Thursday, 20 June 2024

ஜாதி, மதப் போதை ஒழிப்பு நாள்…- முனைவர் வா.நேரு

 ஜூன் 26 என்பது “உலகப் போதை ஒழிப்பு தினம்” மற்றும் “சட்டவிரோதக் கடத்தல் தடுப்புத் தினம்” ஆகும். போதைக்குள் மாட்டிக்கொண்ட மனிதர்களால், அவர்களின் குடும்பம் படும்பாடு சொல்லி மாளாது. இந்தக் கடத்தலைச் செய்பவர்களும் மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்தாம். உழைக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருப்பதைப் போலவே உழைக்காமல் உண்ண வேண்டும் என்று எண்ணுகிற ஒரு கூட்டமும் இந்த உலகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.அந்த மனச்சாட்சி அற்ற கூட்டம்தான் பெண்களையும் குழந்தைகளையும் கடத்துகிறது.





போதைப்பொருளை உட்கொள்ளும்போது உட்கொள்ளும் மனிதர்களின் அறிவைப் போதை தடுக்கிறது. சிந்தனையின்றி விலங்குகள் போல வேட்டி அவிழத் தெருக்களில் போதைகளில் படுத்துக் கிடக்கும் மனிதர்களைத் தாண்டித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். எனவே, போதைப் பொருட்களின் கெடுதலை மக்கள் மத்தியில் பரப்புரை செய்யவேண்டியது மிகவும் தேவையே.

ஆனால், குடிப்பழக்கத்திற்கோ அல்லது கஞ்சா,அபின் போன்ற போதைப் பொருள் பழக்கத்திற்கோ அடிமையாகிற ஒருவனுக்கு அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருக்கிறது. நாம் ஒரு தவறு செய்கிறோம், இதனால் அசிங்கப்படுகிறோம்.பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறது என்பது அவனுக்குப் புரிகிறது. பழகிவிட்ட இந்தத் தவறினை விட முடியவில்லையே என்னும் ஏக்கம் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்ட பலருக்கு இருக்கிறது. அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் கூட வழுக்கு மரத்தில் ஏறுவது போலச் சறுக்கிச் சறுக்கி வாழ்க்கையில் அவர்கள் விழுந்து தோற்பதைப் பார்க்கின்றோம். இது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இது மிக நல்லது, இது மனித வாழ்விற்குத் தேவையானது என்று பெரும்பாலான மக்களால் கருதப்படுகிற இன்னொரு கொடுமையான போதை என்பது உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அது மதப்போதை.

அந்த மதப் போதைக்கு ஆட்பட்ட பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இளம் வயதிலேயே சட்டவிரோத ஆள் கடத்தல் போலத் தங்களுடைய மதத்திற்குக் கடத்துகின்ற வேலையை அவர்கள் செய்கின்றார்கள். அப்படிச் செய்வதுதான் தங்களுடைய தலையாய பணி என நினைத்து அதற்காக நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். அப்படித் தங்கள் மதத்திற்காகத் தங்கள் குழந்தைகளை உருவாக்கும்போது மற்ற மதங்கள் மேல் வெறுப்பு உள்ளவர்களாகவும் அவர்களை மாற்றுகிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் இதை மிகக் கவனமாகச் செய்கிறார்கள். இது தங்கள் கடமை என்று உளமார நினைக்கிறார்கள்.

தோழர்களே, ஜூன் 26 போதை ஒழிப்பு நாள் என்று வருகின்ற பொழுது, இந்த மதப் போதையையும் இணைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும். குடி போதை போதைப் பொருள் போதை போன்ற போதைகளிலிருந்து குறிப்பிட்ட பயிற்சிகளின் மூலம் விடுபட இயலும். அப்படி விடுபட்டவர்கள் உலகம் முழுவதும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், மதபோதையில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. மதபோதையில் இருக்கும் ஒருவனுக்குத் தன் பக்கத்தில் இருப்பவனைப் பார்த்தால் மனிதன் என்று தோன்றுவதில்லை அடுத்த மதத்தைச் சார்ந்தவன், வேறு கடவுளைக் கும்பிடுகிறவன், தான் கடவுளாக மதிக்கும் விலங்கைச் சாப்பிடுபவன் என்ற அளவில் தான் அவன் மனதுக்குள்ளே ஒரு வெறி உண்டாகிறது. எப்படிப் போதை உட்கொண்டால் மனதிற்குள்ளே ஒரு வெறி ஏற்படுகிறதோ அதைப்போல இந்த மதபோதையும் ஒரு வெறியைத்தான் ஊட்டுகிறது.

எனவேதான் தந்தை பெரியார் அவர்கள், ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்றார். மனிதனை நினைக்க வேண்டும் என்று சொன்னால் கடவுளை மறக்க வேண்டும். ஆனால், மதங்கள் தொடர்ச்சியாக எப்படிக் குடிகாரனுக்கு அந்தக் குடிக் (மதுக்)கடையைப் பார்த்தால் உடனே அங்கு போய்க் குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, கஞ்சா குடிப்பவருக்கு கஞ்சா விற்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அங்கே போய் வாங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதைப் போலவே தெருத்தெருவாக, ஊர் ஊராக, நாடு நாடாக, வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தி, அந்தப் போதையில் இருந்து மக்கள் விடுபடாத வண்ணம் தொடர்ச்சியான பரப்புரையைத் தொடர்ச்சியான – ஏதேனும் ஒரு வகையிலான செயல்பாட்டை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்தப் போதையில் இருந்து விடுபட மக்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. எனவேதான் இந்த நாளை மதப் போதை ஒழிப்பு நாளாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஒரு நாளாகவும் நாம் இதை ஆக்க வேண்டும்.

போதை என்று வருகின்ற பொழுது அது வெறுமனே உடலுக்குத் தீங்கிழைக்கின்ற போதை மட்டுமல்ல; மனிதத்திற்குத் தீங்கு விளைவிக்கின்ற, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற, மனிதர்களுடைய மனதுக்குத் தீங்கு விளைவிக்கின்ற மதப் போதையைப் பற்றியும் நாம் பேச வேண்டும். மதபோதை என்பது வெறுமனே கடவுள் போதையாக மட்டும் அமைவதில்லை, அது ஹிந்து மதத்தைப் பொறுத்த அளவில் ஜாதிப் போதையாகவும் அமைகிறது. பெற்ற மகனையும், மகளையும் கூட ஆணவக் கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு அந்த ஜாதி வெறி என்பது அவர்களை ஆட்படுத்துகிறது.. அப்படிப்பட்ட நிலையில் ஜாதிப் போதை ஒழிப்பு நாளாகவும், மதப் போதை ஒழிப்பு நாளாகவும் ஜூன் 26 என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

“மதம் என்கிறது, மேல் நாட்டுக்காரன் சொன்னான் அபினி என்று.அறிவைக் கெடுக்கும்படியான ஒரு போதை வஸ்து என்று.அதற்கேற்றாற்போல் நம் நாட்டிலே மதம் மனிதனுடைய அறிவைத் தடை பண்ணுகிறது; வளர்ச்சியைத் தடை பண்ணுகிறது; சிந்தனையைத் தடை பண்ணுகிறது. அதன்படிக்கு நடந்தால்தான் நன்மை, நடக்காவிட்டால் தீமை என்று ஒரு அநாவசியமான பயத்தை முன்னேற்றத்தைத் தடை பண்ணுகிறான்.” என்றார் தந்தை பெரியார்.

ஆம், உண்மைதான்! மதம் என்பது கண்ணுக்குத் தெரியாத, பலரின் மூளைக்கு எட்டாத போதை. அந்தப் போதையால் அல்லல்படும் இந்த உலகம் இருக்குமா? அல்லது மூன்றாவது உலகப்போர் வந்து உலகமே அழிந்து விடுமா? என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது. இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீனப்போருக்கான அடிப்படைக் காரணம் மதமே. உலகம் முழுவதும் எனது மதம்தான் சிறந்தது என்னும் மனப்பான்மை கொண்ட வலதுசாரி மனிதர்கள் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறார்கள். தங்கள் மூளைக்குள் ஏற்றிக்கொண்ட மதபோதை மூலம் மற்ற மனிதர்களை அச்சுறுத்துகிறார்கள்.

ஜூன் 26 அன்று இந்த மதபோதை, ஜாதிப் போதையைப் பற்றி நாம் ஊடகங்களில் விழிப்புணர்வுப் பதிவுகளை இடுவோம். டுவிட்டர் போன்ற தளங்களில் மதபோதை ஒழிப்போம், ஜாதி போதை ஒழிப்போம் என்னும் # டேக்குகளை இடுவோம். இன்றைய அறிவியல் உலகம் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் கடவுளைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்தக் கடவுள் பெயரைச் சொல்லிப் பயன் அனுபவிப்பவர்கள். மதத்தால் பலன் அனுபவிப்பவர்கள், ஜாதியால் பலன் அனுபவிப்பவர்கள், எப்படிப் போதைப்பொருள் விற்பவர்கள் இது மனிதர்களுக்குக் கேடு விளைவிக்கிறது எனத் தெரிந்தாலும் தங்கள் சுயநலத்திற்காக விற்பனை செய்கிறார்களோ அப்படிக்கடவுளை மதத்தை,ஜாதியை விற்பனை செய்கிறார்கள். நாம் அவர்களை அம்பலப்படுத்தவேண்டும். மதத்திலிருந்து விடுபட்டவர்கள் பலர் தங்கள் கருத்தை இணையதளங்களில் பதிவிடுகிறார்கள்.எக்ஸ் முஸ்லிம்,(ex-muslims), முன்பு கிறித்துவர்கள் (former-christian-reveal-turning-points), மேனாள் ஹிந்து இந்நாள் நாத்திகர்கள் (exhinduatheists.org) போன்ற இணையதளங்கள், எப்படித் தாங்கள் மதபோதையிலிருந்து வெளியில் வந்தோம் என்ற முந்தைய மதவாதிகளின் வாக்குமூலங்களை அளிக்கின்றன. அதனைப் படிப்போம், பரப்புவோம். ஜாதி,மதபோதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். அதற்கான நாளாகவும் ஜூன்-26ஆம்
தேதியை நாம் கடைப்பிடிப்போம்; பயன் விளைவிப்போம்.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 16-30,2024

Wednesday, 12 June 2024

ஆண்கள் போட்ட அடித்தளமோ?...

 

     ஆண்கள் போட்ட அடித்தளமோ?

 

கணவர்களின்

சுடுசொற்கள்தான்

பெரும்பாலும்

மனைவிகளை

தீக்குள் உடலைவிட்டு

உயிரை விடச்செய்கிறது…

 

இராமாயணத்தில்கூட

இராமனின் சுடுசொற்கள்

வாசிக்கும்போதே

நம்மைச்சுடுகிறது…

அபலை சீதையின்மேல்

அனுதாபம் வரச்செய்கிறது…

 

தீக்குள் உடலைவிட்டு’

திரும்பி பத்திரமாய்

சீதை வந்ததாய்

இதிகாசக் கதை சொல்லும்!

எதார்த்தத்தில் எவர்

வருவார் திரும்பி?

 

கடவுளைக் கடவுள்

திட்டுகிறது…

இறங்கச்சொல்கிறது…

இதைப் பற்றி

உனக்கு என்ன கவலை?

உங்கள் கேள்வி புரிகிறது…

 

ஆனால்

ஆண்கடவுள்

அப்படித்திட்டியதை…

தீக்குள் இறங்கச்சொன்னதை…

மறுக்காமல் பெண்கடவுள்

செய்த செய்கை

ஏனோ எனக்கு

எதார்த்தமாகத் தெரியவில்லை…

 

பெண் கடவுளே !

மறுப்பு ஏதும் சொல்லவில்லை…

எதிர்த்துக் கேள்வி

ஏதும் கேட்கவில்லை…

சாதாரண மனுசி நீ..

அடங்கிப் போ என்னும்

ஆதிக்கத் திமிருக்காக

ஆண்கள் போட்ட

அடித்தளமோ என

எண்ணத்தோன்றுகிறது எனக்கு…

உங்களுக்கு ?....

 

                      வா.நேரு

                      12-06-2024

 

 

Tuesday, 11 June 2024

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'எழுத்தே வாழ்க்கை ' என்னும் நூலைப் பற்றிய மதிப்புரை..

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'எழுத்தே வாழ்க்கை ' என்னும் நூலைப் பற்றிய மதிப்புரையை 'வாருங்கள் படிப்போம் 'குழுவில் வழங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.எனக்கும் நிறைவான உரையாக அமைந்த உரை இந்த உரை.கேட்டு விட்டுத் தங்கள் கருத்துகளை பின்னோட்டமாகப் பதிவிட்ட  தோழமைகளின் கருத்துகள் கீழே. நிகழ்வின் யூ டியூட் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.வாய்ப்பு இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். நன்றி.

https://www.youtube.com/live/p7egdyU4ecc?si=YgSts25fCX7nmlpE



தோழர் மனம் நிறைந்த வாழ்த்துகள். பல நிகழ்வுகள் புதிதாய் கேட்க பயன்படும். ஒருசில மட்டுமே கேட்டு கற்க பயன்படும். அவற்றில் உங்கள் திறனாய்வு முதன்மையானது. சதாப்தி ரயில் மாதிரி தடையில்லாமல் பயணித்தீர்கள். பல நிகழ்வுகள் என்னோடு ஒன்றியிருந்தது. பழைய புத்தகக்கடை அவற்றில் ஒன்று. நான் திருவல்லிக்கேணியில் எட்டு வருடங்கள் தங்கியிருந்தேன். புத்தகப் புழுவாக இருந்தவனை சிந்திக்க வைத்ததில் இந்த பழைய புத்தகக்கடைக்கு உண்டு. அவ்வளவு பழைய புத்தகக்கடைகளை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. அக்காலத்தில் கையில் ஒரு ஐம்பது ரூபாய் இருந்தால் விலை மதிக்க முடியாத புத்தகங்களை சுலபமாக வாங்கலாம். உலக அறிவே அங்கு தெருவில் கொட்டிக் கிடக்கும். தொலைபேசி துறை பற்றி பேசினீர்கள். ஒரு டிரக் கால் போட்டு, அதை இரு தெரு தாண்டி பேசி.... இரவு பகல் பாராமல் எவ்வளவு தொழிலாளர்கள்.... எவ்வளவு உழைப்பு. வசதியை ஏற்படுத்த அரசுத்துறை. வசதி வந்த பிறகு லாபம் ஈட்ட தனியார் துறை.திரு விட்டல்ராவின் வாழ்வின் உன்னதம் மீண்டும் தொலைதொடர்பு துறை வந்தது போலிருந்தது. நயாகரா நீர் வீழ்ச்சியை அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த ரசித்த விதம் அருமை. புத்தகங்கள் படிப்பதின் பயனை, வீட்டிற்கு ஒரு நூலகம் என்ற முனைப்பும், அதனை 80 வயது மூதாட்டி அம்மையாரின் துணையுடன் சொன்ன விதம் அருமை. பழைய புத்தக வியாபாரின் நேர்மை மனதை தொட்டது. மீண்டும் காத்திருக்கிறோம் உங்கள் திறனாய்வில் கற்க.

எழுத்தாளர் கோபி.சேகர்..

--------------------------------------------------------------------------------------------------------------------------


இப்போதுதான் யூடியூபில் பார்த்தேன். 

எழுதுபவர்களுக்கும், புதிதாக எழுத வருபவர்களுக்கும் நிறைய தகவல்களை கொடுத்துக்கொண்டே போகிறார் அண்ணன் நேரு அவர்கள்.

இரவு பதீனோரு மணிக்கு எழுதுவது, அதிகாலை 4-6 எழுதுவது, அதை தினந்தோரும் கடைபிடிப்பது என்பன பயனுள்ள தகவல்கள்.

எழுதும் முறை பற்றி பேசும்போது ஒளிவண்ணன் அவர்களின் பேச்சுப் பதிவு முறையை குறிப்பிட்டது புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.

இன்னும் பலர் காகிதத்தில் எழுதி வருவதை குறிப்பிட்டார்.

நான் பல காலமாக லேப்டாபில்தான் எழுதி வருகிறேன் என்பதை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன்.

நல்ல, சரளமான, அலுப்பூட்டாத திறனாய்வு. 

அண்ணன் நேரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ம.தோல்காப்பியன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

மிகக் குறுகிய ஒருநாள் இடைவெளியில் சிறப்பான திறனாய்வு..எஸ் ராவின் இலக்கிய வாழ்க்கை குறிப்பாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் எழுதுவது,வரும் அத்தனை கேள்விகளுக்கும்,அவர் பதில் அளிப்பது என அவரைப் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.வீட்டுக்கொரு நூலகம் முன்னெடுப்பைப் பற்றி அவைநாயகன் அவர்களும் ஒளி வண்ணன் அவர்களும் பேசியது அவசியம் தேவையான ஒன்று...மொத்தத்தில் சிறப்பான நிகழ்வை அளித்த நேரு அண்ணாவிற்கும்,பங்கேற்ற தோழமைகளுக்கும் நன்றி!!
பேரா.உமா மகேஸ்வரி

---------------------------------------------------------------------------------------------------------------------------

மிகவும் அருமையான ,
தகவல்கள் பொதிந்த 
திறனாய்வு. 

எப்போதும் ஆசைபட்டதுண்டு: 
அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் 
எஸ்.ரா வின் ஜோல்னா பையாக பிறக்க வேண்டும் என. 

சிறப்பான திறனாய்வு எனவும் சொல்லலாம் . 
இளைய சமுதாயத்திற்குத் தேவையான 
பாட உரை எனவும் சொல்லலாம். 

வாழ்த்துகளும் 
வணக்கங்களும் .
-கலா கோபி.

----------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்றைய நிகழ்வு.. ஒரு திறனாய்வு போல் இல்லாமல்... வாசிப்பு..
புத்தக வாசிப்பை பிள்ளைகளிடம் எப்படி கடத்துவது,
எழுதுவதற்கான நேரம் ஒதுக்குதல்.. 
இப்படி சுய பரீட்சை செய்து பார்த்த நிகழ்வாக இருந்தது..

அதிலும்.. குறைந்த நேரத்தில் தயார் செய்வதில் அழுத்தம் 
அதிகமாக இருக்கும்..

எத்தனை அழுத்தம் இருந்தாலும்..
தன் வாசிப்பை, தன் திறனாய்வின் வழியே அழுத்தமாய் சொன்ன 
நேரு சார் க்கு.. மனதினிய வாழ்த்துகள்...

எழுத்தாளர் வினோத் பரமானந்தன்

----------------------------------------------------------------------------------------------------------------------------

அருமை நேரு சார். வாசிப்பையும் எழுத்தையும் நேசிக்கும் ஒருவரைப் பற்றி சுவையாக எடுத்துரைத்தீர்கள்.  வகுப்பரையில் அமர்ந்து பேராசிரியரின் உரை கேட்பது போல் இருந்தது.

ரெஜினா சந்திரா...

----------------------------------------------------------------------------------------------------------------------------

என்னால் முழுமையாக ஜூம் இணைப்பில் கேட்க முடியவில்லை. யூடியூபில் தான் பார்த்தேன். ஒரு புத்தகம் வெளியிட அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு திறன் இருக்கிறது. ஆனால் அது எத்தனை பேரால் வாசிக்கப் படுகிறது என்பதை நினைத்தால் வருத்தம் தான் வருகிறது.‌எஸ் ரா அவர்களின் சிறந்த நூல் என்றே சொல்லலாம்.
பாராட்டுக்கள் நேரு அண்ணா.

நூலகர் சுசிலா

-----------------------------------------------------------------------------------------------------------------------------

முழுமையாக உரையை கேட்டு மகிழ்ந்தேன். ஒரு நிமிடம் கூட சேதம் செய்யவில்லை. எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான திறனாய்வு. நேரு ஐயா அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாகவும், எளியவர்கள் புரியும் வண்ணம் இருந்தது. எனக்கு இந்த திறனாய்வில் என்னை மாற்றி கொள்ள நினைப்பது பேப்பர் மற்றும் பேனாவில் எழுதுவதை தவிர்த்து கணினியை நேரடியாக பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனக்கு தோன்றியது. வாசிக்கும் பழக்கம் நிச்சயமாக வேண்டும் என்பதும் அதே போல் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது. நிகழ்ச்சி அருமை. நன்றி குழுவினருக்கு.
Dr.V.Mohanraj.,Ph.D.

----------------------------------------------------------------------------------------------------------------------------

நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்விலேயே கருத்து தெரிவித்த அண்ணன் கோ​.ஒளிவண்ணன்​, அண்ணன் ​லோ. குமரன்​,அய்யா புலவர்  நா​நா ஆறுமுகம்​ உள்ளிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. மறுநாள் காலை ​தொலைபேசியில் அழைத்துப்பாராட்டிய அய்யா  நட்புத்தமிழ் வட்டம் மகாலிங்கம் அவர்களுக்கும் நன்றி.




Saturday, 8 June 2024

இறப்பிற்குப் பின்பும் உரையாட…- முனைவர் வா.நேரு

இறப்பிற்குப் பின்பும் உரையாட…- முனைவர் வா.நேரு

 


டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு, 2024, ஜூன் 3ஆம் தேதி நிறைவடைகிறது. மதுரையில் இருக்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கலைஞர் அரங்கத்தில், டாக்டர் கலைஞர் அவர்கள் உயிரோடு அமர்ந்து இருப்பது போல் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ அமைப்பு இருக்கிறது. நாம் அவருக்கு எதிரே அமர்ந்து கையை ஆட்டிச் சொன்னால், அவரும் நாமும் உரையாடுவது போல இருக்கிறது. புதிய தொழில் நுட்பம் இதற்கு வழி வகுத்திருக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்குள் வரும் பலரும் இப்படி டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எதிரே அமர்ந்து அவரோடு உரையாடுவது போன்ற மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள். நிழற்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

இங்கு டாக்டர் கலைஞர் அவர்களும், பேரறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும்,ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் மற்றும் திராவிடர் இயக்கத்துத் தலைவர்களும் எழுதிய நூல்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நூலகத்திற்கு வரும் ஒருவர் டாக்டர் கலைஞர் அவர்களின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொகுப்புகளைப் படித்து அவரின் வாழ்க்கையை, அவரின் போராட்டத்தை – இலக்கிய ஈடுபாட்டை அறிந்து கொள்ளமுடியும்.

இதற்கு மாற்றாக 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வருகின்றான். டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எதிராக அமர்கின்றான். ‘தாத்தா, நீங்கள் எந்த வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? எந்த வயதில் ‘கையெழுத்துப் பிரதி’ பத்திரிகையை ஆரம்பித்தீர்கள்?’ என்று கேள்வி கேட்கின்றான். உடனே கலைஞர் அவருக்கே உரித்தான அவரது கரகரத்த குரலில் ‘உன் வயதில்தானடா தம்பி நான், ‘கையெழுத்துப்பிரதி’யை ஆரம்பித்தேன்.அதற்கு அடுத்த ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே கலந்து கொண்டேன்’ என்று தனது மாணவர் பருவத்து நினைவுகளை – போராட்டவுணர்வை எதிரே உட்கார்ந்து இருக்கும் மாணவனுக்கு விளக்கினால் எப்படி இருக்கும்? இது சாத்தியமா என்றால் இந்தச் செயற்கை நுண்ணறிவு உலகத்தில் சாத்தியம்தான்.



நான் எனது மகனை அழைக்கிறேன்.தம்பி எனது வாழ்க்கையை நான் செயற்கை நுண்ணறிவில் பதிந்து கொள்ள விரும்புகிறேன் என்றால் அதற்கான தளம் ஒன்று இருக்கிறது.அதில் பணம் கட்டிப் பதிந்து கொள்ளவேண்டும்.எனது நினைவுகளை எல்லாம் அதில் பதியலாம்.படங்களாக,வீடியோக்களாக என அனைத்து வடிவங்களிலும் பதிந்து கொள்ளலாம். ஒரு 50 ஆண்டுகளுக்குப் பின் நான்இல்லாத காலத்திலும், இருப் பதைப் போல கேட்பவர்கள் எல்லோருக்கும் நான் பதில் சொல்லலாம்.சிரிக்கலாம். அழுகலாம். சிந்திக்க வைக்கலாம்.கேட்பவரை எதிர்க் கேள்வி கேட்கலாம்.அதாவது இறந்தபின்னும் உயிரோடு இருப்பது போலவே சொற்களால், உரையாடல்களால் அளவளாவலாம்.

இதற்குச் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் சாட்போட்கள் உதவுகின்றன. முதன் முதலில் இப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்போட்டை அமைத்தவர் அமெரிக்காவின் கலிபோர்னியா- ஆக்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் விலாஹோஸின் என்பவர். அவர் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாட்போட்டிற்குப் பெயர் hereafter.ai. இந்த hereafter.ai என்னும் இணையதளத்திற்குள் சென்று பார்த்தால் ,உங்கள் கதைகளும் குரலும் என்றைக்கும் (Your stories and voice for ever) என்னும் முகப்பு வாசகம் வரவேற்கிறது.

இந்தச் சாட்போட் நம்மிடம் நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்கிறது. இளமைக்காலம், மறக்க முடியாத நினைவுகள், வாழ்வில் மறக்க இயலாத மனிதர்கள்,நமது சொந்த விசயங்கள் என்று பலவற்றைக் கேள்வி கேட்கிறது. நாம் சொல்லும் பதில்களைப் பதிந்து வைத்துக்கொள்கிறது. நமது நிழற்படங்களை வாங்கி வைத்துக்கொள்கிறது. பின்பு இவற்றை எல்லாம் இணைத்து மற்றவர்கள் கேள்வி கேட்டால் நாம், நமது குரலிலேயே பதில் சொல்வது போல வடிவமைத்துக் கொடுக்கிறது.

“செயற்கையாக மக்களை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவின் தற்போதைய சாதனைகள் அனைத்துமே நீண்டகாலமாக அறிவியல் புனைகதைகளில் மட்டுமேபேசப்பட்டு வந்தன. ஆனால் ஏஅய் தொழில்
நுட்பத்தின் வளர்ச்சி இப்போது நடைமுறை வாழ்க்கையிலேயே அதைச் சாத்தியமாக்கியுள்ளது.”

2017இல் ஜேம்ஸ் விலாஹோஸினின் தந்தைக்குப் புற்று நோய் ஏற்படுகிறது.விரைவில் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், தனது தந்தையின் குரலை,நினைவுகளை இந்த உலகத்தில் நிரந்தரமாக்க வேண்டும் என்று ஜேம்ஸ் விலாஹோஸின் விரும்புகிறார். அதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்.அதில் வெற்றியும் பெறுகிறார்.

“பின்பு 2019ஆம் ஆண்டில் ஜேம்ஸ் விலாஹோஸின் தனது சாட்போட்டை hereafter.ai என்ற செயலியாகவும் அதையே ஒரு தொழிலாகவும் மாற்றினார். இது, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்த பின்னும்கூட அவர்களைச் செயற்கை வழியில் பூமியில் தக்கவைக்க உதவுகிறது. .

hereafterai செயலியின் பயனர்கள் தங்கள் அன்புக்குரியவரின் ஒளிப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் அவர்கள் செயலியைப்பயன்படுத்தும்போது அவர்களின் ஸ்மார்ட்போன்அல்லது கணினியின் திரையில் அன்புக்குரிய
வர்களின் முகம் தோன்றும் “ என்று விரிவாகப் பி.பி.சி.தமிழ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது..

“இதேபோல் மற்றொரு நிறுவனம் மக்களைச் செயற்கை நுண்ணறிவு சாட்போட்களாக மாற்றுகிறது. தென் கொரியாவின் DeepBrain AI ஆனது, ஒரு நபரின் முகம், குரல் மற்றும் பழக்க வழக்கங்களைப் பல மணிநேர வீடியோ மற்றும் ஆடியோவாகப் பதிவு செய்வதன் மூலம் வீடியோ அடிப்படையிலான அவரைப் போன்ற அவதாரை உருவாக்குகிறது” என்றும்” உண்மையான நபரின் உருவத்தோடு 96.5% ஒத்துப்போகும் அளவிற்கான உருவத்தைக் குளோனிங் செய்கிறோம்” என்று அந்த DeepBrain நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மைக்கேல் ஜங் சொல்வதாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

இந்தச் சாட்போட்களைப் பயன்படுத்த இப்போது நாம் நிறையப் பணம் செலுத்தவேண்டும். ஆனால், வரும் காலத்தில் இது வெகுவாகக் குறைந்து நிறையப்பேர் பயன்படுத்தும் நிலை வரலாம்.செயற்கை நுண்ணறிவினால் சில புதிய கடவுள்கள் உருவாக்கப்படலாம்; அல்லது ஏற்கனவே சொல்லப்பட்ட புராணங்களை _ கடவுள் கதைகளை உண்மையைப் போல் வடிவமைத்துக் காட்டலாம். ஆனால், அப்படி வடிவமைக்கப்படும்போது, எல்லாக் கடவுள் கதைகளும் தந்தை பெரியார் கற்றுத்தந்த கேள்விகளுக்கு முன்னால் காணாமல் போகும்.புராணக் கதைகள் உயிர்பெற்று வரும்போது நாம் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கத் தலைவர்களும், உலகில் உள்ள அத்தனை பகுத்தறிவாளர்களும் கொடுத்த கேள்விகளோடு எதிர்கொள்ளப் பழகலாம். மாணவ- மாணவிகளுக்கு,
இருபால் இளைஞர்களுக்கு அந்தக் கேள்விகளைக் கேட்கும் தன்மையை உருவாக்கலாம்.

புதிய கண்டுபிடிப்பு எப்போதும் இருபுறமும் கூர்மை உள்ள கத்தி. நன்மையைப் போலவே சில தீமைகளும் புதிய கண்டுபிடிப்புகளால் அமைவதுண்டு. அதைப்போல இந்த செயற்கை நுண்ணறிவு. இதற்குப்பின்னால்(hereafter.ai) சாட்போட்களால் ஏற்படப் போகும் தீமைகள் பற்றியும் நிறையப் பேசப்படுகின்றன..மனிதகுலம் அந்தத் தீமைகளை எல்லாம் கடந்து வரும் என்னும் நம்பிக்கை நமக்கு உண்டு.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 1-15,2024