டுகளில் புத்தகத்தை மிகவும் நேசித்த இரண்டு ஆளுமைகளை நினைவு கொள்ளும் தினமுமாகும் இந்த நாளை நினைக்க வேண்டி இருக்கிறது. ‘கனவு போலத்தான் நடந்தது’ என்ற புத்தகத்தை வாசித்த பலரும் தங்களுடைய ஆசிரியரை நினைவு கொள்வதற்கு, அவர்களைப் பற்றி நினைப்பதற்கு ஒரு மிகப்பெரிய தூண்டுதலாக இருக்கிறது என்று சொன்னார்கள். குறிப்பாகத் தொலைபேசித்துறையில் NFTE சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் சிவகுருநாதன் அவர்கள் படித்து விட்டு, தனக்குக் கற்பித்த ஆசிரியரை நினைத்து அழுது விட்டேன் என்று சொன்னார் . ஒரு மிகப்பெரிய நிறைவைக் கொடுத்த புத்தகமாக இந்த புத்தகம் எனக்கு அமைந்தது என்றால் மிகை இல்லை. திரு. இறையன்பு சார் அவர்கள் சேலம் புத்தகக் கண்காட்சியில் பேசுகின்ற பொழுது என்னுடைய இந்தப் புத்தகத்தை அவர் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.ஆசிரியர்,எழுத்தாளர் சரவணன் அவர்கள் ,ஆசிரியர்களுடைய கூட்டத்தில் ஒரு 45 நிமிடங்கள் இந்த நூலைப் பற்றி உரையாற்றினார். எந்தப் போட்டிக்கும்,பரிசுக்கும் இந்த நூலை அனுப்பவில்லை என்றாலும் வாசித்தவர்கள் சொல்லும் வாழ்த்து மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நிறைய புத்தகங்களை இந்த இரண்டு ஆண்டுகளில் வாசிக்க முடிந்திருக்கிறது .வாசித்த புத்தகங்களில் மனதில் நின்ற புத்தகங்களில் சிலவற்றை எனது வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறேன். வழக்கம்போல ‘’வல்லினச்சிறகுகள்’ பன்னாட்டு இதழிலும் பதிவு செய்திருக்கிறேன். பல கூட்டங்களில் புத்தகங்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தைச்சார்ந்த ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்கள் எழுதிய 'பனையோலை' என்னும் நாவல் பற்றி எழுதிய புத்தக விமர்சனத்தை எனது வலைத்தளத்திலும் படைப்பு முக நூல் பக்கத்திலும் பகிர்ந்திருந்தேன். முக நூலில் 2024,ஜூன் மாதம் நூல் விமர்சனம் பகுதியில் படைப்பு குழுமம் சிறந்த படைப்பு என்று தேர்ந்தெடுத்து அறிவித்து இருந்தார்கள்.. மற்றும் லதா அவர்களின் 'கழிவறை இருக்கை' ,தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் 'பாட்டையா',தோழர் ந.தேன்மொழியின் 'உயிர்வலி',தோழர் மதிகண்ணனின் 'ஆர்டருக்காக காத்திருப்பவர்கள்',தோழர் கல கல வகுப்பறை சிவாவின் ‘ஆசிரிய வாழ்வினிது’,தோழர் சோலச்சியின் ‘முட்டிக்குறிச்சி’,தோழர் விட்டல்ராவ் அவர்களின் ‘தொலைபேசி நாட்கள்’,அய்யா டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் ‘அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்’, மதுரை சே.முனியசாமி அவர்களின் ‘விறகு வண்டி முதல் விமானம்வரை’ மதுரை வழக்கறிஞர் இராம.வைரமுத்து அவர்களின் ‘திராவிடம் வென்றது’,இரா.நரேந்திரகுமார் அவர்களின் ‘திராவிட ஆய்தம்’, அண்ணன் கி.தளபதிராஜ் அவர்களின் ‘நாலு தெருக்கத’,அம்மா கவிதா அவர்களின் ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’,அமெரிக்காவில் இருக்கும் கவிஞர் ம.வீ.கனிமொழியின் ‘நெருப்புச் சிலிர்ப்புகள்’,தோழர் கோமதி உள்ளிட்ட நால்வரின் படைப்பான ‘அவள் இவள் உவள் ‘,தமிழர் மரபு அறக்கட்டளை தோழர் சுபாஷிணி அவர்களின் ‘தமிழர் புலப்பெயர்வு’ உள்ளிட்ட பல நூல்களின் விமர்சனங்கள் எனது வலைத்தளமான (vaanehru.blogspot.com) –l ல் கிடைக்கின்றன.வாசிக்க நேரமிருப்பவர்கள் வாசிக்கலாம். பனையோலை நாவலின் மதிப்புரை படித்துவிட்டு,நன்றிகூறி வெகு நேரம் பேசிய எழுத்தாளர் பால்ராசய்யா இப்போது இல்லை. 

இந்த காலகட்டத்தில் சில நூல்களுக்கு நான் அணிந்துரையும் எழுதியுள்ளேன்.இது தவிர பல நூல்களுக்கும் அணிந்துரை,வாழ்த்துரை எழுதியுள்ளேன்.அதில் குறிப்பிடத்தகுந்தது தங்கை இளவரசி சங்கர் அவர்களின் ‘தணியாது எரியும் காடு’.தோழர் குமரன்தாஸ் அவர்களின் உண்மையில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பான ‘மொழி பிரிக்கும் பெரியார் இணைப்பார் ‘போன்றவை 

 கடந்த இரண்டு ஆண்டுகளில்,திராவிடர் கழகம் சார்ந்த,திராவிடர் இயக்கம் சார்ந்த புத்தகங்கள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பேசப்பட்டிருக்கின்றன. தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர்,திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் என மூத்த முன்னோடிகள் முதல் இன்றைக்கு எழுதும் தோழர்களின் புத்தகங்கள் வரை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் பேசப்படுகின்றன.இந்த உரைகள் தனிப்புத்தகமாகக் கொண்டு வரக்கூடிய அளவிற்கு தகுதி வாய்ந்தவை.தனித்தன்மை உடையவை. ஒவ்வொரு புத்தகமுமே நம்முடைய சமூகத்தின் அகக் கண்ணைத் திறக்கக் கூடியதாக, பல்வேறு உள்ளுணர்வுகளை கொடுக்கக்கூடிய புத்தகங்களாக இருக்கிறது.

  எனது மகன் அன்புமணி நிறைய புத்தகங்களை இப்போது வாசிக்கிறான்.போட்டித்தேர்வுக்கு தமிழ் இலக்கியத்தை எடுத்துப் படித்தவன்,நிறைய நாவல்களை,கவிதைகளை,கதைகளை வாசிக்கிறான். தமிழில் ஏற்கனவே தனது முதல் கவிதைப் புத்தகமான 'கரைந்து போ மனமே' வெளியிட்டான். இப்போது இரண்டாவது கவிதைப் புத்தகத்தைக் கொண்டு வருவதற்கான பணிகளில் இருக்கிறான்.எனது மகள் ‘ஆழினி’ நாவல் எழுதிய கையோடு தன்னுடைய ஆய்வுகளில் மூழ்கிவிட்டார்.வீடுமுழுக்க சங்க இலக்கியப் புத்தகங்களும்,உளவியல் புத்தகங்களுமாக இருக்கிறது.அவரின் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு அப்படி. 

 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றப்பொறுப்பாளர்கள் நிறைய நூல்களை தொடர்ச்சியாக வெளியிடுகிறார்கள். ‘தணியாது எரியும் காடு ‘ என்ற நூலினை எழுதிய தங்கை இளவரசி சங்கர்,இப்போது மூன்று நூல்களை வெளியிடுகிறார். அம்மா திருப்பத்தூர் கவிதா,அய்யா ஞான வள்ளுவன்,அண்ணன் தளபதிராஜ்,தோழர் தேன்மொழி எனப் பலர் அடுத்தடுத்த நூல்களைக் கொண்டு வந்துள்ளனர்.அதைப்போல தோழர் ஓவியா,தோழர் வழக்கறிஞர் அருள்மொழி,பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் எனப்பலர் புதிய நூல்களைக் கொண்டு வந்துள்ளனர். அய்யா பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் ‘அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்’ என்று ஓர் அருமையான புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதைப் பற்றிப் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது 

 புதிய புதிய புத்தகங்களை வாசிப்பதற்கும் அதைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பும் நிறைய இந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்திருக்கிறது. அதைத் தாண்டி பல நூல்களுக்கு அணிந்துரை அல்லது வாழ்த்துரை என்ற வகையிலே அந்த நூல் வெளிவருவதற்கு முன்னரே அதைப் பற்றிப் படிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது ‘விறகு வண்டி முதல் விமானம் வரை’ என்ற நூலினை மதுரையைச் சார்ந்த திராவிடர் கழகக் காப்பாளர் அய்யா சே.முனியசாமி அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.அய்யா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக வெளியிட்டு, அவரைப் பாராட்டி அந்த நூலினை வெளியிட்டார்கள். அந்த நூல் உருவாவதற்கு ஒரு காரணியாக இருந்தது என்பது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது இதன் தூண்டுதலால் புதுச்சேரி மாநில தி.க.தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை நூலாக எழுதிக்கொண்டுள்ளார்.திராவிடர் கழகத்தோழர்களின்,தலைவர்களின் வாழ்க்கை பதியப்படவேண்டும்.எதிர் நீச்சல் வாழ்க்கை அவர்களின் வாழ்க்கை.அது பதியப்படும்போது பலருக்கு பாடமாக அமையும். 

 கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.புதிய புத்தகங்கள் சுடச்சுட வாசிக்கக் கிடைக்கிறது. சில புத்தகங்களை எனது மகன் அன்புமணி வாசித்து விட்டு, நன்றாக இருக்கிறது அப்பா,வாசித்துப்பாருங்கள் என்று கொடுக்கிறான்.அப்படி கொடுத்த புத்தகம்தான் ‘அரிவாள் ஜீவிதம் ‘ என்னும் மலையாள நூலின் மொழிபெயர்ப்பு.மலையாளத்தில் ஜோஸ் பாழூக்காரன் எழுதியது,தமிழில் யூமா வாசுகி மொழி பெயர்த்திருக்கிறார்.அரிவாள் நோய் பற்றியும் அதனால் பாதிக்கப்படும் பழங்குடி மக்கள் பற்றியும்,அவர்களைப் பாழ்படுத்தும் மூட நம்பிக்கைகள் பற்றியும் அந்த நோயால் பாதிக்கப்பட்ட ஜகந்தி என்னும் பெண் எப்படி அதனை எதிர்கொள்கிறாள் என்பதைப் பற்றிய கதை.ஜோஸ் பாழூக்காரன் இந்த நோய் பற்றி எழுதியதால்,அந்தப் பகுதி மக்களுக்கு கிடைத்த தீர்வு பற்றியும் அறிய முடிந்த்து. அதைப் படித்து முடித்ததோடு,நூலகத்தில் திருப்பிக்கொடுத்துவிட்டு,சொந்தமாக நூலினை வாங்கி வீட்டில் வைத்து விட்டேன்.’வல்லினச்சிறகுகள்’ இதழுக்கு நூல் விமர்சனமும் இந்த நூல் பற்றி எழுதியிருக்கிறேன்.

 சில போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறேன்.இருக்கிறேன்.அதன்வழியாக நிறையப் புத்தகங்களைப் படிக்கவும்,அவற்றைப் பற்றி மதிப்பிடவும் வாய்ப்புக் கிடைக்கிறது. நிறைய புத்தகங்களுக்கு அணிந்துரைகள்,வாழ்த்துரைகள். புத்தகங்களை வாசிப்பது,புத்தகங்களைப் பற்றிப்பேசுவது ,எழுதுவது என்று வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் இனிய புத்தக நாள் வாழ்த்துகள். 

 தோழமையுடன் வா.நேரு,23.04.2025

Wednesday, 9 April 2025

டொனால்ட் டிரம்ப்...

 

கடலுக்கு அருகில்

நின்று கடல் அலையே

என் காலைத் தொடாதே

என்று கட்டளையிட்டு

அவமானப்பட்ட

ஆங்கில மன்னன்தான்

நினைவுக்கு வருகிறான்...

அமெரிக்க அதிபர்

டொனால்ட் டிரம்ப்

செயல்களைப் பார்த்து…


                          வா.நேரு,09-04-2025


Tuesday, 8 April 2025

நினைவில் கொள்கிறேன்....

 

இன்பமெனினும்

துன்பமெனினும்

இயக்கத்தோடு

பகிர்ந்துகொள்

என்பதுதான்

ஆத்திசூடி எப்போதும்

பெரியார் இயக்கத்தில்…


பிறருக்குப் பயன்படு

அதனால் மகிழ்வுறு

என்பதுதான் தந்தை

பெரியாரின் தத்துவம்…


மிகப்பெரும் துக்கமா?

தனிவாழ்வில்…

இன்னும் தீவிரமாய்

இயக்க வேலைகளில்

ஈடுபட்டு மறந்து வாழ்

என்பதுதான் அய்யா 

ஆசிரியர் வீரமணி 

அவர்கள் காட்டும் வழி !


எனது தம்பியின்

நினைவு நாளில்

நினைவில் கொள்கிறேன்

நான் இவற்றை!


              வா.நேரு,09.04.2025



தம்பியின் நினைவாய் திருச்சியில் இருக்கும்  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 அளிக்கப்பட்டது.




Sunday, 6 April 2025

இராமாயணத்து இராமரும் மோடியும்....

 

இராமாயணத்து இராமரும்

மோடியும் ஒன்று

என்றொருவர் கவிதை

எழுதியிருக்கிறார்...

மோடியை வரவேற்று...

உண்மைதான்...

மனைவியைக் காட்டில்

தவிக்க விட்டுவிட்டு

நாட்டை ஆண்டவர் இராமர்..

மனைவி இருப்பதையே

தேர்தல் பத்திரங்களில்..

சமூகத்திற்கு....

காட்டாமல் குஜராத்

மாநிலத்தை..நாட்டை

ஆண்டவர் மோடி...

விலங்குகள் வாழும்

காட்டில் பயந்து பயந்து

பிள்ளைகளை வளர்த்தாள்

இராமயணத்தில் சீதை..

ஒற்றை அறை வீட்டுக்குள்

பயந்து பயந்து வாழ்ந்தார்...

வாழ்கின்றார் யசோதாபென் மோடி..

இருவரும் ஒன்றுதான்..

சரியாகத்தான் கவிதை

எழுதியிருக்கிறார் அவர்...

                                வா.நேரு,

                                06.04.2025

முனைவர் க. சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" — நூல் திறனாய்வு: முனைவர் வா. நேரு

தமிழர் புலப்பெயர்வு என்னும் இந்த நூல் தமிழ் மரபு அறக் கட்டளையின் இயக்குனர் கா சுபாஷினி அவர்களால் எழுதப்பட்ட ஓர் அருமையான நூல் . ஓர் ஆராய்ச்சி நூல். எப்படி எல்லாம் தமிழர்கள் காலம் காலமாக புலம் பெயர்ந்தார்கள், எதற்காகப் புலம்பெயர்ந்தார்கள்,ஏன் புலம்பெயர்ந்தார்கள் புலம்பெயர்கிற அவர்கள் என்னென்ன இன்னல்களை சந்தித்தார்கள் அல்லது என்னென்ன ஏற்றங்களைச் சந்தித்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் நமக்கு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிற ஓர் அருமையான நூலாக இந்தத் தமிழர் புலப்பெயர்வு என்கின்ற நூல் உலகளாவிய பயணங்கள்- குடியேற்றங்கள்- வரலாறு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறக்கட்டளையின் கிளைகள்  இந்தியா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் உள்ளது.

இந்தப் புத்தகத்தினுடைய முதல் பதிப்பு ஜனவரி 2024 ஆம் ஆண்டு வந்திருக்கிறது மிகக் குறுகிய காலத்திலே ஆறு மாதத்திலேயே இரண்டாவது திப்பு ஜூன் 2024-லேயே வந்திருக்கிறது. 374 பக்கங்கள் விலை ரூபாய் 450 ரூபாய். இந்த நூல் காணிக்கை என்று சொல்லி தன் உடலில் காயங்களையும் மனதில் வலிகளையும் சுமந்து இன்றைய நம் பெருமைகளுக்கு வழி வகுத்துத் தந்த அவர்களுக்கு என்று கொடுத்திருக்கிறார். அந்த அவர்கள் என்பவர்கள் அடிமைகளாகவும் ஒப்பந்தக் கூலிகளாகவும் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவும் உலகின் பல நாடுகளுக்கும் தீவுகளுக்கும் புதிய வாழ்க்கையைத் தேடிப் பயணம் செய்த தமிழ்ப் பெண்கள், ஆண்கள் குழந்தைகள் என்று அவர் கொடுத்திருக்கிறார்.

இந்த நூலுக்கு மிகச் சிறப்பாக வாழ்த்துரையினை தமிழ்நாட்டினுடைய மாண்புமிகு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி நாயகர் அய்யா மு.க,ஸ்டாலின் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல வாழ்த்துரையினை மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும் இலங்கையினுடைய அமைச்சர் மாண்புமிகு திரு செந்தில் தொண்டைமான் அவர்களும் கொடுத்திருக்கிறார்கள். ஓர்  அருமையான அணிந்துரையை, அணிந்துரையே ஓர் ஆய்வுச்சுருக்கம் போல இருக்கிறது. அதனை ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர் திரு ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் கொடுத்திருக்கிறார். அதேபோல பதிப்புரையை நிறைய நூல்களைப் படைத்திருக்கக்கூடிய ஆய்வறிஞர் முனைவர் தேமொழி அவர்கள் கொடுத்திருக்கிறார். முன்னுரையாக தன்உரையை இந்த நூலினுடைய ஆசிரியர் முனைவர் கா சுபாஷினி அவர்கள் கொடுத்திருக்கிறார்.

 

நூல்களில் இரண்டு வகையான நூல்கள் இருக்கின்றன. ஒன்று சில நூல்களை மேலோட்டமாக ஒரே மூச்சிலே படித்து முடிக்கக் கூடிய  நூல்கள். இன்னொரு வகை  நாம் கொஞ்சம் கொஞ்சமாக படித்து சுவைக்க வேண்டிய நூல்கள்.பாதுகாத்து வைக்க வேண்டிய நூல்கள். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பெல்லாம்  இரண்டாவது வகை. அந்த வகையில் இந்த ‘தமிழர் புலப்பெயர்வு இரண்டாவது வகையாக இருக்கக்கூடிய ஒரு  நூலாக  இருக்கிறது ஒரே மூச்சிலே படித்துவிட்டு தூக்கிப் போடக்கூடிய ஒரு  நூலாக  இல்லாமல் நாம் பாதுகாக்க வேண்டிய, பல நேரங்களில் நாம் ரெஃபரன்ஸ்  நூல் என்று சொல்வோமே அதைப்போல நமக்கு பயன்படக்கூடிய ஒரு  நூலாக இந்தத்  தமிழர் புலப்பெயர்வு என்ற  நூல்  இருக்கிறது.

ந்த நூலில்  மொத்தம் 10 அத்தியாயங்கள் இருக்கின்றன.இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி ஒரு 50  நிமிடம் உரையாற்றி இருக்கின்றேன்.வாய்ப்பு இருக்கும்போது கேட்டுப்பாருங்கள். நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஸ்ரீதேவி(வாருங்கள் படிப்போம் குழு) தன்னுடைய கருத்தாக “மிக அருமையான புத்தகத் திறனாய்வு.புத்தகம் வாங்கிப் பல நாட்கள் வாங்கிவிட்டது.எல்லா அத்தியாயங்களையும் அதனுள் இருக்கும் தலைப்புகளின் வரிசையையும் அதனுள் சொல்லப்பட்ட கருத்துகளையும் மிக விரைவாகவும் சுருக்கமாகவும் கூறி,அதனோடு தொடர்புடைய மற்ற புத்தகங்களையும் உங்கள் அனுபங்களையும் கூறி புத்தகத்தைப் படிக்க ஆர்வம் ஏற்படுத்தி விட்டீர்கள்.

எப்படி மிக அதிகமான தகவல்களை உடைய புத்தகத்தை திறனாய்வு செய்யலாம் ? என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது இன்றைய திறனாய்வு .மிக்க நன்றி அய்யா” என்று குறிப்பிட்டிருந்தார்.  நன்றி அவருக்கு.

 

முனைவர் க. சுபாஷிணியின் "தமிழர் புலப்பெயர்வு" 
— நூல் திறனாய்வு: முனைவர் வா. நேரு

https://youtu.be/nf89_fyPJyU




Tuesday, 1 April 2025

இதழாளர்கள் அம்பேத்கரும் பெரியாரும் – முனைவர் வா.நேரு

காலம் காலமாய் வர்ணத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் நிலையை உணராமல் வாழ்ந்து வந்தனர். ஆடு மாடுகளைப் போல நடத்தப்பட்டாலும், ஏன் நமக்கு இந்த இழிநிலை என்னும் உணர்வு அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்துவதற்கு நம் தலைவர்கள் பத்திரிகைகள் ஆரம்பித்தார்கள்..அப்படி உருவாக்கப்பட்ட பத்திரிகைகளில் மிக முக்கியமானவை (மூக்நாயக்) ‘ஊமைகளின் தலைவன்‘ என்னும் பத்திரிகையும் ‘குடிஅரசு’ பத்திரிகையும் ஆகும்.


“மூக் நாயக் (ஊமைகளின் தலைவன்) என்னும் இதழை 1920 ஜனவரி 31 ஆம் நாள் அம்பேத்கர் தொடங்கினார். அம்பேத்கர் அந்த இதழின் அதிகாரப்பூர்வமான ஆசிரியராக இல்லாவிட்டாலும் அவர்தான் அதற்கு எல்லாம் என்ற நிலை இருந்தது. இதில் அவர் தன் கருத்துகளை எழுதி வந்தார். இப்பத்திரிகையைத் தொடங்கியபோது எந்த அளவிற்கு ஆதரவற்ற எதிர்ப்பான சூழ்நிலை நிலவியது என்றால், காசு கொடுத்து மூக் நாயக் பத்திரிகை வெளிவருவது பற்றி விளம்பரமாகப் போடுமாறு பாலகங்காதர திலகர் நடத்திய ‘கேசரி’ பத்திரிகையைக் கேட்டுக் கொண்டபோது அதை வெளியிட மறுத்துவிட்டது. அப்போது திலகர் உயிருடன் இருந்தார்.” பார்ப்பனர்கள் எந்த அளவிற்கு பிடிவாதமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பாக இருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட கூற்றே சாட்சி. பணம் கொடுத்து, இப்படி ஒரு பத்திரிகை, மூக் நாயக் என்ற பத்திரிகை வருகிறது என்று ‘கேசரி’ பத்திரிகைக்கு விளம்பரம் கொடுத்ததை, அவர்கள் வெளியிட மறுத்திருக்கிறார்கள். ஆனால், அம்பேத்கர் அவர்கள் மனம் தளரவில்லை.



‘மூக் நாயக்’ முதல் இதழில் அவ்விதழின் குறிக்கோள் பற்றி எளிமையான முறையில், புரிந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையில், அழுத்தமான வீச்சுடன் அம்பேத்கர் அறிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சமத்துவம் இல்லாத நாடு. இந்தியா பல அடுக்குகளை உடைய கோபுரம் போன்றது. ஆனால், இதற்கு நுழைவாயிலே இல்லை. ஓர் அடுக்கிலிருந்து மற்றொரு அடுக்குக்குச் செல்ல ஏணிப்படிகளும் இல்லை. ஓர் அடுக்கில் பிறந்த ஒருவர் அங்கேயே தான் மடிய வேண்டும்’ என்று எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள ஜாதிப்பிரிவுகள் போல், உலகின் எந்த நாட்டிலும் இல்லை. ஆனால், இன்றைக்குக் கல்வி வளர்ச்சியால், பன்னாட்டுத் தொடர்பால் வெளி நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்களுடன் இந்தச் ஜாதிய மனப்பான்மையையும் கொண்டு செல்கிறார்கள். அம்பேத்கர் அவர்கள் பயப்பட்டதுபோல் இந்தச் ஜாதியக் கொடுமை இந்தியர்களால் உலகமெங்கும் இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள ஜாதியத்திற்கு எதிரான சட்டங்கள் இதனை இன்று உறுதிப்படுத்துகின்றன.


“பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், தீண்டப்படாதவர்கள் என்ற மூன்று பிரிவுகளாக இந்து சமூகம் உள்ளது என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் கடவுள் விலங்குகளிலும் மற்ற உயிரற்ற பொருள்களிலும் இருக்கிறார் என்று தத்துவ விளக்கம் கூறிக் கொண்டும், அதே சமயம் தன் சொந்த மதத்துக்காரர்களையே தீண்டப்படாதவர்களாக நடத்துகின்றவர்களுக்காக இரக்கப்படுகிறேன் என்றும் எழுதி உள்ளார். அறிவையும் கல்வியையும் பரப்புதலை நோக்கமாகக் கொண்டிருக்காமல் பார்ப்பனர்கள் இவற்றை முழுவதுமாகத் தாமே பெற்று ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்காக வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வியும் அதிகாரமும் இல்லாமையே பார்ப்பனர் அல்லாதவரின் பின் தங்கிய நிலைக்குக் காரணம் என்று கருதினார் இறுகப் பிணைத்துள்ள அடிமைத் தளையிலிருந்து, வறுமையிலிருந்து, அறியாமையிலிருந்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைக் காப்பாற்றி மீட்டிட மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது சமூக இயலாமைகளை உணர்த்திடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் (ஆங்கிலத்தில் தனஞ்சய்கீர்; தமிழில் கா.முகிலன்).


‘மூக் நாயக்’ இதழ் சில ஆண்டுகள்தான் நடந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்விக்காக வெளி நாடு சென்ற பின்பு அது நிறுத்தப்பட்டது.மீண்டும் 1927இல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘பகிஷ்கருக் பாரத்’ (நிராகரிக்கப்பட்டவர்களின் இந்தியா) என்னும் ஏட்டை நடத்தியிருக்கிறார். அதுவும் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பல இதழ்களில் அவர் கட்டுரைகளைத் தந்து கொண்டே இருந்திருக்கிறார். நூல்களை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். அவரைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வந்து கொண்டே இருந்திருக்கின்றன. இன்றும் வெளியிடப்பட்டு வருகின்றன.


வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு, அதில் வெற்றி கண்ட பின்பு பார்ப்பனர் சூழ்ச்சியைப் பார்ப்பனர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொண்ட தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதற்கு ஒரு பத்திரிகை அவசியம் என்று உணருகின்றார் வைக்கம் போராட்டத்தில் சிறையில் இருக்கும்போதே அதை முடிவு செய்கிறார். பின்பு தொடர்ச்சியாகக் காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானங்களைக் கொண்டு வர முயன்று, வஞ்சகமாகப் பார்ப்பனர்களால் அந்தத் தீர்மானங்கள் தோற்கடிப்படுவதைக் கண்டு காங்கிரசை விட்டு வெளியே வருவதற்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் ‘குடி அரசு’ இதழைத் தொடங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து, புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு, ‘விடுதலை’, உண்மை போன்ற இதழ்கள்.திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காலத்தில் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் (ஆங்கில இதழ்), பெரியார் பிஞ்சு இதழ், திராவிடப்பொழில் என்னும் ஆராய்ச்சி இதழ் போன்றவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த இரு பெரும் தலைவர்கள் பத்திரிகையை ஆரம்பிப்பதற்கான நோக்கம் என்பது, அடிமைப்பட்ட நிலை இருக்கக்கூடிய மக்கள் தங்கள் நிலையை உணர வேண்டும் அடிமைத் தளையை உடைத்து நொறுக்கி வெளியே வந்து தங்களுக்கான உரிமையைப் பெறுதல் வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம்.


ஆனால், இந்த நோக்கத்தினைச் சிதைக்கும் வகையில் அன்று முதல் இன்று வரை பார்ப்பனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன.” எல்லாவற்றையும்விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே …நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் நடந்து வருவதையும், பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரமே அதன் கொள்கைகளாக இருப்பதையும். நாம் சந்தேகமற- மனப்பூர்வமாகத் தெரிந்திருந்தும், இப்பிரச்சாரங்களுக்குப் பணம் கொடுத்து நாம் நாசமாகப் போவதற்காக இப்பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதென்றால் யாராவது நம்மை அறிவு, புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லக்கூடுமா என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது” என்றார் தந்தை பெரியார்.இந்தக் கூற்று இன்றைக்கும் பொருந்தும்.


அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14இல் நாம் ஓர் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம், இதழாளர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இன்றைய புதிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோம்! நமது இதழ்களைப் பரப்புவோம்! தோழர்கள் கலையரசன், சுரேசு போன்றவர்கள் சென்னையில் இருந்து இன்றைய விடுதலைச் செய்தி என்ற தலைப்பில் சிறப்பாக நாள்தோறும் உரையாற்றுவதுபோலப் புதிய புதிய வடிவங்களில் நமது தலைவர்களின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். கற்பிப்போம் ஒன்று சேர்வதற்காக! கற்பிப்பிப்போம் புரட்சி செய்வதற்காக! கற்பிப்போம் பார்ப்பனப் புரட்டுகளை உணர்ந்து நமது மக்கள் மேன்மையடைவதற்காக; அதிகாரங்களைப் பெறுவதற்காக! நமது இதழ்களைப் பரப்புவோம்- அண்ணல் அம்பேத்கரைப் புரிந்துகொள்ள, தந்தை பெரியாரைப் புரிந்துகொள்ள..

நன்றி: உண்மை ஏப்ரல்(1-15),2025 இதழ்.

Saturday, 22 March 2025

இன்குலாப் ஜிந்தாபாத்....

தோழர் பகத்சிங்

முழங்கிய

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

இந்தி மொழிச்சொல்லாக

எனக்குத் தெரியவில்லை…


சில நேரங்களில்

புரட்சி ஓங்குக என்னும்

மொழிபெயர்ப்பை விட

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

நாடி நரம்புகளில்

ஊடுருவதை முழக்கம்

இடுகையில் பார்த்திருக்கிறேன்..


ஆண்டுகள் பல போனபின்பும்

போபால் மாநாட்டின்

ஊர்வலத்தில் நடனமாடிக்கொண்டே

முழக்கமிட்ட சீக்கிய சகோதரனின்

முழக்கம் காதுக்குள்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

'இந்து முஸ்லீம் சீக்....குஹே..

பை..பை,...பைபை'  


சில சொற்கள் மொழிகடந்து

நம் மனதிற்குள்

ஊடுருவி விடுகின்றன!

‘தோழர் பகத்சிங் ஜிந்தாபாத்’...

இன்னுயிர் போகுமென்ற

நிலையிலும் அவரும்

அவரது தோழர்கள்

இராஜகுருவும் சுகதேவும்

இதே நாளில் அன்று

இணைந்து முழங்கிய

'ஜிந்தாபாத் ஜிந்தாபாத்'

‘இன்குலாப் ஜிந்தாபாத்’

‘நாஸ்திகம் ஜிந்தாபாத்’

                               வா.நேரு,23.03.2025