Wednesday, 30 August 2023

அண்மையில் படித்த புத்தகம் : என் இளம்பிராயத்துக் கதைகள்....சரத்சந்திரர்

 

அண்மையில் படித்த புத்தகம் : என் இளம்பிராயத்துக் கதைகள்

ஆசிரியர்                    : சரத்சந்திரர் தமிழில் ஆர்.சி.சம்பத்

வெளியீடு                   : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,

                                                             சென்னை-98, 044-26241288

முதல் பதிப்பு                :      செப்டம்பர் 2014,மொத்தப் பக்கம் 62

                                                                                                     விலை ரூ 55

மதுரை மாவட்ட மைய நூலக எண்   215637

மொத்தம் 5 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். : சரத்சந்திரர் ஒரு நூறாண்டுக்கு முன்னால் எழுதி மறைந்தவர்.அழியாத கதைகளை அளித்ததால் வாசிப்பவர்களின் மனதில் என்றும் நிற்பவர்.’தேவதாஸ் ‘போன்ற அழியாப் புகழ் நாவல்களை அளித்தவர். பின்னர் திரைப்படமாகவும் வந்து எல்லோரையும் ‘ஓ தேவதாஸ்’ என்னும் பாட்டை முணுமுணுக்க வைத்த கதைக்கு சொந்தக்காரர். இந்தத் தொகுப்பில் உள்ள 5 கதைகளும்(காளிதேவிக்கு பலி,வந்தார் குருதேவர்,ஐயாவை யாருன்னு நினைச்சே?, பிள்ளை பிடிக்கிறவன்,அது ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னே) இப்போது வாசிப்பதற்கும் மிகவும் ஈர்ப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பது சிறப்பாக உள்ளது.

காளிதேவிக்கு பலி என்னும் சிறுகதை ‘லல்லு’ என்பவரைப் பற்றி பேசுகிறது. நமக்கு பீகாரின் லல்லு பிரசாத் அவர்களைத் தெரியும்.நகைச்சுவையாக பாராளுமன்றத்தில் பேசி பிஜேபிக்காரர்களை ஓடவிட்டவர்.’லால் ‘என்றால் செல்லமானவன்,பிரியமானவன் என்னும் பொருளாம்.தேவி பூஜைக்கு ஆடு வெட்டுகிறவர் வரவில்லை. லல்லுவைக் கூப்பிடுகிறார்கள்.இளைஞனான லல்லு வர மறுக்கிறான்.அவனது அப்பா வற்புறுத்த ,சென்று விருப்பம் இல்லாமல் பூஜைக்கு ஆட்டை வெட்டுகிறான்.ஆட்டை வெட்டிப் பலி கொடுத்துவிட்டு ,அடுத்த பலி எங்கே என்று சாமி வந்தவன் போல கேட்க ,இல்லை என்று சொல்ல  புரோகிதரைப் பலி கொடுக்க வா என்று சொல்கிறான்.புரோகிதர் பயந்து ஓடுகின்றார். இன்னும் சிலரும் பயந்து ஓடுகின்றார்கள்.இந்தக் கதையைப் படித்துவிட்டு நன்றாக வாய்விட்டுச்சிரிக்கலாம்.இதில் உள்ள எல்லாக் கதைகளுமே  நமக்கு சிரிப்பை வரவழைக்கும் கதைகளாகவே இருக்கின்றன்.வீட்டிற்கு வந்த குருதேவரை, லல்லு கவனிக்கும் கவனிப்பு அடுத்த கதை. நல்ல நகைச்சுவை.

இந்த 5 கதைகளின் வழியாக அன்றைய வங்காளத்தையும், அன்று மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளையும் கண்டு கொள்ளமுடிகிறது.நயன் என்னும் கதாபாத்திரம் அது ஒரு ஐம்பது வருஷத்திற்கு முன்பு என்னும் கதையில் வருகின்றது.அதில் வரும் ஒரு உரையாடலை அப்படியே தருகிறேன்

“ அன்றிலிருந்து அவன் முழுமையான வைஷ்ணவனாகி விட்டான்.

நயன் தரையில் சிரம் வைத்து என் பாட்டிக்கு நமஸ்காரம் செய்வான்.

அவள் பிராமண விதவை.அதனால் நயனைத் தீண்டக்கூடாது.எனவே,அவன் ஏதாவது தழைக் கொத்துகளைப் பறித்துக்கொண்டு வந்து அவள் பாதத்தருகே வைப்பான்.பாட்டி அதைத் தன் பாதங்களால் தீண்டுவாள்.

அவன் அந்தத் தழைகளைத் தலைமீது வைத்துக்கொண்டு “அம்மா ! என்னை ஆசிர்வதியுங்கள்.இந்தத் தடவை நான் இறந்தால் மீண்டும் உயர்ந்த குலத்தில் பிறக்கவேண்டும் என்று ஆசியளியுங்கள்.அதனால் நான் என் கைகளினாலேயே உங்கள் பாத துளியை எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கட்டும் “ என்பான்.

பாட்டியும் அன்புடன் சிரித்துக்கொண்டே “ நயன்,என் ஆசிர்வாதத்தால் அடுத்த ஜென்மத்தில் நீ பிராமணனாகவே பிறப்பாய்,போ!” என்பாள்.

நயன் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும்.” 

அந்தக் கால நிலைமை.ஆசிர்வாதம் பண்ணக் கூடக் கால்களில் விழுந்துவிடக்கூடாது.தீட்டுப்பட்டு விடும். சாதி என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் புகுத்தப்பட்டது என்று உளறிக்கொட்டும் சனாதன ஆளுநர் ‘இரவிக்கு ‘ இந்தக் கதையை யாராவது படித்துக்காட்ட வேண்டும்.

ஒரு கதை என்பது நகைச்சுவையும் எதார்த்தமும்  கலந்து எழுதப்படும்போது எந்தக் காலத்திலும் வாசிக்க ஈர்ப்பாக இருக்கும் என்பதற்கு இந்தச்சிறுகதைத் தொகுதி எடுத்துக்காட்டு.அந்தக் காலகட்டத்தில் நடந்த காலரா இறப்புகள்,மூட நம்பிக்கை குருதேவர்கள் நடமாட்டம்,சடங்குகள் மூலம் வழிப்பறி செய்பவர்கள் போலவே இருட்டில் சாலையில் செல்பவர்களைக் கொன்று கொள்ளையடிக்கும் கும்பல் என்று பல செய்திகளைச்சொல்லும் சிறுகதைகளாக இந்தக் கதைகள் இருக்கின்றன.வாசித்துப்பார்க்கலாம். வாய்விட்டுச்சிரிக்கலாம்.அக்கால நிலைமைக்கும் இக்கால நிலைமைக்குமான வேறுபாட்டை சிந்தித்துப்பார்க்கலாம்.

நூலகத்தில் எடுத்துப் படித்த நல்ல புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வீட்டில் வைப்பது என் பழக்கம்.அப்படி இந்தப் புத்தகத்தையும் வாங்கி வைக்கவேண்டும்.


 

 

 

 

Monday, 28 August 2023

அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)...பொள்ளாச்சி அபி

 

அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)

நூல் ஆசிரியர்               : பொள்ளாச்சி அபி

வெளியீடு                   : ஒரு துளிக்கவிதை,புதுச்சேரி,7810098433

முதற்பதிப்பு                 : 2023, பக்கங்கள் : 76,விலை ரூ 125

தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு பாட்டையா. ஆறு சிறுகதைகள் மட்டுமே உள்ள தொகுப்பு.ஒரே மூச்சில் படித்து முடிக்க முடிந்த தொகுப்பு.

கதைத் தலைப்பாக இருக்கும் பாட்டையா, இறப்பு வீட்டில் பறை அடிப்பவருக்கும்,அந்தப் பறை இசைக்கு ஏற்ப நடனமாடும் பாட்டையாவுக்கும் ஏற்படும் போட்டியைப் பற்றி விவரிக்கும் கதை.தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகை பத்மினி நாட்டியம் ஆட,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்து பார்த்து நாம்  ரசித்து இருப்போம். திரைப்படத்தில் பார்க்கும் காட்சியைப் போலவே சொற்களால் காட்சியைக் கட்டி நமது கண் முன்னே பார்க்கவிடுகிறார் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி. பறை இசை இசைக்கும் முத்துவீரனுக்கு ஏற்படும் அவமானம்,அந்த அவமானத்தினால் அவர் மிகத் தெளிவாக பறை இசையைக் கற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகள்,அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் என மிக விரிவாக இந்தக் கதை விவரிப்பதும்,முடிவில் தன்னுடைய அத்தனை இசைக்கும் ஏற்ப நடனமாடும் பாட்டையாவை,அவரது பெருந்தன்மையை வியந்து பாராட்டுபவராக முத்துவீரன் மாறுவதாகவும் முடித்திருப்பது மிகச்சிறப்பு.வெகு நுட்பமான விவரிப்புகள் அடங்கிய கதை இது. இந்தத் தொகுப்பிற்கே மிகப்பெரும் மெருகூட்டும் கதை இந்தப் ‘பாட்டையா ‘ என்னும் சிறுகதை.

இஸ்லாமிய குடும்பங்களில் திருமணத்தின்போது கொடுக்கப்படும் ‘மஹர்’ என்னும் தொகையைக் கருவாகக் கொண்ட ‘சஹாபி ‘ என்னும் சிறுகதை எனக்கு முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. இந்தச்சிறுகதையில் இருக்கும் பல சொற்கள் இஸ்லாமியக் குடும்பங்களில் புழங்கும் சொற்கள், எந்தவிதமான அருஞ்சொற்பொருள் விளக்கமும் இல்லாமல் கதை ஓட்டத்தின் மூலமாக அந்தச்சொற்களின் பொருளை நாம் புரிந்து கொள்வதுபோல அமைத்திருப்பது இந்தக் கதையின் பலம்.’பாத்திமா’’ன்னுதான் பெயர் வைக்கவேண்டுமென்று ,மருமகள் கூறுவதாக இந்தக் கதை முடிவது வாசிப்பவருக்கு ஒரு நிம்மதியைத் தருகின்ற முடிவு.

அதைப்போலவே ‘நெருப்புக்கு திசையில்லை ‘ என்னும் கதை ,நுட்பமாக அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் சொத்துப் பிரச்சனையை அடிப்படையாக வைத்துப் பேசுகிறது. இந்தக் கதையில் ஒரு இஸ்லாமியப்பெண், அசோக் என்பவரை ,வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்து வாழ்வதாகவும்,அதே போல மகிழும்பூ கதையில் அக்பர் என்பவர் பிரேமா என்பவரைத் திருமணம் செய்து வாழ்வதாகவும் அமைத்து. இரண்டு கதைகளிலும் பெருந்தன்மையையும் விட்டுக்கொடுத்தலும் மணவாழ்க்கையை எவ்வளவு செம்மைப்படுத்தும் என்பதைச்சொல்வதாக இருக்கிறது.

வினைப்பயன் என்னும் கதை இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான கதை.சந்திரயான் 3 நிலாவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செய்தியை வெளியிட்டிருக்கும் செய்தித்தாளிலேயே திருப்பூரில் பட்டியலினப்பெண் சமைக்கிறார் என்று சொல்லி தங்கள் குழந்தைகளை திருப்பி அழைத்துச்சென்ற பெற்றோர்களைப் பற்றியும் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ‘வினைப்பயன் ‘ கதை அறிவியலுக்கும் ,நடைமுறைக்கும் உள்ள முரணை மிக நன்றாகக் காட்டியிருக்கிறது. நவீன மருத்துவவசதிகள் எப்படிக் குழந்தை பெறுவதற்கு உதவுகிறது என்பதையும் அதில் சாதி எப்படி அழிகிறது என்பதையும் இயல்பான மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார் அபி.

இந்தக் கதைத் தொகுப்பில் எனக்கு கொஞ்சம் நெருடலைக் கொடுத்த கதை ஒப்பனைக்காரன்.மூன்றாம் பாலினத்தைச்சார்ந்தவராக மாறும் ராதாகிருஷ்ணன் என்பவரைப் பற்றிய கதை. குடும்பமே எப்படி மாறுகிறது,அதிலும் அம்மாவின் பாத்திரம் எவ்வளவு கொடூரமாக மாறுகிறது என்பதை வாசிப்பவர்கள் மனம் பதறும் அளவிற்குக் கதையைப் படைத்திருக்கிறார். ராதாகிருஷ்ணன் கடவுள் போல வேடமிட்டு தற்கொலை செய்வதாகவும்,அதன் மூலம் எல்லோராலும்  வெறுக்கப்பட்ட  அவர்,எல்லோரும் வணங்கக்தக்கவராக மாறுவதாகவும் கதையை முடித்திருக்கிறார்.மூன்றாம் பாலினத்தவரிடம் நாம் நிறையப் பேசவேண்டும். அவர்களுக்கு உளவியல்ரீதியாக நிறைய ஆலோசனைகளைக் கொடுக்கவேண்டும்.ஆண் பெண்போல உடை உடுத்துவதோ அல்லது பெண் ஆண்போல உடை உடுத்துவதோ அவரவர் விருப்பம்.மூன்றாம் பாலினத்தவர் உடைகள் மூலம் தங்களை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் விருப்பம். இன்றைய  நவீன உலகத்தில் மாற்றியே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை என்பதையும் நாம் சொல்லவேண்டும். தற்கொலை எந்த நிலையிலும் தீர்வல்ல என்பதை ஒரு கதை சொல்லவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.ஆனால் இந்தக் கதை படித்து முடித்த பின்பும் நிறைய  நேரம் இதைப் பற்றி யோசிக்க வைத்தது.

“உரைநடையின் அற்புதமான வடிவங்களில் ஒன்று சிறுகதை.இதில் நாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசமுடிகிறது.கதையின் மையக்கருத்துகள்,வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும் கதாசிரியனின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது.அதனையொட்டியே எனது கருத்துகளுக்கு வடிவம் தந்திருக்கிறேன் ‘ என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். உண்மை.அவரது கருத்துகளை சிறுகதைகளாக ஆக்குவதில் பொள்ளாச்சி அபி வெற்றி பெற்றிருக்கிறார்.

நண்பர்களை நாம் எந்த வயதிலும் சம்பாதிக்கலாம். அப்படி தோழர் பொள்ளாச்சி அபிக்கும் எனக்கும் நாற்பது வயதுக்குப்பிறகு நண்பராக கிடைத்தவர் தோழர் அகன் என்ற அமிர்தகணேசன் அவர்கள். “ நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் தோழர் அகன்(எ) அமிர்தகணேசன் அவர்களின் ஓயாத அன்பின் விளைவாக முகிழ்த்தவை” என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துகள் தோழர்களே இருவருக்கும். நட்பு எப்போதும் வெற்றி பெற வைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ‘பாட்டையா ‘நூலின்  ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களும்,பதிப்பாளர் தோழர் அகன் அவர்களும்.

இந்த நூலை வாங்கி வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும். ‘பாட்டையா’ சிறுகதையைப் பள்ளிகளில்,கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம்.அவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது.இதனை ஆங்கிலத்திலோ அல்லது நமக்குத் தெரிந்த வேறு மொழிகளிலோ மொழி பெயர்த்துக்கொடுத்தும் கூட தோழர் பொள்ளாச்சி அபி அவர்களைப் பாராட்டலாம்.

முனைவர்.வா.நேரு,

28.08.2023.

 

Sunday, 27 August 2023

ஒரே ஒரு சிறுகதை ..ஒரு மணி நேரம் திறனாய்வு

யூ டியூப் இணைப்பு

https://youtube.com/live/jmNKcSUBuCw?feature=shared 


 

புதிது புதிதாய் பல முயற்சிகளைச்செய்து கொண்டே இருப்பவர் தோழர் அகன் என்னும் அமிர்தகணேசன் அவர்கள்.அவரின் முயற்சியால் ‘வல்லினச்சிறகுகள் ‘ என்னும் இணைய இதழ் மிகச்சிறப்பாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்தது.பல தமிழ்ப்பெண் ஆளுமைகளை உலகுக்கு அடையாளம் காட்டியது.

அந்த வகையில் வாரமலர் என்னும் பெயரில் ஒரே ஒரு  சிறுகதையை எடுத்துக்கொண்டு அதனை ஒரு மணி நேரம்  திறனாய்வு செய்யும் கூட்டம் இணைய வழியாக நடத்துகின்றனர். கவிஞர் தோழர் ம.வீ.கனிமொழி அவர்கள் அமெரிக்காவின் வர்ஜீனியாவிலிருந்து மிகச்சிறப்பாக இந்த இணைய வழி நிகழ்வை ஒருங்கிணைக்கின்றார்.

 

இந்த மாதம் 25.08.2023 காலை 7 மணிக்கு திரு.சிவமணி அவர்கள் எழுதிய ‘உயில் ‘ என்னும் சிறுகதை திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே அந்தச்சிறுகதை சில நாட்களுக்கு முன்னர் திறனாய்வாளர்களுக்கு அனுப்பப்பட்டது.திறனாய்வுக்கு எனப் படிக்கும்போது,நான் 2,3 முறை அந்தச்சிறுகதையைப் படித்தேன்.இண்றைய காலகட்டத்தில் தேவையான கதைக் கருவினைக் கொண்டிருக்கும் கதை. இணையக் கூட்டத்தில் எனது பாராட்டுக் கருத்துக்களையும் எனது விமர்சனத்தையும் பதிவு செய்தேன்.அதனைப் போல தோழர் இரம்யா நடராஜன்,தோழர் ஶ்ரீஜா தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.நிகழ்வினை ஒருங்கிணைத்த தோழர் ,ம.வீ.கனிமொழி அவர்கள் தனது கருத்தினைப் பதிவு செய்தபோது இறப்பு காப்பீடு பற்றிக் குறிப்பிட்டு காப்பீட்டுக்காக அமெரிக்காவில் நடக்கும் கொலைகளைப் பற்றியும் குறிப்பிட்டார். நிகழ்வில் இணைந்து  இந்தச்சிறுகதையின் ஆசிரியர் சிவமணி திரு.சிவமணி அவர்கள் மிக நெகிழ்வாக இந்தச்சிறுகதைத் திறனாய்வு  பற்றிக் குறிப்பிட்டு தனது கருத்துகளையும் பதிவு செய்தது நிகழ்வுக்கு சிறப்புச்சேர்த்தது.

 

.நிகழ்வில் வல்லினச்சிறகுகள் இதழின் ஆசிரியர் அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோழர் இராஜி இராமச்சந்திரன்,புதுக்கோட்டை கவிஞர் மு.கீதா,வாருங்கள் படிப்போம் குழுவினச்சார்ந்த அண்ணன் இளங்கோ,அண்ணன் குமரன் ஆகியோரும் கலந்து கொண்டது சிறப்பு.

 

தோழர் இராஜி இராமச்சந்திரன் அவர்களின் வாட்சப் பதிவு:

*#வாரமலர் 94*

திரு. சிவமணி அவர்களின் "உயில்" சிறுகதையை ஆழ்ந்து படித்து, உள்வாங்கி, தொய்வில்லாத் திறனாய்வினை அளித்த முனைவர் நேரு ஐயா, இரம்யா நடராஜன், ஶ்ரீஜா மற்றும் ஒருங்கிணைத்துச் சிறந்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட கனிமொழி ஆகியோருக்குப் பாராட்டுகள். ஆசிரியர் திரு. சிவமணி அவர்கள் தம் அறிவார்ந்த உரையைத் தன்னடக்கத்துடன் வழங்கியது சிறப்பு. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊக்குவித்த கீதா மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

வா.நேரு,

27.08.2023

 


Monday, 21 August 2023

செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்...ஞான வள்ளுவன்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் எட்டாவது நூல் அண்மையில் வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே பெரியார்-95,தமிழர் வாழ்வில் சாதியும் மதமும் அன்றும் இன்றும்,திராவிட இயக்கமும் எங்கள் ஊரும்,இசைவேளாளர்,ராஜநாயகம்(வரலாற்றுப்புதினம்),ஆச்சாரம்(சமூகப்புதினம்),வரலாற்றில் வென்ற அவர்தாம் பெரியார் என்னும் ஏழு நூல்களின் ஆசிரியர்.மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கும் இந்த 'செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும் ' என்னும் இந்த நூல் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரையை இத்துடன் இணைத்துள்ளதோடு,புத்தகம் எப்படிப்பெறுவது என்பதற்கு தொடர்பு எண்ணும்,மின் அஞ்சல் முகவரியும் பதிவு செய்துள்ளேன். வாங்கிப் பயன் பெறுக.





                              அணிந்துரை

                          முனைவர்.வா.நேரு,

            தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

                  பெரியார் திடல், சென்னை-600 007.

 

இந்த நூலை ஆக்கியிருக்கும் நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் தமிழ்நாடு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர். தந்தை பெரியாரியலை களப்பணி வழியாகவும்,கருத்துப்பணி வழியாகவும் பரப்புவதோடு அதனை வாழ்வியலாகக் கடைப்பிடிப்பவர். தன் தந்தை காலந்தொட்டு திராவிடர் கழகத்தில்,தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பயணித்து,பல்வேறு பணிகளைச்செய்து வருபவர்.

அவரால் எழுதப்பட்டு ,அவரின் எட்டாவது நூலாக ‘செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்’ என்னும் இந்த நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.பரந்து பட்ட வாசிப்பு அறிவும்,எப்பொருளையும் மெய்ப்பொருள் காணும் அறிவோடு அணுகுவதும் இவரின் சிறப்பு. வாசிப்பவர்கள் ‘மெய்ப்பொருள் அறியும்’ நோக்கோடு படைக்கப்பட்டிருக்கும் நூல் இந்த நூல்.தனக்குத் தோன்றியதை மட்டுமே எழுதிய நூல் அல்ல இது, பலவகைப்பட்ட தரவுகளைப் பட்டியலிட்டு அதனின் விளக்கமாகவும் ஆய்வு நூலாகவும் இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ‘பார்ப்பனர்களும் சாஸ்திரங்களும் ‘என்னும் இயலில் தொடங்கி,’அடிமையாகப்போன அரசர்கள் ‘ என்னும்  இயல்வரை 19 இயல்களைக் கொண்டுள்ளது.’செப்பேடுகளையும் சதுர்வேதி மங்கலங்களையும் பற்றிக் கூற வந்த இடத்தில் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றியும் கூற வந்தது ஏன்? ‘ என்னும் கேள்வியோடுதான் இந்த நூல் தொடங்குகிறது. இந்தக் கேள்விக்கான பதில் ,இந்த நூலை வாசித்து முடிக்கும்போது மிகத் தெளிவாகத் தெரியும்.

மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு கிடைத்த ‘திருவிந்தளூர்ச் செப்பேடு’ என்னும் நூல்தான் இந்த நூலை அவர் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்திருக்கிறது.’தமிழக வரலாற்றில் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான செப்பேடுகள் தொடங்கி சமீபத்திய செப்பேடுகள் வரையிலும் பெரும்பான்மையானவை பார்ப்பனர்களுக்கான சதுர்வேதி மங்கலங்கள்,பிரம்மதேயங்கள்,கொடைகள் அளித்த செய்திகளைக் கொண்டவையே.அவைகளைப் பற்றியும் ,அச்செப்பேடுகளில் கூறப்படாத விரிவான ,நிலக் கொடையளிக்கப்படும் நடைமுறையை விளக்கும் திருஇந்தளூர் செப்பேடு பற்றி முழுமையாகவும் எழுதிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொகுக்கப்பட்டதே இந்த முயற்சி ‘ என்று இந்த நூலின் ஆசிரியர் ,இந்த நூல் ஆக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். மிக நல்ல முயற்சி.அந்த முயற்சியின் விளைவு நமக்கு இந்த ஆராய்ச்சி நூல் கிடைத்திருக்கிறது.

இந்த நூல் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றிய உண்மையையும் எளிமையான சொற்களால் விளக்குவதோடு சோழ மன்னர்கள் அதிலும் குறிப்பாக பிற்காலச்சோழ மன்னர்கள் எப்படி பக்தி என்னும் மயக்கத்தால் ஏமாந்தார்கள் என்பதை விரிவாகக் குறிப்பிடுகிறது.அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் நூல்களின் சிறப்பே, நம்முடைய கருத்திற்கு நேர் எதிராக இருக்கக்கூடியவர்களின் நூல்களில் இருந்தே  நம்முடைய கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களைத் தருவதாகும். ஒவ்வொரு இயலிலும் அவர் கொடுத்திருக்கும் ஆதாரங்களை நாம் வாசிக்கும்பொழுது அவரின் உழைப்பு நமக்குத் தெரிகிறது.

இந்த நூலில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன.பல்வேறு செப்பேடுகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.தமிழர்களும் தமிழ் மன்னர்களும் பார்ப்பனர்களிடம் எப்படி ஏமாந்தார்கள்,என்ற விவரமும் இருக்கிறது.இந்த நூல் வாசித்துவிட்டு வைத்துவிட்டுப் போகும் நூல் அல்ல.ஆங்கிலத்தில் Reference Book என்று சொல்வார்களே,அதனைப் போல நாம் பாதுகாத்து,பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நூல்.பல்கலைக் கழகங்களில்,கல்லூரிகளிலும்  பாட நூலாக வைக்கும் அளவுக்கு செழுமையான கருத்துகளைக் கொண்ட நூல்.

இதனைப் போல இன்னும் பல நூல்களை பெரியாரிய நோக்கில் அய்யா ஞான.வள்ளுவன அவர்கள் படைக்கவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவிப்பதோடு,இந்த நூலை நல்ல முறையில் திராவிட இயக்கத்தைச்சார்ந்த தோழமைகளும்,அம்பேத்கரிய,பொதுவுடமை இயக்கத் தோழமைகளும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றேன், நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

                                              தோழமையுடன்

                                              வா.நேரு,15.07.2023


நூலின் தலைப்பு : செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்

நூல் ஆசிரியர்   : ஞான வள்ளுவன்

வெளியீடு       :  இனியன் பதிப்பகம்,வைத்தீஸ்வரன் கோவில்

தொடர்பு எண்   :  9443985889,valluvan54@gmail.com

மொத்த பக்கங்கள் : 142,விலை ரூ 150






 

Saturday, 19 August 2023

குழந்தைகளைக் காப்பாற்ற சட்டம்இருக்கிறதா? – முனைவர் வா.நேரு

 

18வயதிற்கு உட்பட்ட அனைவரையும் குழந்தைகள் என்று அய்க்கிய நாடு சபை வரையறை செய்திருக்கிறது. குழந்தைப் பருவம் என்பது மகிழ்ந்து, விளையாடும் பருவம்.எதையும் கேள்விகளால் கேட்டுக் கேட்டு விளக்கம் பெற விரும்பும் பருவம். நட்புக் குழந்தைகளோடு பேசிப் பேசி மகிழ விரும்பும் பருவம். ஆனால் உலகத்தில் இருக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்று போல வாய்ப்புகள் இல்லை. வசதிகள் இல்லை.வறுமையிலும் பிணியிலும் வாடும் பல கோடி குழந்தைகளைக் கொண்ட உலகமாக நாம் வாழும் இந்த உலகம் இப்போது இருக்கிறது.

குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான பல்வேறு சட்டங்கள் உலகில் உள்ளன. 18 வயதிற்கு முன் திருமணம் செய்வது குழந்தைத் திருமணம் என்ற வகையில் உலகின் பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. மீறி குழந்தைத் திருமணம் செய்பவர்கள் மீதும், நடத்தி வைப்பவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன..

இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தொழிற்சாலை சட்டம், 1948 மூலம் ஒன்றிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் (குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தப்பட்ட சட்டம் 2016 அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி 14 வயது நிரம்பாத குழந்தைகளை முழு அல்லது பகுதி நேர வேலையில் அமர்த்துவதை அந்தச் சட்டம் தடை செய்கிறது. 15-18 வயது இருக்கக் கூடிய வளரிளம் பருவத்தினர் அபாயகரமான தொழிலில் அமர்த்தப்படுவதைத் தடை செய்கிறது. மேலும் மற்ற பணியிடங்களில் வேலைக்கு அமர்த்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

1952-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சுரங்க சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே சுரங்கத்திற்குள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்..

1966-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் சட்டம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பீடி மற்றும் சுருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது.

1976-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் மூலம் குழந்தை உழைப்பிற்கு முன்பணம் கொடுப்பவரைத் தண்டனைக்குட்படுத்த முடியும். மேலும் கொத்தடிமையாக வேலை செய்யும் குழந்தைகளை மீட்கவும் முடியும்.

2012-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்படி(Protection of Children from Sexual Offences(POCSO) Act,2012), குற்றம் இழைக்கும் நபருக்குக் கடுமையான தண்டனைகள் வழங்க முடியும். குற்றம் இழைத்தவர் குழந்தையின் குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தண்டனை உண்டு என்று போக்சோ சட்டம் வரையறை செய்திருக்கிறது. இன்று நிறைய ஊடகங்களில், செய்தித்தாள்களில் பேசப்படும் சட்டமாக இந்தப் போக்சோ சட்டம் இருக்கிறது.

ஆனால் மத நம்பிக்கை அடிப்படையில் உடல் அளவில் காயப்படுத்தப்படும்,மனதளவில் ஊனப்படுத்தப்படும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான சட்டம் உள்ளதா? என்று நினைக்கிறபோது வேதனைதான் மிஞ்சுகிறது.

கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நிகழ்வு _செய்தித்தாளில் வந்த செய்தி: ”திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அரும்பாக்கம் பகுதியில் வசிப்பவர் ராஜா.
ராஜாவின் மாமனார் ராஜேஷ் என்பவர் கடந்த ஜூலை 30-ஆம் தேதி(ஆடி மாதம் 1-ஆம் தேதி) காப்பு கட்டி விரதம் இருந்து வந்த நிலையில்,தனது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் திரவுபதி அம்மனுக்கு ஆடி மாதம் பத்தாம் நாள் இரவில் தீக்குண்டம் இறங்க முடிவு செய்துள்ளார். அப்போது தனது பேத்தியான ஒரு வயது பெண் குழந்தை தர்ணிஜாவைத் தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் இறங்கியுள்ளார்.

அப்போது ராஜேஷ்,கால் இடறி தீக்குண்டத்தில் குழந்தையுடன் தவறி விழுந்தார். ராஜேக்கு கை, கால் முட்டி பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை
தர்ணிஜாவுக்கு முதுகுப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. அதுவும் குழந்தைக்கு 36 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ளது’’ என்று அந்தச் செய்தி சொல்கிறது.

குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைக் கண்டுபிடிக்க, குழந்தை-களுக்கு நல்ல தொடுதல் (Good touch), கெட்ட தொடுதல் (Bad touch) பற்றி கல்விக்கூடங்களில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகின்றோம்.மத அடிப்படையில் குடும்பத்தினர் தாங்கள் கொடுமைப்படுத்துகிறோம் என்று அறியாமலேயே குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவதைத் தடுப்பதற்கு எப்படி நாம் கல்விக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்?

அறிவியல் சாதனங்கள் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என்னும் கேள்வியை எழுப்ப வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அறிவியல் சாதனங்களான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மூட நம்பிக்கையைப் பரப்பும் சாதனங்களாக இருக்கின்றன. தீக்குண்டத்தில் இறங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை (லைவ் டெலிகாஸ்ட்) நேரடி ஒளிபரப்புகளாக ஒளிபரப்புகிறார்கள்.சில ஆன்மிகப் பேச்சாளர்கள் பலர் கொடுக்கும் தொகைக்கு மேலேயே தங்கள் திறமையை எல்லாம் கொட்டி மூட நம்பிக்கைகளைப் பரப்புகிறார்கள்.

சிறு குழந்தைகளை விரதம் என்னும் பெயரில் நாள் முழுவதும் பட்டினி போட்டு ,மாலையைப் போடு என்று சொல்லி பள்ளிக்குப் போகவிடாமல் தடுத்து,விடுமுறை எடுக்கச்சொல்லி வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வுகள் அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது ஒரு வகையான நோய். இது பழைமைவாதத்தை நோக்கிச்செல்லும் செயல்பாடு.

கல்வியை, அமைதியைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்னும் குரல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் பழைமைவாதிகளின் குரலாக இருக்கிறது. படிக்க விரும்பிய பெண் குழந்தை மலாலா பாகிஸ்தானில் மத பழைமைவாதிகளால் சுடப்பட்டு,காயம்பட்ட கொடுமையை நாம் அறிவோம்.

குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றும் அரசுகள் மதரீதியிலான கொடுமைகளைத் தடுக்கவும் சட்டங்கள் இயற்றவேண்டும்.
நம்பிக்கை என்று சொல்லி குழந்தைகளைத் துன்புறுத்தும்,காயப்படுத்தும் செயல்கள் நடப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்ககூடாது, அதனைத் தடுப்பதற்கு ஒரு பக்கம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விழிப்புணர்வுக் கூட்டங்களை அரசாங்கமே நடத்திட வேண்டும்.
மறுபக்கம் சட்டப்படி தடுப்பதற்கான சட்டங்களை இயற்றிடவும் முன்வரவேண்டும்

நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ்  ஆகஸ்ட் 16-31

Monday, 14 August 2023

பிரெஞ்சுப் புரட்சி இந்தியாவில் வெடிக்கட்டும்..

 

  

அழ மட்டும் தோன்றும்

நேரங்களில் ஏனோ ஏதும்

எழுதத் தோன்றுவதில்லை…

 

ஓரிரு நாட்களாய்

இரண்டு நிகழ்வுகள் மனதைப்

பாறையப் போல

அழுத்திக்கொண்டுள்ளன..

வெட்டப்பட்ட சின்னதுரை

நீட் தேர்வினால் கொல்லப்பட்ட

ஜெகதீஸ்வரன் அவனது

தந்தை செல்வசேகர்…..

 

கதறி அழவேண்டும் எனத் தோன்றுகிறது

ஆனாலும்  அறிவு காரணத்தை

மக்கள் மத்தியில் சொல் என்கிறது…

 

இரண்டுக்கும் காரணம் சனாதனம்…

உனக்கெதுக்கு இந்தப் படிப்பு

எனும் கேள்வியே அடிப்படை

மனுநீதியின் கட்டளைப்படி உழைத்து

அடிமையாக இருக்க விதிக்கப்பட்ட

சூத்திரனுக்கும் பஞ்சமனுக்கும்

படிப்பு எதற்கு என்பதே அடிப்படை..

 

பஞ்சமன் படிப்பைத் தடுக்க

சூத்திரன் அரிவாளைத்

தூக்குவதும் தாக்குவதும்…

நீட் என்னும் தேர்வினால் வடிகட்டி

விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகள்

மருத்துவக் கல்லூரிக்குள்

நுழையாமல் பார்த்துக்கொள்வதும்

பார்ப்பனியத்தின் வேலை என்பது

அவ்வளவு எளிதில் புரியாது…

 

அண்ணல் அம்பேத்கரும்

தந்தை பெரியாரும் தந்திட்ட

தத்துவ வெளிச்சத்தில்

படித்துப்பார்த்தால் எளிதில் புரியும்…

 

நியமிக்கப்பட்ட ஒரு

ஆட்டின் தாடி உருட்டையே

தமிழ்நாடு தாங்க இயலவில்லை

 

நெவர் எவர் எனும் ஆணவக் குரல்

கேட்கும்போது …

‘எம் குலத்துப் பெண்களுக்கு

மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா?

மானங்கெட்டவனே!’

எனும் வீரபாண்டிய கட்டபொம்மன்

திரைப்படம் வசனம்தான்

நினைவுக்கு வருகிறது…

 

தன் தந்தையின் பெயரைக்

கெடுக்கவே பிறந்த

இன்னொரு ஆடு…

பலமாகக் கத்தியிருக்கிறது..

நீட் தேர்வு தேவை என்று..

 

என்னை விட நன்றாகப்

படிப்பவன் என் நண்பன் ஜெகதீஸ்..

என் அப்பாவிடம் பணம் இருந்தது..

குறைந்த மதிப்பெண் எடுத்த

நான் மருத்துவராகப் படிக்கிறேன்

அவனிடம் பணம் இல்லை..

இன்று பிணமாகப் பார்க்கிறேன் என்று

கதறி அழும் அந்த நண்பனைப்

பார்த்தபிறகுமா உங்களுக்கு

உண்மைகள் புரியவில்லை!

 

மெளனமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்

மக்கள் எல்லாம் ஒன்றாக இணையட்டும்…

இன்னொரு பிரெஞ்சுப் புரட்சி

இந்தியாவில் வெடிக்கட்டும்!

கொதித்தெழும் மக்கள்

கில்லெட்டின்களைத் தேடட்டும்!

 

                              வா.நேரு

                             14.08.2023

 

Friday, 4 August 2023

நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழுந்து பணியாற்றிய பறவை…

 நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழுந்து பணியாற்றிய பறவை…அய்யா புலவர் மா.நன்னன்

முனைவர் வா.நேரு

 

தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தாங்கள் உயர்கிறார்கள்,மற்றவர்கள் உயர்வதற்கு வழிகாட்டுகிறார்கள்,தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்,மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வழிகாட்டுகிறார்கள்.தந்தை பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தன்னம்பிக்கையின் கொள்கலனாக இருக்கிறார்கள்,மற்றவர்கள் தன்னம்பிக்கை பெற வழிகாட்டுகிறார்கள்.இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்,இதற்கு எடுத்துக்காட்டாக  ,நம் கண் முன்னே நிற்பவர் 30.07.2023 அன்று   நூற்றாண்டு  நிறைவு கண்ட  புலவர் மா.நன்னன் ஆவார்.ஆமாம் புலவர் மா.நன்னன் அவர்களுக்கு 101-ஆவது பிறந்த நாள் ..

புலவர் மா.நன்னன் அவர்களைப் பற்றிக் கூறும்போது ‘நூல்களைப் படித்து பெரியாரை அறிந்தவர்கள் உண்டு.பெரியாரை அணுக்கமாகப் பார்த்து ,நெருக்கமாகத் துய்த்து உணர்ந்த பேறு அவருக்குரியது.தனித்தன்மையான விளக்கம் தருபவர்.” என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.பெரியாரை அணுக்கமாகப் பார்த்ததை, நெருக்கமாகத் துய்த்து உணர்ந்ததையெல்லாம் எழுத்து வடிவில் எழுதி வரும் தலைமுறைக்குக் கொடுத்து சென்றவர் புலவர் மா.நன்னன் . தமிழ் குறித்தும் தந்தை பெரியார் குறித்தும்  பல தலைப்புகளிலும் சிறியதும் பெரியதுமாகிய 124 நூல்களைப் படைத்தவர்  புலவர் மா.நன்னன் அவர்கள்.பகுத்தறிவு எழுத்துகளாகத் தன் எழுத்துகளை அமைத்துக்கொண்டவர் -பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் பொறுப்பை ஏற்று ,பல ஊர்களுக்கும் சென்று தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியவர்  மா.நன்னன் ஆவார்.

தன்னுடைய வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடித்ததால் எப்படி எல்லாம் வாழ்வில் உயர முடிந்தது என்பதை ‘தம்மைப் பற்றித் தாம்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். “ எம் சிக்கனம் திருவள்ளுவரிடமிருந்தும் ,பெரியாரிடமிருந்தும் எமக்கு வந்தது.எம் துணைவரும் மக்களும் இதற்கு முழுவதுமாக ஒத்து உதவினர்.” ஆகாறள விட்டிதாயினும் “ என்னும் குறளும் ,”வருமானத்துக்கு மேல் செலவு செய்பவன் விபசாரம் செய்பவனுக்கு ஒப்பாவான்” என்னும் பெரியாரின் பொன்மொழியுமே எம்மைக் காத்தன “ எனத் தமது குணமாக சிக்கனம் எப்படி அமைந்தது என்பதை விளக்குகின்றார்.இணை ஏற்பு விழாவிற்கும்,புதிய வீடு கட்டுகிறேன் என்றும் மிக ஆடம்பரமாக கடன் வாங்கி செலவழிப்பவர்கள்  நன்னன் அவர்களின் பிறந்த நாளான இந்த நாளில் சிக்கனம் குறித்து கவனம் கொள்ள வேண்டியது படிப்பினையாகும்.



புலவர் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்ற  நன்னன் அவர்கள் தன்னுடைய பள்ளிப்பருவத்தில் சில ஆண்டுகள் படிக்க வாய்ப்பில்லாமல் கற்றலில் இருந்து நிறுத்தப்பட்டவர் என்னும் செய்தி நாம் உணரவேண்டிய செய்தி.1923-ல் பிறந்த  நன்னன் மூன்றாம்வகுப்பு வரை கிளிமங்கலம் என்னும் ஊரில் படித்துப் பின் 8-ம்வகுப்புவரை திருமுட்டம் என்னும் ஊரில் படித்திருக்கிறார்.அதற்குப்பின் சில ஆண்டுகள் உழவுப்பணியில் இருந்திருக்கிறார்.பின் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் (1940-44) புலவர் பட்டம் பெற்றிருக்கிறார்.3,4 ஆண்டுகள் வகுப்புகளுக்கே செல்லாமல் இருந்து மீண்டும் படிக்கச்சென்று வாழ்க்கையில் கல்வியிலும் ஆசிரியர்ப்பணியிலும் முத்திரை பதித்தவராக  நன்னன் அவர்களைப் பார்க்கமுடிகிறது.

ஒரு பணிக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து கல்வி கற்றுக்கொண்டே இருந்ததற்கும் எடுத்துக்காட்டாக நன்னன் திகழ்கின்றார்.தான் பிறந்த ஊரான காவனூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக தனது கல்விப்பணியைத் தொடங்கிய  நன்னன்  வேலை பார்த்துக்கொண்டே மெட்ரிகுலேசன்,இண்டர்மீடியட்,பி.ஏ.,எம்.ஏ., ஆகியவற்றைப் படித்து முடித்திருக்கின்றார்.அவர் படித்த 1950,1960களில் நிறைய அஞ்சல்வழிக் கல்விகள் எல்லாம் இல்லாத காலம்.அந்தக் காலத்தில் மிகுந்த முயற்சி எடுத்து நன்னன் அவர்கள் படித்திருக்கின்றார்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.முடித்தபின் பேராசிரியரின் தொல்காப்பிய உரைத்திறன் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.இத்தோடு தமிழாசிரியர் பயிற்சிச்சான்றிதழும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெற்றிருக்கிறார்.திராவிட இயக்க நூல்களைப் படித்துக்கொண்டே தனிப்பட்ட தனது கல்விக்காகவும் படித்துக்கொண்டே இருந்திருக்கின்றார்.

மா..நன்னன் அவர்கள் சிறந்த சொற்பொழிவாளர்.தான் நினைக்கும் கருத்தை மிக எளிதாகக் கேட்பவர்கள் மனதில் பதியும் வண்ணம் கடத்துவதில் மிக வல்லவர்.தன்னுடைய பேச்சைப் பற்றி பல இடங்களில் அய்யா நன்னன் அவர்கள் பதிந்திருக்கின்றார்கள்.அதில் மிக முக்கியமானது தந்தை பெரியார் தலைமையில் பேசியதாகும்.’பெரியார் பின் சென்றோம் ‘ என்று தலைப்பிட்டு அந்த மகிழ்வான உரையைப் பற்றி அய்யா நன்னன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.” கி.பி.1944ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களின் பிற்பகுதியில் முன்னிரவு நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியிலிருந்த எம் அறைக்குப் பேராசிரியர் அன்பழகனாரின் தந்தை மணவழகனார்(கல்யாண சுந்தரனார் ) வந்தார்.” எனக்குறிப்பிட்டு தந்தை பெரியார் அவர்கள் மயிலாடுதுறையை அடுத்துள்ள வடகரை என்னும் ஊரில் உரையாற்ற வருவதாகவும் அங்கு பேச மாணவப்பேச்சாளராக தன்னை அழைத்ததாகவும் நன்னன் அவர்கள் குறிப்பிடுகின்றார். குறிப்பிட்டு “ கற்றுக்குட்டிப் பேச்சாளராக இருந்த யாம் அதைப் பெருலறும் வாய்ப்பாகக் கருதி ஏற்று வடகரை சென்று அவ்விழாவில் பேசினோம்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே பேசிய அது எமது இரண்டாம் பேச்சாக இருக்கக்கூடும்.பெரியாரின் கொள்கைகளை ஓரளவு மட்டுமே புரிந்துகொண்டு அதில் ஈடுபட்டு ஓரிரண்டு ஆண்டுகளே ஆகி முரட்டுப் பேச்சாளராக இருந்த எமது முரட்டுப்பேச்சை விழா முடிந்த பின் பெரியார் பாராட்டியதோடு அதில் இருந்த சில குறைகளையும் கூறிய முறையையும் சுட்டி எம்மைத் திருத்தினார் “ என்று குறிப்பிடுகிறார். 

நன்னன் அவர்களுக்கு அன்றைய வயது 21.தந்தை பெரியாருக்கு வயது 65.மாணவரான நன்னன் பேசியதை முழுமையாகக் கேட்டு அதில் இருந்த சில குறைகளையும் சுட்டிக்காட்டித் தந்தை பெரியார் திருத்தினார் என்று  நன்னன் குறிப்பிடுகிறார்.அப்போது தந்தை பெரியாரிடம் கற்ற பாடத்தை மேடைப்பேச்சுகளில் தன் வாழ்க்கை முழுவதும்  நன்னன் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்.அதுமட்டுமல்ல தந்தை பெரியார் கருத்துக்களை மிக எளிய முறையில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்கள்.

நன்னன் அவர்களின் உரையினைப் பற்றி “ பல தளங்களிலும் அவருக்கே உரித்தான வகையில் கருத்துகளை எளிமையாக எடுத்துக்கூறி மக்களைத் தம் ஆளுகைக்குள் கொண்டு வந்து விடுவார்.சிறப்பாகத் ,திருமணங்களில் அவர் ஆற்றும் உரை கூர்மையான –தனித்தன்மையுடையது.எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்றே எதிரிகளூக்குக் கூட தோன்றும் ஈர்ப்பு “ என்று திராவிடர் கழகத்தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுகிறார்.

“தொலைக்காட்சி வாயிலாக ஒவ்வொருவர் வீட்டுக் கூடத்திலும் அவர் எடுத்த எளிய தமிழ் வகுப்பு இலக்கணப்பிழையின்றித் தமிழ் பேசவும் எழுதவும் ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பயிற்சி தந்தது.தமிழின் இனிமையை பலரும் உணரும் வகையில் ,வீட்டிற்கே வந்து வகுப்பெடுக்கும் ஆசிரியர் போல  நன்னன் அவர்கள் ,தன் முன் மாணவர்கள் அமர்ந்திருப்பதாகக் கருதி,ஏற்ற இறக்கத்துடன் ,நிறுத்தி நிதானமாகப் பாடம் நடத்திய பாங்கு,இன்றைய காணொளிப் பாடங்களுக்கெல்லாம் முன்னோடியாகும் “ என்று இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

“புலவர் நன்னன் அவர்களுடைய ஆளுமையே பேரமைதியைக் குடி கொண்டது.விரைந்து பேச மாட்டார்.பேசத்தொடங்கினால் அழுத்தம் திருத்தமாகக் கருத்துகளைச் செழுமைமிக்கச் சொற்களைக் கொண்டு செறிவோடு முன் வைப்பார்.அவர் எடுத்துக்கொண்ட பொருளுக்குப் பேசுவதைவிட அவர் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேச கேட்போரைப் பின்பற்றும்படி செய்துவிடுவார்.அவர் பேச்சு வாழ்வின் உண்மைகளை எதிரொலிப்பதாகவே இருக்கும் “ என்று திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வாளர்  க.திருநாவுக்கரசு சொல்வது முற்றிலும் உண்மை என்பதை  நன்னன் அவர்களை நேரடியாக அறிந்தவர்கள் அறிவார்கள்.

 

பெரியாரியலைப் பின்பற்றுபவர்கள் வாழ்க்கையிலும் இடி விழுவது போன்ற சோகங்கள் உண்டு.ஆனால் அந்த சோகங்களைத் தாண்டி வர பெரியாரியல் துணை செய்கிறது. .”எமக்கு வாய்த்த ஒரு திருமகன்(அண்ணல்) தன் முப்பத்தாறாம் அகவையில் உலகம் முழுவதும் ஒரு துறையில் புகழ்க் கொடி நாட்டி ஓங்கி இருந்தபோது மறைய நேர்ந்த அவலக் கொடுமையின் பிடியிலிருந்து யாம் பகுத்தறிவாளராயிருந்ததோடு அதை வாழ்க்கையில் ஆண்டு பழக்கப்பட்ட ஒரே காரணத்தால் மீள முடிந்தது.ஒரு சில நாள்கள் அத்துயர் எம்மை வாட்டி வதக்கியதாயினும் மிக விரைவில் மாந்தரின் உயிரியற்கையை நன்கு உணர்ந்து ,நனைந்த இறகுகளை உதறிவிட்டு பறந்து எழும் பறவை போல் யாம் புறப்பட்டு சிறப்பாக வாழ முடிகிறது” என்று  நன்னன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் குறிப்பிடுகின்றார்.பெரியாரியலைக் கற்றுக்கொண்டவர்கள் மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுகிறார்கள் என்பதைக் காட்டும் கண்ணாடி இந்த சோகத்திலிருந்து மீண்டு வருதல்.அதிலும் பெரியாரியல் மாணவர்களுக்குப் பாடமாகத் திகழ்கிறார் அய்யா  நன்னன் .

“மானமிகு புலவர் நன்னன் அவர்களைப் பொறுத்தவரை,பேச்சும் மூச்சும் பெரியார்-பெரியார் –பெரியாரே!வாய்ச்சொற்கள் அல்ல-வாழ்ந்து காட்டிய பெரியார் நெறியாளர்.’பெரியார் பேருரையாளர் ‘என்னும் பட்டம் அவருக்கு அளித்தது நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடியதாகும்.” என்று குறிப்பிடும் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தான் என்னெவெல்லாம்  புலவர் நன்னன் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

ஜூலை-30,2023 மாலை மாப்புலவர் மானமிகு மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது.மானமிகு  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்றிட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..நன்னன் குடி சார்பாக நடத்தப்பட்ட இவ்விழாவில் நன்னன்குடி நடத்தும் பரிசளிப்பும் நடைபெறுகிறது.மொத்தம் 1 இலட்சத்து தொன்னூற்றோயிரம் உரூபாய் பரிசாக அளிக்கப்பட்டது.

"புலவர் நன்னன் அவர்கள் நம்மிடத்தில் இல்லை. புலவர் நன்னன் கொள்கையால்-நடப்பால் நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ளார்.அவர் கொடுத்துச் சென்றுள்ள  பல்வகைப் பெரியாரியல் நூல்களும்,தொகுப்புகளும் காலக்கணினியாய் நம் அருகில்தான் அவர் இருந்துகொண்டே இருக்கிறார் என்பதற்கான அடையாளங்களாகும்.

தான் சம்பாதித்த சொத்துகளை தனக்குப்பின் தன் பெண்டு பிள்ளைகளுக்குச் சேதாரம் இல்லாமல் போய்ச்சேரவேண்டும் என்கிற உள்ளம் படைத்தவர்கள் வாழும் உலகில் தமக்குப் பின் தன் வாழ்வின் செம்மாந்த தன்மைக்கு  இலட்சிய ஆசானாக ஒளிர்ந்த தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை பரவிட வேண்டும் என்னும் நோக்கில் நூல்கள் பல யாத்தும்,அய்ந்து சுயமரியாதை இணையர்களுக்கும் ஆண்டுதோறும் மாணவ,மாணவிகளுக்கும் பரிசுகள்,நிதிகள் வழங்கியும் சாவாப் புகழ் பெற்று வாழ்கிறார் மானமிகு புலவர் நன்னன் “ என்று திராவிடர் கழகத்தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.

ஆமாம்,சாவப் புகழ் பெற்று  நம் நினைவுகளில் வாழ்கிறார்  புலவர் மா.நன்னன் அவர்கள்

அவரின் தொண்டைத் தொடர்ந்து தங்கள் .கரங்களில் ஏந்திச்செல்லும் ‘நன்னன் குடி’ தோழர்கள் வாழ்க! வாழ்க!

 நன்றி : விடுதலை 04.08.2023

Thursday, 3 August 2023

அச்சத்தைப் போக்கி அறிவூட்டுவோம்! – முனைவர் வா.நேரு...

 1985-90களில் தொலைபேசித் துறையில் கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அப்போது தொலைபேசித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அச்சம் உருவானது. நமது வேலை எல்லாம் போய்விடும் கணினி வருகையால் என்று அனைவரும் பயந்தனர்.கணினி வருகையை எப்படி எதிர்கொள்வது என்பதில் தொழிற்சங்கத் தலைவர்களிடையே இரண்டு போக்குகள் காணப்பட்டன. ஒரு தரப்பினர் ஆட்டோமைஸேசன் ஆண்டி நேசன் (இயந்திரமயமாக்குவது தேசத்திற்கு எதிரானது) என்று ஒரு முழக்கம் வைத்தனர்.அவர்கள் கணினி வருகையை எப்படியாவது தொலைபேசித் துறைக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். கணினி கூடவே கூடாது, வந்தால் ஊழியர்கள் ஒன்றிணைந்து உடைத்தெறிவோம் என்று முழங்கினர்.

இன்னொரு தரப்பினர் கணினி மயம் என்பது உலக அளவிலானது. இது ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு, இதனை நாம் தடுக்க இயலாது, ஊழியர்கள் எண்ணிக்கை குறையும் என்பது உண்மைதான்; ஆனால் முழுமையாகத் தடுப்போம் என்பது எதார்த்தம் கிடையாது; நம்மால் முடியக்கூடியது . அந்தக் கணினி வருகை நம் வேலைவாய்ப்பைப் பறிக்காமல் இருக்க என்ன செய்யமுடியுமோ அதனைச்செய்வோம். கணினி வருகையால் புதிய ஆள்களை துறையில் எடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் இருக்கும் ஊழியர்களைக் காக்க நாம் ஒன்றிணைந்து, கணினியை எப்படி எப்படிப் பயன்படுத்துவது, எங்கெங்கே பயன்படுத்துவது என்பதை நிருவாகத்தோடு பேசி முடிவு செய்ய வைப்போம் என்றனர். இரண்டாவது அணுகுமுறைதான் வெற்றி பெற்றது.ஆனால் கணினி வேண்டவே வேண்டாம் என்றவர்கள்தான் அதில் முதலில் பயிற்சி பெற்றனர்; பலன் பெற்றனர் என்பது ஒரு நகை முரண்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவும், அதன் வழியாக அமைக்கப்படும் சாட்ஜிபிடி என்னும் மென்பொருளும் எல்லோருக்கும் வேலை இல்லாமல் ஆக்கிவிடும் என்ற பயம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் போன்ற பெரியாரியல்வாதிகளுக்கு மாற்றம் கண்டு எப்போதும் பயம் ஏற்பட்டதில்லை. எவ்வளவு பெரிய மாற்றம் என்றாலும் அது மக்களுக்கு எந்த வகையில் பயன்படும் என்பதைப் பார்ப்பதுதான் பெரியாரியல் நோக்கு. அப்படிப் பயன்படவில்லை என்றால் அதனைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு பிரச்சாரம்,போராட்டம் என்ற அணுகுமுறைதான் நமது அணுகுமுறை.

 கணினி, இணையம், முகநூல், வாட்சப் என்பவை எல்லாம் ஒரு வகையில் எளிய மனிதர்களுக்கான திறவுகோலாக மாறியிருக்கின்றன. தங்கள் குறைகளை ஊடகங்கள் வாயிலாகவோ அல்லது  மின் அஞ்சல், குறுந்தகவல் போன்ற செயலிகள் மூலமாகவோ அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரிவிக்க முடிகிறது.தீர்வு காண முடிகிறது. 1990-களில் கணினியை எதிர்த்து முழக்கம் எழுப்பியவர்களுக்கு இப்படியெல்லாம் வசிதிகள் வரும் என்று தெரியாது. மணியார்டர் இல்லாமலோ, வங்கிகளுக்குப் போகாமலோ பணத்தை ‘ஜிபே’ (G-Pay) போன்ற செயலிகள் மூலம் அனுப்பமுடியும் என்பதோ,வீட்டில் இருந்துகொண்டே இரயில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்ய முடியும் என்பதோ நம் கற்பனையில் கூட எட்டாத காலமாக இருந்த காலம் அது. இன்றைக்கு நினைத்துப் பார்க்கின்றபோது அன்றைய முழக்கம் எழுப்பியவர்களின் முழக்கங்கள் எவ்வளவு நகைப்புக்குரியன என்பது புரிகிறது.

அதைப் போன்றதுதான் செயற்கை நுண்ணறிவும் அறிவியலின் அடுத்த கட்டப் பாய்ச்சல். மனித குலம் முன்னேற்றத்தில் வசதிகள் ஏற்படுத்துவதில் எத்தகைய மாற்றங்களை இவை ஏற்படுத்தும் என்பது இப்போது நமக்குத் தெரியாது. இன்னும் ஒரு 40 – 50 ஆண்டுகள் கழித்து நமது வாரிசுகள் எங்கள் அப்பா, அம்மா காலத்தில் இப்படியெல்லாம் இருந்ததாம் என்று சொல்லி நகைக்கும் காலமாகத்தான் இருக்கும்.நாம் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நம் தந்தைகள் காலத்தில் ஒரு தொலைபேசி இணைப்பு வாங்குவதற்காக 4, 5 ஆண்டுகள் காத்துக் கிடந்ததைச் சொல்லும்போது நமது வாரிசுகள் சிரிப்பது போல, இன்றைய காலத்தை நினைத்து எதிர்காலத்தில் நமது வாரிசுகளின் வாரிசுகள் சிரிக்கக்கூடும்.

இனி வரும் உலகம் பற்றிச் சிந்தித்த தந்தை பெரியார் “அக்கால நிலை நாம் வரையறுக்க முடியாத அற்புதங்களையும் அதிசயங்களையும் கொண்டிருக்குமென்று சொல்லுவது மிகைபடச் சொன்னதாக ஆகாது. ஆதலால், மக்கள் குறிப்பாக அறிவாளிகள், சிந்தனையாளர்கள், முற்போக்கில் கவலை உள்ளவர்களுக்கு இவற்றின் மூலம் சதா வேலை இருந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகள் இன்று உள்ளது போல் கூலிக்கு வேலை செய்வதுபோலவோ,இலாபத்துக்கு வேலை செய்வதுபோலவோ இல்லாமல் உற்சாகத்துக்காகவும், போட்டிப் பந்தய உணர்ச்சி போன்ற தூண்டுதலுக்காகவும் ஊக்கத்துடன் வேலை செய்வதாக இருக்கும்.இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்குப் பயன்படச் செய்து கொள்ளுவது என்றே கருத்தே வளரும்’’ (இனி வரும் உலகம் – நூல்) என்று குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு என்னென்ன அற்புதங்களை,அதிசயங்களை இந்த உலகத்தில் ஏற்படுத்தும் என்று நமக்கு இப்போது தெரியவில்லை. ஆனால், நிகழுப்போகும் மாற்றங்கள் மிகப்பெரிய மாற்றங்களாக இருக்கும் என்பது மட்டும் நமக்கு உறுதியாகத் தெரிகிறது. நமக்கு அற்புதமாய்,ஆச்சரியமாய்த் தோன்றும் மாற்றங்கள் நிகழப்போகின்றன.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் அடுத்த 5 ஆண்டுகளில் எந்தெந்தத் துறைகளில் எல்லாம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும், புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்பதைப் பற்றி பி.பி.சி.தமிழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் ‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் நிபுணர்கள்’ என்னும் புதிய வகை நிபுணர்கள் உருவாவார்கள் என்று குறிப்பிடுகிறது. ‘வணிக நுண்ணறிவு ஆய்வாளர்’,தகவல் பாதுகாப்பு ஆய்வாளர்,ஃபின்டெக் பொறியாளர்,தரவு ஆய்வாளர் ,ரோபோடிக்ஸ் பொறியாளர்,எலெக்ட்ரோ டெக்னாலாஜி பொறியாளர்,வேளாண் உபகரணங்கள் இயக்குபவர்,டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் நிபுணர்கள் போன்ற பலவகையான புதிய வகையிலான வேலை வாய்ப்புகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.

‘சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் நிபுணர்கள்’ என்னும் வேலை வாய்ப்பைப் பற்றிக் குறிப்பிடும் பிபிசி கட்டுரை “இவர்களின் பிரதான பணி சுற்றுச்சூழலில் தங்கள் நிறுவனத்தால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் ஆற்றல் வளத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவது, நீங்கள் எந்த நிறுவனத்துக்கு வேலை செய்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து உங்களின் பொறுப்பும் வேறுபடும்” என்று குறிப்பிடுகிறது.

சுற்றுச்சூழல் மாசு என்பது இன்றைக்கு உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் நிபுணர்களை வேலைக்கு அமர்த்தி அதன் மூலமாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும்நிலைமை செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவின் மூலமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் உமிழும் கார்பனின் அளவு,ஒரு தொழிற்சாலையில் உமிழப்படும் கார்பனின் அளவு என்று ஒவ்வொன்றும் கண்காணிக்கப் படலாம்.

“ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்குப் பயன்படச் செய்து கொள்ளுவது என்றே கருத்தே வளரும்” என்று தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டது போல என்னென்ன காரியங்கள் உலகுக்குப் பயன்படும், என்னென்ன காரியங்கள் உலகிற்குப் பயன்படாது என்பதை அளவிடும் கருவிகளையும், தவறு செய்பவர்களை கண்டுபிடித்துத் தண்டிக்கும் கருவிகளையும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படுத்தக்கூடும். செயற்கை நுண்ணறிவால் ஏற்படப்போகும் புதிய வேலைவாய்ப்புகள் நம் ஆவலைத் தூண்டுகின்றன. அதற்கு நம் தமிழ்நாட்டு இளைஞர்களை எப்படி ஆயத்தப்படுத்துவது என்பது பற்றிய சிந்தனைகள் ஓடுகின்றன.



கணினி வருகையை முன் கூட்டியே உணர்ந்து அதற்கான முன்னேற்பாடுகளை பாடத்திட்டம் முதல் மென்பொருள் பூங்காக்கள்வரை அமைத்து, நமது தமிழ்நாட்டு இளைஞர்கள்கணினி மூலமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் முதல் உள்நாட்டு வேலை வாய்ப்புகள்வரை பெறுவதற்கு வழிவகுத்த முத்தமிழ் அறிஞர் ,நூற்றாண்டு நாயகர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு வருகிறது.அதனைப்போல இன்றைய திராவிட மாடல் அரசு, அதன் சிறப்பு மிக்க முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்து பல தொழில் நுட்பங்களை நம் மாணவர்கள் கற்பதற்கும் அதன் மூலம் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழி வகுக்கும் திட்டங்கள் பல கொடுப்பார் என எண்ணுகிறோம்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை சுருக்கிக் கொண்டே வருகின்றன. இன்னொரு பக்கம் மதம் மனிதர்களின் மனங்களை குறுகிய நோக்கம் கொண்டவையாக மாற்றிக் கொண்டே வருகின்றன. இந்தியாவைப் பொறுத்த அளவில் என்ன அறிவியல் சாதனங்கள் வந்தாலும் சனாதனத்தை மனதில் கொண்டிருக்கும் மனிதர்கள் மாறாதவரை எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை.

சக மனிதனை மனிதாக நினைக்கும் மனப்பான்மை வளர  மதங்களும், ஜாதிகளும் அழிவது அவசியம். அண்மையில் சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் பார்த்த ஒரு செயல் நம்மை வெட்கித் தலை குனியவைத்தது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சக மனிதன் மீது ஒரு பி.ஜே.பி. கட்சியைச் சார்ந்த ஒருவன், பிரவேஷ் சுக்லா என்பவன் சிறுநீர் கழிக்கும் அந்தச் செயல், எப்படிப்பட்ட இழிவான மனநிலையில் அவன் இருக்கிறான் என்பதைக் காட்டியது. அவன் குடிபோதையில் இருந்தான் என்று சிலர் சொல்கின்றனர். குடிபோதையில் இருப்பவன் தான் தன் அடிமனதில் இருப்பதைச் செய்வான், உளறுவான் எனச் சொல்வர். சனாதனம் பிடித்த மனிதனின் அடிமனதில் இருக்கும் வெட்கம்கெட்ட, ஜாதித் திமிர் போக்கு நம்மைக் கவலை கொள்ள வைக்கிறது.

ஒருபக்கம் மனித நேயமற்ற இந்தச் சனாதன வெறிபிடித்தவர்களின் இப்படிப்பட்ட செயல்கள்; இன்னொரு பக்கம் செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் முன்னேற்றங்கள். எப்பேர்ப்பட்ட அறிவியல் முன்னேற்றம் என்றாலும் அது எளிய மனிதர்களின் வாழ்க்கையை உயர்த்துவதாக இருக்கவேண்டும். அதற்கு அந்த எளிய மனிதர்களைப் பற்றி யோசிக்கும், அவர்களுக்காக அமையும் அரசாக இருக்கவேண்டும்.

இன்றைக்கு நம் கைகளில் இருக்கும் சமூக ஊடகங்கள் வாயிலாக மனித நேயமற்ற மதவெறியர்களை அடையாளம் காட்டுவதும், எதிர்கால அறிவியல் முன்னேற்றங்களை வரவேற்று அதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நம்மைப் போன்றவர்களின் கடமையாகும்.அறிவியல் கருவிகள் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்பதும், எதிர்காலத்தில் யார் கைகளில் இருக்கவேண்டும் என்பதையும் மக்கள் மத்தியில் விளக்கிச் சொல்லி தெளிவுபடுத்தவேண்டும்.

புதிய தொழில் நுட்பங்களையும், செயற்கை நுண்ணறிவையும் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை, ஆனால் அது எந்தத் திசையில் செல்கிறது, எப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் தொடர்ச்சியான வாசிப்புகள் மூலமும் எழுத்தின் மூலமும் மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

ஏனெனில், உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் இந்த செயற்கை நுண்ணறிவு பயன்படப்போகிறது. நேர்மறையான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அதைப் பற்றிய அச்சத்தைப் போக்குவோம். அதே நேரத்தில் அது செல்லும் திசையை மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டே இருப்போம். ♦