Saturday, 28 January 2023

நீண்ட நாள் வாழ்வதற்கு வழி காட்டும் எலிகள்

                                        கட்டுரை: நீண்ட நாள் வாழ்வதற்கு வழி காட்டும் எலிகள்

                                                 முனைவர்.வா.நேரு


மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கும் அறிவைப்பெற்றுக்கொள்வதற்கும் நம்மைச்சுற்றி இருக்கும் மனிதர்கள் மட்டுமல்ல, சில நேரங்களில் நம்மைச்சுற்றி இருக்கும் விலங்குகளும் பறவைகளும் கூட பயன்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக கடவுளால் தான் இந்த உலகம் படைக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருந்த மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை தன்னுடைய பரிணாம வளர்ச்சிக் கொள்கையால் உண்டாக்கிய சார்லஸ் டார்வின் அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட, பல்வேறு இடங்களில் அவர் கண்ட ஆமைகள்தான் காரணமாக அமைந்தன. தன்னுடைய சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு இடத்திலும் கழுத்து நீண்டும், குட்டையாகவும் அமைந்த பலவகைப்பட்ட ஆமைகள்தான் அவரின் அறிவியல் ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன.


சார்லஸ் டார்வின் அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது ஆமைகள் என்றால், இன்றைய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சிலருக்கு ஒரு வகையான எலிகள் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்துகின்றன.



உலக அளவில் இறக்-கும் மனிதர்களில் இருவரில் ஒருவர் புற்று நோயால் இறக்கிறார் என்று புள்ளி விவரம் கூறுகிறது. எனவே புற்று நோய் வராமல் தடுப்பதற்கு அல்லது வந்து விட்டால் அதனை எதிர்த்து அழிப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் அறிவிய-லாளர்கள் தங்கள் ஆராய்ச்சிக்கு எடுத்திருக்கும் எலிவகை என்பது அகழெலி என்று அழைக்-கப்படும் நேக்கட்மோல் எலி. புகழ்பெற்ற பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஸ் பல்கலைக்-கழகத்தில் ஆராய்ச்சியாளர் ஸ்மித் என்பவர் தலைமையில் இந்த நேக்கட் மோல் எலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். சுமார் 160 நேக்கட் மோல் எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள், இந்த எலிகளை 60 விழுக்காடு ஈரப்பதத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்து பராமரிக்கின்றனர்.

இந்த நேக்கட்மோல் எலிகளைப் பற்றி இந்தக் கொரோனா காலகட்டத்தில் அறிந்து கொள்வது பயனுள்ளதாகும். இந்தக் கொரோனா காலத்தில் மிக அதிகமாக நாம் கேள்விப்பட்ட சொல் ஆக்ஸிஜன் அளவு. ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழ் போய் விட்டதா? 90-க்கு மேல் இருக்கிறதா? எனப் படிக்காத மக்கள் கூட விசாரிக்கும் அளவுக்கு இந்த ஆக்சிஜன் அளவு குறித்து ஒரு விழிப்புணர்வு இந்தக் கொரோனா காலத்தில் ஏற்பட்டது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் போனது, உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படாததால் ஏற்பட்ட உயிரிழப்பு என ஆக்சிஜன் பற்றிய செய்திகளாகவே நாம் இந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாகக் கேள்விப்பட்டோம். ஆக்சிஜன் அளவு வெறும் 5 இருக்கும் நிலையில் ,இந்த எலிகளால் 5 மணி நேரம் உயிர் வாழ முடியுமாம். இவ்வளவு குறைவான நிலையில் ஆக்சிஜன் அளவு இருந்தாலும் நன்றாக வாழும் ஓர் உயிரினம் உலகில் இருக்கிறது என்றால் நமக்கு வியப்பு! அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு நல்ல ஆராய்ச்சிக்கான பொருள். அதனால்தான் இந்த எலிகளைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


இந்த நேக்கட் மோல் எலிகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுவதில்லை. கென்யா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா காடுகளில் மட்டுமே இந்த நேக்கட் மோல் எலிகள் காணப்படுகின்றன. பார்ப்பதற்கு நம் ஊர் எலிகளைப் போல இல்லாது வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் எலிகள் இவை. இந்த எலியின் வாயிலிருந்து வெளியே பற்கள் நீண்டு இருக்கும். இந்த பற்களின் உதவியோடு பூமியைத் துளையிட்டு பொந்துகளை இந்த எலிகள் அமைக்கின்றன. பல கால்பந்து ஆடுகளங்களின் நீளத்திற்கு இந்த எலிகளின் பொந்துகள் பூமிக்கு அடியில் சுரங்கம் போல பல அறைகளுடன் இருக்கும். என்று குறிப்பிடுகின்றனர். சுரங்கம் தோண்டி ஒரு நகரத்தையே உருவாக்குவது போல இந்த எலிகள் தாங்கள் வாழும் இடத்தை உருவாக்குகின்றன. இந்த எலிகளின் தோல்களில் முடி இருக்காது. வெறும் 13 அங்குலம் மட்டுமே இருக்கும் இந்த எலிகளின் மரபணுக்கூறுகளை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.


மனிதர்களின் வயதை அவர்களின் தலையில் விழும் வழுக்கை காட்டுகிறது, நரை முடி காட்டுகிறது. விழுந்து விட்ட பற்கள் காட்டுகின்றன. தோல்கள் சுருங்கி வயதைக் காட்டுகின்றன. ஆனால் அதிக ஆண்டுகள் வாழும் நேக்கட் எலிகளின் வயதைக் கணிப்பது கடினம். ஏனெனில், வயதானால் இவற்றின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து குறைந்த அறிகுறிகளை மட்டுமே வெளிப்படுத்துகிறது. வயதாகும் பாலூட்டிகளிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள் எதுவும் இந்த எலிகளுக்கு ஏற்படுவதில்லை. இதன் இதய செயல்பாடு, உடல் அமைப்பு, வளர்சிதை மாற்றம், எலும்பின் உறுதி என எதிலும் குறிப்பிடும் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை. சிறு வயதில் பார்த்தது போலவே இருக்கும் சில அபூர்வமான வயதான மனிதர்களைப் போல இந்த எலிகள் இருக்கின்றன.இந்த எலிகள் மற்ற எந்த பாலூட்டிகளையும் விட அதிக நாள்கள் பசியைத் தாங்கும் வலிமை பெற்றிருக்கின்றன.


இந்தக் கொரோனா காலகட்டத்தில் நாம் அதிகமாகக் கேள்விப்பட்ட இன்னொரு சொற்றொடர் ‘நோய் எதிர்ப்பு சக்தி’ திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய ‘வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் பழங்கள், காய்கறிகள் உணவுடன், உடற்பயிற்சி போன்றவற்றையும் தொடர்ந்து தனது கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறார். அப்படிப் பார்க்கும்போது இந்த எலிகளுக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வியப்புக்குரியது. அதாவது இந்த நேக்கட் மோல் எலிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு சக்தி மனித உடலில் இருந்தால் மனிதர்கள் சராசரியாக 450 ஆண்டுகள் வாழலாம். அதாவது இந்த எலிகளின் சராசரி வயது 30 ஆண்டுகள். மனிதர்களின் உருவத்துடன் ஒப்பிடும்போது 450 ஆண்டுகள் மனிதர்கள் வாழ்வதற்குச் சமமானது இது. மனிதர்களைப் பாடாய்ப்படுத்தும் நோய்களுள் ஒன்று சர்க்கரை நோய்.இந்த நேக்கட் மோல் எலிக்கு சர்க்கரை நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏதும் வருவதில்லை. அதற்கு உறுதுணையாக இதன் நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுகிறது. என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

.குழு, குழுவாகத்தான் இந்த எலிகள் வாழ்கின்றன. ஒரு குழுவில் 70 முதல் 80 வரை உறுப்பினர்களாக எலிகள் இருக்கும் என்று சொல்கின்றனர். தேனீக்-களில் ராணித் தேனீக்கள் இருப்பதைப்போல ராணி நேக்கட் எலி இருக்கிறது. ஒரு ராணி நேக்கட் எலி இறந்துவிட்டால் அந்த இடத்-திற்கு வருவதற்கு போட்டி இருக்கிறது. சில நேரம் சண்டை கூட நடக்கிறது, ராணி நேக்கட் எலி போல வேலைக்கார நேக்கட் எலிகள் இருக்கின்றன என்று குறிப்பிடுகின்றனர் கூட்டமாக வாழ்வதிலும் கூட நமக்கு இந்த எலிகள் முன்னோடிகள் போலும். பசியைத் தாங்கும் இந்த எலிகள் அதிக வலியைத் தாங்கும் வலிமையும் பெற்றிருக்கின்றன. மற்ற பாலூட்டிகளுக்குத் தோலில் இருக்கும் உணர்வு கடத்தி நரம்புகள்(neurotransmitters) இந்த நேக்கட் மோல் எலிகளுக்கு இல்லை.


80 விழுக்காடு கார்பன்-டை ஆக்சைடும், 20 விழுக்காடு ஆக்ஸிஜனும் இருக்கும் இடத்தில் இந்த எலிகள் நன்றாக வாழ்கின்றன. மற்ற எந்தப் பாலூட்டியாலும் இப்படி வாழ இயலாது. இது எப்படி என்பதையும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். “இது அநேகமாக இவற்றின் உயர் கார்பன்-டை-ஆக்சைடு சூழலில் ஏற்பட்ட பரிணாமத் தழுவலின் விளைவாக இருக்கும்“ என்று ஆராய்ச்சியாளர் ஸ்மித் விளக்குகிறார். இந்த எலிகள் சுவாசித்து வெளியே விடும் கார்பன்-டை-ஆக்சைடு, இவை வசிக்கும் பொந்துகளில் சிக்கி அதிகரிக்கத் தொடங்கும். இது போல வேறு எந்தப் பாலூட்டிகளுக்கும் ஏற்பட்டால், அவை நிச்சயமாக பிரச்சனைக்கு வழிவகுக்கும். கார்பன் டை ஆக்சைடு தண்ணீருடன் வினை புரிந்து, கார்போனிக் அமிலமாக மாறி, நரம்புகளில் வலியைத் தூண்டும். மனிதர்களுக்கு ஏற்படும் முடக்கு வாதம் போன்ற நோய்களில் இந்த வினை தான் நடக்கிறது. இதன் மூலம் அதிக வலி ஏற்படும். ஆனால், நேக்கட் மோல் எலிகளுக்கு இந்த வலி ஏதும் ஏற்படுவதில்லை. இந்த வலி என்பது நமக்கு ஏற்படும் காயத்தின் மீது எலுமிச்சை சாறு அல்லது வினிகரை ஊற்றும் போது ஏற்படும் வலிக்கு ஒப்பானது, என்கிறார் ஸ்மித். இந்த சகிப்புத்தன்மைக்கான மூலக்கூறு அடிப்படையை அவர் ஆய்வு செய்தார். அப்போது இந்த எலிக்கு உணர்வு நரம்புகளின் ஆக்டிவேட்டராக அந்த அமிலம் செயல்படாமல், ஒரு மயக்க மருந்து போல செயல்படக் காரணமான ஒரு மரபணுவை அடையாளம் கண்டார். அதைப்பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது.

மரபணு ஆராய்ச்சி என்பது மனித குலத்தின் மாபெரும் பாய்ச்சல்.மனிதர்களின் மரபணுக்குள் மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களின் ஆராய்ச்சி என்பது மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது மட்டுமல்ல, நோய்களிலிருந்து தப்பிக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும், பல நூறு ஆண்டுகள் வாழ்வதற்குமான வழிமுறைகளைச் சொல்வதாகவும் அமைகிறது.அப்படிப் பார்க்கும்போது இந்த நேக்கட் மோல் எலிகளின் வலி இல்லாத தன்மை,நோய் எதிர்ப்பு சக்தி, கார்பன்-டை ஆக்சைடு அதிகமாக இருக்கும் இடத்தில் வாழுதல், குறைந்த ஆக்ஸிஜன் இருக்கும் இடத்தில் வாழ்தல் எனும் பல காரணிகளை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நேக்கட் மோல் எலிகளின் வாழ்க்கை தான் மனிதர்கள் அதிக நாள் வாழ்வதற்கான இரகசியத்தைச் சொல்லித் தரப் போகிறது.

நன்றி

 1) பிபிசி தமிழ் இணையதளம் ,2.1.2023.

 2) https://en.wikipedia.org/wiki/Naked_mole-rat


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 16-31

          

Monday, 23 January 2023

எனது வேதியியல் பேராசிரியர் திரு.பா.குத்தாலிங்கம் சார் அவர்களைச் சந்தித்த நிகழ்வு

படிக்கும் காலத்திம் நம் மனதில் நிறைந்த ஆசிரியரை பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி என்பது தனித்துவமானது.தன் நிகர் இல்லாதது.கடந்த 17.01.2023 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் 'என்னும் புத்தகத்தை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களோடும்,எழுத்தாளர் இமையம் அவர்களோடும் இணைந்து உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.அந்த நிகழ்வுக்காக 16-ம் தேதியே சென்னை சென்றிருந்த நிலையில் ,ஒரு வாட்சப் குழுவின் மூலமாக ,சென்னையில் வசிக்கும் எனது வேதியியல் பேராசிரியர் திருமிகு.பா.குத்தாலிங்கம் சார் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.




நான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு கரிம வேதியியல்(ஆர்கானிக் கெமிஸ்டிரி) பாடம் எடுத்தவர் பேரா.திருமிகு.பா.குத்தாலிங்கம் சார் அவர்கள்.கரிம வேதியியலில் அப்படி ஒரு ஆழமான புலமை அவருக்கு.மிகப்பெரிய கரும்பலகை வகுப்பில் இருக்கும்.கார்பனுக்கு உரிய குறீயீடான C என்பதைப் போட்டுவிட்டு அதன் மூலம் கிடைக்கும் அத்தனை டிரைவேட்டிஸ் அனைத்தையும் ஒரு வரைபடமாக அந்தப் பெரிய கரும்பலகையில் வரைந்தது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.இன்னும் கொஞ்ச நேரம் பாடம் எடுக்கமாட்டாரா என்று நினைக்கும் அளவிற்கு அவரின் பாடம் நடத்துவது இருக்கும்.

வேதியியல் துறைத்தலைவராக பேரா.தாசன் பெர்ணாண்டோ அவர்கள் இருந்தார்.அவர் கல்லூரியின் முதலாம் ஆண்டில் கார்பனின் இணைதிறனை(வேலன்சி)யை விளக்குவதற்காக 2 மாணவர்களை அழைத்து கைகளை நீட்டச்சொல்லி,மிக எளிமையாக விளக்கியது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் தாசன் பெர்ணாண்டோ சாரின் வகுப்பில் நிறைய அரட்டை இருக்கும்.பாடம் நடத்துவதுதோடு சேர்த்து உலக விசயம் முதல் ஹாஸ்டலில் படிக்கும் புத்தகம் வரை அவரின் அறிவுரை இருக்கும்.கேலியும் கிண்டலுமாக பாதி வகுப்பு ஓடும்.

பேரா.குத்தாலிங்கம் சார் அவர்களின் வகுப்பில் ,பாடம் தவிர்த்து எந்த உரையாடலும் இருக்காது.ஆனால் அந்த கரிம வேதியியலை விளக்குவதற்கும்,எளிமையாகப் புரிய வைப்பதற்கும் அவர் கொடுக்கும் உதாரணங்கள் மிக ஈர்ப்பாக இருக்கும்.எனக்கு நன்றாக இருக்கிறது. எனது அப்பாவைப் பெற்ற பாட்டி,சின்னக்குட்டி அவ்வா தன்னுடைய 100 வயதில் எங்கள் ஊரில் மறைந்துவிட்டார். பாட்டியின் இறப்புக்காக ஊருக்கு சென்று விட்டு திரும்பிய நான்,திருச்செந்தூர் கல்லூரி விடுதிக்கு மதியம் 2 மணிக்கு எல்லாம் வந்து விட்டேன்.அன்றைக்கு விடுப்பு எழுதிக் கொடுத்திருந்தேன். ஆனாலும் கடைசி வகுப்பு குத்தாலிங்கம் சார் வகுப்பு என்றவுடன் ,போய் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேன்.அவர் அட்டெண்டெண்ஸ் ரிஸிஸ்டரைப் பார்த்துவிட்டு, என்ன நேரு, நீ லீவு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது,.நீ வகுப்பில் அமர்ந்திருக்கிறாய் என்றார். ஆமாம் சார்,பாட்டி இறந்ததிற்காக  சொந்த ஊருக்குப் போய்விட்டு இன்று மதியம்தான் வந்தேன். உங்கள் வகுப்பு இருப்பது நினைவுக்கு வந்ததும் ,வகுப்பறைக்கு வந்துவிட்டேன் என்றேன். 40 ஆண்டுகளுக்குப் பின்னால் திரு.குத்தாலிங்கம் சார் அவர்களைப் பார்த்தபொழுது இதனை நினைவு கூர்ந்தேன். 

அண்மையில் என்னோடு பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்த்த டெக்னிக்கல் சூபர்வைசர் திரு.ஏ.ராசா சார் அவர்களைப் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப்பின் பார்த்த நிலையில் அவர்,தன்னோடு இருந்த நண்பருக்கு என்னை அறிமுகப்படுத்தியபோது, " சார்,இவர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை பசங்களுக்கு புரியற மாதிரி நடத்துவார் சார்.எனது பையனுக்கு வீட்டில் வந்து 4,5 மணி நேரம் நடத்தினார்..." என்று 10,15 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை நினைவுபடுத்தினார். எனது உறவினர் வீட்டுப்பிள்ளைகள்,நண்பர் வீட்டுப்பிள்ளைகள் என்று நான் கரிம வேதியியல் நடத்தியவர்கள் நிறைய உண்டு.இப்படி வேறு துறையில் வேலை பார்த்துக்கொண்டு,ஆசிரியர் தொழிலில் இல்லாத ஒருவன், கரிம வேதியியலைப் பற்றி புரியுமாறு நடத்துவதற்கு அடிப்படையான பேராசிரியர்கள் திரு.தாசன் பெர்ணாண்டோ சார் அவர்களும்,நான் சென்னையில் பார்த்த திரு.பா.குத்தாலிங்கம் சார் அவர்களும்.

நானும் எனது நண்பர்கள் சிலரும் மதுரை மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் சென்று படிப்பதற்கு காரணமாக இருந்த, தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல் நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக இருந்து பின்பு தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற எனது +2 வேதியியல் ஆசிரியர் திரு.முத்துராமலிங்கம் அவர்களைப் பற்றிக் கேட்டார்.அவர் தொடர்பில் இருப்பதையும்,சென்ற ஆண்டு மார்ச்மாதம் நடந்த முதல்வர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுச்சொற்பொழிவில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்ததையும் குறிப்பிட்டேன். 


மிக நிறைவாக பாடங்கள் எடுத்த,திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் திருமிகு.இரா.கனகசபாபதி,இன்று திருச்செந்தூரில் வசிக்கும் பேரா.கி.ஆழ்வார் ஆகியோருடனான அனுபவங்களை எல்லாம் எனது பேரா.திரு.குத்தாலிங்கம் சார் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.தன்னுடைய மகன் அமெரிக்காவில் பணியாற்றுவது பற்றியும் அங்கு இருக்கும் தமிழ்ச்சங்கத்தில் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றுவது பற்றியும் குறிப்பிட்டார்கள். அவர் சென்னையில் இருக்கும்  தனது மகள் வீட்டிற்கு வந்த நேரத்தில் அவரைச்சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..திரு.குத்தாலிங்கம் சார் அவர்களின் மனைவி,அவரின் மகள்,பேரக்குழந்தை ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது.தனது பேத்தி வரைந்து சுவரில் மாட்டியிருக்கும் படங்களை எல்லாம் பேரா.குத்தாலிங்கம் சார் காட்டினார்.அருமையாக இருந்தன அந்தப் படங்கள்.அந்தப் படங்களுக்கு முன்னால் நின்றே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

என்னோடு படித்த சில பழைய மாணவர்கள் மற்றும் எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் சிலரைப் பற்றியும் அவரின் மூலமாக அறிய முடிந்தது.16-ந்தேதி காலை என்பது மிக மகிழ்ச்சியான ஒரு சந்திப்பாக வாழ்க்கையில் அமைந்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது. 

Saturday, 21 January 2023

விளையாடிய தமிழ்ச்சமூகம் நூல் திறனாய்வு* — முனைவர். வா. நேரு

திசைக் கூடல் — 315 [ஜனவரி 19,2023]
*"விளையாடிய தமிழ்ச்சமூகம்" நூல் திறனாய்வு*
— முனைவர். வா. நேரு 


Thursday, 5 January 2023

ஜனவரி 4 – விழிக்கொடை நாள்!.... முனைவர் வா.நேரு

கண்பார்வையோடு இருந்த சிறுவன், 3 வயதில் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட விபத்தால் கண்ணை இழந்தான். கண்ணை இழந்து வளர்ந்த அவன், எழுத்தறிவைக் கற்கவேண்டும் என விரும்பினான். 10 வயதில் பிரான்ஸில் கண்பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தான். அவர்தான் லூயிஸ் பிரெய்லி.

ஆசிரியர் சொல்லச் சொல்ல திருப்பிச் சொன்ன பிரெய்லியால் எழுதிக் காட்ட முடியவில்லை.தான் செவிவழியாகக் கற்ற எழுத்துகளை எழுத்து வடிவில் எழுத பிரெய்லி விரும்பினார்.செவி வழியாகக் கற்றுக்கொள்வதைப் போலவே தொட்டு உணர்ந்து எழுத்துகளை அறிய வேண்டும் என விரும்பினார். கண் பார்வை உள்ளவர்கள் எழுத்துகளைக் கண்களால் காண இயலும். அதனை உணர்ந்து எழுத்து வடிவை எழுத முடியும். கண்பார்வையற்ற தன்னைப் போன்றவர்கள் எழுத்து வடிவை உணர்வது எப்படி,எழுதுவது எப்படி எனச் சிந்தித்தார்.தொடர் முயற்சியின் விளைவாகத் தன்னுடைய 20-ஆம் வயதில், 1824இ-ல் பிரெய்லி எழுத்துகளை,பார்வையற்றவர்கள் கற்றுக்கொள்ளும் விதமாக உருவாக்கினார்.

பின்னர் அதில் பல்வேறு மாற்றங்கள் செய்து 1829-ஆம் ஆண்டு பிரெய்லி முறையின் முதல் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த நூலின் தொடர்ச்சியாக 1837-ஆம் ஆண்டு பிரெய்லி பணியாற்றிய பள்ளி நிருவாகம் ‘பிரான்ஸின் வரலாறு’ என்னும் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அறிவியல், கணிதம் தொடர்பான பிரெய்லி எழுத்து முறை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.




“ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.” என்றார் தந்தை பெரியார். தனது வாழ்க்கையால் பல கோடி பேர் கற்றவர்களாக மாறுவதற்கான களத்தை, கருவியை அமைத்துக் கொடுத்ததால் இன்றும் நினைவுகளில் வாழ்கிறார் லூயிஸ் பிரெய்லி. அவருடைய

பிறந்த தினம் ஜனவரி 4. 2018இ-ல் அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை பிரெய்லி பிறந்த ஜனவரி 4ஆம் நாளை உலக பிரெய்லி தினம் என்று அறிவித்தது. 2019- முதல் ஜனவரி 4 என்பது உலக பிரெய்லி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது; கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் ஏறத்தாழ 39 மில்லியன் மக்கள் முழுமையாகப் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.284 மில்லியன் மக்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என உலக சுகாதார மய்யத்தின் புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. சதவிகித அளவில் உலகத்திலேயே மிக அதிக அளவு பார்வையற்றவர்கள் இருக்கும் நாடு இத்தாலி. பார்வைக் கோளாறுக்கு கண்ணாடி அணிபவர்கள் மிக அதிகம் இருக்கும் நாடு பெல்ஜியம் என ஒரு புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.பார்வையற்றவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு மருத்துவத்தின் மூலம் கண்பார்வை கிடைக்கச் செய்யலாம் எனக் குறிப்பிடுகிறார்கள்.


பார்வையற்றவர்கள் பார்வை பெற கண்கள் தேவை. பெரியாரியலைப் பின்பற்றும் தோழர்கள் உடல் கொடை, விழிக்கொடை இரண்டையும் இறந்த பின்பு செய்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிக நீண்டகாலமாக இருக்கும் நடைமுறை விழிக்கொடையாகும்.இந்திய நாத்திகக் கூட்டமைப்பில் இருக்கும், இந்திய ஒன்றியத்தின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் 76 அமைப்புகளைச் சார்ந்தவர்களும் விழிக்கொடை செய்கிறார்கள்.அதனை முன்னரே பதிவு செய்து, இறந்தவுடன் முறையாக அளிக்கிறார்கள்.இறப்பவர்களின் கண்கள் எல்லாம் தானம் செய்யப்பட்டால் சில மாதங்களில் உலகில் இருக்கும் பெரும்பாலான பார்வையற்றவர்கள் பார்வை பெற்று விடுவார்கள். சில மதங்களைச் சார்ந்தவர்கள், தங்கள் மத நம்பிக்கையால் கண்களைத் தானம் செய்ய முன் வருவதில்லை.அதனை அவர்கள் மதம் அங்கீகரிப்பதில்லை.கண்தானம் செய்தால், தாங்கள் சொர்க்கத்திற்குப் போகமுடியாது என்னும் நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட,அறிவியலுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளும் பார்வையற்றோரின் சதவிகிதம் உலகில் குறையாமல் பார்த்துக்கொள்ளும் கொடுமையைச் செய்கின்றன. இதைப் போக்க பெரியாரியல் வழியில் அமையும் உண்மைப் பிரச்சாரமே தீர்வு.

பெரியார் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள், தோழியர்கள் ஜனவரி- 4 பிரெய்லி தினத்தை ,நாம் விழிக்கொடை விழிப்புணர்வு நாளாக எடுத்துக்கொண்டு பிரச்சாரம் செய்யவேண்டும்.


கண்பார்வைக் குறைபாடுகளை நீக்க ஒரு பக்கம் அறிவியலும், மருத்துவமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் அறியாமையால் கண்பார்வையை இழக்கும் நிகழ்வுகளும் நிகழ்கின்றன.

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,உடலைக் கவனிக்காமல் இருக்கும் நிலையில் தங்கள் கண்பார்வையை இழக்கிறார்கள்.உலகம் முழுவதும் 17 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாதி பேருக்கு கண்பார்வைக் குறைபாடோ, பார்வை இழப்போ ஏற்படும் அபாயமோ இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எந்தவிதமான முன் அறிகுறிகளும் இல்லாமல், நீண்ட நாள் நீரிழிவு நோயாளிகளின் கண்பார்வை போவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று மருத்துவம் கூறுகிறது. முறையான மருந்து ,மாத்திரைகள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, அடிக்கடி உடலில் சர்க்கரை நோயின் அளவைத் தெரிந்து கொண்டு கட்டுப்படுத்துதல் போன்றவை மூலமாக நோயைக் கட்டுப்படுத்தலாம்.அதன் மூலம் பார்வைக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்த நேரத்தில் நான் படித்த ‘இன்ஸ்பயரிங் இளங்கோ ‘ என்னும் புத்தகம் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலத்தில் Ph.D, பல விருதுகள், பல பேருக்குவேலை கொடுக்கும் இளங்கோ, பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறப்புரை ஆற்றும் இளங்கோ என அவரின் சாதனைகள் பிரமிக்க வைப்பதை, எனக்கு sight இல்லாமல் இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை, உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. எனக்கு இருக்கும் vision-மூலம் இந்த உலகத்தை வியப்படைய வைக்கிறேன் என்று வியப்படைய வைத்திருக்கும் இளங்கோ பற்றிய அந்தப் புத்தகம் மிகச் சிறந்த புத்தகம். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் அனைவருக்கும் மிகச் சிறந்த தன்னம்பிக்கை அளிக்கும் அந்தப் புத்தகம் நினைவுக்கு வந்தது.


ஜனவரி 4 உலகப் பிரெய்லி நாள் என்பது நம்மைப் போன்றவர்களுக்கு லூயிஸ் பிரெய்லி அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கு, பார்வை மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வதற்கு, அவர்களின் வாழ்க்கை உயர்வுக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு,தமிழ் நாடு,ஒன்றிய அரசின் பார்வை மாற்றுத் திறனாளிகள் உயர்வுக்கான திட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு, விழிக்கொடை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு,நாம் விழிக்கொடைக்கு முறையாகப் பதிவு செய்துவிட்டோமா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, கண் பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கு, -அதனைப் பற்றிய விழிப்புணர்வை நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கு ஏற்படுத்துவதற்கு எனப் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அடிப்படையான நாளாக ஜனவரி 4ஆம் நாளை அமைத்துக்கொள்வோம்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜனவரி 1-15